கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி
(அதிகாரம்:கேள்வி
குறள் எண்:418)
பொழிப்பு: கேள்வியறிவால் துளைக்கப்படாத செவிகள், (இயற்கையான துளைகள் கொண்டு ஒசையைக்)
கேட்டறிந்தலும், கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.
|
மணக்குடவர் உரை:
ஓசை மாத்திரம் கேட்டனவாயினும் அதுவுங் கேளாத செவி போலும்; நல்லோர் கூறுஞ் சொற்களால் துளைக்கப்படாத செவி.
இது கேள்வியில்லாதார் செவிட ரென்றது.
பரிமேலழகர் உரை:
கேட்பினும் கேளாத் தகையவே - தம் புலமாய ஓசை மாத்திரத்தைக் கேட்கும் ஆயினும் செவிடாம் தன்மையவேயாம், கேள்வியால் தோட்கப்படாத
செவி - கேள்வியால் துளைக்கப்படாத செவிகள்.
(ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. ஓசை மாத்திரத்தான் உறுதி எய்தாமையின் 'கேளாத்தகைய' என்றும், மனத்தின்கண் நூற்பொருள் நுழைதற்கு
வழியாக்கலிற் கேள்வியைக் கருவியாக்கியும் கூறினார். 'பழைய துளை துளையன்று' என்பதாம்.)
இரா சாரங்கபாணி உரை:
கேள்வியால் துளைக்கப்படாத செவிகள் ஓசை ஒலிகளைக் கேட்டாலும் கேட்க இயலாத செவிடாந் தன்மையனவே.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
கேள்வியால் தோட்கப் படாத செவி கேட்பினும் கேளாத் தகையவே.
|
கேட்பினும் கேளாத் தகையவே :
பதவுரை: கேட்பினும்-கேட்டாலும்; கேளா-கேட்காத; தகையவே-தன்மையுடையனவே.
இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஓசை மாத்திரம் கேட்டனவாயினும் அதுவுங் கேளாத செவி போலும்;
பரிப்பெருமாள்: ஓசை மாத்திரம் கேட்டனவாயின் அதுவுங் கேளாத செவி போலும்;
பரிதி: செவி கேட்டாலும் செவிடு ஒக்கும்;
காலிங்கர்: இவ்வுலகத்துப் பயின்று வருகின்ற வழக்குச் சொல்லளவே யாண்டும் எப்பொழுதும் கேட்டு வரினும் மற்று எஞ்ஞான்றும் கேளாத்தகைமைப்பாட்டன;
பரிமேலழகர்: தம் புலமாய ஓசை மாத்திரத்தைக் கேட்கும் ஆயினும் செவிடாம் தன்மையவேயாம்;
பரிமேலழகர் குறிப்புரை: ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது.
'காது கேட்டாலும் அது கேளாத செவி' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஓசை கேட்டாலும் முழுச் செவிடுகளே', 'தம் புலனுக்கேற்ப கேட்கும் தகுதியுடையனவேயாயினும் செவிடாம்',
'ஓசையைக் கேட்கக்கூடியனவாய் இருந்தாலும் செவிடாந்தன்மை உடையனவே', 'ஓசையைக் கேட்கும் இயல்பின ஆயினும் செவிடாம் தன்மையவே
ஆம்' என்றபடி உரை தந்தனர்.
கேட்க முடிந்தாலும் அது கேளாதது போன்றதே என்பது இத்தொடரின் பொருள்.
கேள்வியால் தோட்கப் படாத செவி:
பதவுரை: கேள்வியால்-கேட்டலால்; தோட்கப் படாத-துளைக்கப்படாத; செவி-காது.
இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நல்லோர் கூறுஞ் சொற்களால் துளைக்கப்படாத செவி.
மணக்குடவர் கருத்துரை: இது கேள்வியில்லாதார் செவிட ரென்றது.
பரிப்பெருமாள்: நல்லோர் கூறுஞ் சொற்களால் துளைக்கப்படாத செவி.
பரிப்பெருமாள் கருத்துரை: இது கேள்வியில்லாதார் செவிட ரென்றது.
பரிதி: கேள்வியினால் துளைவிடாத செவி என்றவாறு.
காலிங்கர்: யாவை எனின், சான்றோருழைச் சென்று தாம் கேட்கும் கேள்வியாகின்ற கூரிய கடைகோலான் இரண்டாவது துளையிடப்படாத செவிகள் என்றவாறு.
பரிமேலழகர்: கேள்வியால் துளைக்கப்படாத செவிகள்.
பரிமேலழகர் விரிவுரை: ஓசை மாத்திரத்தான் உறுதி எய்தாமையின் 'கேளாத்தகைய' என்றும், மனத்தின்கண் நூற்பொருள் நுழைதற்கு
வழியாக்கலிற் கேள்வியைக் கருவியாக்கியும் கூறினார். 'பழைய துளை துளையன்று' என்பதாம்.
'கேள்வியால் துளைக்கப்படாத செவி' என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கேள்வியறிவு நுழையாத செவிகள்', 'கேள்வியறிவால் துளைக்கப்படாத செவிகள்', 'நல்ல நூற்கேள்வியால் துளைக்கப்படாத செவிக',
'நல்ல நூற்பொருளைக் கேளாத காதுகள்' என்றபடி பொருள் உரைத்தனர்.
கேள்வியால் துளைக்கப்படாத செவி என்பது இத்தொடரின் பொருள்
|
நிறையுரை:
கேட்டுக்கொண்டேயிராத செவி செவியல்ல என்னும் குறள்.
கேட்க முடிந்தாலும் கேளாத காது போன்றது கேள்வியால் தோட்கப்படாத செவி என்பது பாடலின் பொருள்.
'கேள்வியால் தோட்கப்படாத' என்றால் என்ன?
|
'கல்லாதவன் கண்ணில்லாதவன்' என்று சொன்ன வள்ளுவர் கேள்வியை ஏற்றிக் கொள்ளாதவர்களைக் காது கேளாதவர் என்று இங்கு கூறுகின்றார்.
கேட்டுக் கொண்டே இருக்கவேண்டும் என்பது வள்ளுவரின் அறிவுரை.
காது இருந்தும் கேள்வி அறிவு பெறும் ஆற்றல் இல்லையென்றால் அவரைச் செவிடர் என்றே ஆசிரியர் கூறுகிறார். செவிக்குக் கேட்டறியும் இயல்பு அமைந்தது
உயிர்க்கு ஆக்கம் தருவதாகிய அறிவினைக் கேட்டறிவதற்கே. இயற்கையால் உண்டான செவி போன்ற பொறியானாலும் இயங்காத பொறியால் பயன் இல்லை.
அத்தகைய பயன் விளையாத காது கொண்டோரை செவிடு என்றுதான் கருதவேண்டிவரும்.
செவிடாம் தன்மையில் கேடுகள் விளைவதைப் போலவே, நல்லவற்றைக் கேட்டுக் கொண்டேயிராத செவிகளாலும் கேடு விளையும் என்பது கருத்து.
|
'கேள்வியால் தோட்கப்படாத' என்றால் என்ன?
இத்தொடர்க்கு கேள்வியால் துளையிடப்படாத என்பது பொருள். தோட்கப்பட்டது என்பது நற்கேள்வியைப் பன்முறை கேட்டுக் கேட்டு துளையிடப்பட்டது
என்று பொருள். காலிங்கர் 'கேள்வி என்ற கூரிய கடைகோலால் இரண்டாவது துளையிடப்படாத' என்று
இதனை விளக்குவார். அதாவது நல்லுரைகளால் கடைபோகத் துளைக்கப்பட்ட செவியே செவி எனப்படும் என்பது பொருள். முதல் துளையானது இயற்கையில்
அமைந்த செவித்துளை.
கேட்டுக்கேட்டு செவி துளை பெற்றிருக்க வேண்டும் என்பது வள்ளுவர் விரும்புவது. இதைப் 'பழைய துளை துளையன்று' என்று பரிமேலழகர் விளக்குகிறார்.
அதாவது இயற்கையாய் அமைந்த காதுத் துளையால் நல்லுரைகளைக் கேட்டு உணர்ந்து கொள்ள இயலாது. உள்ளத்தின்கண் கருத்துக்கள் நுழைதற்கு
இயற்கைத்துளை தவிர்த்த வேறான, கேள்வியால் துளைத்தெடுக்கப்பட்ட நுண்துளை கொண்ட செவி வேண்டும்.
கேள்வி கேட்கும்போது துன்பம் தருவதாகவும் காதைத் துளைப்பது போன்றும் இருக்கலாம். ஆனாலும் உயர்ந்த கருத்துகளைக் கேட்காமல் ஒருவன்
வாழ்ந்தால், அவனுக்குக் காது இருந்தும் இல்லாதது போன்றதே; நிறையச் செய்திகளை காதுகள் துளைக்கும் வரை கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்
என்பது கருத்து.
|
கேள்வியால் துளைக்கப்படாத செவியானது, கேட்கும் திறன் இருந்தாலும் அது கேளாதது போன்றதே என்பது இக்குறட்கருத்து.
கேள்வியால் மீண்டும் மீண்டும் துளைக்கப்படாத காது இருப்பினும் இல்லாதது போல என்னும் குறள்.
கேள்வியால் துளைக்கப்படாத செவி, கேட்டாலும் கேட்க இயலாத செவிடாந் தன்மையதுவே.
|