இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0465



வகையறச் சூழாது எழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதுஓர் ஆறு

(அதிகாரம்:தெரிந்து செயல்வகை குறள் எண்:0465)

பொழிப்பு: செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத் தொடங்குதல் பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும்.

மணக்குடவர் உரை: மேற்சொன்னவகைகளில் போக்கறச் சூழாதே போர்கருதி யெழுதல் பகைஞராகிய விதையை நிலத்தின்கண்ணே இடுவதொரு நெறி.
இது பகைவர்க்கு ஆக்க முண்டாமென்றது.

பரிமேலழகர் உரை: வகை அறச் குழாது எழுதல் - சென்றால் நிகழும் திறங்களை எல்லாம் முற்ற எண்ணாது, சிலவெண்ணிய துணையானே அரசன் பகைவர்மேல் செல்லுதல், பகைவரைப் பாத்திப்படுப்பது ஓர் ஆறு - அவரை வளரும் நிலத்திலே நிலைபெறச் செய்வது ஒரு நெறி ஆம்.
(அத்திறங்களாவன : வலி, காலம், இடன் என்ற இவற்றால் தனக்கும் பகைவர்க்கும் உளவாம் நிலைமைகளும், வினை தொடங்குமாறும், அதற்கு வரும் இடையூறுகளும், அவற்றை நீக்குமாறும், வெல்லுமாறும், அதனால் பெறும் பயனும் முதலாயின. அவற்றுள் சில எஞ்சினும் பகைவர்க்கு இடனாம் ஆகலான்,முற்றுப்பெற எண்ண வேண்டும் என்பதாம். இவை மூன்று பாட்டானும்ஒழியத்தகும் வினையும், ஒழியா வழிப்படும் இழுக்கும்கூறப்பட்டன.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: ஒரு முயற்சியின் திறங்களை முற்றிலும் ஆராய்ச்சி செய்யாது அதனைச் செய்யத் தொடங்குதல், பகைவர்களை நல்ல இடத்திலே நிலைபெற்றோங்கச் செய்வதற்கு ஒரு வழியாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வகையறச் சூழாது எழுதல் பகைவரைப். பாத்திப் படுப்பதுஓர் ஆறு


வகையறச் சூழாது எழுதல்:
பதவுரை: வகை-கூறுபாடு; அற-முழுக்க முழுக்க; சூழாது-ஆராயாமல்; எழுதல்-மேற்செல்லுதல்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மேற்சொன்னவகைகளில் போக்கறச் சூழாதே போர்கருதி யெழுதல்;[போக்கற-குற்றமின்றாக]
பரிப்பெருமாள்: மேற்சொன்னவகையெல்லாம் போக்கறச் சூழாதே போர்கருதி யெழுதல்; [போக்கற-குற்றமின்றாக]
பரிதி: ஒரு சத்துருவைக்2 கெடுக்க வேண்டினால் அவனுக்கு அடுத்த பேரைக் கூட்டிக்கொண்டு அவர் துணையாலே இராசகாரியம் காண்பானல்லது;.
காலிங்கர்: உலகத்து வேந்தரானவர் தாம் செய்யும் கருமங்களின் கூறுபாட்டினைச் செலவறத் தேராது தொடங்குதல் யாதாமோ எனின்; [செலவறத் தேராது-முடிவு வரையில் ஆராயாமல்]
பரிமேலழகர்: சென்றால் நிகழும் திறங்களை எல்லாம் முற்ற எண்ணாது, சிலவெண்ணிய துணையானே அரசன் பகைவர்மேல் செல்லுதல்,
பரிமேலழகர் விரிவுரை: அத்திறங்களாவன : வலி, காலம், இடன் என்ற இவற்றால் தனக்கும் பகைவர்க்கும் உளவாம் நிலைமைகளும், வினை தொடங்குமாறும், அதற்கு வரும் இடையூறுகளும், அவற்றை நீக்குமாறும், வெல்லுமாறும், அதனால் பெறும் பயனும் முதலாயின. அவற்றுள் சில எஞ்சினும் பகைவர்க்கு இடனாம் ஆகலான்,முற்றுப்பெற எண்ண வேண்டும் என்பதாம்.

'முற்ற ஆராயாமல் பகைவர் மேல் செல்தல்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். .

இன்றைய ஆசிரியர்கள 'உட்கூறுகள் தெரியாது செய்யப் புறப்படுதல்',, 'உட்கூறுகள் எல்லாம் முழுவதும் எண்ணாமல் ஒருவன் பகைவர்மேல் செல்லுதல்', 'செய்ய நினைக்கிற காரியத்தைப் பற்றி எல்லா விஷயங்களையும் தீர ஆராயாமல் செய்யத் தொடங்கியது', 'ஒன்றைச் செய்து முடிப்பதற்குரிய திறங்களையெல்லாம் நன்கு ஆராய்ந்து ஒன்றைச் செய்ய முற்படுதல்,. ',என்ற பொருளில் உரை தந்தனர்.

திறங்களையெல்லாம் ஒன்றுவிடாமல் ஆராயாமல் செய்யப் புறப்படுதல் என்பது இப்பகுதியின் பொருள்.

பகைவரைப் பாத்திப் படுப்பது ஓர் ஆறு:
பதவுரை: பகைவரை--எதிரிகளை; பாத்தி-வளரும் நிலம்; படுப்பது-நிலைபெறச் செய்வது ஓர்-ஒரு; ஆறு-நெறி.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பகைஞராகிய விதையை நிலத்தின்கண்ணே இடுவதொரு நெறி.
மணக்குடவர் குறிப்புரை: இது பகைவர்க்கு ஆக்க முண்டாமென்றது.
பரிப்பெருமாள்:( பகைஞராகிய விதையை விளைநிலத்தின்கண்ணே இடுவதொரு நெறி.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பகைவர்க்கு ஆக்க முண்டாமென்றது.
பரிதி: சத்துருவை அசைவறத் தாவிப்பதாம்3 என்றவாறு. [அசைவறத் தாவிப்பதாம்--உறுதியாக நிலைநிறுத்துவதாம்].
காலிங்கர்: தம் பகையாகின்ற வித்தினைப் படாமல் விளைத்தற் பொருட்டு பாத்தி கட்டி மற்று அதனுள் விளைவிப்பதோர் நெறி என்றவாறு. [பாத்தி கட்டி- வரப்பு கட்டி.]
பரிமேலழகர்: அவரை வளரும் நிலத்திலே நிலைபெறச் செய்வது ஒரு நெறி ஆம்.
பரிமேலழகர் குறிப்புரை: இவை மூன்று பாட்டானும்ஒழியத்தகும் வினையும், ஒழியா வழிப்படும் இழுக்கும்கூறப்பட்டன.

'பகைவராகிய விதையை நிலத்தின் இடும் நெறி' என்று மணகுடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை எழுதினர். பரிதி 'பகைவரை உறுதியாக நிலை நிலைநிறுத்துவதாம்' என்றார். ' காலிங்கர் 'தம் பகையான வித்தை வரப்பு கட்டி விளைவிப்பதோர் நெறி' என்று உரை செய்கிறார். பரிமேலழகர் 'பகைவரை வளரும் நிலத்திலே நிலைபெறச் செய்வது' எனப் பொருளுரைக்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள்' பகைவர் வெற்றிக்குப் பாத்தி பிடிப்பதாகும்' 'பகைவரை வளரும் நிலத்திலே பயிரை நட்டுச் செழிக்கச் செய்யும் நெறியாகும்.', ' (பகைவர்களாகிய) இடையூறுகளைப் பாத்தி கட்டிப் பயிர் செய்வதற்கான ஒரு வழி', 'பகைவரை வெற்றிபெறும் வழியில் செலுத்துவதாகும் 'என்றபடி பொருள் உரைத்தனர்.

பகைவரை செழிக்கச் செய்யும் நெறியாகிவிடும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற மனப்பான்மையுடன் தொடங்கும் செயல் பகைவர் வளரவே துணை செய்யும் என்னும் பாடல்.

திறங்களையெல்லாம் ஒன்றுவிடாமல் ஆராயாமல் செய்யப் புறப்படுதல், பகைவரைp பாத்திப் படுப்பது ஒரு நெறி என்பது பாடலின் பொருள்.
'பாத்திப் படுப்பது' என்றால் என்ன?

வகையற என்ற சொல்லுக்குக் கூறுபாடு முழுக்க என்பது பொருள், குற்றமற என்றும் பொருள் கொள்வர்.
சூழாது என்ற சொல் ஆராயாது என்ற பொருள் தரும்.
எழுதல் என்றது மேற்செல்லல் எனப்படும். இதற்கு மேற்கொள்ளல் என்றும் பொருள் கூறலாம்.
ஓர்ஆறு என்பது ஒரு வழி எனப் பொருள்படும்.

ஒரு பெரும் திட்டத்தில் ஈடுபடும்பொழுது அதைச் செய்து முடிப்பதற்குரிய உட்கூறுகள் எல்லாவற்றையும், தவறு நிகழாதபடி முர்றும் ஆராய்ந்து முடிவு எடுக்கவேண்டும். போர் தொடுக்கத் துணியும் அரசு அதன் அனைத்துக் கூறுகளையும் ஒன்றுவிடாமல் தீர ஆராய வேண்டும். விரைவுக் கோணத்தில் செயல்பட்டால் நாமறியாமலே பகைவரை நம்பாதுகாப்புடன் நம் வீட்டுகுள் அழைத்து வந்து வளர்ப்பதுபோல் ஆகிவிடும் என்கிறது பாடல்.
இக்குறளில் பகைவர் என்ற சொல்லாட்சி இருப்பதால், போர்ச் செயலைப்பற்றிய பாடல் எனக் கருதியே பல உரையாளர்கள் உரை கூறினர். ஆனால் பகைவர் என்பதற்குப் பதிலாக போட்டியாளர்கள் என்று கொண்டு இப்பாடலை மற்றச் செயல்களுக்கும் பொருத்திக் கொள்ள முடியும்.
மரபான வலிமை, காலப்பொருத்தம், இடச்சூழல் போன்றவையில் முடிவு எடுக்கும் திறங்கள் எல்லாம் அடங்கி விடும். இவையே இன்று மேலாண்திறத்தில் வேறுவேறு வடிவில் பல நுட்பமான புதிய உத்திகளுடன் தோன்றி திட்டம் நிறைவேறத் துணை செய்கின்றன. செயலின் நோக்கம் என்ன்? நோக்கத்தை அடைய மாற்றுவழிகள் எவையெவை, மாற்றுவழிகள் எல்லாவற்ரையும் மதிப்பிடுதல், முடிவெடுத்தல், முடிவை செயல்படுத்தல், முடிவு சரியான திசையில் செல்கிறதா என்று மேற்பார்வையிடல் என்பன, முடிவு எடுக்கும் முறைமையின் ,பொதுவான படிநிலைகள் ஆகும். ஒவ்வொரு படிநிலைகளுக்குள்ளும் பல் உட்கூறுகள் உள்ளன. அவை அனைத்தையும் ஆராந்த பின்னரே துணிதல் வேண்டும்.
இங்கு வள்ளுவர் தரும் அறிவுரை என்னவென்றால் முடிவு எடுக்கும் முறைமை முழுமையாக பின்பற்றப்பட்டதா என்று உறுதி செய்தபின் செயலைத் தொடங்க வேண்டும் என்பதே.

தாம் மேற்கொள்ளும் செயல்களின் வகை தொகைகளை ஆராயாமல் அவற்றை மேற்கொள்ளல், தாமே முன்வந்து தமது எதிரிகளை மேன்மேலும் வலிமைப்படுத்திக் கொள்ள உதவும் ஒர் வழியாகிவிடும்.

'பாத்திப் படுப்பது' என்றால் என்ன?

பாத்திப் படுப்ப(து) என்றதை, பாத்தி கட்டிப் பயிர் செய்வது, பாத்திகட்டி வளர்ப்பது, வளரும் நிலத்திலே பயிரை நட்டுச் செழிக்கச் செய்வது, வளரும் நிலத்தில் நிலைபெறச் செய்வது, நல்ல இடத்திலே நிலைபெற்றோங்கச் செய்வது, அப்பகை நிலையிலேயே நிறுத்துகிற, பகைவரைத் தன் வீட்டில் அழைத்து வந்து வைப்பது, வளரும் பாத்தியுள் களையை நிலைபெறச் செய்வது, .பகைவர் வெற்றிக்குப்) பாத்தி பிடிப்பது, (பகைவரை) வெற்றிபெறும் வழியில் செலுத்துவது, (பகைவரை) வலியுடையராக்குவது,.வளரும் நிலத்திலே (எதிர் அணியினரை) நிலைபெறச் செய்வது எனப் பலவாறாக உரையாளர்கள் விளக்கினர்.
இவையெல்லாம் பகைவரை வலுப்படுத்தி, அவர்களைப் பகை நிலையிலேயே நிலையாக இருத்தி வைப்பதாகும் என்ற பொருள் தருவன்., '

பாத்தி’ என்பது வயற்காட்டுப் பகுதியைக் குறிக்கும் பாத்திப்படுப்பது' என்பது- வழி வகுத்துக் கொடுப்பது எனப்பொருள் தரும்.. ஜி வரதராஜன்: பகுத்து-தடுத்து எனக் கண்டு பாத்தியைத் தடுத்து நீரை வருவிப்பது போலாம் என்றார். இவ்வுவமையைப் 'பாத்தியைத் தடுத்து நீரை வருவிப்பது போல், பகைவருக்கு வழிவகுத்துத் தானே அழிவைத் தேடிக்கொள்வதாகும்' என விளக்குவார் இவர்.
பகைவர் எவ்வாறு நம்மைக் கெடுக்கலாம் என்று காத்திருக்கும்போது பகைவர்க்கு நாம் செய்யும் குற்றங்களே வழியாக அமைந்துவிடும் என்பது கருத்து. பாவாணர், 'மேற்கொண்டு செழித்து வளர முடியாவாறு அடர்ந்திருக்கும் நாற்றுக்களைப் பறித்துப் பாத்தியுள் இடைவிட்டு நட்டு, நன்றாய் வளரச் செய்தலை யொக்கும்' என . ‘ பாத்திப் படுத்து என்பதை நாற்று நடுதல் கொண்டு விளக்கம் செய்வார்.

திறங்களையெல்லாம் ஒன்றுவிடாமல் ஆராயாமல் செய்யப் புறப்படுதல், பகைவரை செழிக்கச் செய்யும் நெறியாகிவிடும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

முழுக்க முழுக்க ஆராய்ந்த பின்பே போர் போன்ற பெருஞ்செயல்களில் இறங்க வேண்டும் என்னும் தெரிந்து செயல்வகை பாடல்

பொழிப்பு

உட்கூறுகள் எல்லாம் முழுக்க முழுக்க எண்ணாமல் செயல் மேற்கொள்ளல் எதிராளியை வயல் பகுதியில் பயிரை நட்டுச் செழிக்கச் செய்யும் நெறியாகிசிடும்.