இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0424எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு

(அதிகாரம்:அறிவுடைமை குறள் எண்:424)

பொழிப்பு: தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லித், தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமான பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்.

மணக்குடவர் உரை: அறிதற்கரிய பொருளவாகிய சொற்களைத் தெளியப் பொருளாம்படி பிறரிசையச் சொல்லிப் பிறர் சொல்லுஞ் சொற்களின் நுண்ணியவாகிய பொருள்களை அவர் சொல்லாமல் தானே காண்பது அறிவாவது.
இது சொற்பொருள் காண்ட லறிவென்றது.

பரிமேலழகர் உரை: தான் எண்பொருள் ஆகச் செலச் சொல்லி - தான் சொல்லும் சொற்களை அரிய பொருள் ஆயினும் கேட்பார்க்கு எளிய பொருள் ஆமாறு மனம்கொளச் சொல்லி, பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு - பிறர்வாய்க் கேட்கும் சொற்களின் நுண்ணிய பொருள்காண அரிதாயினும் அதனைக் காண வல்லது அறிவு.
(உடையவன் தொழில் அறிவின்மேல் ஏற்றப்பட்டது. சொல்லுவன வழுவின்றி இனிது விளங்கச் சொல்லுக என்பார் சொல்மேல் வைத்தும், கேட்பன வழுவினும் இனிது விளங்கா ஆயினும் பயனைக் கொண்டொழிக என்பார் பொருள்மேல் வைத்தும் கூறினார்.)

இரா சாரங்கபாணி உரை: அரிய செய்தியை எளிமையாகப் பிறர்மனம் கொள்ளத் தெளிவாகக் கூறிப் பிறர் வாயிலிருந்து வரும் சொற்களின் நுண்பொருளை அறிய அரிதாக இருந்தாலும் அதனைக் காணவல்லது அறிவு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தான் எண் பொருளவாகச் செலச்சொல்லி பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு.


எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்:
பதவுரை: எண்-எளிய; பொருள்ஆக-பொருளையுடையனவாய் ஆகும்படி; செல-மனங்கொள்ள; சொல்லி-உரைத்து; தான்-தான்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறிதற்கரிய பொருளவாகிய சொற்களைத் தெளியப் பொருளாம்படி பிறரிசையச் சொல்லி;
பரிப்பெருமாள்: அறிதற்கரிய பொருளவாகிய சொற்களை எளிய பொருளவாம்படி பிறரியையச் சொல்லி;
பரிதி: நல்லோர் செவியும் மனமும் பொருந்த எளிதாகச் சொல்லித் தாம்;
காலிங்கர்: தாம் சொல்லும் சொல்லின் நுண்ணிமையை மற்று எப்பெற்றியோரும் நெஞ்சினால் தேர்ந்து உணரும் பொருளாகவும் சொல்லி மற்று அதுவேயும் அன்றி, அதனைக் கேட்போர் செவிக்குப் பெரிதும் இனிதாகவும் சொல்லி;
பரிமேலழகர்: தான் சொல்லும் சொற்களை அரிய பொருள் ஆயினும் கேட்பார்க்கு எளிய பொருள் ஆமாறு மனம்கொளச் சொல்லி;

'தாம் சொல்வது அரிய பொருளாக இருப்பினும் கேட்பார்க்கு எளிய பொருள் ஆகுமாறு மனம்கொளச் சொல்லி' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அருமையை எளிமையாக நீ சொல்லுக', 'தான் சொல்லுவதை எளிதாய் விளங்கும் பொருளுடையதாகக் கேட்பவர் மனங்கொள்ளும்படி சொல்லி', 'கேட்டு உணர்வதற்கு அரிய பொருள்களைப் பிறர் உணர்ந்து கொள்ளுமாறு எளிய பொருளாக அவர் உளம் கொளச் சொல்லித் தான்', 'தான் சொல்வதைப் பிறர் சுலபமாகத் தெரிந்து கொள்ளும்படி விளங்கச் சொல்லி' என்றபடி உரை தந்தனர்.

தான் சொல்வதை எளிய பொருளாகக் கேட்பார் உள்ளம் பொருந்தச் சொல்லி என்பது இத்தொடரின் பொருள்.

பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு:
பதவுரை: பிறர்-மற்றவர்; வாய்-வாய்; நுண்-நுட்பமான; பொருள்-உரை; காண்பது-காணுதல்; அறிவு-அறிவு.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறர் சொல்லுஞ் சொற்களின் நுண்ணியவாகிய பொருள்களை அவர் சொல்லாமல் தானே காண்பது அறிவாவது.
மணக்குடவர் குறிப்புரை: இது சொற்பொருள் காண்ட லறிவென்றது.
பரிப்பெருமாள்: பிறர் சொல்லுஞ் சொற்களின் நுண்ணியதாய பொருளை அவர் சொல்லுமாற்றானே காண்பது அறிவாவது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது சொற்பொருள் காண்ட லறிவென்றது.
பரிதி: பெரியோர் வாய்ச்சொற் பொருளைக் காண்பது அறிவு என்றவாறு
காலிங்கர்: பின்னும் தாம் பிறர் வாய்ச் சொற்களில் தீர்ந்த நுண்ணிய பொருளையும் அங்ஙனம் காணவல்லது யாது, மற்று அதுவே அறிவாவது என்றவாறு.
பரிமேலழகர்: பிறர்வாய்க் கேட்கும் சொற்களின் நுண்ணிய பொருள்காண அரிதாயினும் அதனைக் காண வல்லது அறிவு.
பரிமேலழகர் கருத்துரை: உடையவன் தொழில் அறிவின்மேல் ஏற்றப்பட்டது. சொல்லுவன வழுவின்றி இனிது விளங்கச் சொல்லுக என்பார் சொல்மேல் வைத்தும், கேட்பன வழுவினும் இனிது விளங்கா ஆயினும் பயனைக் கொண்டொழிக என்பார் பொருள்மேல் வைத்தும் கூறினார்.

'பிறர் சொல்லும் நுண்ணிய பொருளையும் அவர் சொல்லாமல் தானே காண்பது அறிவு' என்று மணக்குடவரும்', 'பிறர் சொல்லும் நுண்ணிய பொருளையும் அவர் சொல்லியவாறே காண்பது அறிவு' என்று பரிப்பெருமாளும் உரை பகன்றனர். பரிதி 'பெரியோர் வாய்ச்சொற் பொருளைக் காண்பது அறிவு' என்று நேரான எளிய பொருள் கூறினார். காலிங்கர் 'பிறர் கூருவதிலுள்ள நுண்பொருளை அங்ஙனமே காணவல்லது அறிவு' என்று எழுதினார். பரிமேலழகர் 'பிறர் சொல்லின் நுண்ணிய பொருள்காண அரிதாயினும் அதனைக் காணவல்லது அறிவு' என்றபடி உரை தந்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறர் கூறும் நுண்மையை விளங்கிக் கொள்க', 'பிறர் வாயில் பிறக்குஞ் சொற்களின் நுண்ணிய பொருளைக் காண்பது சிறந்த அறிவு ஆகும்', 'பிறர் கூறுகின்ற நுட்பமான பொருளையும் எளிதாக உணர்ந்து கொள்வது அறிவாகும்', 'பிறர் சொல்லுவது விளங்கும்படி அமையாவிட்டாலும் அதன் கருத்தைத் தெரிந்துகொள்ளச் செய்வது அறிவுதான்.' என்றபடி பொருள் உரைத்தனர்.

பிறர்கூறக் கேட்கும் சொற்களின் நுண்மையையும் அவர் சொல்லிய பொருளிலே காண்பது அறிவு என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
பொருள் தெளியச் சொல்லலும் சொல்லப்பட்டதைத் தெளிந்து கொள்ளலும் அறிவாகும் என்னும் குறள்.

தான் சொல்வதை எளிய பொருளாகக் கேட்பார் செலச்சொல்லி, பிறர்கூறக் கேட்கும் சொற்களின் நுண்மையையும் அவர் சொல்லிய பொருளிலே காண்பது அறிவு என்பது பாடலின் பொருள்.
செலச்சொல்லி என்றால் என்ன?

எண்பொருள் என்ற சொல் எளிய பொருள் என்பதைக் குறிக்கும். இதற்கு எண்ணிக் கொள்ளும்படியான பொருள் என்றும் விளக்கம் கூறுவர்.
நுண்பொருள் என்பது நுட்பமான பொருள் என்பதைச் சொல்லும். நுட்பமாய் அறிதற்கு அரியவை என்று இதை விளக்குவர்.

கருத்துப் பரிமாற்றத் திறன் (Communication Skill) பற்றி இங்கே சொல்லப்பட்டது. செய்தித் தொடர்பின்போது பொருள் சொல்லப்பட்டவாறு உணர்வது அறிவு என்னும் பாடல்.

எண் பொருளவாகச் செலச்சொல்லி-
'எண்பொருளவாக' என்ற தொடர்க்கு 'தெளியப்பொருளாம்படி', 'எளிதாக', 'நெஞ்சினால் தேர்ந்துணரும் பொருளாக', 'கேட்போர்க்கு எளிய பொருளாமாறு' என்று பொருள் கூறினர்.
மேலும் கேட்டவர் எண்ணிப் பார்க்கக்கூடிய சிறந்த பொருளாக என்றும் பிறர்க்குச் சொல்லும்பொழுது, அவர் ஆராயத்தக்க வகையில் எண்ணத்தைத் தூண்டுமாறு உள்ள பொருள் என்றும் உரைகள் உள்ளன.

நுண்பொருள் காண்பது அறிவு-
நுண்பொருள் என்பது நுட்பமான பொருள் என்ற பொருள் தரும். மற்றவர் சொல்வன எத்துணை அரிய நுண்பொருளாயினும் அதன் உட்கருத்தை வாங்கிக் கொள்ளும் ஆற்றலும் வேண்டும். பொருளின் மறைநிலயில் தொக்கி நிற்கும் நுட்பமான தன்மையையும் நுண்பொருள் என்று கூறுவர். பிறர் எவ்வளவு அரிய பொருளைப் பற்றிப் பேசினாலும் அதன் நுட்பம் என்ன என்பதை அறியும் ஆற்றலும் அறிவுடையார்க்கே உண்டு.

அறிவுடையோராலேயே பிறர் உள்ளத்தில் பதியும்படி எளிய வகையில் சொல்ல இயலும்; அதுபோலவே அவர்களாலேயே பிறர் சொல்லும் கூற்றிலுள்ள நுண்ணிய கருத்துக்களை நன்கு புரிந்து கொள்ளவும் முடியும். இவை அறிவுடைமைக்கு அடையாளம் என்கிறது இக்குறள். 'சொல்க எண்பொருள்; கொள்க நுண்பொருள்' என்பது பாடலின் சாரம்.

செலச்சொல்லி என்றால் என்ன?

இது ஒரு இனிமையான சொற்றொடர்.
'பிறர் இசையும்படி சொல்லி', 'செவியும் மனமும் பொருந்த', 'எப்பெற்றியோரும் நெஞ்சில் தேர்ந்துணரும்படி', 'மனங்கொள்ள' என்றபடி இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் பொருள் உரைத்தனர்.
கேட்பவர் மனத்தில் பதியுமாறு சொல்லுதல் அல்லது தாம் சொல்வது சொல்லப்படுபவர்க்குச் சென்று சேருமாறு திறமையுடன் சொல்லுதல் என்பது கருத்து.
கேட்பவர் எல்லாரும் சொல்லுவனவற்றை மனம் பொருந்த ஏற்க மாட்டார்கள். பிறர் கொண்ட செல்வமும் செல்வாக்கும் செருக்கும் பொருள்களை ஏற்கத் தடைகளாக அமையலாம். இவற்றையெல்லாம் தாண்டி தாம் சொல்ல வரும் செய்தியை அவர்கள் மனதில் ஏற்கச் செய்வது செலச்சொல்வது ஆகும்.

தான் சொல்வதை எளிய பொருளாகக் கேட்பார் மனம் பொருந்தச் சொல்லி, பிறர்கூறக் கேட்கும் சொற்களின் நுண்மையையும் அவர் சொல்லிய பொருளிலே காண்பது அறிவு என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கருத்துப் பரிமாற்றத் திறன் பெற அறிவுடைமை தேவை என்னும் குறள்.

பொழிப்பு

தான் சொல்வதை எளிய பொருளாகக் கேட்பார் மனம் பொருந்தச் சொல்லி, பிறர்கூறுவதிலுள்ள நுண்மையையும் அவர் சொல்லிய பொருளிலே காண்பது அறிவு