இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0399தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்

(அதிகாரம்:கல்வி குறள் எண்:399)

பொழிப்பு (மு வரதராசன்): தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக்கல்வியையே) விரும்புவர்.

மணக்குடவர் உரை: தாம் இனிதாக நுகர்வதொன்றை உலகத்தார் நுகர்ந்து இன்புறுவாராகக் கண்டால் அதற்கு இன்புறுவர் கற்றறிந்தவர்.
இஃது அழுக்காறு செய்யாது இன்புறுதல் அறமாதலின் அது கல்வியானே வருமென்றது.

பரிமேலழகர் உரை: தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு - தாம் இன்புறுதற்கு ஏதுவாகிய கல்விக்கு உலகம் இன்புறுதலால் அச்சிறப்பு நோக்கி, கற்றறிந்தார் காமுறுவர் - கற்றறிந்தார் பின்னும் அதனையே விரும்புவர்.
(தாம் இன்புறுதலானது, நிகழ்வின் கண் சொற்பொருள்களின் சுவை நுகர்வானும், புகழ் பொருள் பூசை பெறுதலானும், எதிர்வின்கண் அறம் வீடு பயத்தலானும், அதனான் இடையறாத இன்பம் எய்துதல். உலகு இன்புறுதலாவது: 'இம்மிக்காரோடு தலைப்பெய்து அறியாதன எல்லாம் அறியப்பெற்றோம்' என்றும் 'யாண்டு பலவாக நரையில மாயினேம்' (புறநா. 191) என்றும் உவத்தல். செல்வமாயின், ஈட்டல் காத்தல் இழத்தல் என்ற இவற்றான் துன்புறுதலும், பலரையும் பகை யாக்கலும் உடைத்து என அறிந்து, அதனைக் காமுறாமையின் 'கற்றறிந்தார்' என்றும், கரும்பு அயிறற்குக் கூலிபோலத்தாம் இன்புறுதற்கு உலகு இன்புறுதல் பிறவாற்றான் இன்மையின் அதனையே காமுறுவர் என்றும் கூறினார்.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: படித்தவர்கள் தமது கல்வியின் பயனை உலகம் பெற்று மகிழ்வதைக் கண்டு தாம் இன்பமடைதலை விரும்புவர். (அல்லது தாம் இன்பமடைவதற்கு ஏதுவாகிய கல்வியை உலகத்தார் அறிந்து மகிழ்வது கண்டு, கற்றவர்கள் அக்கல்வியை மேன்மேலும் விரும்புவர்.)


பொருள்கோள் வரிஅமைப்பு:
தாம் இன்புறுவது உலகு இன்புறக்கண்டு கற்றறிந்தார் காமுறுவர்.

பதவுரை:
தாம்-தாங்கள்; இன்புறுவது-மகிழ்ச்சி அடைவது; உலகு-உலகம்; இன்புறக்கண்டு-இன்பம் எய்துவது உணர்ந்து; காமுறுவர்-மிகுந்த காதல் கொள்வர், மேன்மேலும் விரும்புவர்; கற்றுஅறிந்தார்-கல்வி அறிவு பெற்றார்.


தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாம் இனிதாக நுகர்வதொன்றை உலகத்தார் நுகர்ந்து இன்புறுவாராகக் கண்டால்;
பரிப்பெருமாள்: தாம் இன்புறுதற்கு ஏதுவாகிய கல்வியை உலகம் நுகர்ந்து இன்புறுதல் கண்டால்;
பரிதி: தங்கள் கல்வியைத் தாங்கள் மகிழ்ந்ததுபோல்; உலகம் மகிழ்வது கண்டு;
காலிங்கர்: தாம் கசடறக் கற்று உணர்ந்த கல்வியானது கொண்டு, எல்லாவற்றானும் தான் இன்புறுவதல்லது, தமக்கு உளதாய கல்வியைக் குறித்து உலகத்தார் யாவரும் தமது உள்ளத்தால் பெரிதும் இன்புறக்கண்டு;
பரிமேலழகர்: தாம் இன்புறுதற்கு ஏதுவாகிய கல்விக்கு உலகம் இன்புறுதலால் அச்சிறப்பு நோக்கி;
பரிமேலழகர் விரிவுரை: தாம் இன்புறுதலானது, நிகழ்வின் கண் சொற்பொருள்களின் சுவை நுகர்வானும், புகழ் பொருள் பூசை பெறுதலானும், எதிர்வின்கண் அறம் வீடு பயத்தலானும், அதனான் இடையறாத இன்பம் எய்துதல். உலகு இன்புறுதலாவது: 'இம்மிக்காரோடு தலைப்பெய்து அறியாதன எல்லாம் அறியப்பெற்றோம்' என்றும் 'யாண்டு பலவாக நரையில மாயினேம்' (புறநா. 191) என்றும் உவத்தல்.

'தங்கள் கல்வியைத் தாங்கள் மகிழ்ந்ததுபோல், உலகம் மகிழ்வது கண்டு' என்ற பொருளிலே இப்பகுதிக்குப் பழம் உரையாசிரியர்கள் உரை கண்டனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தன்னின்பம் உலக இன்பம் ஆதலின்', 'தாம் இன்பமடைவதற்குக் காரணமான கல்வியை உலகோர் கேட்டு இன்புறுதல் கண்டு', 'கற்க வேண்டியதைக் கற்று அறிய வேண்டியதை அறிந்தவர்கள்', 'தாம் இன்பம் அடைகின்ற கல்வியால் உலகமும் இன்பம் அடைகிறதைக் கண்டு' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கல்வியினால் தாம் இன்பம் எய்துவதுபோல உலகமும் இன்பம் அடைகிறதைக் கண்டு என்பது இப்பகுதியின் பொருள்.

காமுறுவர் கற்றறிந் தார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதற்கு இன்புறுவர் கற்றறிந்தவர்.
மணக்குடவர் கருத்துரை: இஃது அழுக்காறு செய்யாது இன்புறுதல் அறமாதலின் அது கல்வியானே வருமென்றது.
பரிப்பெருமாள்: அதற்கு இன்புறுவர் கற்றறிந்தவர்கள்.
பரிப்பெருமாள் கருத்துரை: அழுக்காறு செய்யாது இன்புறுதல் அறமாதலின் அதுவும் கல்வியானே வருமென்றது.
பரிதி: மேன்மேலேயே கற்பார், கல்வியின் மிக்கார்.
காலிங்கர்: பின்னும் மேன்மேலும் அதனையே வற்புறுத்த ஆசைப்படுவர் மாசறக்கற்ற பெரியோர்.
பரிமேலழகர்: கற்றறிந்தார் பின்னும் அதனையே விரும்புவர்.
பரிமேலழகர் விரிவுரை: செல்வமாயின், ஈட்டல் காத்தல் இழத்தல் என்ற இவற்றான் துன்புறுதலும், பலரையும் பகை யாக்கலும் உடைத்து என அறிந்து, அதனைக் காமுறாமையின் 'கற்றறிந்தார்' என்றும், கரும்பு அயிறற்குக் கூலிபோலத்தாம் இன்புறுதற்கு உலகு இன்புறுதல் பிறவாற்றான் இன்மையின் அதனையே காமுறுவர் என்றும் கூறினார்.

இப்பகுதிக்கு மணக்குடவர்/பரிப்பெருமாள் 'கற்றறிந்தவர் இன்புறுவர்' என்று பொருள் கூறி 'அவர்கள் அழுக்காறு கொள்ளாமல் இன்புறுவர்; இந்நிலை கல்வியான் வருவது' என்ற கருத்துரையும் வழங்கினர். பரிதி 'அவர்கள் மேன்மேலும் கற்பார்' என்று கூறினார். காலிங்கர் 'கற்ற பெரியோர் மேன்மேலும் வற்புறுத்த ஆசைகொள்வர்' அதாவது இன்புறுதலைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருக்க என்று உரை வரைவார். பரிமேலழகர் 'கற்றவர் அதனையே விரும்புவர்' என்று சொல்லி செல்வத்துடன் கல்வியை ஒப்பு நோக்கி விளக்கம் தருவார்.

இன்றைய ஆசிரியர்கள் 'கற்றவர் கல்வியை மேன்மேலும் காதலிப்பர்', 'கற்றறிந்த மேலோர் அக்கல்வியை மேலும் விரும்புவர்', 'தாம் பெற்ற அறிவின்பங்களை உலகிலுள்ள எல்லாரும் அடையும்படி பிறருக்கும் கொடுத்து மகிழ்வார்கள்', 'கற்றறிந்தவர்கள் மேலும் அதனையே விரும்புவார்கள்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

கற்றவர் மேன்மேலும் காமுறுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தாம் இன்பம் எய்துவதுபோல உலகமும் இன்பம் அடைகிறதைக் கண்டு, கற்றவர் மேன்மேலும் காமுறுவர் என்பது பாடலின் பொருள்.
'காமுறுவர்' குறிப்பது என்ன?

கல்வியாளர்கள் மேன்மேலும் கற்றலைக் காதலிக்கிறார்கள்.

கற்றறிந்தவர்கள் தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்பமடையக் கண்டு, அக்கல்வியை மேன்மேலும் விரும்புவர்.
கற்றறிந்தார் எதனால் இன்பம் அடைகின்றனர் என்பதற்கு வெளிப்படையாகக் குறிப்பு இப்பாடலில் இல்லை. அதிகார இயைபு கருதியும் கற்றறிந்தார் என்ற சொல்லாட்சியாலும் அது கல்வியால் பெற்ற இன்பம் எனக் கூறினர்.
இக்குறளில் கூறப்பட்டுள்ள கற்றறிந்தார் யார் என்பதற்கு, கற்பிப்பவர் என்றும் கல்வி பெற்றவர் என்றும் வேறுவேறு வகையாகப் பொருள் கூறுவர்.
'கல்வியாளர் அல்லது கற்பிப்பவர் தான் கற்பித்த கல்வியால் மற்றவர்கள் இன்பம் அடைவதைக் காணும்போது மேலும்மேலும் தான் கற்க வேண்டும் என்று விழைவர்' என்பதாக ஒரு சாரார் இக்குறட்பொருளை விளக்குவர். 'கற்றவர்கள் தாங்கள் கற்றதைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதால் உண்டாகும் மகிழ்வினால் கல்வியை மேலும் தொடர வேண்டும் என்று விரும்புவர்' என்பது பற்றிய பாடலாக மற்றொரு சாரார் கொள்வர். 'தான் பெற்ற பேறு பெறுக இவ்வையகம் என்று ஆர்வத்துடன் மற்றவர்களுடன் அக்கல்விப் பயனைப் பகிர்ந்து கொள்வர்; உலகத்திலுள்ள எல்லாரும் இன்புற்று வாழ வேண்டுமென்று விரும்பக் கற்றுக் கொள்வதே கல்வியின் நோக்கம்' என்று சொல்வர் இன்னொரு வகையினர். தங்கள் பெற்ற கல்வி அறிவு கண்டு தாங்கள் இன்பமாக இருப்பதை உணர்வதுபோல உலகமும் இவர்கள் கல்வி கண்டு மகிழுமாயின் அதனைக் கண்டு தாமும் மகிழ்ந்து மேன்மேலும் அத்தகைய கல்வியைக் கற்பார்கள் என்பது பெரும்பான்மையினர் கருத்து.
இப்பாடலைக் கற்றவர் பற்றியது என்று கொள்வதைவிடக் கற்பிப்பவர் பற்றியதாகக் கொள்வது பொருத்தமாகும். பாடம் பயிற்றுவிக்கும் போது ஒரு கருத்தின் இனிய சுவையை பயிற்றுவிப்பவர் எவ்வாறு உணருகின்றாரோ, அதே இன்பத்தைக் கற்பவர்கள் உணருகின்ற வகையில் அதைப் பயிற்றுவித்தல் செம்மையான பயன் நல்கும். கற்பிப்பவர் தான் பெற்ற கல்வியால் முதலில் இன்பம் அடைவர். தான் சுவைத்து இன்பம் துய்த்ததை அறிந்தவன் என்பதால் அதைப் பிறர்க்கு ஊட்டி அவர்களும் இன்பம் அடையவேண்டும் என்று விழைவர்; இவ்விதம் தான் கற்பித்ததால் மற்றவர் இன்பம் எய்தியதைக் காண்பர். அதனால் ஊக்கம் பெற்றும் அதே நிலையைத் தொடர்ந்து கொள்ள வேண்டும் என்ற விருப்புடனும் கல்வியின் மேல் இன்னும் காமம் கொண்டு மேலும் மேலும் கற்பார்கள்.

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் .... [[ஈகை குறள் 228] (பொருள்:வறியவர்களுக்கு வேண்டியன கொடுத்து அவர்கள மகிழ்வதைக் கண்டு இன்பமடைவதை அறியார்கள போலும்........) )என்ற குறட்பாவையும் யாம்பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்”... என்ற திருமந்திரப்பாடலையும் இப்பாடலுடன் ஒப்பு நோக்குவர்.

'காமுறுவர்' குறிப்பது என்ன?

காமுறுவர் என்பதற்கு மிகையாகக் காதல் கொள்வர் என்பது பொருள்.
காலிங்கர் இச்சொற்பொருளுக்கு உரை செய்யும்போது 'தமக்கு உளதாய கல்வியைக் குறித்து உலகத்தார் யாவரும் தமது உள்ளத்தால் பெரிதும் இன்புறக்கண்டு பின்னும் மேன்மேலும் அதனையே வற்புறுத்த ஆசைப்படுவர்' என்றார். இதில் காணப்படும் ''மேலும் அதனையே வற்புறுத்த ஆசைப்படுவர்'' என்ற தொடர்க்கு தாம் இன்புறுதலைக்கண்டு அவர்களும் இன்புறுதலைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருக்கக் கல்வியின் மேல் காமுறுவர் என்பது பொருள்.
கல்வியால் தாம் அடையும் மகிழ்ச்சியே உலகினர்க்கும் மகிழ்ச்சியாகிறது. உலகமும் அதை மகிழ்ந்து வரவேற்பதைக் கண்டு தன்னலம் மறந்து பிறர் நலம் வேண்டியே கல்வியாளர்கள் கல்வியில் ஈடுபட்டுக் களிக்கின்றார்கள்.(தெ பொ மீ).

ஒரு படைப்பாளி தன்னுடைய படைப்புகளை நுகர்வோர் கண்டு மகிழும்போது தானும் இன்பமடைவான். அவ்வின்பத்தால் எழுச்சி பெற்று மேலும் மேலும் புதிய படைப்புகளைத் தருவான். அதுபோலக் கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர் தம்மிடம் கற்றவர்கள் பயனடைந்து இன்புறுவதைக் கண்டு மேலும் ஊக்கமும் பெற்று தாம் முன் கற்றதனோடு நிற்காது மேலும் மேலும் கற்றலை விரும்புவர்.

'காமுறுவர்' என்ற சொல் மேன்மேலும் விரும்புவர் என்ற பொருளில் ஆளப்பட்டது.

தாம் இன்பம் எய்துவதுபோல உலகமும் இன்பம் அடைகிறதைக் கண்டு, கற்றவர் மேன்மேலும் காமுறுவர் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கல்வி பெறுதலும் தருதலும் இன்பம் தருவன.

பொழிப்பு

கற்றறிந்தவர் தாம் இனிதாக உணர்ந்ததை உலகத்தாரும் நுகர்ந்து இன்புறுவதைக் கண்டால் அதன்மேல் மேலும் காதல் கொள்வர்.