கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை
(அதிகாரம்:கேள்வி
குறள் எண்:414)
பொழிப்பு (மு வரதராசன்):: நூல்களைக் கற்கவில்லையாயினும், கற்றறிந்தவரிடம் கேட்டறிய வேண்டும்; அஃது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்தபோது ஊன்றுகோல்போல் துணையாகும்.
|
மணக்குடவர் உரை:
கற்கமாட்டானாயினுங் கேட்க: அக்கேள்வி ஒருவன் தளர்ச்சிக்குத் தாங்கலாவதொரு துணையாம்.
இது கேள்வி வேண்டுமென்றது.
பரிமேலழகர் உரை:
கற்றிலன் ஆயினும் கேட்க - உறுதி நூல்களைத் தான் கற்றிலன் ஆயினும், அவற்றின் பொருள்களைக் கற்றறிந்தார் சொல்லக் கேட்க,
அஃது ஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை - அக்கேள்வி ஒருவனுக்குத் தளர்ச்சி வந்துழிப் பற்றுக் கோடாம் துணை ஆகலான் .
('உம்மை' கற்கவேண்டும் என்பது பட நின்றது. தளர்ச்சி - வறுமையானாதல் அறிவின்மையானாதல் இடுக்கண்பட்டுழி மனம் தளர்தல்.
அதனைக் கேள்வியினானாய அறிவு நீக்கும் ஆகலின், 'ஊற்றாம் துணை' என்றார். 'ஊன்று' என்னும் ஆகுபெயரின் னகரம் திரிந்து நின்றது.)
குன்றக்குடி அடிகளார் உரை:
நல்ல நூல்களக் கற்காவிடினும் அவற்றைக் கற்றாரிடம் கேட்டறிக. அக்கேள்வியறிவு தளர்ச்சி வந்துள்ள பொழுது துணையாக அமையும்.
கற்றற்குப் பொருள் செலவு, மிகுதி காலமும் மிகத் தேவை. அவை கிடைக்காத சூழ்நிலையில் கற்கும் வாய்ப்பை இழந்திருந்தாலும் கவலற்க.
நல்ல நூல்களை கற்றவரிடம் கேட்டறிவதன் மூலம் கற்காததினால் நேர்ந்த இழப்பை ஈடு செய்யலாம். அது மட்டுமல்ல. சிறந்தும் விளங்கலாம்
என்பதாகும். ஆக, கல்வி வாயிலாகவோ, கேள்வி வாயிலாகவோ அறிவுச் செல்வத்தைப் பெற்றாக வேண்டும் என்று வலியுறுத்தியதாகக் கொள்க.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
கற்றிலன் ஆயினும் கேட்க; அஃது ஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை.
பதவுரை: கற்றிலன்ஆயினும்-கல்லாதவன் ஆக இருந்தாலும்; கேட்க-கேட்கவேண்டும்; அஃது-அது; ஒருவற்கு-ஒருவர்க்கு; ஒற்கத்தின்-தளர்ச்சியில்; ஊற்றாம்-தாங்கலாவது, பற்றுக் கோடாம், ஊற்றினைப் போல்; துணை-உதவி.
|
கற்றிலன் ஆயினும் கேட்க :
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('கற்கிலனாயினும்' பாடம்): கற்கமாட்டானாயினுங் கேட்க;
பரிப்பெருமாள் ('கற்கிலனாயினும்' பாடம்): கற்கமாட்டானாயினும் கற்றோர்மாட்டே கேட்க;
பரிதி: கல்லாதபோதும் கேள்வி உண்டாயிருக்க;
காலிங்கர்: இவ்வுலகத்துள் ஒருவன் கற்கும் நெறியினால் கற்கப் பெற்றிலனாயினும், கற்றுணர்ந்த சான்றோருழைச் சென்று வழிபட்டுப் பயிலக் கேட்க;
பரிமேலழகர்: உறுதி நூல்களைத் தான் கற்றிலன் ஆயினும், அவற்றின் பொருள்களைக் கற்றறிந்தார் சொல்லக் கேட்க;
பரிமேலழகர் குறிப்புரை: 'உம்மை' கற்கவேண்டும் என்பது பட நின்றது.
'கல்லாவிட்டாலும் கேட்க' என்ற பொருள் தருமாறு பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கல்லாவிடினும் கற்றார் சொல்லைக் கேட்க', 'ஒருவன் வாழ்வியலுக்கேற்ற நூல்களைப் படிக்கவில்லை என்றாலும்
அவற்றைக் கற்றறிந்த பெர்யவர்களிடம் கேட்க வேண்டும்', 'ஒருவன் நூல்களைக் கற்கவில்லையானாலும், அவற்றின் பொருளைக் கற்றறிந்தாரிடங்
கேட்கக் கடவன்', 'நல்ல நூல்களைத் தான் கற்க முடியாது போனாலும் கற்றோர் சொல்லக் கேட்டல் வேண்டும்' என்றபடி உரை தந்தனர்.
கல்லாவிட்டாலும் கேட்டு அறிக என்பது இப்பகுதியின் பொருள்.
அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ('அஃதொருவன்', 'ஒற்கத்துக்கு' பாடங்கள்) அக்கேள்வி ஒருவன் தளர்ச்சிக்குத் தாங்கலாவதொரு துணையாம்.
மணக்குடவர் குறிப்புரை: இது கேள்வி வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: ('அஃதொருவன்', 'ஒற்கத்துக்கு' பாடங்கள்) அக்கேள்வி ஒருவன் தளர்ச்சிக்கண் தாங்கலாவதொரு துணையாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது கேள்வி வேண்டுமென்றது.
பரிதியார்: அதுவழுக்குத் துறையில் ஊன்றுகோல் போல உதவும் என்றவாறு. [வழுக்குத்துறை-வழுக்கி விழும் இடம்]
காலிங்கர்: மற்று அக்கேள்வியானது அங்ஙனம் கேட்ட ஒப்பிறந்தோனுக்கு நரகினுட் சென்று விழாது மறுமை நெறிச் செல்லுதற்குப் பெரியதோர்
உறுதித் துணை என்றவாறு. ஒற்கம் என்பது நரகம் என்றது. [ஒப்பிறந்தோனுக்கு-நிகரில்லாதவன்]
பரிமேலழகர்: அக்கேள்வி ஒருவனுக்குத் தளர்ச்சி வந்துழிப் பற்றுக் கோடாம் துணை ஆகலான்.
பரிமேலழகர் குறிப்புரை: தளர்ச்சி - வறுமையானாதல் அறிவின்மையானாதல் இடுக்கண்பட்டுழி மனம் தளர்தல். அதனைக் கேள்வியினானாய அறிவு
நீக்கும் ஆகலின், 'ஊற்றாம் துணை' என்றார். 'ஊன்று' என்னும் ஆகுபெயரின் னகரம் திரிந்து நின்றது.
அக்கேள்வி தளர்ச்சி வந்தபோது தாங்குதற்குத் துணையாகும் என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் உரை பகன்றனர். காலிங்கர் ஒற்கம் என்ற சொல்லுக்கு நரகம் என்று கொண்டு 'அக்கேள்வி ஒருவனை நரகத்தில் விழாது தடுத்து மறுமை நெறிச் செல்ல துணையாகும்' என்று உரை கூறினார்.
இன்றைய ஆசிரியர்கள் 'சோர்வுக் காலத்துத் தாங்கும் துணையாகும்', 'அக்கேள்வி வாழ்வில் தளர்ச்சி வந்தபோது ஊன்றுகோல் போலத் துணையாகும்', 'அக்கேள்வி ஒருவனுக்குத் தளர்ச்சிவந்த போது ஊன்றுகோல் போல உறுதியான உதவி புரியும்', 'அவ்வாறு கேட்பது அறிவுத்தளர்ச்சி வந்த காலத்தில் துணையாக உதவும்' என்றவாறு உரை நல்கினர்.
அக்கேள்வியறிவு ஒருவனுக்குத் தளர்ச்சி வந்தபோது தாங்கிக்கொள்ளப் பயன்படும் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
கல்லாவிட்டாலும் கேட்டு அறிக; அது ஒருவனுக்குத் தளர்ச்சி வந்தபோது தாங்கிக்கொள்ளப் பயன்படும் என்பது பாடலின் பொருள்.
கேள்வியறிவு தளர்ச்சியைத் தாங்குதல் எங்ஙனம்?
|
தளர்வு நேரத்தில் சார்ந்திருக்கக் கேள்வியறிவு உதவும்.
தான் கற்கவில்லை என்றாலும், கற்றவரிடம் கேட்டாவது அறிவு பெற வேண்டும்; அது ஒருவன் தளர்ச்சி அடையும்போது தாங்கிக்கொள்ள உதவும்.
கற்கும் நெறியினால் கற்றுப் பெறுவது கல்வியறிவு. பொருளாதார நெருக்கடி, வாழும் இடத்தருகே கல்விக்கூடங்கள் இல்லாமை போன்ற காரணங்களால் எழுத்துக் கல்வி பெறும் வாய்ப்பு சிலர்க்குக் கிட்டாமல் போகிறது. வள்ளுவர் எல்லோரும் கற்கவேண்டும் என்பவர். கற்றலுக்கான வாய்ப்பு ஒருவனுக்குக் கிடைக்காத நிலையில் 'கேட்க' என்று சொல்லி கேள்வி அறிவைப் பெறும்படி உணர்வூட்டுகிறார். நூல்களில் இருக்கும் பல்வேறு கருத்துகளைத் தாமே படித்து அறிந்து முறையாகக் கல்வி கற்க
இயலாவிட்டாலும், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பெரியவர்கள் சொற்களைக் கேட்கலாம். கற்றலை விடவும் கேட்டல் நன்று என்று
நம் முன்னோர்களும் கருதினார்கள்; கற்ற அறிஞர்களின் உரையைக் கேட்பதன் மூலம் கல்வி அறிவு இல்லாதவர்களும் அறிவைப்
பெறமுடியும்; கற்காததினால் நேர்ந்த இழப்பை அது ஈடு செய்யும்.
அவ்வாறு ஒருவன் நூல்களைக் கற்காமல் கற்றவர் சொல்லச் செவியால் கேட்டுப் பெறுவது கேள்வியறிவு. வாழ்க்கையில் அவனுக்குத் தளர்ச்சி வரும் நேரங்களில் அக்கேள்வி தாங்கிக் கொள்ளத் துணையாகும்.
இதையே வேறு வகையில் நாலடியாரும்,
கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்து ஒழுகின் நல்லறிவு நாளும் தலைப்படுவர் (நாலடியார் 139 பொருள்: தாம் கல்லாதவரே யாயினும் கற்றாரைச் சேர்ந்து பழகினால் பண்பட்ட மெய்யறிவு வரவர உண்டாகப்பெறுவர்) என்று பாடுகிறது.
கற்றோரும் கேள்வியினால் பயனுற முடியும். கற்றோர் என்பார் எல்லாவற்றையுமே கற்றிருத்தல் இயலாது. ஆகவே கல்வியுடையோரும் தாம் கற்றிராதவற்றைப் பெரியோர் சொல்லக் கேட்டுப் பயன் பெறலாம்.
கேள்வியறிவு, மனத்தடுமாற்றம் உண்டாகிற காலங்களில் உறுதியளிக்க உதவியாகும் என்ற நன்மை புலப்படுத்தப்படுகிறது. செவிவழி கற்றல் இயலும் என்பதை உணர்த்திக் கல்லாதவர்களுக்கும் கல்விபெற வாய்ப்பு உண்டு எனவும் ஆற்றுப்படுத்தப்படுகிறது.
கற்றிலனாயினும் என்பதற்குக் 'கற்கிலனாயினும்' என்றும் பாடம் உண்டு. கற்கிலனாயினும் என்பது 'கற்கப்பெற்றிலன் ஆனாலும்' என்று பொருள்படும். இரண்டிற்கும் கருத்து ஒன்றே. 'கற்றிலன்' என்பது 'கற்கும் ஆற்றலும் வாய்ப்பும் இருந்தும் கல்லாதவன்' என்பதையும் 'கற்கிலன்' என்பது 'அவையில்லாமையான் கற்க மாட்டாதவன்' என்பதையும் விளக்குவன (தண்டபாணி தேசிகர்). கற்றிலன் ஆயினும் என்பதிலுள்ள உம்மை கற்கவேண்டும் என்பதை உணர்த்தி நின்றது.
ஒற்கம் என்ற சொல்லுக்கு தளர்ச்சி என்றே அனைவரும் பொருள் கொள்வர். இதற்குக் காலிங்கர் கொண்ட நரகம் என்ற பொருள் இயல்பில்லை.
ஊன்று என்பது ஊற்று என்று திரிந்தது. ஊன்று- ஊன்றுவதற்கு உதவுவது, தாங்குவது, உறுதித்துணை என்பதாம்.
அடுத்த குறளில் ஊன்றுகோல் உவமை வருவதால் இங்கு ஊன்று என்பதற்குத் தாங்கு எனப் பொருள் கொள்வர்.
ஊற்றாந்துணை என்பதற்கு ஊற்றினைப் போல் துணையாவது என்றபடியும் பொருள் கண்டனர்.
|
கேள்வியறிவு தளர்ச்சியைத் தாங்குதல் எங்ஙனம்?
இக்குறள், கேள்வியறிவு ஒருவருக்கு பயன்படுங்காலம் காலம் பற்றியது. தளர்வு நேர்ந்த நேரங்களில் கேள்வியறிவு ஒருவனைத் தாங்கத் துணை செய்யும் என்கிறது.
சோர்வு அல்லது தளர்ச்சி என்பது வறுமை, அறியாமை, நோய், இழப்பு, சமூக அழுத்தங்கள் இவற்றால் துன்பம் நேரும்பொழுது உண்டாகும் மனந்தளர்தலை உணர்த்தும்.
செய்திகளையோ, கருத்துக்களையோ நல்லுரைகளையோ ஒருவர் படித்துக் கற்றுக் கொண்டிருக்காவிட்டாலும் தக்கவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டால் அக்கேள்வி வாழ்வில் சிக்கல்கள் தோன்றும் துன்பகாலத்தில் உதவும். தளர்ச்சியில், ஊன்றிக் கொள்வதற்கான பற்றுக்கோடாக, சிக்கல்கள் தீர்வதற்கான சிந்தனைக்கு ஆதாரமாக நின்றிருக்கும்.
கேட்கிற பழக்கம் இருந்தால் வாழ்வுச் சிக்கல்களை எதிர்கொள்ளும் பொழுது அவற்றைத் தாங்கிக் கொள்ளும் வலிமையையும் வளர்த்துக் கொள்ளமுடியும். கேள்விச் செல்வம் பெற்றவர்களுக்கு அவர்களது மனஇறுக்கத்தைத் தளர்த்திக் கொள்வது எளிதாக இருக்கும்; இன்னல்களுக்கு நடுவிலும் மகிழ்ச்சியாக இருக்கத் தங்களைப் பக்குவப்படுத்திக் கொள்வார்கள். பிழை செய்ய நேர்ந்தவேளை முன்பு கேட்ட சொற்கள் தம் எண்ணங்களில் தோன்றி தவறு நிகழாதிருக்கத் துணை செய்யும். அவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ளவும் கேள்வியறிவு உதவும்.
உடல் தளர்ச்சி ஏற்பட்டவனுக்கு பற்றுக்கோடு எவ்வாறு உதவியாய் இருக்குமோ அதுபோல் மனச்சோர்வு உற்றவனுக்குக் கேள்வியறிவு தாங்கும் துணையாக அமையும்.
எனவேதான் கற்றாரிடம் கேட்டல், துயர் வரும்போது அதனை நீக்குமாறு பயன்தரும் ஊற்றாக - தாங்கலாவதொரு துணையாகும் எனச் சொல்லப்பட்டது.
|
கல்லாவிட்டாலும் கேட்டு அறிக; அக்கேள்வி ஒருவனுக்குத் தளர்ச்சி வந்தபோது தாங்கிக்கொள்ளப் பயன்படும் என்பது இக்குறட்கருத்து.
கல்லாதவனுக்குக் கேள்வி அறிவு தாங்கும் துணை.
கல்லாவிடினும் கற்றார் சொல்லைக் கேட்க; அக்கேள்வியறிவு மனம் தளர்ந்த காலத்து தாங்கிக்கொள்ள உதவும்.
|