இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0415இழுக்கல் உடையுழி ஊற்றுகோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்

(அதிகாரம்:கேள்வி குறள் எண்:415)

பொழிப்பு (மு வரதராசன்): ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச்சொற்கள், வழுக்கல் உடைய சேற்றுநிலத்தில் ஊன்றுகோல்போல் வாழ்க்கையில் உதவும்.

மணக்குடவர் உரை: வழுக்குத லுண்டான விடத்து உதவும் ஊன்றுகோல் போலும்: ஒழுக்கமுடையார் கூறுஞ் சொற்கள்.
இது கேட்பது ஒழுக்கமுடையார்மாட்டென்பது கூறிற்று.

பரிமேலழகர் உரை: இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்று = வழுக்குதலையுடைய சேற்று நிலத்து இயங்குவார்க்கு ஊன்றுகோல் போல உதவும்; ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் - காவற்சாகாடு உகைப்பார்க்கு ஒழுக்கமுடையார் வாயிற் சொற்கள்.
(அவாய்நிலையான் வந்த உவமையடையால் பொருள் அடைவருவிக்கப்பட்டது. ஊற்றாகிய கோல் போல உதவுதல் -தளர்ந்துழி அதனை நீக்குதல். கல்வியுடையரேனும் ஒழுக்கம் இல்லாதார் அறிவிலராகலின், அவர் வாய்ச்சொல் கேட்கப்படாது என்பதுதோன்ற, 'ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்' 'வாய்' என்பது தீச்சொல்அறியாமையாகிய சிறப்புணர நின்றது. 'அவற்றைக் கேட்க' என்பதுகுறிப்பெச்சம்.)

சி இலக்குவனார் உரை: வழுக்குதலையுடைய சேற்று நிலத்தில் நடப்பவர்க்கு ஊன்றுகோல் உதவுவது போல, ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் நமக்கு உதவும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இழுக்கல் உடையுழி ஊற்றுகோல் அற்றே ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல்.

பதவுரை:
இழுக்கல்-வழுக்குதல்; உடையுழி-உடையபோது; ஊற்றுகோல்--பற்றுக்கோடாகிய தடி அதாவது ஊன்றுகோல்; அற்றே-அத்தன்மைத்தே; ஒழுக்கம்-நன் நடத்தை; உடையார்-உடையவர்; வாய்ச்சொல்-வாய்மொழி.


இழுக்கல் உடையுழி ஊற்றுகோல் அற்றே:

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வழுக்குத லுண்டான விடத்து உதவும் ஊன்றுகோல் போலும்;
பரிப்பெருமாள்: வழுக்குத லுண்டான விடத்து உதவும் ஊன்றுகோல் போலும்;
பரிதி: பேரிழுக்காயிருக்கும், ஓதி உணராத பேர்க்கு, ஊன்றுகோல் ஆதாரமாய்த் திரிகின்றபேர்க்குக் கோல் உதவி செய்தது ஒக்கும்;
காலிங்கர்: மற்று யாதானும் ஒருவழித் தமது கால் வழுக்குதல் உடைய இடத்துத் தமது கையகத்து உற்றதோர் ஊற்றுகோல் உதவியது எத்தன்மைத்தோ;
பரிமேலழகர்: வழுக்குதலையுடைய சேற்று நிலத்து இயங்குவார்க்கு ஊன்றுகோல் போல உதவும்;

வழுக்குதலையுடைய இடத்து உதவும் ஊன்றுகோல் போல என்று பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வழுக்கும் நிலத்தில் நடப்பவர்க்கு ஊன்றுகோல் உதவுவது போல்', 'வழுக்கு நிலத்தில் நடப்பவர்க்கு ஊன்றுகோல் உதவுவது போல', 'வழுக்குடைய சேற்றுநிலத்திலே ஊன்றுகோல்போல', 'ஒருவனுக்கு அவனுடைய கால் சறுக்கிவிட்ட சமயத்தில் அவன் கையிலுள்ள ஊன்றுகோல் போல்' என்றபடி உரை தந்தனர்.

வழுக்குதல் உடையபோது ஊன்றுகோல் போல என்பது இத்தொடரின் பொருள்.

ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்:

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒழுக்கமுடையார் கூறுஞ் சொற்கள்.
மணக்குடவர் குறிப்புரை: இது கேட்பது ஒழுக்கமுடையார்மாட்டென்பது கூறிற்று.
பரிப்பெருமாள்: ஒழுக்கமுடையார் கூறுஞ் சொற்கள்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது கேட்பது ஒழுக்கமுடையார்மாட்டென்பது கூறிற்று.
பரிதி: உலகத்துக்குள் ஓதியுணர்ந்த ஒழுக்கமும் கேள்வியும் உள்ளவன்.
காலிங்கர்: அத்தன்மைத்து கல்வி ஒழுக்கத்தையுடைய சான்றோர் வாய்ப்பிறக்கும் சொற்கள் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: சொல் என்பது கேள்வி.
பரிமேலழகர்: காவற்சாகாடு உகைப்பார்க்கு ஒழுக்கமுடையார் வாயிற் சொற்கள்.
பரிமேலழகர் குறிப்புரை: அவாய்நிலையான் வந்த உவமையடையால் பொருள் அடைவருவிக்கப்பட்டது. ஊற்றாகிய கோல் போல உதவுதல் -தளர்ந்துழி அதனை நீக்குதல். கல்வியுடையரேனும் ஒழுக்கம் இல்லாதார் அறிவிலராகலின், அவர் வாய்ச்சொல் கேட்கப்படாது என்பதுதோன்ற, 'ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்' 'வாய்' என்பது தீச்சொல்அறியாமையாகிய சிறப்புணர நின்றது. 'அவற்றைக் கேட்க' என்பதுகுறிப்பெச்சம்.

ஒழுக்கமுடையார் கூறுஞ் சொற்கள் என்று பழைய ஆசிரியர்கள் உரை பகன்றனர். காலிங்கர் கல்வி ஒழுக்கத்தையுடைய சான்றோர் சொற்கள் என்கிறார். பரிமேலழகர் காவற்சாகாடு உகைப்பார்க்கு (புறநானூறு 185) அதாவது காத்தல் தொழிலாகிய வண்டியைச் செலுத்துபவர்க்கு (அரசர்க்கு) ஒழுக்கமுடையார் கூறிய சொற்கள் என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒழுக்கமுடையவர்தம் வாயிலிருந்து வரும் சொற்கள் வாழ்வில் தளரும் இடங்களில் கைகொடுத்துதவும்', 'ஒழுக்கமுடைய நல்லோரின் அறிவுரைகள் மக்களுக்குத் தளர்ச்சி வந்தபோது கைகொடுக்கும்', 'ஒழுக்கம் உடையவரது வாயில் பிறக்கின்ற சொற்கள்', 'நல்லொழுக்கமுள்ளவர்களிடம் கேட்கும் அறிவுரை' என்றவாறு உரை தருவர்.

ஒழுக்கம் உடையவர் சொல் என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
வழுக்குதல் உடையபோது ஊன்றுகோல் போல, ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் உதவும் என்பது பாடலின் பொருள்.
'ஒழுக்கமுடையார்' வாய்ச்சொல் கேட்கத்தக்கது என ஏன் விதந்து கூறப்பட்டது?

ஒழுக்கத்திற் சிறந்தவர்கள் சொல் கேட்டல் வாழ்க்கையின் இக்கட்டான காலத்து உறுதி தரும்.

வழுக்குதல் உடைய இடத்தைக் கடக்க ஊன்றுகோலைப் பயன்படுத்துவர். வழுக்குஇடம் என்பது ஈரமான நிலப்பகுதி அல்லது சேறுபடிந்த நிலத்தைக் குறிக்கும். வழுக்கு நிலத்தையும் சிலவேளைகளில் நாம் தவிர்க்க முடியாததாயிருக்கிறது. அது போன்ற இடத்தை வலிமை பெற்றோரும்கூட எளிதாகவும் இயல்பாகவும் கடக்கமுடியாது. பற்றிக் கொள்வதற்கு ஊன்றுகோல் இருந்தால் வழுக்கி விழுந்துவிடாமல் கடந்து சென்று விடலாம். வழுக்கல் இடத்தில் சறுக்கி விடாதபடி கடக்க ஊன்றுகோல் உதவுவது போல, ஒழுக்கமுடையவரிடம் கேட்ட சொற்கள், ஒருவர் வாழ்க்கையில், மனம் தளர்வுற்ற நிலையில், தடுமாற்றம் இன்றி வாழ்ந்திட கைகொடுத்து உதவும் என்கிறது இக்குறட்பா.

வாழ்க்கையில் தடுமாற்ற காலம் வரும்போது மற்றவர்கள் அறிவுரைகளைக் கேட்டல் பயன் தரும் என்பதை உணர்ந்த ஒருவனுக்கு யாரிடம் கேட்பது என்ற ஐயம் எழுகிறது. 'ஒழுக்கம் உடையாரிடம் சென்று கேட்க' என ஆற்றுப்படுத்துகிறது இப்பாடல். சான்றோர் அறிவுரைகளைக் கேட்டுப் பயன்பெறுவோர்களுக்கு அவ்வுரைகள் அவர்கள் சிந்தனையில் எங்கோ படிந்து தங்கியிருக்கும். அவ்வாறு ஊறிய எண்ணங்கள், தகுந்த நேரங்களில், வீழ்ச்சியிலிருந்து அவர்களைத் தடுத்து மேல் நடப்பதற்கு உறுதியான மனநிலையினைத் தரும். வாழ்க்கையில் துன்பங்கள் அடுக்கி வந்தகாலத்து நல்லறிவு பெற்றவனாக இருந்தாலும் அவன் துவண்டு போய்விடுவான். அதுபோன்ற சமயங்களில் இடுக்கண் வருங்கால் நகுக போன்ற சொற்களைக் கேட்டது நினைவுக்கு வந்து இடையூறுகளைத் தாண்டி முன்னோக்கிச் செல்ல ஊக்கம் உண்டாகும்.

வழுக்கல் நிலம் தரும் இடையூறு, விழுதல், எழுந்து நிற்றல், உதவும் ஊன்றுகோல், மனத்தளர்ச்சி. தடுமாற்றம், ஆன்றோர் அறிவுரை நினைவுக்கு வருதல், வழிகாட்டல், இவையனைத்தையும் கொண்ட காட்சியையும் நல்லோர் அறிவுரை எப்படி இடுக்கண் வந்த வேளை உதவுகிறது என்பதையும் நம் மனக்கண்முன் நிறுத்துகிறது இப்பாடல்.

'ஒழுக்கமுடையார்' வாய்ச்சொல் கேட்கத்தக்கது என ஏன் விதந்து கூறப்பட்டது?

ஒழுக்கம்உடையார் என ஏன் தனித்துச் சொல்லப்பட்டது? ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் மட்டும்தான் உதவுமா? அறிவுரை கூற ஒழுக்கமுடைமை தேவையா? ஒருவர் உரையைக் கேட்கும்போது அவர் ஒழுக்கமானவரா அல்லவா என்று ஆராயவேண்டுமா? கருத்துக்கள்தாமே முக்கியம்? நல்லுரை பகர்வோர் யாராக இருந்தாலும் அவர் சொற்களைக் கேட்டால் என்ன?

பரிமேலழகர் 'கல்வியுடையரேனும் ஒழுக்கம் இல்லாதார் அறிவிலராகலின், அவர் வாய்ச்சொல் கேட்கப்படாது என்பது தோன்ற' வள்ளுவர் கூறியுள்ளார் எனச் சொல்கிறார். அறிவில்லாத ஒருவனிடம் எப்படி அறிவுரை பெறமுடியாதோ அதுபோல ஒழுக்கமில்லாதவர் வாய்ச்சொல் பயனளிக்காது என்பது இவர் உரைக்கருத்து. மேலும் அவர் காவற்சாகாடு உகைப்போன் மாணின் ஊறு இன்றாகி ஆறினிது படுமே காவற் சாகாடு கைப்போன் மாணின், ஊறு இன்றாகி ஆறு இனிது படுமே (புறநானூறு 185 பொருள்: காப்புடைய வண்டி அதனைச் செலுத்துவோன் மாட்சிமைப்படின் ஊறுபாடில்லையாய் வழியை இனிதாகச் செல்லும்) எனச் செலுத்துவோன் மாண்புடையவனாக இருந்தால் பயணம் இனிது என்று சொல்லும் சங்கப்பாடல் வரியையும் சுட்டிக்காட்டுகிறார். காலிங்கர் கல்வியுடையர்-ஒழுக்கமுடையர் இரண்டையும் இணைத்து 'கல்விஒழுக்கத்தையுடைய சான்றோர் வாய்ப்பிறக்கும் சொற்கள்' என்று உரைக்கிறார். ஒழுக்கமில்லாதார் கல்வியுடையாரேனும் அன்பு இல்லாதவர் ஆதலால் ஒழுக்கமுடையவர் சொல் கேட்கவேண்டும் என்பார் தேவநேயப் பாவாணர். ஒழுக்கமில்லாதவர் அறிவுரை பயன் தராது, ஒழுக்கமற்றவர் அறிவுரையில் பிறருக்கு நம்பிக்கையும் வராது என்று வேறு பலரும் விளக்கினர்.
அறிவுரை என்றவுடன் கற்றவர் கூறும் சொற்கள்தாம் பலரது நினைவுக்கும் வரும். கற்றவர்களிடம் கேட்டால் என்ன? கற்றவர்கள் எல்லாரும் கல்வியின் பயனாகிய ஒழுக்கத்தைப் பெற்று விளங்குவதில்லை ஆதலால், கற்றவர் வாய்ச்சொல் கேட்டற்குரியது எனக் கூறமுடியாது.

மக்கள் கேட்க அறிவுரை நல்குவோரிடம் வள்ளுவர் ஒழுக்கத்தையும் எதிர்பார்க்கிறார் எனத் தெரிகிறது.
ஒழுக்கமுடையோர் வாய்ச்சொல் மிகவும் தூய்மையானதாக இருக்கும். ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயால் சொலல்(ஒழுக்கமுடைமை 139 பொருள்: தீய சொற்களைத் தவறியும் தம்வாயாற் சொல்லுதல் ஒழுக்கம் உடையவர்க்கு இயலாது) என்று குறள் முன்னர் கூறியது. இது ஒழுக்கமுடையவர் வாயிலிருந்து நல்ல சொற்கள் மட்டுமே வரும் என்ற பொருள் தருவது. சொல்பவர் ஒழுக்கமுள்ளவராக இருந்தால் அவர் சொல் கேட்கத்தக்கது என்று ஒரு நன்னம்பிக்கை ஏற்பட்டு மனம் அங்கே ஈடுபாடு கொள்ளும். அவர் சொற்கள் நினைவுக்கு வந்தவுடன் நெஞ்சு நிமிர்ந்து நிற்கும்.
ஒழுக்கமுடையோர் சிந்தையும் செயலும் சொல்லும் ஒன்றானவர்கள். அவர்கள் தாம் கொண்ட ஒழுக்கநெறி வாழ்க்கையில் விழிப்புடன் வாழ்ந்து வெற்றி பெற்றவர்கள். ஆதலால், அவர்கள் சொல்லும் சொற்கள் வழுக்கலில் விழாமல் நடத்தற்குரிய அறிவைத் தரும் என்பதால் ஒழுக்கமுடையோர் வாய்ச்சொல் கேட்க எனச் சொல்லப்பட்டது.அதிகார இயைபு

ஒழுக்கமுடையோரது கேள்வி யுடையார்க்கு தடுமாற்றம் இல்லை என்னும் பாடல்.

பொழிப்பு

வழுக்கு நிலத்தில் நடப்பவர்க்கு ஊன்றுகோல் போல, ஒழுக்கம் உடையவர் சொல்லைக் கேட்பது கைகொடுக்கும்.