எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு
(அதிகாரம்:அறிவுடைமை
குறள் எண்:426)
பொழிப்பு (மு வரதராசன்): உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.
|
மணக்குடவர் உரை:
யாதொருவாற்றா லொழுகுவது உலகம். அதனோடு கூடத்தானும் அவ்வாற்றா னொழுகுதல் அறிவாவது.
அறிவாவாது எத்தன்மைத்து என்றார்க்கு முற்பட உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதல் அறிவு என்றார்.
பரிமேலழகர் உரை:
உலகம் எவ்வது உறைவது - உலகம் யாதொருவாற்றான் ஒழுகுவதாயிற்று, உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு - அவ்வுலகத்தோடு மேவித் தானும்
அவ்வாற்றான் ஒழுகுவது அரசனுக்கு அறிவு.
('உலகத்தையெல்லாம் யான் நியமித்தலான் என்னை நியமிப்பாரில்லை,' எனக் கருதித் தான் நினைத்தவாறே ஒழுகின், பாவமும் பழியும் ஆம் ஆகலான்.
அவ்வாறு ஒழுகுதல் அறிவு அன்று என விலக்கியவாறு ஆயிற்று. இவை ஐந்து பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது.)
இரா சாரங்கபாணி உரை:
உலகம் எவ்வழியில் ஒழுகுகின்றதோ அவ்வழியில் உலகத்தோடு ஒத்து நடப்பது அறிவு.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
உலகம் எவ்வது உறைவது உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு.
பதவுரை: எவ்வது-எவ்வாறு, எந்த வகையால்; உறைவது-வாழ்வது, உறுதியாவது, ஒழுகுவது; தங்குவது; உலகம்-உலகம். உலகத்தோடு-உலகத்துடன்; அவ்வது-அவ்வாற்றால், அவ்வழியில், அந்த வகையால்; உறைவது-உறுதிபடுவது; அறிவு-அறிவு..
|
எவ்வது உறைவது உலகம்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாதொருவாற்றா லொழுகுவது உலகம்.;
பரிப்பெருமாள்: யாதொருவாற்றா லொழுகும் உலகம்;
பரிதி: பெரியோர் எப்படி நடந்தார்; அந்த ஒழுக்கத்திலே நடப்பது அறிவு என்றவாறு.
காலிங்கர்: இவ்வுலகத்து நீதிப்பொருள் உடையராகிய நாற்பெருங் குலத்தோர் எவ்வகையது ஆகிய நயத்தோடு ஒழுகுவது;
பரிமேலழகர்: உலகம் யாதொருவாற்றான் ஒழுகுவதாயிற்று,
'உலகம் எவ்வாறு ஒழுகுகிறதோ' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். உலகம் என்பதற்குப் பரிதி பெரியோர் என்றும் நற்பெருங் குலத்தோர் என்று காலிங்கரும் பொருள் கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'எங்ஙனம் போகின்றது உலகம்', 'உயர்ந்தோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ', 'உலக நன்மையைக் கருதி வாழ்வது அறிவுடைமையாகும். உலகம் நன்மையை நாடி எவ்வாறு வாழ்கின்றதோ', 'அப்போதைக்கு உலகப் போக்கு எப்படி யிருக்கிறதோ' என்றபடி உரை தந்தனர்.
எவ்வாறு உலகம் வாழ்கிறதோ என்பது இப்பகுதியின் பொருள்.
உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனோடு கூடத்தானும் அவ்வாற்றா னொழுகுதல் அறிவாவது.
மணக்குடவர் குறிப்புரை: அறிவாவாது எத்தன்மைத்து என்றார்க்கு முற்பட உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதல் அறிவு என்றார்.
பரிப்பெருமாள்: அவரோடு கூடத்தானும் அவ்வாற்றா னொழுகுதல் அறிவாவது.
பரிப்பெருமாள் குறிப்புரை: அறிவென்பது எத்தன்மைத்து என்றார்க்கு முற்பட உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதல் அறிவு என்றார்.
பரிதி: அந்த ஒழுக்கத்திலே நடப்பது அறிவு என்றவாறு.
காலிங்கர்: மற்று அவ்வகை(யதாகவே)என்றும் குறிக்கொண்டு நடப்பதே அறிவாவது என்று கூறப்பட்டது.
பரிமேலழகர்: அவ்வுலகத்தோடு மேவித் தானும் அவ்வாற்றான் ஒழுகுவது அரசனுக்கு அறிவு.
பரிமேலழகர் குறிப்புரை: 'உலகத்தையெல்லாம் யான் நியமித்தலான் என்னை நியமிப்பாரில்லை,' எனக் கருதித் தான் நினைத்தவாறே ஒழுகின், பாவமும் பழியும் ஆம் ஆகலான். அவ்வாறு ஒழுகுதல் அறிவு அன்று என விலக்கியவாறு ஆயிற்று. இவை ஐந்து பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது. [நியமித்தலான்-ஒழுங்கு படுத்தி யாளுதலால்]
'உலகத்தோடு பொருந்த ஒழுகுவது அறிவு' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். மணக்குடவரும் பரிப்பெருமாளும் தங்களது
கருத்துரையில் உலகத்தோடு என்பதற்கு உயர்ந்தாரோடு என்று பொருள் கொண்டனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அங்ஙனம் ஒட்டி வாழ்வதே அறிவுடைமை', 'அவ்வாறே அவரோடு கலந்து வாழ்தல் அறிவுடைமைக்கு அடையாளம் ஆகும்',
'அவ்வாறு அந்த உலக நன்மைப் பொருந்த நாமும் வாழ்வதே அறிவுடைமையாகும்', 'அதை அனுசரித்து பொதுமக்களுடன் ஒட்டி நடந்து கொள்வது அறிவுடைமை'
என்றபடி பொருள் உரைத்தனர்.
உலகத்தாரோடு அவ்வாறு பொருந்தி வாழ்வது அறிவுடைமையாகும் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
எவ்வாறு உலகம் வாழ்கிறதோ உலகத்தாரோடு அவ்வாறு பொருந்தி வாழ்வது அறிவுடைமையாகும் என்பது பாடலின் பொருள்.
இக்குறள் ஆள்வோர்க்குக் கூறப்பட்டதா?
|
உலக நடைமுறைக்குத் தக ஒழுகுக.
உலகம் எவ்விதம் நடக்கின்றதோ அந்த வகையில் உலகோர்க்கு பொருந்தும் வகையில் நடந்து கொள்வதே அறிவு.
உலகப் போக்கு எவ்வாறு இருக்கிறதோ அதற்குத்தகத் தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடிய திறன்பெறுவது அறிவாம். அதாவது உலகம் செல்லும் முறைமையில் தாமும் சென்று அந்நெறியில் படிந்து உறுதிபடவாழ்வது அறிவுடைமை.
உறைவது என்ற சொல்லுக்கு பல பொருள் உண்டு. இங்கு இச்சொல் இருமுறை பெய்யப்பட்டுள்ளது. முதலில் உள்ள 'உறைவது' வாழ்வது என்ற பொருளில் அதாவது 'உலகம் எந்த முறையில் வாழ்கிறதோ' என்ற கருத்துடன் அமையும். இரண்டாவது உறைதல் கெட்டியாவது (பனி உறைதல் போல) அல்லது உறுதிப்படுவது என்ற பொருளில் 'ஒருவர் வாழ்க்கை அவ்வாறே உறையவேண்டும்' என்ற கருத்தில் சொல்லப்பட்டது என்று தோன்றுகிறது.
உலகில் நல்லோரும் இருக்கின்றனர் தீயோரும் இருக்கின்றனர். பொதுவாகச் சமுதாயத்தின் இயல்பு நல்லதெனவே வள்ளுவர் கருதுவதால் அவர் உலகத்தோடு அமைந்து வாழக் கூறுகிறார்.
உலகம் என்பதற்கு உயர்ந்தோர், பெரியோர், சான்றோர், பண்பாளர், நல்லவர் என்று பொருள் கூறினர்.
உலகத்தோடு என்பது உலகத்தாரோடு என மக்கட்தொகுதியைப் பொதுமையிற் குறிப்பது என்று கொள்வதே பொருத்தம்.
மனிதன் சமுதாயத்தைச் சார்ந்தே வாழ்கின்றவன். அவன் தன் மனத்திற்குத் தோன்றுமாறோ, தான் கற்ற நூல் அறிவு கொண்டு மட்டுமோ உலகில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளல் இயலாது; அது அறிவுடைமையும் ஆகாது. உலக வாழ்விற்கு வேண்டுவது உலகியல் அறிவு. அவனது தனி முயற்சி ஒரு புறம் அவனுக்குத் துணை நின்றாலும் தன்னைச் சுற்றியுள்ள உலகில் நிகழும் வளர்ச்சிக்கும் மாற்றத்துக்கும் ஈடுகொடுத்து ஏற்புத்திறனுடன் நடந்து கொண்டால் மட்டுமே அவன் ஆக்கம் பெறமுடியும். ஒன்றிய சூழ்நிலையொடு ஒத்துப்போனால் பயன் விரைந்தும் மிகுந்தும் வரும். உலகமும் நன்மை அடைய இயலும். இல்லாவிடில் ஒழுங்கமைவும் கெடும்.
கால நடப்புகளுக்கேற்ப உலகச் சிந்தனைகள் மாறிக்கொண்டே இருக்கும். எனவே உலகத்தாரிடை ஏற்படும் மாற்றங்களுக்குத் தக்கவாறு தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடிய திறன் வளர்த்துக் கொள்வது அறிவுடைமை; அந்த நெகிழ்ச்சி இல்லாத மனிதன் வளர்ச்சியின்றி தேக்கமுறுவான். வாழ்வுமுறைகள், பழக்க வழக்கங்கள், உடை, எண்ணங்கள் இவை போன்ற அனைத்துக்கும் இது பொருந்தும்.
அவ்வப்போதைய உலகம் எங்ஙனம் இயங்குகிறதோ அதன் இயல்புக்கேற்றவாறு தம்முடைய வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ளுதல் அறிவுடைமை என்பது
இக்குறள் கூறும் செய்தி.
அவ்வது என்றதற்கு அவ்வாறு அல்லது என்பது பொருள். அவ்வது எனும் சொல்லாட்சி புதுமையானது என்பர்.
இப்பாடலை உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார் (ஒழுக்கமுடைமை 140 பொருள்: உலகத்தோடு பொருந்த ஒழுகத் தெரியாதவர் பல கற்றிருந்தும் அறிவு இல்லாதவரே) என உலகத்தோடு ஒட்டி வாழும் ஒழுக்கமுறையைக் கூறும் குறட்கருத்தோடு ஒப்பு நோக்கத்தக்கது.
|
இக்குறள் ஆள்வோர்க்குக் கூறப்பட்டதா?
'உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு' என்ற தொடர்க்குப் பொருள் கூறும்போது 'அவ்வுலகத்தோடு மேவித் தானும் அவ்வாற்றான் ஒழுகுவது
அரசனுக்கு அறிவு' என்று அரசனுக்குரிய அறிவின் இலக்கணம் சொல்வதாக இக்குறளைப் புரிந்துகொள்கிறார் பரிமேலழகர்.
மேலும் அவர் ''உலகத்தையெல்லாம் யான் நியமித்தலான் என்னை நியமிப்பாரில்லை' எனக் கருதித் தான் நினைத்தவாறே ஒழுகின், பாவமும் பழியும்
ஆம் ஆகலான். அவ்வாறு ஒழுகுதல் அறிவு அன்று என விலக்கியவாறு ஆயிற்று' என விளக்கவுரையும் தந்தார். அவரைப் பின்பற்றி வேறு சில உரையாளர்களும்
அக்கருத்தை ஒட்டியே பொருள் கூறினர். இக்குறள் 'உலகப் போக்கை எதிர்த்து நிற்கும் எந்த அரசும் வாழ முடியாது' என்றும் 'ஆள்வோர்க்கு உலக நடப்பை உணர்ந்து கொள்ளும் அறிவு
வேண்டும். உலக நடப்போடு இணைந்து நடக்கும் திறமை வேண்டும். உலகப் போக்கை மதிக்காத மனப்பான்மை சர்வாதிகார அரசிடம்தான் இருக்கும். இது அறிவுடைமை ஆகாது' என்று இவர்கள் விளக்கம் செய்தனர். இவை அனைத்தும் மிகச் சிறந்த கருத்துக்கள்.
ஆனால் இப்பாடல் வாழ்வுமுறை மாறுதல்களை மக்கள் எவ்விதம் ஏற்றுகொண்டு நெகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்பதை வலியுறுத்துவது.
உலகம் பொல்லாதது என்று பழித்துக்கொண்டு ஒதுங்கியிருக்காமல் காலம் மாறுவதை அறிந்து தக்க மாறுதல்களைச் செய்து வாழ்பவன் அறிவுடையவன் ஆவான் என்பதைச்
சொல்வது. எனவே இக்குறள், அரசர்க்கான அறிவின் இலக்கணம் மட்டும் சொல்வது என்றல்லாமல், மக்கள் அனைவருக்குக்குமான அறிவின் மற்றொரு இலக்கணம் கூறுவது எனக் கொள்வதே பொருத்தம்.
|
எவ்வாறு உலகம் வாழ்கிறதோ உலகத்தாரோடு அவ்வாறு பொருந்தி வாழ்வது அறிவுடைமையாகும் என்பது இக்குறட்கருத்து.
கூட்டத்தில் இணைந்து கொள்வதே அறிவுடைமை.
உலகம் எவ்வாறு வாழ்கிறதோ உலகத்தாரோடு அவ்வாறு பொருந்தி வாழ்வது அறிவு.
|