இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0467எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

(அதிகாரம்:தெரிந்து செயல்வகை குறள் எண்:467)

பொழிப்பு (மு வரதராசன்): (செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும். துணிந்தபின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.

மணக்குடவர் உரை: ஒருவினை செய்யத் துணிவதன் முன்னே அதனால் வரும் பயனை எண்ணிப் பின்பு செய்யத் துணிக: துணிந்தபின் எண்ணுவோமென்றல் தப்பாமாதலான்.

பரிமேலழகர் உரை: கருமம் எண்ணித் துணிக - செய்யத்தக்க கருமமும் முடிக்கும் உபாயத்தை எண்ணித் தொடங்குக, துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு - தொடங்கி வைத்துப் பின் எண்ணக் கடவோம் என்று ஒழிதல் குற்றம் ஆதலான்.
(துணிவுபற்றி நிகழ்தலின் துணிவு எனப்பட்டது. சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. உபாயம் என்பது அவாய்நிலையான் வந்தது. அது , கொடுத்தல், இன்சொல் சொல்லல், வேறுபடுத்தல், ஒறுத்தல் என நால்வகைப்படும். இவற்றை வடநூலார் தான, சாம, பேத , தண்டம் என்ப. அவற்றுள் முன்னைய இரண்டும் ஐவகைய. ஏனைய மூவகைய, அவ்வகைகளெல்லாம் ஈண்டு உரைப்பின் பெருகும். இவ்வுபாயமெல்லாம் எண்ணாது தொடங்கின் அவ்வினை மாற்றானால்விலக்கப்பட்டு முடியாமையானும், இடையின் ஒழிதல்ஆகாமையானும் அரசன் துயருறுதலின், அவ்வெண்ணாமையை 'இழுக்கு'என்றார். செய்வனவற்றையும் உபாயம் அறிந்தே தொடங்குகஎன்பதாம்.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: தீர ஆராய்ந்து அறிந்து கொண்ட பின்புதான் காரியத்தை ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்துவிட்டு நடக்க நடக்க ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
எண்ணத் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு..

பதவுரை: எண்ணி--ஆராய்ந்து; துணிக-துணிவு கொள்க, தொடங்குக; கருமம்-செயல்; துணிந்தபின்-தொடங்கியபின்; எண்ணுவம்-நினைக்கக் கடவோம், எண்ணிப் பார்க்கலாம்; என்பது-என்றல்; இழுக்கு-குற்றம், தப்பு.


எண்ணித் துணிக கருமம் :

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவினை செய்யத் துணிவதன் முன்னே அதனால் வரும் பயனை எண்ணிப் பின்பு செய்யத் துணிக:;
பரிப்பெருமாள்: ஒருவினையைச் செய்யத் [துணிவதன் முன்னே அதனால் வரும் பயனை எண்ணிப் பின்பு செய்யத்] துணிக;
பரிப்பெருமாள் குறிப்புரை: காரியம் நின்ற நிலை அறிந்தாலும் எண்ணாது துணிதல் ஆகாது.
பரிதி: ஏதொரு காரியமும் மேல் எண்ணியெண்ணித் துணிந்து செய்க;
காலிங்கர்: யாதானும் ஒன்றினை ஒருவர் செய்யும் காலத்து மற்று அதனைக் கீழ்ச்சொன்னாங்குச் சூழ்ந்து வாய்ப்பது அறிந்து செய்யத் துணிக;
பரிமேலழகர்: செய்யத்தக்க கருமமும் முடிக்கும் உபாயத்தை எண்ணித் தொடங்குக;
பரிமேலழகர் குறிப்புரை: துணிவுபற்றி நிகழ்தலின் துணிவு எனப்பட்டது. சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. உபாயம் என்பது அவாய்நிலையான் வந்தது. அது, கொடுத்தல், இன்சொல் சொல்லல், வேறுபடுத்தல், ஒறுத்தல் என நால்வகைப்படும். இவற்றை வடநூலார் தான, சாம, பேத , தண்டம் என்ப. அவற்றுள் முன்னைய இரண்டும் ஐவகைய. ஏனைய மூவகைய, அவ்வகைகளெல்லாம் ஈண்டு உரைப்பின் பெருகும்.

'எண்ணிப் பின்பு செய்யத் துணிக' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மணக்குடவர் 'பயன் கருதி' என்றும் காலிங்கர் 'வாய்ப்பது அறிந்து' என்றும் பரிமேலழகர் 'முடிக்கும் உபாயத்தை எண்ணி' என்றும் எதை 'எண்ணி' என்பதற்கு விளக்கம் கூறுகின்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நன்றாக நினைத்துக் காரியத்தில் இறங்குக', 'ஒரு செயல்புரியத் துணிவதற்கு முன்னர் அதனால் வரும் பயனை ஆராய்ந்து பார்த்துப் பின்னர்ச் செய்யத் துணிய வேண்டும்', 'செய்யுஞ் செயலை முடிக்கும் வகையினை ஆராய்ச்சி செய்து செய்யத் தொடங்குக', 'ஒரு செயலை நன்கு ஆராய்ந்து செய்வதற்குத் துணிதல் வேண்டும்' என்ற பொருளில் உரை தந்தனர்.

ஆராய்ந்து பார்த்துச் செயலில் இறங்குக என்பது இப்பகுதியின் பொருள்.

துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: துணிந்தபின் எண்ணுவோமென்றல் தப்பாமாதலான்.
பரிப்பெருமாள்: துணிந்தபின் எண்ணுவோம் என்றல் தப்புஆம் ஆதலான் என்றவாறு.
பரிதி: காரியத்தைத் தொடங்கின பின்பு விசாரிப்போம் என்பது இழத்தலான காரியன் என்றவாறு.
காலிங்கர்: மற்று அவ்வாறு செய்யத் துணிந்தபின் செயற்பாட்டு நிகழ்ச்சிக்கண்ணே புகுந்து நின்று இதனை எண்ணுவோம் என்று நினைக்கின்றது பெரிதும் குற்றம் என்றவாறு.
பரிமேலழகர்: தொடங்கி வைத்துப் பின் எண்ணக் கடவோம் என்று ஒழிதல் குற்றம் ஆதலான்.
பரிமேலழகர் குறிப்புரை: இவ்வுபாயமெல்லாம் எண்ணாது தொடங்கின் அவ்வினை மாற்றானால்விலக்கப்பட்டு முடியாமையானும், இடையின் ஒழிதல்ஆகாமையானும் அரசன் துயருறுதலின், அவ்வெண்ணாமையை 'இழுக்கு'என்றார். செய்வனவற்றையும் உபாயம் அறிந்தே தொடங்குகஎன்பதாம்.

'தொடங்கிய பின் எண்ணுவோம் என்றல் தப்பு/இழத்தல்/குற்றம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள்' இறங்கியபின் பார்க்கலாம் என்பது தவறு', 'துணிந்ததற்குப் பின்னர் ஆராய்வோம் என்பது குற்றமாகும்', 'தொடங்கிய பின் அதன் முடிவில் எண்ணிக் கொள்ளலாமென்பது தவறு', 'செய்யத் தொடங்கிய பிறகு அதனைப் பற்றி ஆராய்வோம் என்பது குற்றம் ஆகும்' என்றபடி பொருள் உரைத்தனர்.

தொடங்கியபின் எது நேரிடினும் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்வது தவறாம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஆராய்ந்து பார்த்துச் செயலில் இறங்குக; தொடங்கியபின் எண்ணுவம் என்று சொல்வது தவறாம் என்பது பாடலின் பொருள்.
'எண்ணுவம்' என்றால் என்ன?

ஆராயாமல் முயற்சியை முதலில் தொடங்கிவிட்டு சிக்கல்களை அவ்வப்போது எதிர்கொள்ளலாம் என்ற மிகைநம்பிக்கை இழுக்காய் முடிந்துவிடும்.

ஒரு செயலில் ஈடுபடுவதற்கு முன்னால் அதைப்பற்றி நன்றாகக் கலந்து எல்லாவற்றையும் தீர ஆலோசிக்க வேண்டும்; செயலைத் தொடங்கிவிட்டுப் போகப்போக எது வந்தாலும் அவ்வப்போது எதிர்கொள்ளலாம் என்பது கடியத்தக்க குற்றமாகிவிடும்.
எண்ணித் துணிக’ என்பதற்கு செயலை முடிக்கும் வழிகளை எண்ணித் தொடங்குக, செயலின் பயன் கருதித் தொடங்குக, முயற்சியை முடிக்க இயலுமா இயலாதா என்று எண்ணித் துணிக என பல திறமாக உரையாளர்கள் விளக்கினர். நினைத்த உடனேயே ஒரு செயலில் ஈடுபடக் கூடாது. ஒரு முயற்சியை மேற்கொள்ளும்போது வலியறிந்து அதில் ஈடுபடவேண்டும். அதைச் செய்வதால் கிடைக்கும் பயன்கள், அதைச் செய்யும்போது ஏற்படக் கூடிய இடையூறுகள், அவ்வாறு தடைகள் நேர்ந்தால் அவற்றை நீக்குதற்குரிய வழிகள், அதே பயன் எய்த, உண்டான வேறு மாற்று செயல்கள் இவை அனைத்தையும் நன்கு எண்ணிப் பார்த்த பின்பே அதில் துணிய வேண்டும்.
அவ்வாறு சிந்திக்காமல் எண்ணிய உடனேயே செயலைத் தொடங்கிவிட்டுப் இடையூறுகள் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று செயல்பட்டால் பின்வரும் சிக்கல்களுக்குத் தீர்வு காண இயலாமல் போகலாம். அப்படியும் அந்தச் செயல் முடிக்கப்பட்டால் அதனால் பெற்ற பயன் எடுத்துக் கொண்ட முயற்சிக்குப் போதுமானதாயில்லாமல் போகலாம். அதுசமயம் இம்முயற்சி இழப்புகளை உண்டாக்கி, இகழவும்படும்.

நினைத்ததும் விரைந்து தொடங்கிவிட்டு பதற்றத்துடன் செயல் மேற்கொள்ளல் பயனுள்ள விளைவு பயக்காது. செயலில் இறங்கியபின் இடையூறுகள் வழியில் வந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என நினைப்பது அறிவுடைமையாகாது.

'எண்ணுவம்' என்றால் என்ன?

எண்ணுவம் என்றது எண்ணிப் பார்க்கலாம் என்ற பொருள் தரும். 'வரும்பொழுது பார்த்துக் கொள்ளலாம்' என்று உலக வழக்கில் சொல்லப்படுவதையே எண்ணுவம் என்ற சொல் இங்கு குறிக்கிறது. ஒரு செயலை முதலில் தொடங்கி வைத்து விடலாம். பின்பு அதை எப்படிச் செய்யலாம் என்று ஆராய்வதே எண்ணுவம் எனப்படுகிறது. செயல் தொடங்கியபின் அது நிகழ்ந்து கொண்டிருக்கும்போது ஊடே புகுந்து நின்று இதை மாற்றி இப்படிச் செய்யலாமே என்று நினைக்கின்றது குற்றமாகும். இந்தப் பொறுப்பற்ற தன்மையை இழுக்கு என வள்ளுவர் அழைக்கிறார். இது தொடங்கிய முயற்சி வழி மாறிச் சென்று முரணாகித் தோல்வியில் முடிய வழி வகுக்கும்.
முன் எண்ணத் தக்கதைப் பின் எண்ணவேண்டாம் என்பது கருத்து.

ஆராய்ந்து பார்த்துச் செயலில் இறங்குக; தொடங்கியபின் எது நேரிடினும் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்வது தவறாம் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பதறாத செயல் சிதறாது என்பதைத் தெளிதல் தெரிந்து செயல்வகையாம்.

பொழிப்பு

ஆராய்ச்சி செய்து தொடங்குக. தொடங்கியபின் (வழியில் தடைகள்) வந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்பது தவறு