இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0425உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு

(அதிகாரம்:அறிவுடைமை குறள் எண்:425)

பொழிப்பு (மு வரதராசன்): உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கிக்கொள்வது சிறந்த அறிவு; முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாதது அறிவு.

மணக்குடவர் உரை: ஒருவனுக்கு ஒள்ளிமையாவது உலகத்தோடு பொருந்தினது: அதனை நீர்ப்பூப்போல மலர்தலுங் குவிதலுமின்றி யொருதன்மையாகச் செலுத்துதல் அறிவு.
இஃது உயர்ந்தாரோடு நட்புப் பண்ணுதலும் அறிவென்றது.

பரிமேலழகர் உரை: உலகம் தழீஇயது ஒட்பம் - உலகத்தை நட்பாக்குவது ஒருவனுக்கு ஒட்பமாம், மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு - அந்நட்பின்கண் முன் மலர்தலும் பின் கூம்புதலும் இன்றி ஒரு நிலையனாவது அறிவாம்.
('தழீஇயது', 'இல்லது' என்பன அவ்வத் தொழில்மேல் நின்றன. உலகம் என்பது ஈண்டு உயர்ந்தோரை. அவரோடு கயப்பூப்போல வேறுபடாது கோட்டுப் பூப்போல ஒரு நிலையே நட்பாயினான்,எல்லா இன்பமும் எய்தும் ஆகலின், அதனை அறிவு என்றார்.காரியங்கள் காரணங்களாக உபசரிக்கப்பட்டன. இதனைச் செல்வத்தில் மலர்தலும் நல்குரவில் கூம்பலும்இல்லது என்று உரைப்பாரும் உளர்.)

வ சுப மாணிக்கம் உரை: உலகத்தைத் தழுவிப் போவது சாமர்த்தியம். மகிழ்தலும் வருந்துதலும் இல்லாதது அறிவு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு.

பதவுரை: உலகம்-உலகம்; தழீஇயது-பொருந்திப் போவது; ஒட்பம்- சாமர்த்தியம், நுண்ணறிவுடைமை, இயற்கை அறிவு; மலர்தலும்-விரிதலும்; கூம்பலும்-குவிதலும்; இல்லது-இல்லாதது; அறிவு-அறிவு.


உலகம் தழீஇயது ஒட்பம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவனுக்கு ஒள்ளிமையாவது உலகத்தோடு பொருந்தினது:
பரிப்பெருமாள்: ஒருவனுக்கு ஒள்ளிமையாவது உலகத்தோடு பொருந்தினது:
பரிதி: உலகமாகிய பெரியோர்க்குப் பொருந்திய ஒழுக்கத்தில் குறையாமல்;
காலிங்கர்: (உலகத்தாருள் முனிவராகிய பெரியோர் மறை முதலிய நூல்கள் பலவற்றானும் தெரிந்துகொண்டதாய ஒட்பம் யாதொன்று மற்று அதனின்) ;
காலிங்கர் குறிப்புரை: தழீஇய என்பது பெரியோர் தழுவியது என்றது. ஒட்பம் (என்பது ஒள்ளிமை)
பரிமேலழகர்: உலகத்தை நட்பாக்குவது ஒருவனுக்கு ஒட்பமாம்;

பழம் ஆசிரியர்களில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் 'உலகத்தோடு பொருந்தினது ஒள்ளிமை' என்று இப்பகுதிக்கு உரை நல்கினர். 'பெரியோர் மறைநூல்களால் அறிந்தவை ஒட்பம்' என்பது காலிங்கர் உரை. பரிமேலழகர் 'உலகத்தை நட்பாக்குவது ஒட்பம்' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'உலகத்தோடு ஒத்து நடப்பது ஒருவனுக்கு இயல்பான அறிவாகும்', 'உயர்ந்தோரை நட்பாக்கிக் கொள்வது ஒருவனது ஒள்ளிய அறிவாகும்', 'உலக நன்மையைப் பொருந்திச் செல்வது அறிவு', 'உலகத்தாரைத் தழுவி நடந்து கொள்வது நல்லதுதான்' என்றபடி உரை தந்தனர்.

உலகத்தாரோடு பொருந்தி வாழ்வது ஒட்பம் என்பது இப்பகுதியின் பொருள்.

மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனை நீர்ப்பூப்போல மலர்தலுங் குவிதலுமின்றி யொருதன்மையாகச் செலுத்துதல் அறிவு.
மணக்குடவர் குறிப்புரை: இஃது உயர்ந்தாரோடு நட்புப் பண்ணுதலும் அறிவென்றது.
பரிப்பெருமாள்: அதனை நீர்ப்பூப்போல மலர்தலுங் குவிதலுமின்றி யொருதன்மையாகச் செலுத்துதல் அறிவு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது உயர்ந்தாரோடு நட்புப் பண்ணுதலும் அறிவென்றது.
பரிதி: ஒருதகைமையாக நிற்பது அறிவு என்றவாறு.
காலிங்கர்: மலர்தலும் குவிதலும் என்னும் இரண்டும் இல்லது யாது; மற்று அதுவே அறிவாவது என்றவாறு.
பரிமேலழகர்: அந்நட்பின்கண் முன் மலர்தலும் பின் கூம்புதலும் இன்றி ஒரு நிலையனாவது அறிவாம். [ஒரு நிலையனாவது -எப்போதும் ஒரு தன்மையையுடையவனாய் இருத்தல்]
பரிமேலழகர் குறிப்புரை: 'தழீஇயது', 'இல்லது' என்பன அவ்வத் தொழில்மேல் நின்றன. உலகம் என்பது ஈண்டு உயர்ந்தோரை. அவரோடு கயப்பூப்போல வேறுபடாது கோட்டுப் பூப்போல ஒரு நிலையே நட்பாயினான்,எல்லா இன்பமும் எய்தும் ஆகலின், அதனை அறிவு என்றார்.காரியங்கள் காரணங்களாக உபசரிக்கப்பட்டன. இதனைச் செல்வத்தில் மலர்தலும் நல்குரவில் கூம்பலும் இல்லது என்று உரைப்பாரும் உளர். [கயப்பூ-குள முதலியவற்றில் உண்டாகும் நீர்ப்பூக்கள்; கோட்டுப்பூ-மரஞ்செடி கொடிகளில் தோன்றும் பூ]

மணக்குடவர், பரிப்பெருமாள், பரிமேலழகர் மூவரும் உலகம் என்பதற்கு உயர்ந்தோர் என்று கொண்டு அவர்களுடன் நட்புப் பண்ணி, நீர்ப்பூப்போல மலர்தலும் குவிதலும் இல்லாமல் ஒருதன்மையாவது அறிவு என்று இத்தொடர்க்கு உரை கூறினர். தொல்லாசிரியர்கள் இப்பகுதிக்கு ஒருதன்மையாகச் செலுத்துதல்/ஒருதகைமையாக நிற்பது/ மலர்தலும் குவிதலும் இல்லாது/ஒரு நிலையனாவது அறிவு என்ற பொருளில் உரை செய்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அங்ஙனம் நடக்கும்போது முன் மகிழ்தலும் பின் வருந்துதலுமின்றி ஒழுகுதல் சிறந்த அறிவாகும்', 'அங்ஙனம் உலகத்தைத் தழுவி நடக்கும் இடத்து முன் மகிழ்தலும் பின் சினத்தலும் இல்லாமல் ஒரு நிலையில் இருப்பது அறிவின் சிறந்த அடையாளம்', 'இன்பத்தில் மகிழ்ந்து துன்பத்தில் சோர்வுற்றும் கடமையைக் கைவிடல் அறிவன்று', 'ஆனால் அறிவுடைமை என்பது அடிக்கடி விரிவதும் மூடிக்கொள்வதும் உள்ளதல்ல' என்றபடி பொருள் உரைத்தனர்.

மலர்தலும் கூம்பலும் இல்லாமல் ஒருநிலையாக இருத்தல் அறிவுடைமை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உலகம் தழீஇயது ஒட்பம்; மலர்தலும் கூம்பலும் இல்லாமல் ஒருநிலையாக இருத்தல் அறிவுடைமை என்பது பாடலின் பொருள்.
உலகம் தழீஇயது என்றால் என்ன?

உலகோரோடு எவ்விதம் ஒருநிலையனாய் ஒழுகவேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வது அறிவு.

உலகத்தோடு பொருந்தி வாழ்வது கெட்டிக்காரத்தனம்; அதனை ஒருகால் மிகையாகவும் மறுகால் மிகக்குன்றியும் இல்லாமல் ஒருதன்மையாய்ச் செலுத்துதல் அறிவு.
ஒட்பம்:
அறிவை இயற்கைஅறிவு, செயற்கைஅறிவு என இரண்டுவகையாகப் பகுத்து எண்ணுவர். இயற்கை அறிவு என்பது ஒருவரது உடலோடு ஒட்டிய உயிர்க்குணம் என்றும் கல்வி கேள்விகளால் பெறப்படும் அறிவு செயற்கை அறிவு எனப்படும் என்றும் கூறுவர். இவற்றுள் ஒட்பம் என்பதை ஒளி பொருந்திய அறிவு என்று கொண்டு அது இயற்கை அறிவைக் குறிப்பதாகக் கொள்வர். கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும் கொள்ளார் அறிவுடையார் (கல்லாமை 404) என்ற பாடலில் ஒட்பம் என்ற சொல் இயற்கை அறிவு என்ற பொருளில் ஆளப்பட்டது.
ஒட்பம் என்ற சொல்லுக்கு இயற்கை அறிவு, நுண்ணறிவு, கூரிய அறிவு, ஒண்மை, ஒள்ளிமை, ஒளி பொருந்திய குணம், மேன்மை, நன்மை, புகழ், எனப் பலவாறாகப் பொருள் கூறினர். இச்சொல்லுக்குச் சாமர்த்தியம், விவேகம் எனவும் பொருள் கூறியுள்ளனர். வாழ்வியலுக்காக உலகத்தோடு பொருந்தி வாழும் நடைமுறை அறிவு அல்லது உலக அறிவு ஒட்பம் எனலாம். உலகியலைத் தழுவி நடப்பது சாமர்த்தியம்.
அறிவு:
உலகில் ஒருவன் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பது தெரிவது ஒட்பம் என்றால் அதை மலர்தலும் கூம்பலும் இல்லாமல் சமநிலையாய் ஆள்வதைக் குறிப்பது அறிவு ஆகும். மரஞ்செடி கொடிகளில் தோன்றுவதைக் கோட்டுப் பூ என்பர். இது மலர்ந்தபின் கூம்பாது. குளம் முதலியவற்றில் உண்டாகும் நீர்ப்பூக்கள் மலர்ந்தும் பின் குவியும் தன்மை கொண்டன. மலர்தலும் கூம்பலும் என்று சொன்னது ஒருவேளை மலர்வதும் மறுவேளை குவிவதுமாக நிலைமாறுந் தன்மையைக் குறிப்பதற்காக. ஒட்பத்தைப் பயன்படுத்தும்போது மட்டுமீறிய சாமர்த்தியம் (oversmart) காட்டவேண்டாம்; அதேநேரம் ஒரேயடியாக முடங்கிக்கிடக்கவும் கூடாது. எல்லாச் சூழலிலும் நிலையாய் உறுதியாய் அதைச் செலுத்த வேண்டும், உலகப்போக்கை உணர்ந்து அதை ஒட்டி நடப்பது ஒட்பம்; அங்ஙனம் உலகத்தைத் தழுவி நடக்கும் இடத்து ஒட்பத்தை ஒரு நிலையில் இருக்கச் செய்வது அறிவுடைமையாகும்.
'மலர்தலும் கூம்பலும்' என்பதற்கு உரையாளர்கள் 'உலகின் இன்ப துன்பங்களால் முன்னே மலர்ந்து பின்னே கூம்பியும் போகாமல், எப்போதும் சமநிலையில் விளங்குவதே அறிவு', 'விரும்புவது நடந்தால் பெருமகிழ்ச்சி கொள்வதும் வெறுப்பன வரும்போது சோர்வடைதலும் இல்லாமல் எந்தச் சூழ்நிலையிலும் ஒருநிலையாக இருப்பது அறிவு', 'அறிவுடைமை என்பது அடிக்கடி விரிவதும் மூடிக்கொள்வதும் உள்ளதல்ல', 'கண்டபோது ஒரு விதமும் காணாதபோது ஒருவிதமுமாக மாறாதது அறிவுடைமை' என்றவாறு உரைத்தனர்.
மலர்தலும் கூம்பலும் என்ற தொடரை விளக்கும் நாலாடியார் பாடல் ஒன்று:
கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது
வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி- தோட்ட
கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை
நயப்பாரும் நட்பாரும் இல்.
(நட்பாராய்தல் நாலடியார் 215)
(பொருள்: மரங்களிற் பூக்கும் பூக்கள் முதலில் மலர்ந்து பின் தாம் உதிரும் வரையிற் குவியாமைபோலத் தலைநாளில் உள்ளம் மலர்ந்துபின் தமது முடிவு வரையிற் சுருங்காமல் விரும்பியது விரும்பியதாயிருப்பதே நட்புடைமையாம்; அவ்வாறின்றி அகழ்ந்தெடுத்த நீர்நிலைகளிற் பூக்கும் இதழ்மிக்க பூக்கள் போல் தலைநாளில் மகிழ்பூத்து நாளடைவில் மனஞ்சுருங்கும் இயல்பினரை, விரும்புவாரும் நேசிப்பாரும் உலகில் இல்லை) என்கிறது.

உலகம் தழீஇயது என்றால் என்ன?

'உலகம் தழீஇயது' என்றதற்கு உலகத்தோடு பொருந்தினது, உலகமாகிய பெரியோர்க்குப் பொருந்திய ஒழுக்கம், உலகத்தாருள் முனிவராகிய பெரியோர் மறை முதலிய நூல்கள் பலவற்றானும் தெரிந்துகொண்டது, உலகத்தை நட்பாக்குவது, உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கிக்கொள்வது, உலக மக்களைத் தழுவி அவர்களுடன் கொண்டும் கொடுத்தும் உறவாக வாழ்வது, உலகம் தழுவியது, உலகத்தைத் தழுவிப் போவது, உலகத்தோடு ஒத்து நடப்பது, உலகத்தாரோடு சமயோசிதம் போல் ஒத்து நடந்து கொள்வது, உயர்ந்தோரைப் பொருந்திச் செல்வது, உயர்ந்தோரை நட்பாக்கிக் கொள்வது, உலக நன்மையைப் பொருந்திச் செல்வது, உலகப் போக்குடன் இசைந்து செல்வது, அறிவால் உயர்ந்த சான்றோரது வாழ்க்கை வழி நிற்றல் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இயற்கை அறிவும், கல்வியறிவும் இரண்டும் அடிப்படைகளே. இவை வாழ்வியலை நடத்த நமக்குப் பயன்பட வேண்டும் என்றால், நாம் உலகத்தோடு நம்மை அடையாளப்படுத்திக் கொண்டு உலகியலை நன்கு அறிந்து கொண்டிருக்க வேண்டும். உலகோடு என்னும்போது அது ஒருவன் வாழும் சமுதாயத்தோடு எனப் பொருள்படும். எவ்வளவு கற்றவனாயினும் உலகியல்புக்கேற்பத்தான் நடந்து கொண்டால்தான் வாழ்வில் வெற்றிபெற முடியும். இன்றைய உலகம் எத்தகையது, எவ்வாறு மாறிக் கொண்டு வருகிறது என்பதை அறிந்து நடக்க வேண்டும். இந்த நடைமுறை அறிவே 'அறிவு' என இப்பாடலில் குறிக்கப்பெறுகிறது. அதாவது உலக நடையை அறிதலே அறிவு ஆகும். உலக நடையையறிதல் என்பது உலக சமுதாயச் சூழ்நிலைகட்கு ஏற்ப -உலகப்போக்கிற்கு ஏற்ப- விட்டுக் கொடுத்து ஒத்து நடத்தல் என்பதாம்.
உலகத்தோடு ஒட்ட ஒழுகல்..... (ஒழுக்கமுடைமை 140) எனப் பிறிதோரிடத்தும் எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு என்று இவ்வதிகாரத்து அடுத்த (426) குறளிலும் உலக நடை அறிந்து ஒழுக வேண்டும் என்பது அறிவுறுத்தப்பட்டது.

உலகம் தழீஇயது என்பதற்கு முதலில் மணக்குடவர் 'உலகத்தோடு பொருந்தினது' என்று உரைத்துக் குறிப்புரையில் 'இஃது உயர்ந்தாரோடு நட்புப் பண்ணுதல்' என்று எழுதினார். தொல்காப்பியமும் பிங்கல நிகண்டும் உலகம் என்பது உயர்ந்தோரைக் குறிக்கும் என்றதால் பின்வந்தவர்களும்-பரிமேலழகர் உட்பட- உலகம் என்பதற்கு உயர்ந்தோர் என்றே கொண்டனர். தழீஇயது என்பதற்கு நட்புக் கொள்வது என்ற மணக்குடவர் உரையும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இதனால் சிலர் உலகம் தழீஇயது என்பதற்கு 'உலகத்தை நட்பாக்குவது' என்று பொருள் கூறினர். இன்றைய ஆசிரியர்களிலும் பலர் மணக்குடவர்-பரிமேலழகர் உரைகளில் கண்டுள்ளபடி 'உயர்ந்தோரோடு நட்புச் செய்தல்' என்றே இத்தொடர்க்குப் பொருள் கூறினர்.
இக்காலத் திறனாய்வாளர்கள் உலகம் என்பது உயர்ந்தோரை மட்டும் குறிக்காது என்றும் நட்புக்கு என்று பல அதிகாரங்கள் பின் கூறப்படுகின்றனவாதலால், 'உயர்ந்தோரோடு நட்புப் பண்ணுவது' என்பதை ஒப்புக்கொள்ள மறுத்து இத்தொடர் 'உலக நடையையறிதல்', 'உலகப்போக்கிற்கு ஏற்ப விட்டுக் கொடுத்து ஒத்து நடத்தல்' அல்லது 'உலகியலைத் தழுவி நடப்பது' என்பதே பொருத்தமான பொருள் என்று கருத்துரைத்தனர்.

இங்கு 'உலகம் தழீஇயது' என்ற தொடர் உலகத்தாரோடு பொருந்தி நிற்றல் என்ற பொருள் தரும்.

உலகியலைத் தழுவி நடப்பது ஒட்பம்; மலர்தலும் கூம்பலும் இல்லாமல் ஒருநிலையாக இருத்தல் அறிவுடைமை என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

உலகத்தைத் தழுவி சமன் நிலையாக இருத்தல் அறிவுடைமை.

பொழிப்பு

உலகத்தைத் தழுவி ஒழுகுவது ஒட்பம்; மலர்தலும் கூம்பலும் இல்லாமல் ஒரு தன்மையையுடையவனாய் இருத்தல் அறிவு.