இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0417



பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து
ஈண்டிய கேள்வி யவர்

(அதிகாரம்:கேள்வி குறள் எண்:417)

பொழிப்பு: நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர். (ஒருகால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.

மணக்குடவர் உரை: ஒரு பொருளைத் தப்ப உணர்ந்தாலும், அறிவின்மை யாயின சொல்லார், ஆராய்ந்துணர்ந்து நிரம்பிய கேள்வியை யுடையார்.
இது கேட்டறிந்தார் அறியாமை சொல்லா ரென்றது.

பரிமேலழகர் உரை: பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் - பிறழ உணர்ந்த வழியும், தமக்குப் பேதைமை பயக்குஞ் சொற்களைச் சொல்லார், இழைத்து உணர்ந்து ஈண்டிய கேள்வியவர்- பொருள்களைத் தாமும் நுண்ணியதாக ஆராய்ந்தறிந்து அதன்மேலும் ஈண்டிய கேள்வியினை உடையார்.
('பிழைப்ப' என்பது திரிந்து நின்றது. பேதைமை : ஆகுபெயர். ஈண்டுதல் : பலவாற்றான் வந்து நிறைதல். பொருள்களின் மெய்ம்மையைத் தாமும் அறிந்து, அறிந்தாரோடு ஒப்பிப்பதும் செய்தார் தாமத குணத்தான் மயங்கினர் ஆயினும், அவ்வாறல்லது சொல்லார் என்பதாம். இவை நான்கு பாட்டானும் கேட்டார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: பொருள்களை நுட்பமாக ஆராய்ந்தறிந்ததோடு செவிச்செல்வம் மிகுதியாகப் பெற்றவர்கள் கற்றவற்றைத் தவறாக அறிந்தாலும் பிழைபடப் பேசமாட்டார்கள். (தான் தவறாக அறிந்த பிழையைக் கேள்விச் செல்வம் திருத்திவிடும் என்பது கருத்து.)


பொருள்கோள் வரிஅமைப்பு:
பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்து உணர்ந்து ஈண்டிய கேள்வியவர்.


பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார்:
பதவுரை: பிழைத்து-பிறழ்ந்து; உணர்ந்தும்-தெரிந்தும்; பேதைமை-அறியாமை *பயக்கும் சொற்கள்); சொல்லார்-சொல்லமாட்டார்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒரு பொருளைத் தப்ப உணர்ந்தாலும், அறிவின்மை யாயின சொல்லார்;
பரிப்பெருமாள்: ஒரு பொருளைத் தப்ப உணர்ந்தாலும், அறியாமை யாயின சொல்லார்;
பரிதி: பிழைத்தும் பேதை வார்த்தை சொல்லார்; [பேதை வார்த்தை- அறியாமையை வெளிப்படுத்தும் சொல்.]
காலிங்கர்: இவ்வுலகின்கண் தப்பியும் குறிக்கொண்டும் இருவாற்றானும் பேதைமை நிகழும் சொற்களைச் சொல்லுவது இலர்;
பரிமேலழகர்: பிறழ உணர்ந்த வழியும், தமக்குப் பேதைமை பயக்குஞ் சொற்களைச் சொல்லார்;
பரிமேலழகர் விரிவுரை: 'பிழைப்ப' என்பது திரிந்து நின்றது. பேதைமை : ஆகுபெயர். பொருள்களின் மெய்ம்மையைத் தாமும் அறிந்து, அறிந்தாரோடு ஒப்பிப்பதும் செய்தார் தாமத குணத்தான் மயங்கினர் ஆயினும், அவ்வாறல்லது சொல்லார் என்பதாம்.

ஒரு பொருளைத் தப்பாக உணர்ந்தாலும், அறியாமையை வெளிப்படுத்தும் சொல் சொல்லார் என்றவாறு பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்குப் பொருள் கூறினர். காலிங்கர் பிழைத்தும்-உணர்ந்தும்' என இரண்டாக்கித் தவறுதலாகவும் தெரிந்தும் பேதைமைச் சொற்களைச் சொல்லார் என்று வேறுபட உரை தருகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிழைபட்ட நிலையில் தவறாக உணர்ந்தாலும் கேட்பவர்க்குப் பேதைமை தரக்கூடிய சொற்களைக் கூறார்', 'தவறியும் அறிவில்லன சொல்லார்', 'தாம் தவறாக ஒன்றை உணர்ந்தாலும் நமது அறிவுக்குறைவைக் காட்டுஞ் சொற்களைச் சொல்லமாட்டார்கள்', 'தவறாக உணர்ந்தவிடத்தும் அறியாமை தரும் சொற்களைச் சொல்லார்' என்றபடி பொருள் உரைப்பர்.

ஒரு பொருளை பிழைபடப் புரிந்து கொண்டாலும் அறியாமையை வெளிப்படுத்துமாறு பேசமாட்டார் என்பது இத்தொடரின் பொருள்.

இழைத்துணர்ந்து ஈண்டிய கேள்வி யவர்:
பதவுரை: இழைத்து-நுண்ணிதாக ஆராய்ந்து அறிந்து; உணர்ந்து-தெரிந்து; ஈண்டிய-பலவாற்றான் வந்து நிறைந்த; கேள்வியவர்-கேள்வியையுடையவர்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆராய்ந்துணர்ந்து நிரம்பிய கேள்வியை யுடையார்.
மணக்குடவர் குறிப்புரை: இது கேட்டறிந்தார் அறியாமை சொல்லா ரென்றது.
பரிப்பெருமாள்: ஆராய்ந்துணர்ந்த நிரம்பிய கேள்வியை யுடையார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது கேட்டறிந்தார் அறியாமை சொல்லா ரென்றது.
பரிதி: பதார்த்த கேள்வியுள்ளார் என்றவாறு.[பதார்த்த கேள்வியுள்ளார்-சொற் பொருளாய்வுடையார்.]
காலிங்கர்: மற்று யாரோ எனின், யாம் சான்றோருழைச் சென்று நல்லன கேட்க வேண்டும் என்று கருதிக் கொண்டு பலநாளும் கேட்டுத் தொக்க தொகையாக் கேள்வியை உடையவர் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: இழைத்து என்பது எண்ணி.
பரிமேலழகர்: பொருள்களைத் தாமும் நுண்ணியதாக ஆராய்ந்தறிந்து அதன்மேலும் ஈண்டிய கேள்வியினை உடையார்.
பரிமேலழகர் குறிப்புரை: ஈண்டுதல்- பலவாற்றான் வந்து நிறைதல். இவை நான்கு பாட்டானும் கேட்டார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.

ஆராய்ச்சி அறிவுடன் நிரம்பிய கேள்வியறிவு கொண்டவர் என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கல்வி கேள்விகளில் நிரம்பிய அறிவுச் செல்வம் உடையவர்கள்', 'ஆராய்ந்து உணர்ந்து நிரம்பிய கேள்வியாளர்', 'நுட்பமாக ஆய்ந்தறிந்து நிரம்பிய கேள்வியுடைவர்கள்', 'ஆராய்ந்து அறிந்து நிறைந்த கேள்வியறிவினை உடையவர்' என்றவாறு பொருள் தந்தனர்.

ஆய்ந்து அறிந்து பலவாறு சேகரிக்கப்பட்ட கேள்விச் செல்வத்தை உடையவர்கள் என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
ஆய்ந்தறிந்து கேள்விப்பொருள் செவியில் ஏற்றியவர் வாய்ச்சொல் வழுக்கார் என்னும் பாடல்.

ஆய்ந்தறிந்து பலவாறு சேகரிக்கப்பட்ட கேள்விச்செல்வத்தை உடையவர் ஒரு பொருளை பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் என்பது பாடலின் பொருள்.
பிழைத்துணர்ந்தவர் பேதைமைதானே பேசுவர்?

இழைத்துணர்ந்து என்பதற்கு நுணுக்கமாக ஆராய்ந்து புரிந்து கொள்ளுதல் என்பது பொருள்.
பேதைமை என்பது தம் அறியாமையை காட்டும் சொற்களை இங்கு குறிக்கும்.
ஈண்டிய என்ற சொல் பலவாற்றான் 'சேகரித்த'தை உணர்த்தியது.
கேள்வியவர் என்றால் கேள்வியறிவினை உடையவர் என்பது பொருள்.

பிழைத்துணர்ந்தவர் பேதைமைதானே சொல்வர்?

பிழைத்துணர்ந்தும் என்ற தொடர்க்கு 'ஒரு பொருளை பிழைபடப் புரிந்து கொண்டாலும்' என்பது பொருள்.
பிழைபடப் புரிந்து கொண்டவர் பிழைபடத்தானே பேசுவர்; அறிவற்றன பேசார் என்பது எப்படி பொருந்தும்? என்ற வினா உடன் எழுகிறது.
'ஒன்றைப் பிறழவுணர்ந்த விடத்தும், பொருத்தமாகச் சொல்வர் அல்லது சொல்லாமலே விட்டு விடுவர் என்பது கருத்து' என்பது தேவநேயப் பாவாணர் உரை.
குழந்தையின் உரையான 'பிழைத்து உணர்ந்தும் என்னும் உம்மை அவ்வாறு உணரமாட்டார்; தவறி உணரினும் தப்பாகப் பிறர்க்குச் சொல்ல மாட்டார் என்பது குறித்தது' என்பது பிழைத்துணர்ந்தும் என்ற தொடரிலுள்ள உம்மையில் மேற்சொன்ன வினாவிற்குப் பதில் இருப்பதாக அமைகிறது.
ஈண்டிய கேள்வியால் அது நிகழ்கிறது என்று இக்குறள் குறிப்பால் உணர்த்துகிறது என்று இரா சாரங்கபாணி இதற்கு விடை தருகிறார். ஆராய்ந்து திரட்டிச் சேகரிக்கப்பட்ட கேள்வி அறிவு, ஒரு பொருளைத் தவறாக உணர்ந்தாலும், பேதைமைச் சொல் கூறாது தடுக்கும் என்பது நுட்பம் என்று அவர் மேலும் விரிப்பார்.

காலிங்கர் 'பிழைத்தும்-உணர்ந்தும்' எனப் பிரித்துத் 'தப்பியும்' 'குறிக்கொண்டும்' என்று இரண்டாக்கினார். இது கேள்விச் செல்வம் உடையோர் அறியாமலோ அறிந்தோ இவ்விருவகையானும் அறிவற்ற பேச்சு பேசார் என்ற பொருள் தரும். இவரது உரை ஐயத்திற்கு வழி வகுக்காமல், 'தொக்க தொகையாக் கேள்வியை உடையவர்' ஆதலால் பேதைமை சொல்லார் என்று சொன்னதால், மேற்சொன்ன வினா எழத் தேவையில்லை.

ஆய்வுகள் செய்து திரண்ட கேள்வியுடையார் அறிவற்ற பேச்சுப் பேசார் என்று கூறும் குறட்பா இது.

நுண்ணிதாய் ஆராய்ந்து கேட்கத் தக்கனவற்றையே கேட்க வேண்டும் அதாவது கேட்பதற்கு முன்பே ஆராய்ந்து உணர்ந்து தகுந்தவற்றையே கேட்கவேண்டும் என்று இப்பாடலுக்குப் பொருள் என்று பலரும், கேட்டவற்றை ஆராய்ந்து உணர்வதைப் பற்றி இக்குறள் பேசுகிறது என்று சிலரும் கருத்துக் கூறியுள்ளனர். இரண்டுமே ஏற்கத்தக்க விளக்கங்கள்தாம்.

ஆய்ந்து கேட்டுப் புரிந்து கொண்டவர்கள் தவறுதலாகக் கூடத் தம்மை அறியாதவனாகக் காட்டிக் கொள்ளும் சொற்களைப் பேசமாட்டார்கள் என்கிறது இக்குறள். கேட்ட அறிவு உள்ளத்தில் மேலோங்கி நிற்குமாதலால் வாய்தவறிக்கூட குற்றமான சொற்களை வெளிப்படுத்தமாட்டார்கள் இவர்கள். கேள்வியால் கூடிய அறிவு, மிகுந்த பக்குவத்தை வழங்கி விடுவதால் அவர்கள் அளவாகவும், தெளிவாகவும் பேசுவர். தானே கற்றபொழுது சொற்பொருளை பிறழ உணர்ந்திருந்தாலும் கேள்வி அறிவுமூலம் தம்மைத் திருத்திக் கொள்வர். இவ்வாற்றான், பேசும்போது அவர்களது பேதமையை வெளிப்படுத்தாது காத்துக்கொள்வர் என்பது கருத்து.

ஆய்ந்து உணர்ந்து பலவாறு சேகரிக்கப்பட்ட கேள்விச் செல்வத்தை உடையவர், ஒரு பொருளை பிழைபடப் புரிந்து கொண்டாலும் அறியாமையை வெளிப்படுத்துமாறு பேசமாட்டார்கள் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஆய்ந்தறிந்து கேள்விபெற்றோர் உளறிக் கொட்டமாட்டார்கள் என்னும் குறட்பா.

பொழிப்பு

ஆராய்ந்து அறிந்து திரட்டிய கேள்வியுடையவர் ஒரு பொருளைத் தவறாக உணரிந்திருந்தாலும் அறிவில்லன சொல்லமாட்டார்.