இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0412



செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்

(அதிகாரம்:கேள்வி குறள் எண்:0412)

பொழிப்பு (மு வரதராசன்): செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாதபோது (அதற்குத் துணையாக உடலை ஓம்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.

மணக்குடவர் உரை: செவிக்கு உணவாகிய கேள்வி யில்லாதபோது வயிற்றுக்கும் சிறிது உணவு கொடுக்கத் தகும்.
பெருக உண்ணின் கேள்வியை விரும்பாது காமநுகர்ச்சியை விரும்புமாதலான், சிறிது என்றார். இஃது எல்லாக்காலமும் கேட்க வேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை: செவிக்கு உணவு இல்லாத போழ்து - செவிக்கு உணவாகிய கேள்வி இல்லாத பொழுது, வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும் - வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.
(சுவை மிகுதியும் பிற்பயத்தலும் உடைய கேள்வி உள்ளபொழுது வெறுக்கப்படுதலான் 'இல்லாத போழ்து' என்றும், பெரிதாயவழித்தேடல் துன்பமேயன்றி நோயும் காமமும் பெருகுதலான் சிறிது என்றும் அதுதானும் பின்இருந்து கேட்டற்பொருட்டாகலான் 'ஈயப்படும்' என்றும் கூறினார். ஈதல், வயிற்றது இழிவு தோன்ற நின்றது. இவை இரண்டு பாட்டானும் கேள்வியதுசிறப்புக் கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: செவிக்கு உணவாகிய கேள்வி இல்லாதபோது வயிற்றுக்கும் சிறிது உணவு அளிக்கப்படும். வயிற்றுக்குரிய உணவைத் தேடுவதை விட அறிவுக்குரிய உணவளிக்கும் கேள்வியை மிகுதியாகத் தேடவேண்டும் என்பதாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
செவிக்குணவு இல்லாத போழ்து வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும்.

பதவுரை: செவிக்கு-காதுக்கு; உணவு-உணவு [செவிக்கு உணவு- கேள்வி அறிவு]; இல்லாத-இல்லாத; போழ்து-பொழுது, நேரம்; சிறிது-கொஞ்சம்; வயிற்றுக்கும்-வயிற்றுக்கும்; ஈயப்படும்-இடப்படும், கொடுக்கப்படும்.


செவிக்குணவு இல்லாத போழ்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செவிக்கு உணவாகிய கேள்வி யில்லாதபோது;
பரிப்பெருமாள்: செவிக்கு உணவாகிய கேள்வி யில்லாதபோது;
பரிதி ('செவிக்குணர்வு' பாடம்): செவியிற் கேள்வி இல்லாதபோது;
காலிங்கர்: செவிக்கு அமுதமாகிய கேள்வி உணர்வானது சான்றோருழைக் கிடையாத போழ்தின்கண்;
பரிமேலழகர்: செவிக்கு உணவாகிய கேள்வி இல்லாத பொழுது;

செவிக்கு உணவாகிய கேள்வி இல்லாதபோது என்பது பழம் ஆசிரியர்கள் உரையாகும். பரிதி செவியுணர்வு எனப் பாடம் கொண்டதால் உணவு என்று குறிப்பிடாமல் செவியிற் கேள்வி இல்லாதபோது என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'செவிக்கு உணவு கிடைக்காத போது', 'செவிக்கு உணவாகிய கேள்வி நிகழாத பொழுது', 'செவியுணவாகிய கேள்வியறிவிற்கு இடமில்லாத பொழுது', 'காதினால் பெறக்கூடிய அறிவு உணவு இல்லாதபோது' என்றபடி உரை தருவர்.

செவிக்கு உணவாகிய கேள்வியறிவிற்கு இடமில்லாத பொழுது என்பது இப்பகுதியின் பொருள்.

சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வயிற்றுக்கும் சிறிது உணவு கொடுக்கத் தகும்.
மணக்குடவர் குறிப்புரை: பெருக உண்ணின் கேள்வியை விரும்பாது காமநுகர்ச்சியை விரும்புமாதலான், சிறிது என்றார். இஃது எல்லாக்காலமும் கேட்க வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: வயிற்றுக்கும் சிறிது உணவு கொடுக்கத் தகும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: சிறிதுணவு என்றார். பெருக உண்ணின் கேள்வியை விரும்பாது காமநுகர்ச்சியை விரும்புமாதலான், மேல் கேள்வி வேண்டும் என்றார். இஃது ஒருகால் கேட்டுவிட அமையுமோ என்று ஐயுற்றார்க்கு எல்லாக்காலமும் கேட்க வேண்டும் என்று கூறப்பட்டது.
பரிதி: சிறிய வயிறாகிய எறும்புக்கும் ஈய விதனப்படும் என்றவாறு.
காலிங்கர்: சிறிதே வயிற்றுக்கும் உணவு அளிக்க அடுக்கும் என்றவாறு. [அடுக்கும் - பொருந்தும்]
பரிமேலழகர்: வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.
பரிமேலழகர் குறிப்புரை: சுவை மிகுதியும் பிற்பயத்தலும் உடைய கேள்வி உள்ளபொழுது வெறுக்கப்படுதலான் 'இல்லாத போழ்து' என்றும், பெரிதாயவழித்தேடல் துன்பமேயன்றி நோயும் காமமும் பெருகுதலான் சிறிது என்றும் அதுதானும் பின்இருந்து கேட்டற்பொருட்டாகலான் 'ஈயப்படும்' என்றும் கூறினார். ஈதல், வயிற்றது இழிவு தோன்ற நின்றது. இவை இரண்டு பாட்டானும் கேள்வியதுசிறப்புக் கூறப்பட்டது.

வயிற்றுக்கும் சிறிது உணவு கொடுக்கத் தகும் என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்குப் பொருள் கூறினர். பரிதி 'வயிறாகிற எறும்புக்கும் ஈயப்படும்' அதாவது எறும்பு சாப்பிடும் அளவு சிறிதளவு உணவு கொள்ளப்படும் என்ற கருத்தில் பொருள் உரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'வயிற்றுக்குக் கொஞ்சம் உணவு அளிக்கலாம்', 'வயிற்றுக்கும் சிறிது உணவு கொடுக்கலாம்', 'பசியால் வாட்டும் வயிற்றிற்கும் ஒரு சிறிது உணவு இடப்படும்', 'உடல் அழியாவண்ணம் சிறிதளவு வயிற்றுக்கும் உணவு அளிக்கப்படும்' என்றபடி உரை கூறினர்.

வயிற்றுக்கும் கொஞ்சம் உணவு கொடுக்கலாம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செவிக்கு உணவு இல்லாத பொழுது வயிற்றுக்கும் கொஞ்சம் உணவு கொடுக்கலாம் என்பது பாடலின் பொருள்.
கேள்வியுடைத்தலுக்கும் வயிற்றுணவுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

செவியை எப்பொழுதும் நிரப்பு; வயிற்றுக்குச் சிறிதளவோடு நிறுத்து.

அறிவுக்கு ஊட்டம் தரும் செவிஉணவாகிய கேட்டறிதல் என்பது இல்லாத போது வயிற்றுக்கும் சிறுது உணவு கொடுக்கலாம்.
உடலைப் பேணுவதற்கு உணவு தேவை; அந்த உணவு வாய்வழி செலுத்தப்படுகிறது. அறிவு வளர்வதற்கு மிகவும் துணை செய்வது கேள்வி; கேள்வி செவிவழி மாந்தர் மனதுக்குள் சென்றடைகிறது. ஆதலால், இது 'செவிக்குணவு' எனச் சொல்லப்பட்டது. உடற்பசி ஆற்றுவதற்கு உணவு தேவை; அறிவுப்பசி தீர்வதற்குக் கேட்டறிதல் துணை செய்யும். கேள்வி முதன்மையானது; அதற்கு அடுத்ததே வயிற்றுணவு என்கிறார் வள்ளுவர். உணவை எண்ணிக் கேள்விச் செல்வத்தை இழந்துவிடக் கூடாது என்ற கருத்தில் செவிக்குணவு இல்லாதபோது வயிறுணவு கொள்க எனச் சொல்கிறார் அவர்.
பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகிச்...................-செவி வாய் ஆக நெஞ்சு களன் ஆக (நன்னூல், பொதுப்பாயிரம், 5. பாடம் கேட்டலின் வரலாறு, பொருள்: பசித்து உண்பவனுக்கு உணவின் இடத்துள்ள ஆசை போலப் பாடங் கேட்டலில் ஆசையுடையவனாகி,.............. காதானது வாயாகவும் மனமானது கொள்ளும் இடமாகவும்...) என்று நன்னூல் 'செவிவழி உண்பது' பற்றிக் குறித்துள்ளது.
செவி உணவையே ஒருவன் மிகையாகத் தேடல் வேண்டும் என்பதுவும் கேள்விச் செல்வத்தை வளர்த்து கொள்வது தொடர்ந்து நிகழ வேண்டிய ஒன்று என்பதுவும் இனிய நடையில் இக்குறளில் கூறப்பட்டன.

பெருக உண்ணும் ஒருவன் கேள்வியை விரும்பாது காம நுகர்ச்சியையே விரும்புவானாதலாலும், அளவறிந்து உண்ணாமல் போனால் நோயும் பெருகும் (அளவில்லாமல் உண்பவன் நோயுறுவான் என்று 'மருந்து' அதிகாரத்தில் கூறப்பட்டது) என்பதாலும், வயிற்றுக்குக் கொடுக்கப்படும் உணவு 'சிறிது' எனக் கூறப்பட்டது. எந்த வேளையும் வயிற்றை நிரப்புவதையே எண்ணுபவனது உடல் மீண்டும் மீண்டும் பசி எடுப்பதால், உண்பதற்காகவே அவன் அலைந்து திரிவான். அவனுக்கு மற்ற நல்ல செயல்களில் ஈடுபாடு குறைவாகவே இருக்கும்.
நீதிநெறி விளக்கமும் சிறுக ஏன் உண்ணவேண்டும் என்பதற்கான காரணங்களை இவ்விதம் சொல்கிறது:
துயிற்சுவையும் தூநல்லார் தோட்சுவையும் எல்லாம்
அயிற் சுவையின் ஆகுவவென் றெண்ணி - அயிற்சுவையும்
பித்துணாக் கொள்பபோற் கொள்ப பிறர்சிலர்போல்
மொத்துணா மொய்ம்பி னவர்
(நீதி நெறி விளக்கம், 86. பொருள்: வேறு சிலர் போல, ஐம்புல இன்பங்களால் அடிபடாத தவவலிமையுடையோர், தூக்கத்தின் இன்பமும், அழகிய பெண்களது தோளைத் தழுவும் இன்பமும், மற்றுமுள்ள எல்லா இன்பங்களும், உண்டி யினாலுண்டாகும் இன்பத்தால், வருவன என்று நினைத்து, அவ்வுண்டி கொள்ளுதலையும், மிகச்சிறுகவே உண்பார்கள்.)
அளவோடு உண்ணவேண்டும் என்பதும் இக்குறளில் அறிவுறுத்தப்படுவது காணலாம்.

'ஈயப்படும்' என்றதற்குக் 'கொடுக்கத்தகும்' அதாவது கொடுக்கலாம் என்றும், 'இடப்படும்' அதாவது 'கொடுக்கப்பட வேண்டும்' என்றும் இருதிறமாகப் பொருள் கொள்ளப்பட்டது.
'ஈயப்படும்' என்பது உண்பவனது வயிற்றின் இழிவு தோன்றுமாறு கூறப்பட்டது என்பர் உரையாசியர்கள்.

கேள்வியுடைத்தலுக்கும் வயிற்றுணவுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

சுவையான கேள்விப்பொருள்களைச் செவிமடுக்கும்போது பசிகூடத் தெரிவதில்லை. கேட்டலை விரும்புவோர் செவிக்கு நல்லுணவில்லாதபோதுதான் வயிற்றிற்காக உண்ண நினைப்பர். கேட்பதற்கு ஒன்றும் இல்லாமல் போய்விட்டதே என்ற வருத்தத்தில் விருப்பமில்லாமலே பசியாற்றியே தீரவேண்டுவதால் உணவருந்தத் தொடங்குவர். சிறிது வயிற்றுக்குக் கொடுத்தபின் மீண்டும் கேட்டலைத் தொடர்வர். இவ்வாறு கேள்வி அறிவை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வளர்த்துக் கொள்பவர்கள், வயிற்றுணவு அருந்தும்போது கேட்டறிந்த செய்திகளை அசை போட்டுச் சிந்திக்கவும் செய்வர்.

கேள்வி உள்ளபொழுது உணவு வெறுக்கப்படுதலான் 'இல்லாத போழ்து' என்று சொல்லப்பட்டது என்று கேள்வி இல்லாத பொழுதை விளக்குவார் பரிமேலழகர். இன்று வானொலி, தொலைக்காட்சி, ஒலித்தட்டு, கணிணி போன்றவற்றின் வழிச் செவிச்சுவையை உணர்ந்துகொண்டே வயிற்றுணவையும் துய்க்க முடிகிறது அதாவது செவிக்கும் வயிற்றுக்கும் உணவு ஒரே நேரத்தில் பெறமுடிகிறது.

செவிக்கு உணவாகிய கேள்வியறிவிற்கு இடமில்லாத பொழுது வயிற்றுக்கும் கொஞ்சம் உணவு கொடுக்கலாம் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கேள்விச்சுவையில் ஆழ்ந்துவிட்டால் பசியும் பறந்து போகும்.

பொழிப்பு

செவிக்கு உணவாகிய கேள்வி இல்லாதபோது வயிற்றுக்குக் கொஞ்சம் உணவு அளிக்கலாம்.