இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0427அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்

(அதிகாரம்:அறிவுடைமை குறள் எண்:427)

பொழிப்பு (மு வரதராசன்): அறிவுடையவர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார்; அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.

மணக்குடவர் உரை: பிற்பயக்குமது அறிவார் அறிவுடையாராவார், அதனை யறியாதவர் அறிவில்லாதவராவர்.
இது மேற் சொல்லுவன எல்லாம் தொகுத்துக் கூறிற்று.

பரிமேலழகர் உரை: அறிவுடையார் ஆவது அறிவார் - அறிவுடையராவர் வரக் கடவதனை முன் அறிய வல்லார் , அறிவிலார் அஃது அறிகல்லாதவர் - அறிவிலராவார் அதனைமுன் அறியமாட்டாதார்.
(முன் அறிதல்: முன்னே எண்ணி அறிதல். அஃது அறிகல்லாமையாவது: வந்தால் அறிதல். இனி, 'ஆவது அறிவார் என்பதற்குத் தமக்கு நன்மையறிவார்' என்று உரைப்பாரும் உளர்.)

இரா சாரங்கபாணி உரை: பின் வரப் போவதை முன்கூட்டி அறிபவர் அறிவுடையராவர். அங்ஙனம் முன்னரே அறியமாட்டாதவர் அறிவில்லாதவராவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர்.

பதவுரை: அறிவுடையார்-அறிவு உடையார்; ஆவது-வரக்கடவது; அறிவார்-தெரிவார்; அறிவிலார்-அறிவில்லாதவர்; அஃது-அது; அறிகல்லாதவர்-அறிய மாட்டாதார், அறியமுடியாதவர்கள்.


அறிவுடையார் ஆவது அறிவார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிற்பயக்குமது அறிவார் அறிவுடையாராவார்;
பரிப்பெருமாள்: பிற்பயக்குமது அறிவார் அறிவுடையாராவார்;
பரிதி: அறிவுடையவர் ஆகும் காரியம் அறிவார்;
காலிங்கர்: உலகத்து அறிவுடையோர் என்று சொல்லத்தகுவார் யாரோ எனின், கீழ்ச்சொன்னவழி வேற்றுமைகள் எல்லாவாற்றானும் தெரிந்து தமக்கு இருமை ஆக்கமும் ஆவதனை அறிந்து ஒழுகுவாரே;
பரிமேலழகர்: அறிவுடையராவர் வரக் கடவதனை முன் அறிய வல்லார்;
பரிமேலழகர் குறிப்புரை: முன் அறிதல்: முன்னே எண்ணி அறிதல்.

'அறிவுடையார் பின் வருவதை முன்னரே அறிய வல்லார்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மேல்வருவதை அறிபவர் அறிவுடையவர்', 'ஆகக்கூடியதை முன் அறிய வல்லவரே அறிவுடையர் ஆவர்', 'அறிவுடையார் இனி வரப்போவதனை அறியவல்லார்', 'அறிவுடையவர்கள் எதனால் எது வரும் என்று பின்னால் வரக்கூடியதை முன்னால் ஆலோசித்தறிந்து எச்சரிக்கை கொள்வார்கள்' என்றபடி உரை தந்தனர்.

அறிவுடையவர்கள் பின் வரப்போவதனை அறிய வல்லவர்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

அறிவிலார் அஃதறி கல்லா தவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனை யறியாதவர் அறிவில்லாதவராவர்.
மணக்குடவர் குறிப்புரை: இது மேற் சொல்லுவன எல்லாம் தொகுத்துக் கூறிற்று.
பரிப்பெருமாள்: அதனை யறியாதவர் அறிவில்லாதவராவர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேற்சொல்லிச் சொல்லாதனவெல்லாம் தொகுத்துக் கூறிற்று. இத்துணையும் அறிவிலக்கணம் கூறப்பட்டது.
பரிதி: அறிவில்லாதவர் தமக்கான காரியமும் அறியார் என்றவாறு.
காலிங்கர்: ஆதலால் அதனை அங்ஙனம் தெரிந்து அறியவல்லாதார் யாவர் மற்று அவரே பெரிதும் அறிவிலாதார் என்றவாறு.
பரிமேலழகர்: அறிவிலராவார் அதனைமுன் அறியமாட்டாதார்.
பரிமேலழகர் குறிப்புரை: அஃது அறிகல்லாமையாவது: வந்தால் அறிதல். இனி, 'ஆவது அறிவார் என்பதற்குத் தமக்கு நன்மையறிவார்' என்று உரைப்பாரும் உளர்.

'அறிவில்லாதவர் அதனை முன்அறியமாட்டாதார்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அத்திறமை இல்லாதவர் அறிவில்லாதவர்', 'அதை முன் அறியமாட்டாதவர் அறிவில்லாதவரே', 'அறிவிலார் அதனை அறியும் ஆற்றல் இல்லாதார்', 'அப்படி முன் யோசனை செய்யத் தெரியாதவர்கள் அறிவில்லாதவர்கள்' என்றபடி பொருள் உரைத்தனர்.

அறிவில்லாதவர்கள் அதனை அறியும் ஆற்றல் இல்லாதவர்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அறிவுடையவர்கள் ஆவது அறிய வல்லவர்கள்; அறிவில்லாதவர்கள் அதனை அறியும் ஆற்றல் இல்லாதவர்கள் என்பது பாடலின் பொருள்.
'ஆவது' என்றால் என்ன?

அறிவு எனப்படுவது எதிர்கால முன்னுணர்வு.

அறிவுடையவர் எதிர்வருங் காலத்தில் நேர இருப்பதை இப்பொழுதே அறியும் திறம்கொண்டவராயிருப்பர். பின்வரப்போவதை அவ்விதம் உணர மாட்டாதார் அறிவில்லாதவர்.
பிறகு நிகழ இருப்பதை முன்னதாகவே எண்ணி அறிந்து கொள்ளும் திறம் அறிவுடைமையாம்; வரவிருப்பது ஆக்கமா கேடா நலமா தீமையா என்பவற்றை முன்கூட்டியே அறியும் ஆற்றல் கொண்டவர் அறிவுடையவர். தம் அறிவால் முன்னே நடந்ததையும் இப்போது நடப்பதையும் தெரிந்து நடக்கப் போவதை அவர்களால் எதிர்பார்க்க முடியும். இவ்வாறு எதிர்காலக் குறியாராய்ச்சி செய்து, அதற்குத் தக்கவாறு வாழ்க்கையை அமைத்துக் கொள்வதுதான் அறிவு ஆகும். பின்விளைவு கருதாத வாழ்வு நடத்துபவர்கள் வருங்காலத்தில் எதிபாராத நிகழ்வினால் உண்டாகும் கேட்டைச் சீர்செய்ய இயலாமல் போவர். ஒரு செயலைச் செய்யும் முன்பே அதன் எதிர்கால வாய்ப்புறு கூறுகளை உணர்பவர் வருவிளைவின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முனைவர். எதிர்கால நிலைமையை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு வாழ்க்கையை அமைத்துத் தற்காப்புத் தேடிக்கொள்வதே அறிவின் பயன்.

மல்லர், வீரமாமுனிவர் ஆகிய உரையாசிரியர்கள் அறிகல்லாதவர் என்ற தொடரை அறி+ கல்லாதவர் எனப் பிரித்து முறையே அடையாளம் கல்லாதவர்கள், அடையாமை கல்லாதவர்கள் எனப் பொருள் கூறினர். ஆனால் இது இலக்கண நெறியன்று; ‘அறிவிலாதவர்’ என்பதனை ஒரு சொல்லாகக் கொண்டு அறியமாட்டாதார் என உரைப்பதே பொருத்தமாகும்' என்பார் இரா சாரங்கபாணி.

'ஆவது' என்றால் என்ன?

'ஆவது' என்றதற்குப் பிற்பயக்குமது, ஆகும் காரியம், தமக்கு இருமை ஆக்கமும் ஆவது, வரக் கடவது, தமக்கு மேல் வருங் காரியங்கள், ஆவக்கடவது, எதிர்காலத்தில் நிகழப்போவது, எதிர்காலத்தில் வரக்கூடியவை, நடக்க வேண்டியது, மேல்வருவது, பின் வரப் போவது, எதனால் எது நேரிடும் என்பது, பின்னே வருபவை, ஆகக்கூடியது, இனி வரப்போவது, பிறகு நிகழ இருப்பது, மேல்வந்து உறுவது, எதிர்காலத்தில் நிகழக் கூடியது, எதிர்காலத்தில் நடைபெறப் போவது என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

ஆவது என்பது காலமும் இடனுங்கொண்டு முன்னரே அறிந்து கொள்ளுதலைக் குறிக்கும்; இது நடந்தவற்றைக் கொண்டு நடக்கப் போகும் செயல்களைக் கருதுவதையும் சுட்டுவது.
எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எப்படி அறிய முடியும்? தனக்கு நடந்த நிகழ்ச்சியைக் கொண்டும் பிறர்க்கு உண்டான நிகழ்ச்சிகளை அறிந்தும், என்ன நடக்க வாய்ப்புள்ளது என்பதை ஓரளவு கணிக்க முடியும். இவ்வாறு பின் வரப்போவதை ஊகிக்க முடிந்தவர்கள் 'ஆவது அறிவார்' ஆவர்.
பேரிடர் இழப்பு தவிர்ப்பதற்கு இவ்வறிவு முதன்மையான தேவையாம்.
கம்பர் உற்றது கொண்டு, மேலவந்து உறுபொருள் உணரும் கோளார் (கம்ப இராமாயணம் அயோத்தியா காண்டம், மந்திரப் படலம் 1319 பொருள்: நடந்ததைக் கொண்டு எதிர்காலத்து வந்து நேரத் தக்கவற்றை கணித்து அறியும் அறிவு வன்மையுடையவர்கள்) என அமைச்சர்களின் முன்னறியும் திறன் கூறினார்.
இதை உண்ணுவதால் இன்ன நோய் உண்டாகும் அல்லது இன்ன நோயைத் தவிர்க்கலாம் என்று அறிந்து உடல்நலம் பேணுவதும் 'ஆவது' அறிதல்தான்.
வ சுப மாணிக்கம் ''ஆவது' என்னும் கிளவி எதிர்வோடு தக்கதையும் சுட்டும்' எனக் கூறுவார்.

பரிதி 'தமக்கு ஆகும் காரியத்தையும் அறியார்' எனவும் காளிங்கர் 'தமக்கு இருமை ஆக்கமும் ஆவதனை அறிந்து ஒழுகுவார்' எனவும் ஆவது அறியார்/ஆவது அறிவார் என்ற தொடர்களுக்கு உரைப்பொருள் தந்தனர். 'தமக்கு நன்மை யாவதை அறிவது தன்னல வியல்பே யன்றி, அறிவுடைமை யாகாது' என இவற்றை மறுப்பார் தேவநேயப்பாவாணர்.

அறிவுடையவர்கள் பின் வரப்போவதனை அறிய வல்லவர்கள்; அறிவில்லாதவர்கள் அதனை அறியும் ஆற்றல் இல்லாதவர்கள் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பின்நடக்கப் போவதை வாசிக்கவல்லது அறிவுடைமை.

பொழிப்பு

அறிவுடையவர் பின் வரப் போவதை முன்கூட்டி அறிபவர்; அங்ஙனம் அறியமாட்டாதவர் அறிவில்லாதவர்.