இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0463



ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.

(அதிகாரம்:தெரிந்து செயல்வகை குறள் எண்:463)

பொழிப்பு: பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது உள்ள முதலை இழந்துவிடக் காரணமான செயலை அறிவுடையவர் மேற்கொள்ளமாட்டார்.

மணக்குடவர் உரை: தமக்கு ஆக்கம் உண்டாகவேண்டி முன்புண்டான முதலும் இழக்க வரும் வினையைச் செய்ய நினையார் அறிவுடையார்.
இது பிற்பயவாத வினை செய்யலாகாதென்றது.

பரிமேலழகர் உரை: ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை - மேல் எய்தக்கடவ ஊதியத்தினை நோக்கி முன் எய்தி நின்ற முதல் தன்னையும் இழத்தற்கு ஏதுவாய செய்வினையை, அறிவுடையார் ஊக்கார் - அறிவு உடையார் மேற்கொள்ளார்.
('கருதி' என்னும் வினையெச்சம் 'இழக்கும்' என்னும் பெயர்எச்ச வினை கொண்டது. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. ஆக்கமே அன்றி முதலையும் இழக்கும் வினைகளாவன: வலியும் காலமும் இடனும் அறியாது பிறர் மண் கொள்வான் சென்று, தம் மண்ணும் இழத்தல் போல்வன. முன் செய்து போந்த வினையாயினும் என்பார்,'செய்வினை' என்றார்.)

சி இலக்குவனார் உரை: இனி அடையக்கூடிய மேம்பாட்டைக் கருதி உள்ள முதலை இழக்கக்கூடிய செயலை அறிவுடையார் மேற்கொள்ளார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை அறிவுடையார் ஊக்கார்


ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை:
பதவுரை: ஆக்கம்-மேம்பாடு; கருதி-நினைத்து; முதல்-முதற்பொருள்; இழக்கும்-இழத்தற்குக்காரணமாகிய; செய்வினை-செய்யும் செயல் .

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தமக்கு ஆக்கம் உண்டாகவேண்டி முன்புண்டான முதலும் இழக்க வரும் வினையை;
பரிப்பெருமாள்: தமக்கு ஆக்கம் உண்டாகவேண்டி முன்புண்டான முதலும் இழக்க வரும் வினையை;
பரிதி: அற்ப லாபத்தை எண்ணிமுதலைச் சேதம் பண்ணுகிற காரியம்;
காலிங்கர்: இங்ஙனம் தெரிந்த அறிவினர் தம்வயின் மேல் ஆவதோர் ஆக்கம் கருதித் தமது பழகிய பொருளும் சிதையுமாறு செய்யும் கருமத்தில்;.
பரிமேலழகர்: மேல் எய்தக்கடவ ஊதியத்தினை நோக்கி முன் எய்தி நின்ற முதல் தன்னையும் இழத்தற்கு ஏதுவாய செய்வினையை,
பரிமேலழகர் கருத்துரை: 'கருதி' என்னும் வினையெச்சம் 'இழக்கும்' என்னும் பெயர்எச்ச வினை கொண்டது. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. ஆக்கமே அன்றி முதலையும் இழக்கும் வினைகளாவன: வலியும் காலமும் இடனும் அறியாது பிறர் மண் கொள்வான் சென்று, தம் மண்ணும் இழத்தல் போல்வன. முன் செய்து போந்த வினையாயினும் என்பார்,'செய்வினை' என்றார்.

'மேல் ஆவதோர் ஆக்கம் கருதி முன்புண்டான முதலும் இழக்க வரும் வினையை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள 'வருவதை நம்பி உ:ள்ளதை இழக்கும் காரியத்தில்', 'பின்வரும் ஊதியம் கருதி முன்னுள்ள முதற்பொருளை இழத்தற்குரிய செயலைச் 'செய்ய', ':(தெரிந்தவர்களோடு ஆலோசிக்காமல் அவசரப்பட்டு எந்தக் காரியத்தையும் தொடங்கக்கூடாது.) இலாபத்துக்கு ஆசைப்பட்டு உள்ள முதலை இழந்துவிடக்கூடிய காரியத்தை', 'மேல்வரும் ஊதியத்தைக் கருதிப் போட்ட முதலையும் இழக்கக்கூடிய முயற்சியை', என்ற பொருளில் உரை தந்தனர்.

வரப்போகும் மேம்பாடு எண்ணி உள்ள முதற்பொருளை இழக்கும் செஎயலை என்பது இப்பகுதியின் பொருள்.

ஊக்கார் அறிவுடை யார்.:
பதவுரை: ஊக்கார்-மேற்கொள்ளார்; அறிவுடையார்-அறிவுள்ளவர்-.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செய்ய நினையார் அறிவுடையார்.
மணக்குடவர் குறிப்புரை: இது பிற்பயவாத வினை செய்யலாகாதென்றது
பரிப்பெருமாள்: செய்யார் அறிவுடையார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பிற்பயக்க வேண்டும் வினை செய்யவேண்டும் என்றார். இது பிற்பயவாத வினை செய்யலாகாதென்றது
பரிதி: செய்யார் அறிவுடையார் என்றவாறு.
காலிங்கர்: ஒருப்படார் (யார்) எனின் மற்று ஆக்கமும் முதலும் அழிவின்றிச் சிறக்கும் தகுதியை அறியும் அறிவுடையார் என்றவாறு.
பரிமேலழகர்: அறிவு உடையார் மேற்கொள்ளார்.

'அறிவுடையார் மேற்கொள்ளார்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள்' ஈடுபடார் அறிவு இருப்பவர்', அறிவுடையார் ஊக்கம் கொள்ள மாட்டார்.', 'அறிவுடையவர்கள் ஆரம்பிக்க மாட்டார்கள்', 'அறிவுடையோர்கள் மேற்கொள்ளமாட்டார்கள் 'என்றபடி பொருள் உரைத்தனர்.

அறிவுடையவர்கள் ஊக்கம் கொள்ள மாட்டார்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
முதலுக்கே மோசம் வரும் முயற்சியை அறிவுடையார் மேற்கொள்ளார் என்னும் பாடல்.

வரப்போகும் மேம்பாடு எண்ணி உள்ள முதற்பொருளை இழக்கும் செஎயலை அறிவுடையவர்கள் ஊக்கார் என்பது பாடலின் பொருள்.
'ஊக்கார்' என்பதன் பொருள் என்ன?

ஆக்கம் என்ற சொல்லுக்கு மேம்பாடு என்பது பொருள்.
கருதி என்ற சொல் எண்ணி என்ற பொருள் தரும்.
முதல் என்பது முத்ற்பொருளைக் குறித்தது.
இழக்கும் என்றது அழிவு உண்டாக்கும் என்ற பொருளது.'
செய்வினை என்ற தொடர் செய்யும் செயல் எனப் பொருள்படும்.
அறிவுடையார் என்ற சொல் அறிவுடையவர்களைக் குறிக்கும்.

பேராசையினால் கைமுதலையும் அழிக்கும் முயற்சியில் அறிவுள்ளவர்கள் ஈடுபடமாட்டார்கள்

முதலீடு இழப்பிற்கான வாய்ப்புடையது எனத்தெரியவருமானால் அதனின் விளைவுகளைக் கருதாது அச்செயலினை செய்வதில் அறிவுடைய மக்கள் ஊக்கம் கொள்ளமாட்டார். முதலீடு செய்ய எண்ணுவோர் அதனால் ஏற்படக்கூடிய பயன்களை (இலாபம்) மட்டும் கருத்தில் கொண்டு முதலுக்கே மோசம் விளைவிக்கக்கூடிய வினைகளில் (முதலீட்டு செயல்களில்) முதலீடு செய்வதற்கு போதிய முதலீட்டறிவுடைய யாரும் ஊக்கம் பெற மாட்டார்கள். அறிவுடையோர் யாரும் அதனை மேற்கொள்ள ஊக்குவிக்கவும் மாட்டார்கள்.

முதலிலார்க்கு ஊதியமில்லை. இதையே மாற்றிச் சொல்வதானால் ஊதியம் வேண்டுமானால் முதலிடவேண்டும். எல்லா முதலீட்டு முயற்சிகளிலும் இடர்ப்பாடு உண்டு. மிகை இடர்ப்பாடு என்றால் மிகை ஊதியம். மிகை ஊதியம் வேண்டி இடர்க்காப்பின்மையான செயலில் ஈடுபட்டால் முதலையே இழக்க நேரிடும்.
மிகையான வட்டியை எதிர்பார்த்து தம் வாழ்நாள் சேமிப்பு முழுவதும் இழக்கும் முதலீட்டாளர்கள் பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறோம். போட்ட காசுக்கு பன்மடங்கு எதீர்வருவாய் என்ற ஈர்ப்பான சேமிப்புத் திட்டங்களில் ஏமாந்து போவோரையும் காண்கிறோம். இவர்கள் முதலீடு செய்த நிறுவனத்தின் பின்புலம், நம்பகத்தன்மை, எப்படி அவர்கள நம் பணத்தை வைத்துப் பொருளீட்டி நமக்குத் தருவார்கள் என்று சிறுது எண்ணயிருந்தால் இழப்பைத் தவிர்ர்த்திருக்கலாம். அறிவுடையார் இவற்றில் ஈடுபட்டிருக்கமாட்டார்கள்.

ஆக்கமும் முதலும் அழிவின்றிச் சிறக்கும் தகுதியை அறியும் அறிவுடையார் முதல் இழக்கும் அதாவது இடர் மிகுந்த முயற்சியை மேற்கொள்ளார் என்கிறார் வள்ளுவர்.. மேம்பாடு நோக்கி, பெரிய ஆதாயம் என்று கற்பனை பண்ணிக்கொண்டு, தன்னுடைய நிலையில் தாழ்வு அடையும் செயலை அறிவுடையார் மேற்கெள்ளமாட்டார்கள். . பேரிடர்ப்பாடு நிறைந்த முயற்சிகளில் ஈடுபடக்கூடாது என்பது கருத்து

'ஊக்கார்' என்பதன் பொருள் என்ன?

ஊக்கார் என்றதற்கு ஊக்குவிக்கமாட்டார், ஊக்கம் காட்டமாட்டார்,. ஊக்கம் கொள்ள மாட்டார், .செய்ய நினையார், மேற்கொள்ளமாட்டார், .ஒருப்படார், செய்யமாட்டார், ஈடுபடார், ஆரம்பிக்க மாட்டார் என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்..
ஊக்கம் என்ற சொல்லின் அடியில் பிறந்தது ஊக்கார்.
ஊக்கம் என்பது முயற்சி அல்லது செயல் புரிவதற்கான மனஎழுச்சியைக் குறித்தது.
நாமக்கல் இராமலிங்கம் ஊக்கார் என்பது உணர்ச்சி வேகத்தில் அவசரப்பட்டுச் செய்துவிடமாட்டார்கள் என்ற பொருளுடையது என்பார்.
ஊக்கார் என்பதற்கு மனக்கிளர்ச்சி அடையார் அல்லது சிந்திக்காமல் விரைந்து முயலார் என்பது பொருள்.

வரப்போகும் மேம்பாடு எண்ணி உள்ள முதற்பொருளை இழக்கும் செஎயலில் அறிவுடையவர்கள் ஊக்கம் கொள்ள மாட்டார்கள் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

சூதாட்டக் கூறுகள் கொண்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுரை தரும் தெரிந்து செயல்வகை பாடல்.

பொழிப்பு

மேம்பாடு கருதி உ:ள்ளதை இழக்கும் செயலைச் செய்ய அறிவுடையார் ஊக்கம் கொள்ள மாட்டார்.