இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0429



எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்

(அதிகாரம்:அறிவுடைமை குறள் எண்:429)

பொழிப்பு (மு வரதராசன்): வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுஙகும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

மணக்குடவர் உரை: துன்பம் வருவதற்கு முன்பே வருமென்று நினைத்துக் காக்கும் அறிவையுடையார்க்கு நடுங்க வருவதொரு துன்பம் இல்லை.
இது முன்னை வினையால் வருந் துன்பமும் முற்பட்டுக் காக்கின் கடிதாக வாராதென்றது.

பரிமேலழகர் உரை: எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு - வரக்கடவதாகிய அதனை முன் அறிந்து காக்கவல்ல அறிவினை உடையார்க்கு, அதிர வருவது ஓர் நோய் இல்லை - அவர் நடுங்க வருவதொரு துன்பமும் இல்லை.
('நோய்' என வருகின்றமையின், வாளா 'எதிரதா' என்றார். இதனான் காக்கலாம் காலம் உணர்த்தப்பட்டது. காத்தல் - அதன் காரணத்தை விலக்குதல். அவர்க்குத் துன்பம்இன்மை இதனான் கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: இனி வரக்கூடியதை முன் அறிந்து காக்க வல்ல அறிவினை உடையார்க்கு அவர் நடுங்க வருவதோர் துன்பம் இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோய்.

பதவுரை: எதிரது- எதிர்காலத்தில் நேரக் கடவது; ஆ-ஆகும்படி; காக்கும்-காப்பாற்றும்; அறிவினார்க்கு-அறிவினையுடையவர்க்கு; இல்லை-இல்லை; அதிர-நடுங்கும்படி; வருவதோர்-நிகழ்வதொரு; நோய்-துன்பம், வாழ்க்கைத்துயரம், துக்கம், உடல்பிணி,


எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: துன்பம் வருவதற்கு முன்பே வருமென்று நினைத்துக் காக்கும் அறிவையுடையார்க்கு;
பரிப்பெருமாள்: துன்பம் வருவதற்கு முன்னே வருமென்று நினைத்துக் காக்கும் அறிவையுடையார்க்கு;
பரிதி: விதனம் என்றறிந்து அந்த விதனம் வராமல் முன்னே பரிகரிப்பாற்கு; [விதனம்-துன்பம்; பரிகரிப்பாற்கு- நீக்குவார்க்கு]
காலிங்கர்: மேல்வரும் காரியத்தின் நலமும் தீங்கும் சீர்தூக்கின், நல்லனவற்றின்வழி இடம்படுத்தித் தீயனவற்றைத் தெறும்வழி நோக்கியும் இங்ஙனம் அவை அவை கருமத்தைப் பெறவந்த இடத்து மயங்குதல் அன்றியே எதிரதாக் காத்து ஒழுகும் அறிவுடைமையார்க்கு;
பரிமேலழகர்: வரக்கடவதாகிய அதனை முன் அறிந்து காக்கவல்ல அறிவினை உடையார்க்கு;

'வரக்கடவதாகிய துன்பத்தை முன் அறிந்து காக்கவல்ல அறிவையுடையார்க்கு' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வருமுன்னர்க் காக்க வல்ல அறிஞர்க்கு', 'பின்வருவதனை முன் அறிந்து காத்துக் கொள்ளும் அறிஞர்களுக்கு', 'வரக்கூடிய கெடுதியை முன் அறிந்து தம்மைக் காத்துக் கொள்ளக்கூடிய அறிவுடையவர்களுக்கு', 'துன்பம் வருவதற்கு முன்னால் தடுத்துவிடக்கூடிய அறிவுடையவர்களுக்கு' என்றபடி உரை தந்தனர்.

வரக்கூடியதை அறிந்து காத்துக் கொள்ளும் அறிவுடையார்க்கு என்பது இப்பகுதியின் பொருள்.

இல்லை அதிர வருவதோர் நோய்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நடுங்க வருவதொரு துன்பம் இல்லை.
மணக்குடவர் குறிப்புரை: இது முன்னை வினையால் வருந் துன்பமும் முற்பட்டுக் காக்கின் கடிதாக வாராதென்றது.
பரிப்பெருமாள்: நடுங்க வருவதொரு துன்பமும் இல்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: முன்னை வினையால் வருந் துன்பமும் முற்படக் காக்கின் கடிதாக வாராதென்றது.
பரிதி: இல்லையாம்; அது எது என்னில், தன் மனத்தை வருத்தஞ் செய்கிற விதனம் என்னும் நோய் என்றவாறு.
காலிங்கர்: எஞ்ஞான்றும் இல்லை தமது உள்ளம் துணுக்குற வருவது ஓர் இடர் என்றவாறு.
பரிமேலழகர்: அவர் நடுங்க வருவதொரு துன்பமும் இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: 'நோய்' என வருகின்றமையின், வாளா 'எதிரதா' என்றார். இதனான் காக்கலாம் காலம் உணர்த்தப்பட்டது. காத்தல் - அதன் காரணத்தை விலக்குதல். அவர்க்குத் துன்பம்இன்மை இதனான் கூறப்பட்டது.

நடுங்க வருவதொரு துன்பமும் இல்லை என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அதிர்ச்சி தரும் துன்பம் வராது', 'அதிர்ச்சி தரும் துன்பம் இல்லை', 'அவர்கள் நடுங்கும்படியாக வரும் துன்பம் ஒன்றும் இல்லை', 'திடுக்கிடும்படியான துன்பம் வராது. வந்துவிட்டாலும் அதனால் குலைந்து போகமாட்டார்கள்' என்றபடி பொருள் உரைத்தனர்.

உள்ளம் துணுக்குற வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
எதிரதாக் காக்கும் அறிவையுடையார்க்கு உள்ளம் துணுக்குற வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை என்பது பாடலின் பொருள்.
எதிரதாக் காக்கும் என்றால் என்ன?

எதிர்கால அதிர்ச்சிகளிலிருந்து காப்புறுதி செய்து கொள்வர் அறிவுடையோர்.

பின்னர் வரப்போவதை முன்னதாகவே அறிந்து காத்துக் கொள்ளத்தக்க அறிவுடையவர்க்கு அவர்கள் நடுங்கும்படியாக வருவதான துன்பம் எதுவும் இல்லை.
'அறிவுடையார் ஆவது அறிவார்' என இதற்கு முந்தைய குறள் (427) ஒன்று கூறியது. அப்பாடலின் நீட்டிப்புபோல அமைந்த இக்குறள் அவ்விதம் ஆவது அறிந்து காத்துக் கொண்டவர்க்குண்டான பயன் என்ன என்று கூறுகிறது. முன்னறிந்து காக்கவல்ல அறிவினையுடையார்க்கு அவர் நிலை குலையும்படியாக வருவதொரு துன்பமும் இல்லை என்று இக்குறள் தெரிவிக்கின்றது. இதனது எதிர்மறைப் பொருளும், அதாவது அறிவற்றவர்களுக்கு முன்னறிந்து காக்கும் திறமை இல்லை என்பதும், அவர்களுக்கு சிறுதுன்பங்களும் கூட பயப்படும்படியும் அமையும் என்பதும் பெறப்படுகிறது.

மணக்குடவர் இக்குறளுக்கான சிறப்புரையில் '.....முற்பட்டுக் காக்கின் கடிதாக வாராதென்றது' எனக் குறிக்கிறார். இவ்வுரையிலுள்ள 'கடிதாக வாராது' என்பதற்குச் 'சிறிது சிறுதாகவோ-காலந்தாழ்த்தோ துன்பந்தோன்றாமல் வரும் என்பது' என்பது தண்டபாணி தேசிகர் விளக்கம். நோய் வரும் என்பதையும் அதன் காரணங்களையும் முன்னே யறிந்தமையானும், எதிரதாக்காக்க முற்பட்டதாலும் அந்நோய் அதிர்ச்சி செய்யாது. அமைதியாக விலக்கப்படும் அல்லது உண்டு கழிக்கப்படும் என்பது என்று அவர் உரைப்பார்.

எதிரதாக் காக்கும் என்றால் என்ன?

எதிரதா என்ற சொல் எதிரது+ ஆ என்று விரியும்; எதிரது - எதிர்காலத்தில் நேரக் கடவது; ஆ-ஆகும்படி. 'எதிரதாக் காக்கும்' என்பது எதிர் வரும் துன்பத்திலிருந்து காத்துக் கொள்ளுதல் எனப் பொருள்படும். காத்தல் என்பது வராமல் தடுத்தல் அல்லது அது கடுமையாகத் தாக்காதவாறு பார்த்துகொள்வது என்பதைக் குறிக்கும். இதை வருமுன் காத்தல் என்பதும் இது.

பட்டறிவு பெறுவதைவிட முன்னெச்சரிக்கையாகக் காத்துக்கொள்வது அறிவுடைமை. துயரமான விளைவுகளை எதிர்கொண்ட பிறகு அவற்றிலிருந்து மீண்டுவருவதற்கான நடவடிக்கைகளை நோக்குவதைவிட, வரப்போவனவற்றை முன்னரே உணர்ந்து, உரிய காப்புகளை ஏற்படுத்திக் கொள்வது சிறந்தது. இதை மேலாண்மை உலகம் மேல்எண்ணிய (proactive) நடவடிக்கைகள் என்று குறிப்பிடும். துன்பம் நேர்ந்த பின்னர் தீர்வு காணமுயலும்போது நமது செயல்களில் பதற்றமிருக்கும். மேலும் சில குளறுபடிகள் நேரும். பொருளும், நேரமும், ஆற்றலும் வீணாகப் போகக் கூடும். மன உளைச்சலும் ஏற்படும். விரும்பத்தகாத இவ்விளைவுகளைத் தவிர்க்க வேண்டுமென்றால் வருமுன்னரே செயல்பட்டு உரிய மாற்றங்களை நாமே உருவாக்கிவிட வேண்டும். நோய் வரவிட்டுப் பின் அதைக் குணப்படுத்தப் போராடுவதைவிட நோய் தாக்காமல் காக்க மேற்கொள்ளும் முயற்சியே மிகுந்த பயன் அளிக்கும்.

இன்று பலதுறைகளில் வருமுன் காப்பதற்கு வழிகள் உண்டு. நிதி, மருத்துவம் போன்றவற்றை முன்கூட்டியே ஆளாதவர் வாழ்வு சீரழியும் என்பது உலகக் காட்சி.
நிதித்துறையைப் பொறுத்தவரையில், ஒவ்வொருவருடைய வாழ்விலும் எதிர்பாராத செலவு வருவதுண்டு. உடல் நோய், விபத்துச் செலவு போன்றவை திடீரென்று வரக்கூடியவை. மருத்துவக் காப்புறுதி, வங்கிச்சேமிப்பு, வைப்புநிதி ஆயுள் காப்பீடு முதலியன நல்ல காப்பாகத் துணைநிற்கும்.
மருத்துவத் துறையையில், எதிர்காலத்தில் என்ன உடல் நோய்கள்-குறைபாடுகள் ஒருவருக்கு ஏற்படும் என்பதை இன்று எளிதாகக் கணிக்கின்றனர். வழிமுறையாக வருவதாகப் பல நோய்கள் கண்டறியப்பட்டுள்ளன; ஆதலால் குடும்ப முன்னோர் உற்ற நோய் வரலாறு தெரிந்தால் நமக்கு வருவதைத் தடுக்க இயலும். இன்றைய மரபணுச் சோதனைமுறையில் நிறைய நோய் நிகழ்வுகளை முன்கூட்டியே சொல்லவும் இயலும். அவ்வப்போது - ஆண்டுக்கொருமுறை என்றவாறு - மருத்துவநிலையம் சென்று ஆய்வு மேற்கொள்ளுதல் பயனளிக்கும். பிணியுற்றோர் தமது வாழ்க்கைமுறையைத் திருத்தம் செய்து செயற்படுவார்களேயானால் உறப்போகின்ற நோய்களைக் காலம் தாழ்த்த முடியும் அல்லது வராமலே தடுக்க முடியும்.
இவைபோன்ற காப்புகளையே எதிரதாக் காத்தல் என்கிறார் வள்ளுவர்.

'எதிரதாக் காத்தல்' என்றது பிறகு வரக்கூடியதை முன்னதாக உணர்ந்து காத்துக் கொள்ளுதல் என்ற பொருள் தரும்.

வரக்கூடியதை அறிந்து காக்கும் அறிவையுடையார்க்கு உள்ளம் துணுக்குற வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

'வருமுன் காப்போம்' என்ற விழிப்புணர்வுடன் வாழ்வதே அறிவுடைமை.

பொழிப்பு

பின்வருவதனை முன் அறிந்து காத்துக் கொள்ளும் அறிவுடையார்க்கு அதிர்ச்சி தரும் துன்பம் இல்லை.