ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்
(அதிகாரம்:தெரிந்து செயல்வகை
குறள் எண்:468)
பொழிப்பு: தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று (அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகி விடும்.
|
மணக்குடவர் உரை:
மேற்கூறிய நெறியினாலே முயலாத பொருள், பலர் நின்று காப்பினும் புரைபடும்.
இஃது எண்ணிச் செய்யாதது தப்பு மென்றது.
பரிமேலழகர் உரை:
ஆற்றின் வருந்தா வருத்தம் - முடியும் உபாயத்தால் கருமத்தை முயலாத முயற்சி, பலர் நின்று போற்றினும் பொத்துப்படும் - துணைவர் பலர் நின்று புரைபடாமல் காப்பினும் புரைபடும்.
(முடியும் உபாயத்தான் முயறலாவது கொடுத்தலைப் பொருள் நசையாளன் கண்ணும், இன்சொல்லைச் செப்பம் உடையான், மடியாளன், முன்னே பிறரொடு பொருது நொந்தவன் என இவர்கண்ணும், வேறுபடுத்தலைத் துணைப்படையாளன் தன் பகுதியோடு பொருந்தாதான் என இவர்கண்ணும், ஒறுத்தலை இவற்றின் வாராத வழி இவர்கண்ணும், தேறப்படாத கீழ்மக்கள் கண்ணும், செய்து வெல்லுமாற்றான் முயறல். புரைபடுதல்: கருதிய நன்மையன்றிக் கருதாத தீமை பயத்தல். உபாயத்தது சிறப்புக் கூறியவாறு.)
இரா சாரங்கபாணி உரை:
தக்க வழியறிந்து ஒரு காரியத்தைச் செய்யாத முயற்சி பலர் துணையாக நின்று கேடு நிகழாமல் காத்தாலும் கேடுண்டாகும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப்படும்
|
ஆற்றின் வருந்தா வருத்தம்:
பதவுரை: ஆற்றின்-நெறியால்; வருந்தா-முயலாத; வருத்தம்-முயற்சி.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மேற்கூறிய நெறியினாலே முயலாத பொருள்;
பரிப்பெருமாள்: மேற்கூறிய நெறியினாலே முயலாத பொருள்;
பரிதி: ஒரு காரியத்தை எடுத்து அந்தக் காரியமே உறுதியாக விசாரிப்பான் அல்லது காரியம் பழுதானால்;
காலிங்கர்; அரசராவார் தமது நீதியால் முயன்று ஈட்டாத நெடும்பொருளை;
பரிமேலழகர்: முடியும் உபாயத்தால் கருமத்தை முயலாத முயற்சி
பரிமேலழகர் விரிவுரை: முடியும் உபாயத்தான் முயறலாவது கொடுத்தலைப் பொருள் நசையாளன் கண்ணும், இன்சொல்லைச் செப்பம் உடையான், மடியாளன், முன்னே பிறரொடு பொருது நொந்தவன் என இவர்கண்ணும், வேறுபடுத்தலைத் துணைப்படையாளன் தன் பகுதியோடு பொருந்தாதான் என இவர்கண்ணும், ஒறுத்தலை இவற்றின் வாராத வழி இவர்கண்ணும், தேறப்படாத கீழ்மக்கள் கண்ணும், செய்து வெல்லுமாற்றான் முயறல்.
மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு நெறியால் முயலாத பொருள் என்று உரை செய்தனர். காலிங்கர் நீதியால் முயன்று ஈட்டாத பொருள் என உரைத்தார். பரிமேலழகர் முடியும் உபாயத்தால் முயலாத முயற்சி என உரை தந்தார்.
இன்றைய ஆசிரியர்கள 'முறைப்படி உழையாத உழைப்பு' 'காரியத்தைப் பற்றியும் அதை முடிக்கும் வழிகளைப் பற்றியும் வருந்தியாவது ஆராய்ந்து கொள்ள வேண்டும்', 'நல்ல வழியில் வருந்தி முயலாத முயற்சி ', 'ஒரு செயலுக்குரிய வழி முறைகளில் வருந்திச் செய்யாத முயற்சியால் உண்டாகும் துன்பம் ',என்ற பொருளில் உரை தந்தனர்.
தக்க செயல்முறைகள் வழி முயலாத முயற்சி என்பது இப்பகுதியின் பொருள்.
பலர்நின்று போற்றினும் பொத்துப் படும்:
பதவுரை: -பலர் நின்று- பலர் துணைநின்று; போற்றினும்-பாதுகாத்தாலும்; பொத்துப்படும்-தவறும்.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பலர் நின்று காப்பினும் புரைபடும்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது எண்ணிச் செய்யாதது தப்பு மென்றது.
பரிப்பெருமாள்: பலர் நின்று காப்பினும் புரைபடும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது எண்ணிச் செய்யாதது தப்பும் என்றது.
பரிதி: பின்பு பலரும் கூடி எடுத்து நாட்டுகிறோம் என்றாலும் காரியம் கூடாது என்றவாறு.
காலிங்கர்: சான்றோர் பலரும் கூடி மற்று இது நன்று என்று கொண்டாடினும் சாலக் குற்றப்படும் என்றவாறு.
காலிங்கர் குறீப்புரை: பொத்துப்படும் என்பது குற்றப்படும் என்றது.
பரிமேலழகர்: துணைவர் பலர் நின்று புரைபடாமல் காப்பினும் புரைபடும்.
பரிமேலழகர்:குறிப்புரை: புரைபடுதல்: கருதிய நன்மையன்றிக் கருதாத தீமை பயத்தல். உபாயத்தது சிறப்புக் கூறியவாறு.
பலர் நின்று காப்பினும் குற்றப்படும் என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பலர்துணை இருப்பினும் ஓட்டைபடும்', ''இல்லையானால் பின்னால் வரக்கூடிய வருத்தங்களைப் பலபேர் கூடித்துணைநின்று தடுத்தாலும் தவிர்க்க முடியாமல் காரியம் கெட்டுப் போகும்.', ''துணைவர் பலர் நின்று காப்பினும் இழுக்குப் படுதல் கூடும்', 'பலராக நின்று உதவி செய்து காத்தாலும் நன்மை தராது. தீமை பயக்கும்' 'என்றபடி பொருள் உரைத்தனர்.
பலர் துணை இருப்பினும் சீராக்க இயலாது என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
நெறியல்லா நெறிச்சென்று முயல்வது பொத்தலாகவே முடியும் என்னும் பாடல்.
தக்க செயல்முறைகள் வழி முயலாத முயற்சி பலர் துணை இருப்பினும் பொத்துப்படும் என்பது பாடலின் பொருள்.
'பொத்துப்படும்' என்றால் என்ன?
|
ஆற்றின் எனற சொல்லுக்கு நெறியால் என்பது பொருள். நீதியால், தக்க வழியால், செயல் நிறைவேற உகந்த உத்தியால் என்றும் கொள்வர்.
வருந்தா என்ற சொல் முயலாத என்ற பொருள் தரும்.
வருத்தம் என்ற சொல் முயற்சி என்று பொருள்படும். வருந்திச் செய்யும் முயற்சி வருத்தம் எனப்பட்டது (பாவாணர்)
பலர்நின்று என்ற தொடர் பலர் துணைநின்று என்பதைக் குறித்தது.
போற்றினும் என்ற் சொல் காப்பினும் என்ற பொருளது.
|
முறையாகத் தொடங்கி தக்க வழிகளில் மேற்கொள்ளாத எந்த முயற்சியும் முன்னின்று துணைசெய்யப் பலர் இருந்தும்,அச்செயலில் பொத்தல் உண்டாகி முடங்கிக் போய்விடும்.
ஆற்றின்’ என்பதற்கு உகந்த செயல்முறைகள் வழியில் என்பது பொருள். பெரியாரோடு எண்ணி முடிந்த நெறியில் எனவும் கொள்ள முடியும்.
வருந்தா வருத்தம் என்ற தொடர்க்கு வருத்தத்தால் விளைந்த பொருள் என்றும் வருந்தி முயலாத முயற்சி என்றும் பொருள் கூறப்பட்டன. பயனின்றி மெய்வருந்தியதால் முயற்சி வருத்தம் எனப்பட்டது என்பர். வருந்தா வருத்தம் என்பதற்கு முயலாத முயற்சி என்பது சிறந்த பொருள்..
நெறியில் அமையாத செயலால் பெறப்பட்ட பொருள் குறைபடும் என்பது கருத்து.
முடியக்கூடிய வழிகளால் செயல் முயலப்படாததால் வெறும் வருத்தமே மிஞ்சியது; எத்துணைபேர் அதைப் போற்றிப் போற்றி மறைத்தாலும் மறைக்கப்படாத வருத்ததமாயிற்று என்றும் இப்பாடலுக்குப் பொருள் கூறுவர்
|
'பொத்துப்படும்' என்றால் என்ன?
இச்சொல்லுக்கு புரைபடும் (கருதிய நன்மையன்றிக் கருதாத தீமை பயத்தல்) குற்றப்படும், பழுதாகும் குறையுடையதாகிவிடும், இழுக்க்குப்படும், பொத்தல் ஏற்பட்டுவிடும் என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.
பொத்துப்படும் என்றது பொத்துவிடுதலைக் குறிக்கும். பொத்தல் என்பது இன்றும் வழக்கில் உள்ள ஒரு சொல்தான். துணியில் ஓட்டை விழுந்தால் அதைப் பொத்தல் என்கிறோம். அதுபோல நீர் நிலைகளில் துளை ஏற்பட்டு நீர் கசிந்தால் நீர் பொத்துக்கொண்டு வருகிறது என்போம்.
இங்கு எடுத்துக் கொண்ட செயலில் ஓட்டை விழுந்துவிடும் என்பது பொருள்
|
தக்க செயல்முறைகள் வழி முயலாத முயற்சியை வெறும் ஆள்ப்லம் கொண்டு சீராக்க இயலாது என்பது இக்குறட்கருத்து.
முறையறிந்து மேற்கொள்ளாத முயற்சி எவ்வளவு துணை இருந்தாலும் குறையாகவே முடியும் என்னும் தெரிந்து செயல்வகை பாடல்.
தக்க செயல்முறைகள் வழி முயலாத முயற்சி பலர்துணை இருப்பினும் சீர்குலைந்து போகும்.
|