செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை
(அதிகாரம்:கேள்வி
குறள் எண்:411)
பொழிப்பு மு வரதராசன்): செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும்; அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.
|
மணக்குடவர் உரை:
.................................................................
பரிமேலழகர் உரை:
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் - ஒருவருக்குச் சிறப்புடைய செல்வமானது செவியான் வரும் செல்வம், அச்செல்வம் செல்வத்துள் எல்லாம்
தலை - அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றினும் தலையாகலான்.
( செவியான் வரும் செல்வம் - கேள்வியால் எல்லாப் பொருளையும் அறிதல். பிற செல்வங்கள் - பொருளால் வருவன. அவை நிலையா ஆகலானும்,
துன்பவிளைவின ஆகலானும், இது தலையாயிற்று. அவற்றை ஒழித்து இதனையே செய்க என்பது குறிப்பெச்சம்.)
இரா சாரங்கபாணி உரை:
ஒருவனுக்குச் சிறந்த செல்வமாவது கேள்வியால் வரும் செல்வம். அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானது.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்; அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.
பதவுரை:
செல்வத்துள்-செல்வங்கள் பலவற்றுள்ளும்; செல்வம்-பொருள்மிகுதி; செவிச்செல்வம்-கேள்விச் செல்வம்; அச்செல்வம்-அந்தச் செல்வம்; செல்வத்துள்-செல்வங்கள் பலவற்றுள்ளும்; எல்லாம்-அனைத்தும்; தலை-முதன்மை.
|
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: செல்வத்துள் வைத்துச் செல்வமாவது செவியுணர்வுடைமையாகிய செல்வம்;
பரிதி: செல்வமாவது செவி, மெய், வாய், கண், மூக்கு இவற்றுள் செவியான் விளையும் உணர்வு பெரியது;
காலிங்கர்: உலகத்துச் செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்த செல்வம் யாதெனின், செவிச்செல்வம்;
பரிமேலழகர்: ஒருவருக்குச் சிறப்புடைய செல்வமானது செவியான் வரும் செல்வம்;
பரிமேலழகர் குறிப்புரை: செவியான் வரும் செல்வம் - கேள்வியால் எல்லாப் பொருளையும் அறிதல்.
பழம் ஆசிரியர்கள் 'ஒருவருக்குச் சிறப்புடைய செல்வமானது செவியான் வரும் செல்வம்' என்ற பொருளில் உரை நல்கினர். பரிதி ஐம்புலன்களினும் செவியால் விளையும் உணர்வு பெரியது என்கிறார்.
இன்றைய ஆசிரியர்கள் 'செல்வத்திற் சிறந்தது கேள்விச் செல்வம்', 'சிறப்புடைய செல்வம் செவியாற்பெறும் அறிவாகிய செல்வம்', 'ஒருவர்க்குச் செல்வங்களுள் எல்லாம் மேம்பட்ட செல்வமாகக் கருதப்படுவது செவியால் வரும் செல்வம்', 'ஒருவனுக்குச் சிறந்த செல்வமாவது கேள்வியால் வரும் செல்வம்' என்றபடி உரை கூறினர்.
செல்வத்தில் சிறந்தது கேள்விச் செல்வம் என்பது இத்தொடரின் பொருள்.
அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: பயன்படுமிடத்து மற்றுள்ள செல்வம் எல்லாவற்றினும் தலையாம் ஆதலான் என்றவாறு.
பரிதி: அஃது எட்டு வகைச் செல்வத்திலும் பெரியது என்றவாறு.
காலிங்கர்: ஆதலான், ஒருவன் கேட்பவற்றுள் தனது செவியினான் மறுமைக்கு ஆக்கம் இனிதுறக்கேட்கும் கேள்வியே தலைச்செல்வம் என்றவாறு.
பரிமேலழகர்: அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றினும் தலையாகலான்.
பரிமேலழகர் விரிவுரை: பிற செல்வங்கள் - பொருளால் வருவன. அவை நிலையா ஆகலானும், துன்பவிளைவின ஆகலானும், இது தலையாயிற்று.
அவற்றை ஒழித்து இதனையே செய்க என்பது குறிப்பெச்சம்.
பழைய ஆசிரியர்கள் அனைவரும் செல்வம் எல்லாவற்றிலும் தலையானது செவிசெல்வம் என்ற பொருளில் உரை நல்கினர். பரிப்பெருமாள்
'பயன்படுமிடத்து' அது தலையாம் என்கிறார். பரிதி எட்டு வகைச் செல்வத்திலும் பெரிது என்பார். அவர் குறிப்பிடும் எட்டு செல்வங்கள்: தனம், தானியம்,
தைரியம், வீரம், வித்தை, கீர்த்தி, விசயம், அரசு என்பன. காலிங்கர் உரை ஆன்மீகக் கருத்துக் கொண்டது. பரிமேலழகர் பொருளால் வரும் பிற
செல்வங்கள் நிலையாதவை; துன்பம் விளைவிப்பவை. எனவே செவிசெல்வம் தலையாயிற்று என்று விரித்துரைப்பார்.
இன்றைய ஆசிரியர்கள் 'அச்செல்வம் எச்செல்வத்தினும் மேலானது', 'அச்செல்வம் பிற எல்லாச் செல்வங்களிலும் முதன்மையானது', 'அந்தச் செல்வம் பிற செல்வங்களைவிட மிக உயர்ந்ததாகும்', 'அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானது' என்றபடி உரை தந்தனர்.
அச்செல்வம் பிற எல்லாச் செல்வங்களிலும் மேலானது என்பது இத்தொடரின் பொருள்.
|
நிறையுரை:
செல்வத்தில் சிறந்தது கேள்விச் செல்வம்; அச்செல்வம் பிற எல்லாச் செல்வங்களிலும் தலையாயது என்பது பாடலின் பொருள்.
செவிச்செல்வம் ஏன் தலையாயது எனப்படுகிறது?
|
கேள்வி அறிவு பெறுவதே எல்லாச் செல்வங்களிலும் முதன்மையானது என்கிறது இக்குறட்பா.
செவிச்செல்வம் என்பது கேட்டு அறிந்துகொள்வதால் பெறக்கூடிய அறிவுச் செல்வம் குறித்தது. தலை என்றது சிறந்தது அல்லது முதன்மையானது எனப்பொருள்படும்.
செல்வத்துள் செல்வம் என்ற தொடர்க்குச் சிறந்த செல்வம் என்பது பொருள். துன்பத்துள் துன்பம்(குறள் 369)
என்பதற்குப் பரிமேலழகர் ஏனைத் துன்பங்கள் எல்லாம் இன்பமாக வரும் துன்பம் என நயமாக உரை கண்டார். அந்த அளவையை இங்கு பொருத்தினால் மற்றச்
செல்வங்களெல்லாம் வறுமையென்று கருதக்கூடிய அளவு செவிசெல்வம் சிறந்த செல்வம் என்ற பொருள் பெறப்படும். இன்மையுள்
இன்மை (குறள் 153) கற்றாருட் கற்றார் (குறள் 722)
'இன்பத்துள் இன்பம்' (குறள் 854) என்பனவும் இதே நடையில் அமைந்த தொடர்கள் ஆகும்.
ஒன்றைப் படித்துத் தெளிவதைவிடக் கேட்டு தெளிவது மிகுந்த பயன் அளிக்கும். அதனாலேயே செய்திகளைப் படித்து அறிந்துகொள்வதைவிட
கேட்டல் வழி மிகவும் விரைவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. முற்காலத்தில் கேள்வியால் பெறும் அறிவே பெருவழக்காக இருந்திருக்க வேண்டும்.
தொன்மங்கள், வரலாற்றுக்கதைகள் ஆகியவற்றைச் சொற்பொழிவுகள் வாயிலாக மக்களுக்குச் சொல்லிவந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.
ஒருவர் சொல்லப் பலரும் கேட்டுப் பயன்பெறும் கேள்வி அறிவு உயரியது. இன்றைய பள்ளிகளும், கல்லூரிகளும் கேள்வி அறிவின்
இன்றியமையாமையை அடிப்படையாகக் கொண்டவை. கற்றல் மட்டும் போதுமென்றால் கற்பித்தல் முறை கொண்ட கல்வி நிறுவனங்கள் தோன்றியிருக்க
வாய்ப்பில்லை. கற்பதோடு நின்றுவிடாது காது கொடுத்துக் கேட்கின்ற போதுதான் அறிவு தெளிவுபெறுகிறது. காட்சிப் பொருள் கேள்விப்பொருளாக மாறும்போது
தான் அப்பொருள் பற்றிய அறிவு முழுமையடைகிறது.
கற்றலின் கேட்டலே நன்று (பழமொழி நானூறு 5) என்கிறது பழமொழி. கேட்பதன் மூலம் நிறைந்த ஆற்றலை வளர்த்துக் கொள்ள முடியும். பலர் ஒன்றாக, ஒரு இடத்தில் குழுமியிருந்து, செவிக்கு இனிமையான, இசையோடு கூடிய நன்னெறிச் சொற்பொழிவாற்றலை கேட்பது அல்லது கேள்வி, பதில் போன்றவற்றால் உரையாடுவது இவற்றால் கேட்போரது மன இறுக்கங்கள் தளரும் என்பது அனுபவ உண்மை.
ஒவ்வொரு துறையின் நுட்பங்களையும் ஒரு தனிமனிதன் தானே முயன்று, நூற்களை ஆராய்ந்து அறிந்து கொள்வது கடினம். அந்தத் துறையை நன்கு அறிந்தவர்களிடம் கேட்டு அறிவதே சிறந்ததும் எளிய முறையும் ஆகும். இம்முறையில் காலச்செலவும் குறையும்.
இக்காரணங்களாலேயே 'செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்' என்கிறது குறள்.
|
செவிச்செல்வம் ஏன் தலையாயது எனப்படுகிறது?
முதலில் கேள்வியறிவுச் செல்வத்தைச் 'செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்' என்று சிறப்பிக்கிறது இப்பாடல். அதன்பின் கேள்வியறிவுச் செல்வம்-மற்ற எல்லாச் செல்வங்களை விட உயர்ந்தது என்பதை வலியுறுத்த 'அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை' எனச் சொல்கிறது. கேள்விச் செல்வம் தலைமைச் சிறப்பு பெறும் அளவு மேலானதா?
நல்ல செவிச் செல்வம் கிடைக்குமானால் கோடை மழை பெய்ததைப் போல ஆன்மா செழிக்கும் என்கிறார் குன்றக்குடி அடிகளார்.
பல பரிமாணங்களில், பின்புலங்களில், அறிஞர்கள் விளக்கிச் சொல்லும் பற்பல செய்திகளைச் செவிவழியாக உள் ஈர்த்து மனத்தில் கேள்வி இன்பமாகச் சுவைத்துப் பயன் பெறுதல் நன்மை பயக்கும்.
கல்வியின் மூலம் அறிவு பெற நூல்களைக் கற்கின்றோம். நூலாசிரியன் காலமும் வாழ்கின்ற நமது காலமும் மாறுபட்டன. ஆதலால் நூல்கள்
நடைமுறை வாழ்க்கைக்கு ஓரளவுதான் துணை செய்ய முடியும். ஆனால் கற்பித்தல் வழி கல்வி என்று வரும்போது காதால் கேட்டல் என்பதும் கூட வருகிறது.
கற்பிப்பவர் அவரது காலத்திலேயே அந்நூல் பற்றிக் பலநூல்களைக் கற்றவராகவும் அனுபவங்களைப் பெற்றவராகவும் இருப்பார். அவர் சொல்வதைக் கேட்பது நூல்கள் கற்கும் முயற்சியினும் எளிதானது.
மேலும் அனைத்துத் துறைக் கருத்துக்களையும் அதன் வளர்ச்சியையும் ஒருவர் கற்பதனால் மட்டுமே அறிய முடியாது. கேள்வி அறிவு இங்கு உதவிக்கு
வருகிறது. அறிவுத் துறை பெருகப் பெருக, மனிதனுக்கு ஓய்வு குறையக் குறைய கேள்வியின் பயன் வளர்ந்துகொண்டே செல்லும். கல்லாதவர்க்கும்
கற்றவர்க்கும் ஒருசேரப் பயனளிப்பது கேள்விச் செல்வமேயாகும். நமக்குச் சிறுதும் தெரியாத துறையைப் பற்றிய கருத்துக்களைத் தெரிந்து கொள்வதற்குக்
கேள்வி பெரிதும் பயன்படுகிறது.
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்(குறள் 241) என்று அருட்செல்வமும் 'செல்வத்துள் செல்வம்' எனவும் குறள் கூறுகிறதே?
பல செல்வங்களைப்பற்றிக் குறள் பேசுகிறது. பொருட்செல்வம் தவிர பணிவு (அடக்கம்) (குறள் 125), அருள் (குறள் 241), வேண்டாமை (குறள் 363) கல்வி (குறள் 400), ஊக்கம் (குறள் 592), என்பனவும் செல்வங்களாகக் குறளில் சிறப்பிக்கப்பட்டுள்ளன. 'செல்வத்துள் செல்வம்' என்ற ஒரே சொற்றொடர் கொண்டு பண்பு பாராட்டியதால் அருட்செல்வம், செவிச்செல்வம் இரண்டும் ஒரே தளத்தில் நிறுத்தப்படுகின்றன. ஆயினும் 'செல்வத்துள் எல்லாம் தலை' என்ற ஈற்றடி மூலம் வள்ளுவர் தலைமைச் சிறப்பு செவிச்செல்வத்துக்கே தந்துள்ளார் வள்ளுவர்.
பொருளான் வரும் பிற செல்வங்கள் நிலையற்றவை ஆதலாலும், துன்பம்விளைவிப்பன ஆதலாலும், செவிச்செல்வம் தலையாயிற்று' என்று விளக்கி
பிற செல்வங்களை விடுத்துக் கேள்விச் செல்வத்தையே பெறுக என்பது குறிப்பால் உணரப்பட்டது என்று பரிமேலழகர் இக்குறளுக்கான சிறப்புரையில் கூறுகிறார்.
கல்வியும் கேள்வியும் சேர்ந்ததே அறிவுச்செல்வம். ஒருவரது கல்வியாலாகிய அறிவைப் பெருக்கி உறுதிப்படுத்துவது கேள்விச் செல்வமாம். கல்லாதார்க்குக் கல்வியறிவைப் புதிதாக உண்டாக்குவது கேள்விச் செல்வம். கல்வியைக் 'கேடில் விழுச்செல்வம்' எனக் குறள் குறிக்கும், கேள்வியைத் 'தலைச்செல்வம்' எனக் குறிப்பட்டதால் கல்வியினும் கேள்வியே உயர்ந்த செல்வம் என வள்ளுவர் கருதுகிறார். உழைத்தும் பயின்றும் பெறும் கல்விச்செல்வம் பொருட்செல்வங்களைக் காட்டிலும், இருந்து எளிதிற் கொள்ளும் செவிச் செல்வம் சிறந்தது என்பார் ச தண்டபாணி தேசிகர்.
|
செல்வத்தில் சிறந்தது கேள்விச் செல்வம்; அச்செல்வம் பிற எல்லாச் செல்வங்களிலும் மேலானது என்பது இக்குறட்கருத்து.
கேள்வி அறிவே முதன்மையான செல்வம்.
செல்வத்திற் சிறந்தது கேள்விச் செல்வம்; அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானது.
|