அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்
(அதிகாரம்:தெரிந்து செயல்வகை
குறள் எண்:461)
பொழிப்பு (மு வரதராசன்): (ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும், ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.
|
மணக்குடவர் உரை:
வினை செய்து முடித்தற்கு அழியும் பொருளும் அது செய்து முடித்தாலுளதாகும் பொருளுமாய்நின்று அப்பொருளினாற் பின்புண்டாய் வரும் பயனும் எண்ணிப் பின்பு வினைசெய்ய வேண்டும்.
பரிமேலழகர் உரை:
அழிவதூஉம் - வினைசெய்யுங்கால் அப்பொழுது அதனால் அழிவதையும், ஆவதூஉம் - அழிந்தால் பின் ஆவதனையும், ஆகி வழி பயக்கும் ஊதியமும் - ஆய் நின்று பிற்பொழுது தரும் ஊதியத்தையும், சூழ்ந்து செயல் - சீர் தூக்கி உறுவதாயின் செய்க.
(உறுவதாவது - நிகழ்வின்கண் அழிவதனில் ஆவது மிக்கு, எதிர்வினும் அது வளர்ந்து வருதல் . அழிவது இன்மையின், எதிர்வின்கண் வரும் ஆக்கத்தை 'ஊதியம'¢ என்றார். எனவே, அவ்வூதியம் பெறின் நிகழ்வின்கண் அழிவதும் ஆவதும் தம்முள் ஒத்தாலும், ஒழிதற்பாற்று அன்று என்பது பெற்றாம். இரண்டு காலத்தும் பயன் உடைமை தெரிந்து செய்க என்பதாம்.)
சி இலக்குவனார் உரை:
வினை செய்யுங்கால் உண்டாகும் அழிவையும் நன்மையையும் ஆராய்ந்து பின்னால் உண்டாகும் பயனையும் எண்ணி எதனையும் செய்தல் வேண்டும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல்.
பதவுரை: அழிவதூஉம்-அழிவதும், கெடுவதும்; ஆவதூஉம்-ஆகக்கூடியதும், உண்டாகுவதும்; ஆகி-உண்டாகி, ஆய்; வழிபயக்கும்-தரும், அதன் வழியாக உண்டாதல்; ஊதியமும்-நன்மையும், லாபமும், வருவாயும்; சூழ்ந்து செயல்-ஆராய்ந்து செய்க.
|
அழிவதூஉம் ஆவதூஉம் :
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வினை செய்து முடித்தற்கு அழியும் பொருளும் அது செய்து முடித்தாலுளதாகும் பொருளும்;
பரிப்பெருமாள்: வினை செய்து முடித்தற்கு அழியும் பொருளும் அது செய்து முடித்தாலுளதாகும் பொருளும்;
பரிதி: ஒருவனால் வரும் ஆக்கமும் சேதமும்;
காலிங்கர்: யாவரோடும் யாதானும் ஒரு காரியம் செய்யுமிடத்து அழிவதொன்றாகியும் ஆவதொன்றாகியும் இங்ஙனம் வேறுபட்டிருக்கும்;.
பரிமேலழகர்: வினைசெய்யுங்கால் அப்பொழுது அதனால் அழிவதையும் அழிந்தால் பின் ஆவதனையும்;
'அழியும் பொருளும் அது செய்து முடித்தாலுளதாகும் பொருளும்' என்று பொருளின்மேல் மணக்குடவர்/பரிப்பெருமாள் கூற மற்ற பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு அழிவதும் ஆவதும்' என்று பொதுமையில் உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள 'அழிவதும் ஆவதும்', 'ஒரு காரியத்தில் ஈடுபடும்போது அதனால் வரும் அழிவையும் ஆக்கத்தையும்', '(ஒரு வேலையைத் தொடங்கு முன்னால்) அதற்குச் செய்ய வேண்டிய செலவுகளையும் அந்த வேலையினால் அடையக் கூடிய நன்மைகளையும்', 'ஒரு காரியத்தைச் செய்யுங்கால் அதனாற் கெடக் கூடியதும் ஆகக்கூடியதும்' என்ற பொருளில் உரை தந்தனர்.
அழிவதும் ஆகக்கூடியதும் என்பது இப்பகுதியின் பொருள்.
ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆய் நின்று அப்பொருளினாற் பின்புண்டாய் வரும் பயனும் எண்ணிப் பின்பு வினைசெய்ய வேண்டும்.
பரிப்பெருமாள்: ஆய் நின்று அப்பொருளினாற் பின்புண்டாகும் அப்பயனும் எண்ணிப் பின்பு வினைசெய்க என்றவாறு..
பரிப்பெருமாள் கருத்துரை: வழிபயக்கும் ஊதியமாவது முன்பு நன்றாகத் தோற்றிப் பின்பு தீதாகாத வினை. இது முதலாக எண்ணுமாறு கூறுகின்றார். ஆகலின் முற்பட இவை மூன்றும் எண்ணுதல் வேண்டுமென்பது கூறிற்று.
பரிதி: விசாரித்துத் தொண்றுதொட்டு வருகிற ஊதியமும் விசாரித்துச் செய்வான்.
காலிங்கர்: அதனால் அவற்றை ஆராய்ந்து அழிவது விடுத்தும் ஆவது கைக்கொண்டும் செய்யுங்கால், மற்று அப்(பயனு)டைமையும் தேர்ந்து பின்பு அக்கருமம் செய்க என்றவாறு..
பரிமேலழகர்: ஆய் நின்று பிற்பொழுது தரும் ஊதியத்தையும் சீர் தூக்கி உறுவதாயின் செய்க.
பரிமேலழகர் கருத்துரை: உறுவதாவது - நிகழ்வின்கண் அழிவதனில் ஆவது மிக்கு, எதிர்வினும் அது வளர்ந்து வருதல் . அழிவது இன்மையின், எதிர்வின்கண் வரும் ஆக்கத்தை 'ஊதியம்' என்றார். எனவே, அவ்வூதியம் பெறின் நிகழ்வின்கண் அழிவதும் ஆவதும் தம்முள் ஒத்தாலும், ஒழிதற்பாற்று அன்று என்பது பெற்றாம். இரண்டு காலத்தும் பயன் உடைமை தெரிந்து செய்க என்பதாம்.
'அப்பொருளினால் வரும் பயனும் எண்ணி வினை செய்க' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் கூறினர். மற்ற பழைய ஆசிரியர்கள் பொதுமையில் 'ஊதியத்தையும் சீர்தூக்கி செய்க' என்றபடி இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பின்வரும் ஊதியமும் எல்லாவற்றையும் எண்ணிச் செய்க', 'பின்வரும் ஊதியத்தையும் சீர்தூக்கிப் பார்த்து நல்லதாயின் செய்தல் வேண்டும்', 'அந்த வேலை முடிந்தபின் அதன் வழியாகப் பின்னால் வரக்கூடிய பலாபலன்களையும் ஆராய்ந்து அறிந்து கொண்டு அதன் பிறகே அந்தக் காரியத்தில் இறங்க வேண்டும்', 'பின் உண்டாகும் மிச்சமும் இன்ன என்று ஆராய்ச்சி செய்து அதனைச் செய்தல் வேண்டும்' என்றபடி பொருள் உரைத்தனர்.
ஆகி பின்வரும் ஊதியமும் ஆராய்ந்து செய்க என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
அழிவதும் ஆகக்கூடியதும் ஆகி வழிபயக்கும் ஊதியமும் ஆராய்ந்து செய்க என்பது பாடலின் பொருள்.
'வழிபயக்கும் ஊதியம்' என்றால் என்ன?
|
கணக்கு வழக்குப் பார்த்து முயற்சி தொடங்குக.
ஒரு முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்பாக, அதனால் வரும் கேட்டினையும் ஆக்கத்தையும் இவற்றால் நின்று வரும் ஊதியத்தையும் சீர்தூக்கி ஆராய்ந்து முயலுதல் வேண்டும்.
அச்செயலால் அழியக்கூடியதையும் பிறகு அதன் வழியாக உண்டாகக் கூடிய ஊதியத்தையும் ஆராய்ந்து பார்த்துச் செய்தல் வேண்டும்.
இது ஒரு செயல் தொடங்கு முன்னர் செலவு-பயன் பகுத்தாய்வு செய்யவேண்டும் என்பதைச் சொல்வது.
இழப்பு, ஆக்கம், ஆதாயம் அதாவது செலவு, வரவு, லாபம் ஆகிய இம்மூன்றையும் எண்ணிப் பார்த்து ஒரு செயலைச் செய்தல் வேண்டும்.
'ஆழம் தெரியாமல் காலை விடாதே' என்ற பழமொழியை நினைவிற் கொள்ளலாம்.
ஒரு செயலில் ஈடுபடுவது அல்லது ஒரு வணிக முயற்சியில் முதலீடு செய்வது போன்ற எதற்கானாலும் பொருந்துதல் போல இப்பாடல் பொதுமையிற் கூறப்பட்டது. எனவே செலவினங்கள், வருவாய், ஆதாயம் என்று பொருள் அளவில் கொள்ளாமல் நன்மை தீமை, மிஞ்சுவது எல்லாவற்றையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்று பொருள் கொள்வது பொருத்தம்.
அழிவது முதலில் கூறப்பட்டது தொடக்கத்தில் இழப்பு, பின் ஆக்கம் என்றாகி, தொடர்வில் ஆதாயம் என்ற இயல்பில் அமைந்தது.
சூழ்ந்து செயல் என்பதற்கு ஆராய்ந்து செய்க என்பது பொருள். ஆராய்ந்து பார்ப்பது என்பது சீர்தூக்கிப் பார்ப்பது. செயலின் பயன் காண்பது நடப்புக்காலம் எதிர்காலம் இரண்டும் சார்ந்தன என்பதால் தீர ஆராய்ந்து துணிய வேண்டும் என்கிறது குறள். பின் வரும் அழிவையோ ஆக்கத்தையோ இன்று துல்லியமாகக் கணிக்க இயலாது. ஆயினும் செயலின் தன்மை, அதன் பலம், அதன் பலவீனம் இவற்றைத் தெரிந்து ஓரளவு அவற்றைக் கணக்கிட முடியும். திட்ட மேலாண்மை கோட்பாட்டில் இதை ஆகுமை அறிக்கை (Feasibility Study) மூலம் கணிப்பர். அழிவு-ஆக்கம் ஆதாயம் என்பதை அளவிடுவதை செலவு-பயன் ஆய்வு (Cost Benefit Analysis) என்பர். அழிவு, ஆக்கம், நமக்கு கிடைக்கக் கூடிய பயன் இவை மூன்றையும் சீர்தூக்கிப் பார்த்து, தக்கதாயின் அந்தச் செயல் தொடங்க வேண்டும் அல்லது அதில் ஈடுபடவேண்டும்.
அரசு செயற்பாடாக இருந்தால், பயன் என்பது பொருள் மட்டும் சார்ந்ததாக இல்லாமல், மக்கள் நலம் போன்று வேறு பலவும் உள்ளடக்கியதாக இருக்கும்.
|
'வழிபயக்கும் ஊதியம்' என்றால் என்ன?
வழிபயக்கும் என்ற தொடர் பின்வரும் என்ற பொருளையும். ஊதியம் என்ற சொல் ஆதாயம் அதாவது பயன் என்ற பொருளையும் குறிப்பன. வழிபயக்கும் ஊதியம் என்பது எதிர்கால பயன் என்ற பொருள் தரும்.
பரிதி இத்தொடர்க்கு தொன்றுதொட்டு மரபுவழி வரும் ஊதியம் அதாவது தலைமுறை தலைமுறையாக வரும் ஊதியம் என உரை வரைகிறார். பரிப்பெருமாள் 'வழிபயக்கும் ஊதியமாவது முன்பு நன்றாகத் தோன்றிப் பின்பு தீது ஆகாத வினை' என வினையாகவே -பொருளாகவோ அல்லது பயனாகவோ அல்லாமல்- கொள்கிறார்.
இன்றைய ஆசிரியர்கள் அதன் வழியாக உண்டாகும் ஆதாயம் அல்லது தொடர்ச்சியாக வரும் ஆதாயம் என்று இத்தொடரை விளக்குவர்.
வழிபயக்கும் ஊதியம் பொருளாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை; முயற்சியால் உண்டாகும் நற்பெயரும் வெற்றியும் ஊதியமாகக் கருதப்படும்.
ஒரு செயலை வெற்றிகரமாக முடித்துவிட்டாலும் பின்னால் அதன் வழியாகத் தீமை வரக்கூடியதாகவும் இருக்கலாம். அதனால் செயல் முடிந்த பின்னரும் எவ்வகையானும் ஏதாவது இழப்புக்கான கோரிக்கை வருமா என்பதையும் இப்போதே ஆராய வேண்டும்.
வழிபயக்கும் ஊதியம் என்பதற்கு எதிர்காலப் பயன் என்பதைவிட நீண்டகால ஆதாயம் (Long Term Benefir) எனக் கொள்வது சிறக்கும்.
|
அழிவதும் ஆகக்கூடியதும் ஆகி பின்வரும் ஊதியமும் ஆராய்ந்து செய்க என்பது இக்குறட்கருத்து.
செயலின் பயன் கணித்து ஈடுபடவேண்டும் என்பது ஒரு தெரிந்து செயல்வகை.
;
அழிவையும், ஆக்கத்தையும், ஆகிப் பின்வரும் ஊதியத்தையும் ஆராய்ந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
|