இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0398ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து

(அதிகாரம்:கல்வி குறள் எண்:398)

பொழிப்பு (மு வரதராசன்): ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் ஒருவனுக்கு எழுபிறப்பிலும் உதவும் தன்மையுடையதாகும்.

மணக்குடவர் உரை: ஒருவனுக்கு ஒரு பிறப்பிலே கற்ற கல்வி தானே எழுபிறப்பினும் ஏமமாதலை யுடைத்து.
கற்ற கல்வி தானென்று கூட்டுக. இது வாசனை தொடர்ந்து நன்னெறிக்கண் உய்க்குமென்றது.

பரிமேலழகர் உரை: ஒருவற்கு - ஒருவனுக்கு, தான் ஒருமைக்கண் கற்ற கல்வி - தான் ஒரு பிறப்பின்கண் கற்ற கல்வி, எழுமையும் ஏமாப்பு உடைத்து - எழுபிறப்பினும் சென்று உதவுதலை உடைத்து.
(வினைகள்போல உயிரின்கண் கிடந்து அது புக்குழிப் புகும் ஆகலின், 'எழுமையும் ஏமாப்பு உடைத்து' என்றார். எழுமை - மேலே கூறப்பட்டது(குறள் 62). உதவுதல் - நன்னெறிக்கண் உய்த்தல்.)

சி இலக்குவனார் உரை: நன்கு கருத்தைச் செலுத்தி உள ஒருமைப்பாட்டோடு கற்ற கல்வி ஒருவர்க்கு மிகுதியும் வலிமை ஆதலை உடையது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒருவற்கு தான் ஒருமைக்கண் கற்ற கல்வி எழுமையும் ஏமாப்பு உடைத்து.

பதவுரை:
ஒருமைக்கண்-ஒருமைப்பாட்டுடன்; தான்-தான்; கற்றகல்வி-கற்றுத் தேர்ந்த அறிவு; ஒருவற்கு-ஒருவர்க்கு; எழுமையும்-பல காலம்; ஏமாப்பு-பாதுகாப்பு, உதவுதல்; உடைத்து-உடையது.


ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவனுக்கு ஒரு பிறப்பிலே கற்ற கல்வி தானே;
மணக்குடவர் குறிப்புரை: கற்ற கல்வி தானென்று கூட்டுக.
பரிப்பெருமாள்: ஒருவற்கு ஒரு பிறப்பிற் கற்ற கல்வி தானே;
பரிப்பெருமாள் குறிப்புரை: கற்ற கல்வி தான் என்று கூட்டுக.
பரிதி: ஒரு பிறப்பிலே கற்ற கல்வி;
காலிங்கர்: ஒரு பிறப்பின்கண் நல்வழிக்கு உரிய கல்விகளைத் தன் நெஞ்சத்து ஒருப்பாட்டுடனே தான் கற்ற கல்வியானது அங்ஙனம் கற்ற இணையிறந்த இறைவற்கு இம்மைக்கண் உளதாய் நீதிப் பொருளாகிய இன்ப உறுதியே அன்றி;
பரிமேலழகர்: ஒருவனுக்கு தான் ஒரு பிறப்பின்கண் கற்ற கல்வி;

'ஒருவன் ஒரு பிறப்பிலே கற்ற கல்வி' என்று பழம் ஆசிரியர்கள் அனைவரும் இப்பகுதிக்குப் பொருள் கூறினர். மணக்குடவர்/பரிப்பெருமாள் 'கற்ற கல்வி தான்' என்று கொள்ள காலிங்கரும் பரிமேலழகரும் 'தான் கற்ற கல்வி' என்று உரை செய்தனர். காலிங்கர் 'தன் நெஞ்சத்து ஒருப்பாட்டுடனே தான் கற்ற கல்வி' என்றும் 'அங்ஙனம் கற்ற அரசற்கு இம்மைக்கண் உளதாகிய நீதியாகிய இன்பப் பொருளாகிய உறுதியேயன்றி' என்று கூட்டியும் உரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒரு பிறப்பில் படித்த படிப்பு ஒருவர்க்கு', 'ஒரு பிறவியில் தான் கற்ற கல்வி ஒருவனுக்கு', 'ஒரு பிறப்பில் கற்றுக்கொள்ளும் நல்லறிவு', 'ஒரு பிறப்பில் ஒருவன் கற்றுப் பெற்ற அறிவு', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒருமனப்பட்டு ஒருவன் கற்ற கல்வி அறிவு என்பது இப்பகுதியின் பொருள்.

எழுமையும் ஏமாப்பு உடைத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எழுபிறப்பினும் ஏமமாதலை யுடைத்து.
மணக்குடவர் குறிப்புரை: இது வாசனை தொடர்ந்து நன்னெறிக்கண் உய்க்குமென்றது.
பரிப்பெருமாள்: எழுபிறப்பின் கண்ணும் காவல் ஆதலை யுடைத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வாசனை தொடர்ந்து நன்னெறிக்கண் உய்க்கும் என்றது.
பரிதி: எழுபிறப்புக்கும் உதவும்.
காலிங்கர்: பின்பு நிகழும் மறுமையாகிய இனிய சேம உறுதியையும் உடைத்து என்றவாறு.
பரிமேலழகர்: எழுபிறப்பினும் சென்று உதவுதலை உடைத்து.
பரிமேலழகர் குறிப்புரை: வினைகள்போல உயிரின்கண் கிடந்து அது புக்குழிப் புகும் ஆகலின், 'எழுமையும் ஏமாப்பு உடைத்து' என்றார். எழுமை - மேலே கூறப்பட்டது (குறள் 62). உதவுதல் - நன்னெறிக்கண் உய்த்தல்.

இப்பகுதிக்குப் பழைய ஆசிரியர்களில் மணக்குடவர்/பரிப்பெருமாள் 'எழுபிறப்பினும் பாதுகாப்பு உடையது' என்று கூறி 'இது வாசனை (வாசனாமலம்) தொடர்ந்து நன்னெறிக்கண உய்க்கும் என்ற சமயம் சார்ந்த கருத்துரை வழங்கினர். பரிதியும் பரிமேலழகரும் 'எழு பிறப்புக்கும் உதவும்' என்றனர். பரிமேலழகர் விரிவுரையில் 'வினை உயிரைத் தொடர்ந்து செல்வதுபோல் கல்வியும் உயிருடன் தொடரும்' என்று சமயவழிநின்று உரை தருகிறார். காலிங்கர் உரை மாறுபாடானது.

இன்றைய ஆசிரியர்கள் ' எழுபிறப்பிலும் வந்து உதவும்', 'ஏழு பிறப்பிலும் தொடர்ந்து உதவும்', ' இனி வரக்கூடிய ஏழு பிறவிகளுக்கும் பாதுகாப்பளிக்கும்', 'அவனுக்கு எழுவகைப் பிறப்பினுஞ் சென்று பாதுகாக்குஞ் சிறப்பினை உடையது.' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

பல காலங்களிலும் பாதுகாவலை அளிக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒருமையிற் கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமையிலும் வந்து உதவும் என்பது பாடலின் பொருள்.
ஒருமை - எழுமை குறிப்பன எவை?

இன்று ஈடுபாட்டுடன் கற்ற கல்வி காலங்காலத்திற்கும் பாதுகாப்பாக நின்று உதவும்.

ஒருவர் மன ஒருமைப்பாட்டோடு கற்ற கல்வி அவருக்கு பல காலத்துக்கும் காக்கும் வைப்பாக அமையும்.
ஒரு பிறவியில் கற்ற கல்வி பல பிறவிகளுக்கு உதவும் என்பதாக இக்குறளுக்குப் பெரும்பான்மை உரையாளர்கள் பொருள் கொள்வர். கல்வியால் பெற்ற அறிவு ஏழு பிறவிகள் வரைக்கும் அவனுடைய உயிரோடு கலந்திருந்து அவனுடைய வாழ்விற்கு உதவும் என்பது உட்கருத்து எனவும் அவர்கள் சொல்வர். இவை மிகஎளிமையாக்கப்பட்ட உரைகளாகத் தோன்றுகின்றன. அடுத்தபிறவியான மனிதப் பிறவிக்கோ மாந்தரற்ற மற்றப் பிறவிக்கோ எப்படிக் கல்வியை எடுத்துச் செல்லமுடியும்? பல்பிறவி/மறுபிறவி பற்றிச் சில நேரங்களில் வள்ளுவர் பேசித்தான் இருக்கிறார். ஆனால் கல்வியின் மேன்மை சொல்ல வந்தவர் இவ்விதம் கல்வி பிறவி தோறும் தொடந்து செல்லும் என்று பொருள் புலனாகாத வகையில் கூறியிருப்பாரா?
கல்வி உயிருடன் தொடரும் என்பது 'கல்வி' என்னும் அதிகாரத்திற்கே முரண்பட்டதாகும்' என்று கூறும் குறளுரையாசிரியர் குழந்தை 'அப்படி இருக்குமானால் ஒரு பிறவியில் படித்தால் போதுமே; அது அடுத்த மனிதப்பிறவிகளிலுமோ அல்லது மற்ற பிறவிகளிலுமோ தொடருமே; எல்லாப் பிறவிகளிலும் படிக்க வேண்டியதில்லையே' என்று வினவுவது சிந்திக்கத்தக்கது.
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி (மெய்யுணர்தல், 356) பொருள்: கற்க வேண்டியவற்றைக் கற்று, இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர்; மீண்டும் இப் பிறப்பிற்கு வாராத வழியை அடைவர்) என்று பிறிதோரிடத்தில் குறள் சொல்கிறது. பிறவி ஒன்று வராமல் தடுப்பது கல்வி என்று அக்குறளுக்குப் பொருள் கூறுவர். பின் அது எப்படி பல பிறவிக்கும் உதவும்? என்று பிறவிச் சுழற்சியில் நம்பிக்கை கொண்ட சமயவாதிகளே ஐயவினா எழுப்புகின்றனர்.

இக்குறளுக்கான காலிங்கர் உரை ''ஒரு பிறப்பின்கண் நல்வழிக்கு உரிய கல்விகளைத் தன் நெஞ்சத்து ஒருப்பாட்டுடனே தான் கற்ற கல்வியானது, அங்ஙனம் கற்ற இணையிறந்த இறைவற்கு இம்மைக்கண் உளதாய் நீதிப் பொருளாகிய இன்ப உறுதியே அன்றிப் பின்பு நிகழும் மறுமையாகிய இனிய சேம உறுதியையும் உடைத்து' என்கிறது. மற்றவர்கள் உரைகளினும் இவ்வுரை மாறுபாடாக உள்ளது. இந்த உரை பல பிறவிக் கொள்கையைத தவிர்க்கிறது என்பது குறிக்கத்தக்கது. மேலும் கல்வியின் பயன் மக்களுக்குச் சென்று சேர்கிறது என்பதையும் புதிய முறையில் விளக்குகிறது. ஏமாப்பு என்ற சொல்லுக்கு மற்றவர்கள் பாதுகாப்பு என்றும் உதவி என்றும் பொருள் சொல்லக் காலிங்கர் 'சேம உறுதியாதல்' அதாவது நலிந்தகாலத்து காக்கும் வைப்பு என்றார்.

ஒருமை என்பதற்கு ஒருமனப்பட்டு என்றும் ஏழு என்றது பன்மை குறித்து நின்றதே அன்றி எண் வரையறை செய்வதன்று எனவும் கொண்டால் குறட்பொருள் விளக்கம் பெறும். ஒருமனப்பட்டு பயின்ற கல்விப்பதிவு பல காலங்களுக்குத் துணை நின்று ஒருவற்கு உதவி செய்யும் என்பது இக்குறள் கூறும் செய்தி.

ஒருமை - எழுமை குறிப்பன எவை?

'ஒருமை' என்ற சொல்லுக்கு அன்றைய/இன்றைய உரையசிரியர்ககளுள் பெரும்பான்மையினர் 'ஒரு பிறப்பிலே' என்றே பொருள் கூறினர்.
சிலர் ஒருமைக்கண் தான் கற்ற கல்வி என்பதற்கு 'நன்கு கருத்தைச் செலுத்தி உள ஒருமைப்பாட்டோடு கற்ற கல்வி அதாவது கற்கவேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் வேறு எண்ணங்கள் அற்று ஒருமனதோடு கற்றலே' என்ற வகையில் பொருள் கூறினர். இன்னும் சிலர் 'ஒருமைக்கு ஓரிடத்தில் என்றும் '(மன எண்ணங்களின்) ஒருங்கிணைப்புடன் என்றும் இத்தொடர்க்குப் பொருள் கண்டனர்.
காலிங்கர் உரையில் ஒருமைக்கண் என்பதை 'ஒருமைக்கண்-ஒருமைக்கண்' என்று வாசிக்க நேரிடுகிறது. இவர், 'ஒரு பிறப்பின்கண்' என்பதுடன் 'தந்நெஞ்சத்து ஒருமைப்பாட்டுடனே' என்பதையும் இணைத்து உரை கூறுகின்றார். இவர் ஒருமை என்பதற்கு ஒருபிறப்பு, ஒருமைப்பாடுடன் என்று இருபொருளையும் கூட்டிக் கூறுகிறார்.
ஒருமைக்கண் என்றதற்கு காலிங்கர் உரைப்பகுதியில் கண்டவாறு 'தந்நெஞ்சத்து ஒருமைப்பாட்டுடன்' என்பது பொருத்தமான பொருளாகும்.

ஒருமைக்கு ஒருபிறப்பு என்று பொருள் கண்ட ஆசிரியர்கள் எழுமை என்பதற்கு ஏழு பிறப்பு என்று உரை கூறினர். ஏழு பிறப்புக்கள் எவை? பரிமேலழகரது உரையில் கூறியபடியும் சமயக் கருத்துக்கள் சொல்வனவற்றிலிருந்தும் அவை: தாவரம், நீர் வாழ்வன, ஊர்வன, பறவைகள், விலங்கு, மனிதர், தேவர் ஆகியன என்று அறிகிறோம். இதன்படி ஓர் உயிர் தன் குறைகளினின்று நீங்கி நிறைபெற்று வளர்ந்து நிலைபெற ஏழுதடவை முயற்சி செய்கிறது; படிமுறை வளர்ச்சியில் உயிர் ஓரறிவில் தொடங்கி தேவர்நிலை (ஏழாவது நிலை) எய்துதல் என்பது 'ஏழு பிறப்பு தத்துவம்'. ஏழுபிறப்புகளை ஏழு மனிதப்பிறவிகள் என்று கொள்ளலாம் என்ற கருத்தும் உண்டு. பிறவி/பிறவிச்சுழற்சிக் கோட்பாடுகளே தெளிவற்றனவாகவே உள்ளன.
சிலர் எழுபிறப்பு என்பதை எழுகின்ற பிறப்பு எனக்கொண்டு இனிமேல் தோன்றப் போகும் பிறவிகளுள் என்று உரை தருவர். இன்னும் சிலர் 'ஏழேழ் தலைமுறை' என்றும், 'எழுமை என்பது எமக்கு எழுகின்ற துன்பங்கள்' என்றும், 'பல இடங்கள்' என்றும் கூறினர். ஏழு பருவம், எழு தலைமுறை, ஏழு வகைப்பட்ட உறவினர், ஏழுமடங்கு பொருள் என்றபடியும் உரைப்பொருள்கள் உள. காலிங்கர் 'எழுமையும்' என்பதை எழுகின்ற அதாவது இனிவர இருக்கின்ற மறுமையிலும் என்று கொண்டார். காலிங்கர் இம்மை-மறுமை என்ற இருபிறப்பில் (இருமை) நம்பிக்கை உள்ளவர். இவர்க்கு மறுமை மக்கட்பிறப்பேயாம்.
'எழுமை' என்ற சொல் சங்ககால இலக்கியங்களிலும், மற்ற பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலும் பயிலப்படவில்லை என்று சொல்லும் கு ச ஆனந்தன், எழுமை என்பதற்கு 'ஏழுநிலை' அல்லது 'ஏழு தன்மை' என்றே வள்ளுவர் பொருள் கொண்டார் என்று கூறினார். இதற்குச் சான்றாக பரிமேலழகரின் குறள் 1269-ஆம் உரையில் கண்ட 'சேணிடைச் சென்ற நம் காதலர் மீண்டுவரக் குறித்த நாளை உட்கொண்டு அது வருந்துணையும் உயிர் தாங்கி வருந்தும் மகளிர்க்கு ஒருநாள் பலநாள் (ஏழுநாள்)போல நெடிதாகக் காட்டும்', 'ஏழ் என்பது அதற்கு மேலாய மிக்க பன்மை குறித்து நின்றது' என்னும் பகுதிகளைக் காட்டுவார். எனவே ஒன்று-ஏழு, அல்லது ஏழு என்னும் சொற்கள் குறளில் அந்த எண்ணை மட்டுமே சுட்டாது, ஒன்று-பல என்னும் பொருளையே குறிக்கும்; 'ஒருமை' 'எழுமை' என்பவை 'ஒன்று-பல' என்ற பொருளையே குறளில் தந்து நிற்கின்றன என்றும் விளக்கினார் கு ச ஆனந்தன். 'நாலைந்தெடு, ஏழெட்டுபேர்' என்னும் வழக்குப்போல, எழுமை என்னும் எண்ணுப் பெயரைப் பல என்னும் பொருளிலேயே ஆளுகின்றார் வள்ளுவர் என்பார் குழந்தை. சி இலக்குவனார் எழுமை என்ற சொல்லுக்கு மிகுதி என்று பொருள் கொண்டார்.
ஏழு என்றது பன்மை குறித்து நின்றது எனவே இச்சொல்லுக்குப் 'பல' என்று பொருள் கொள்ளலாம்.

ஒருமை என்பதற்கு ஒருமைப்பாட்டுடன் என்றும் எழுமை என்பதற்குப் பல என்றும் பொருள் கொள்வது பொருத்தமாகும்.

ஒருமனப்பட்டு ஒருவன் கற்ற கல்வி அறிவு பல காலத்துக்குப் பாதுகாவலை அளிக்கும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

ஆழ்ந்து கற்ற கல்வி எக்காலத்தும் அரணாக அமையும்.

பொழிப்பு

ஒருமனப்பட்டுத் தான் கற்ற கல்வி ஒருவனுக்கு பலகாலம் பாதுகாப்பாக அமையும்.