நுணங்கிய கேள்வியர் அல்லார் :
பதவுரை: நுணங்கிய-நுட்பமான; கேள்வியர்-கேள்வியுடையவர்; அல்லார்-அல்லாதவர்.
இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நுண்ணியதாகிய கேள்வியை யுடையாரல்லாதார்;
பரிப்பெருமாள்: நுண்ணியதாகிய கேள்வியுடையர் அல்லாதார்;
பரிதி: நுண்ணிய கேள்வி இல்லாதாற்கு;
காலிங்கர்: கல்வியாற் சிறந்த சான்றோர் உரைக்கும் நுண்ணியவாகிய கேள்வியை யுடையவரல்லது;
காலிங்கர் பதவுரை: நுணங்கிய என்பது நுண்ணிமை என்றது.
பரிமேலழகர்: நுண்ணியதாகிய கேள்வியுடையார் அல்லாதார்;
பரிமேலழகர் குறிப்புரை: கேட்கப்படுகின்ற பொருளினது நுண்மை கேள்விமேல் ஏற்றப்பட்டது. 'அல்லால்' என்பதூஉம் பாடம்.
'நுண்ணியதாகிய கேள்வியுடையர் அல்லாதார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நுண்ணியதாகிய கேள்வியறிவில்லாதவர்', 'நுட்பமான கேள்வியறிவு இல்லாதவர்க்கு', 'நுண்ணிய கேள்வியுடையர் அல்லாதார்',
'நுட்பமான நூற்பொருளைக் கேட்டலில்லாதார்' என்றபடி உரை தந்தனர்.
நுட்பமாகக் கேட்காதவர் என்பது இத்தொடரின் பொருள்.
வணங்கிய வாயினர் ஆதல் அரிது:
பதவுரை: வணங்கிய-பணிந்த; வாயினர்-மொழியினையுடையவர்; ஆதல்-ஆகுதல்; அரிது-அருமையானது.
இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாழ்ந்த சொற்கூறும் நாவுடையாராதல் இல்லை.
மணக்குடவர் கருத்துரை: இது கேள்வியுடையார் தம்மை வியந்து சொல்லா ரென்றது.
பரிப்பெருமாள்: தாழ்ந்த சொற்கூறும் நாவுடையாராதல் இல்லை.
பரிப்பெருமாள் கருத்துரை: இது கேள்வியுடையார் தம்மை வியந்து சொல்லா ரென்றது.
பரிதி: வணக்கமுள்ள சொல் அரிது என்றவாறு.
காலிங்கர்: மற்று ஏனையோர் பலரிடத்தும் தாழ்ந்த சொல்லியராதல் பெரிதும் அரிது என்றவாறு.
பரிமேலழகர்: பணிந்த மொழியினை உடையராதல் கூடாது.
பரிமேலழகர் கருத்துரை: 'வாய்' ஆகுபெயர். பணிந்தமொழி - பணிவைப்புலப்படுத்திய மொழி. கேளாதார் உணர்வு இன்மையால் தம்மை வியந்து
கூறுவர் என்பதாம்.
'தாழ்மையான சொல் கூறுவாராதல் அரிது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பணிவான சொற்களையுடையவராதல் அரிது', 'வணக்க ஒடுக்கமான வாய் இராது', 'பணிவான மொழியை உடையராக முடியாது',
'பணிவான சொற்களைக் கூறுதல் முடியாதவராவார்' என்றபடி பொருள் உரைத்தனர்.
பணிவான சொல் கூறுவோர் ஆதல் கடினம் என்பது இத்தொடரின் பொருள்.
|