இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0421அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்

(அதிகாரம்:அறிவுடைமை குறள் எண்:421)

பொழிப்பு (மு வரதராசன்): அறிவு, அழிவு வராமல் காக்கும் கருவியாகும்; அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.

மணக்குடவர் உரை: ஒருவனுக்குக் குற்றமறைக்குங் கருவியாவது அறிவு: பகைவராலும் உட்புகுந்து அழிக்கலாகா அரணும் அதுதானே.
இது தனக்குள்ள குற்றத்தை மறைக்கு மென்றும் பிறரால் வருந்தீமையைக் காக்குமென்றும் அறிவினாலாம் பயன் கூறிற்று.

பரிமேலழகர் உரை: அறிவு அற்றம் காக்கும் கருவி - அரசர்க்கு அறிவு என்பது இறுதி வாராமல் காக்கும் கருவியாம், செறுவார்க்கு அழிக்கலாகா உள் அரணும் - அதுவேயுமன்றிப் பகைவர்க்கும் அழிக்கலாகாத உள்ளரணும் ஆம்.
(காத்தல் - முன் அறிந்து பரிகரித்தல், உள்ளரண் - உள்ளாய அரண், உள்புக்கு அழிக்கலாகா அரண் என்றும் ஆம். இதனால், அறிவினது சிறப்புக் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: அறிவு குற்றம் தடுக்கும் படை; பகைவரும் ஊக்கம் அழிக்க முடியாத அரண்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்கல் ஆகா அரண்.

பதவுரை: அறிவு-அறிவு; அற்றம்-அழிவு, குற்றம்; காக்கும்-காப்பாற்றும்; கருவி-ஆயுதம்; செறுவார்க்கும்-பகைவர்க்கும்; உள்-உள்; அழிக்கல்-கெடுத்தல்; ஆகா-ஆகாத; அரண்-கோட்டை, காப்பு.


அறிவுஅற்றம் காக்கும் கருவி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவனுக்குக் குற்றமறைக்குங் கருவியாவது அறிவு:
மணக்குடவர் கருத்துரை: இது தனக்குள்ள குற்றத்தை மறைக்கு மென்றும் பிறரால் வருந்தீமையைக் காக்குமென்றும் அறிவினாலாம் பயன் கூறிற்று.
பரிப்பெருமாள்: ஒருவனுக்குக் குற்றங் காக்குங் கருவியாவது அறிவு:
பரிப்பெருமாள் கருத்துரை: இது தனக்குள்ள குற்றத்தை மறைக்கு மென்றும் பிறரால் வருந்தீமையைக் காக்குமென்றும் அறிவால் பயன் கூறிற்று.
பரிதி: அறிவுக்கு ஈனம் வராமல் எப்பொழுதும் அறிவுடைமையாயிருப்பானாகில்;
காலிங்கர்: அரசர்க்கு ஆனை, குதிரை தேர் காலாள் என்னும் நாற்பெரும் சிறையும் அரணன்று. தமக்கு இங்ஙனம் சிறந்த அறிவு யாது? அதுவே தமக்கோர் இடையூறு வரும் வழி பாதுகாக்கும் படையாவது;
பரிமேலழகர்: அரசர்க்கு அறிவு என்பது இறுதி வாராமல் காக்கும் கருவியாம்,
பரிமேலழகர் பதவுரை: காத்தல் - முன் அறிந்து பரிகரித்தல். [பரிகரித்தல்-நீக்குதல்]

பழம் ஆசிரியர்களுள், மணக்குடவர் 'குற்றம் மறைக்கும் கருவியாவது அறிவு' என்று கூற பரிப்பெருமாள் 'குற்றங் காக்குங் கருவியாவது அறிவு' . என்று இப்பகுதிக்கு உரை நல்கினார். 'இடையூறு வரும் வழி பாதுகாக்கும் படை' என்பது காலிங்கர் கண்ட உரை. பரிமேலழகர் 'அறிவு என்பது இறுதி வாராமல் காக்கும் கருவி' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறிவு ஒருவர்க்கு இறுதி வராமல் காக்கும் கருவியாகும்', 'புத்திசாலித்தனத்தால் துன்பம் வராமல் தடுத்துக் கொள்வதற்கு ஆயுதம்', 'அறிவாவது இடர் நேரும் காலத்தில் நம்மைக் காக்கின்ற கருவி ஆகும்', 'அறிவானது மக்கள் குலத்திற்கு அழிவு வராமல் தடுக்கும் கருவியாகும்' என்றபடி உரை தந்தனர்.

அறிவு அழிவிலிருந்து காக்குங் கருவி என்பது இப்பகுதியின் பொருள்.

செறுவார்க்கும் உள்ளழிக்கல் ஆகா அரண்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பகைவராலும் உட்புகுந்து அழிக்கலாகா அரணும் அதுதானே.
பரிப்பெருமாள்: பகைவரால் உட்புகுந்து அழிக்கலாகாது அரணும் அதுதானே.
பரிதி: அது சத்துருக்களாலும் அழிக்கப்படாத அரண் என்றவாறு.
காலிங்கர்: அதுவுமன்றிப் பின்னும் பகைவேந்தர்க்கும் உள்புக்கு அழித்தல் அரிதாய அரணாவதும் அதுவே என்றவாறு.
பரிமேலழகர்: அதுவேயுமன்றிப் பகைவர்க்கும் அழிக்கலாகாத உள்ளரணும் ஆம்.
பரிமேலழகர் கருத்துரை: உள்ளரண் - உள்ளாய அரண், உள்புக்கு அழிக்கலாகா அரண் என்றும் ஆம். இதனால், அறிவினது சிறப்புக் கூறப்பட்டது.

'பகைவராலும் உட்புகுந்து அழிக்கலாகா அரண்' என்றும் 'பகைவராலும் அழிக்க முடியாத உள் அரண்' என்றும் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அதுமட்டுமன்றிப் பகைவர்க்கும் அழிக்க முடியாத உள் அரணுமாம்', 'அது மனத்துக்குள் இருப்பதானதால் பகைவர்களாலும் புகுந்து அழித்துவிட முடியாத பாதுகாப்பு', 'பகைவர்க்கும் அழிக்க முடியாத உட்கோட்டையும அதுவே', 'பகைவர்க்கும் அழிக்கமுடியாத உள் அரணாகும்' என்றபடி பொருள் உரைத்தனர்.

பகைவராலும் உள்ளே புகுந்து அழிக்க முடியாத அரணும் அது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அறிவு அற்றம் காக்கும் கருவி; பகைவராலும் உள்ளே புகுந்து அழிக்க முடியாத அரணும் அது என்பது பாடலின் பொருள்.
'அற்றம் காக்கும்' என்ற தொடர் குறிப்பது என்ன?

அறிவுக் கருவி கொண்டு காப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்க.

அறிவானது அழிவு நேரிடுங் காலத்துத் தன்னைக் காத்துக் கொள்ளும் கருவியாக உதவுகிறது. உட்புகுந்து பகைவரால் அழிக்க முடியாத உள் அரணும் ஆகும்.
ஒருவரது வாழ்க்கையில் குற்றம் நிகழாமலும், துன்பங்கள் உறாவாறும், அழிவு நேராதபடியும் காத்துக் கொள்வது மிகத் தேவை. அதற்குரிய விழிப்புணர்வைத் தருவது அறிவு. அறிவு என்பது ஒருவரது உயிரோடு ஒட்டிய கருவி. மாந்தர்க்குத் குறையோ, இடையூறோ, பாதிப்போ அல்லது சோர்வோ வரும்பொழுது அதிலிருந்து உடனடியாகக் காக்கும் ஆயுதம் அவரது அறிவேயாகும். மனிதன் தன்னைக் காத்துக் கொள்ள எத்தனையோ வழிகளுண்டு. உடல்பலம், செல்வம், செல்வாக்கு, அரசின் உறுப்புக்களான காவல் துறை, சட்டம் என்று நிறைய இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் விட மேலான காப்பு தருவது அறிவுதான். அவனிடம் எவ்வகையான குறை இருந்தாலும் அதை அவனது அறிவு ஈடு செய்யும்.
அறிவு புறக்கருவியாகவும் அகக் கருவியாகவும் காப்பளிக்கவல்லது - அறிவு புறக்கருவியாய் புறப்பகையையினின்று காக்க உதவுவது. அதுவே அகக் கருவியாய் தன்னம்பிக்கை, துணிவு இவைகளை இழத்தலாகிய உட்பகையையும் ஒழித்து ஊக்கமும் தந்து பாதுகாக்கவும் செய்கிறது. இத்தற்காப்பு அமைப்பு அரண் எனப்பட்டது. பொருட்களால் உருவாக்கப்பட்ட கோட்டையைப் பகைவர்கள் அழித்துவிட முடியும். ஆனால் அறிவாகிய அரணை அப்படி அழிக்க முடியாது. ஏன் என்றால், அகத்தே உள்ள கோட்டையான அதை எவரும் அணுகவே முடியாது. இதை 'உள்ளழிக்கல் ஆகா' என்ற தொடர் குறிக்கிறது. உட்புகுந்து கைப்பற்றவோ அழிக்கவோ இயலாதது என்பது இதன் பொருள். 'பகைவரும் ஊக்கம் அழிக்க முடியாத அரண்' என்பார் வ சுப மாணிக்கம்.

'அற்றம் காக்கும்' என்ற தொடர் குறிப்பது என்ன?

அற்றம் என்ற சொல் சங்க இலக்கியங்களில் 'இடையூறு, துன்பம், முடிவு, குற்றம் செய்தல்' என்னும் பொருளில் ஆளப்பட்டது.
குறளிலேயே அற்றம் என்பது முடிவு, மறைத்தற்கு உரிய பகுதி, குற்றம், கேடு, நேரம் என்ற பொருளில் வந்துள்ளது: ....அற்றம் தரூஉம் பகை (குற்றங்கடிதல் 434 பொருள்: இறுதி பயக்கும் பகை), அற்றம் மறைத்தலோ புல்லறிவு.....(புல்லறிவாண்மை 846 பொருள்: மறைப்பதற்குரிய பகுதியை மட்டும் ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.....), அற்றம் மறைக்கும் பெருமை..... (பெருமை 980 பொருள்: பிறருடைய குறைவை மறைத்துச் சொல்லும் பெருமை.....)
மணக்குடவர் அற்றம் காக்கும் என்பதற்குக் 'குற்றம் மறைக்கும்' என்று பொருள் கொண்டார். அதாவது குற்றத்தைப் பிறர் அறியாமல் காத்தல் எனக் கொண்டார். அப்படி என்றால் அது புண்ணை மூடிவைத்தால் புரையோடுதல் போல் அழிவில் முடியும் என்பதால் தண்டபாணி தேசிகர் இக்கருத்தை மறுப்பார். (இது 'மறுக்கும்' என்ற பாடமாக இருந்திருக்கும் என்றும் சொல்லியுள்ளார்.)
'குற்றம் மறைக்கும்' என்ற மணக்குடவர் உரையை திருத்திக் 'குற்றம் காக்கும்' என்று பரிப்பெருமாள் கூறினார். இப்பொருள் சிறப்பாக உள்ளது.
பரிமேலழகர் அற்றம் காக்கும் என்பதற்கு 'இறுதி வாராமல் காக்கும்' என்று பதவுரை தந்து குறிப்புரையில் 'முன் அறிந்து நீக்குதல்' என விளக்கினார். இவ்விளக்கத்துக்கு 'சோர்வினால் வரும் கெடுதியை முன்னறிந்து ஒழித்தல்' என்று இரா சாரங்கபாணியும் தண்டபாணி தேசிகரும் இன்னொரு விளக்கம் தந்தனர்.
அற்றம் காக்கும் என்பதற்குக் குற்றம் காத்து அழிவை அகற்றும் என்ற பொருள் பொருத்தமாக அமையும்.
அற்றம் என்ற சொல்லுக்குக் 'கடைசி' என்ற பொருள் இன்றும் வழக்கில் உள்ளது. எனவே 'அறிவு அற்றம் காக்கும்' என்றதற்கு அறிவு கடைசி வரை அதாவது வாழ்நாள் இறுதிமட்டும் காக்கும் என்றும் பொருள் கொள்ளமுடியும்.

நாடுகளுக்கு இடையே சிக்கல்கள் எழுந்தால், ஆயுதங்கள் கொண்டு போர் செய்து தீர்வு காண்பதைவிட நட்புமுறையிலும், பேச்சுவார்த்தை மூலமும் அமைதி தேடிக்கொள்வதையே இன்று அனைத்து நாடுகளும் விரும்புகின்றன. இவ்வாறு அறிவால் அழிவைத் தடுத்துக் கொள்வது (அற்றம் காப்பது) இக்கால அரணாக ஆகிவருகிறது.

அறிவு அழிவிலிருந்து காக்குங் கருவி; பகைவராலும் உள்ளே புகுந்து அழிக்க முடியாத அரணும் அது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

வன்மையுள் வன்மை அறிவுடைமை.

பொழிப்பு

அறிவு குற்றம் தடுக்கும் கருவி; பகைவரும் உட்புகுந்து அழிக்க முடியாத அரணும் அது.