இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0396



தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.

(அதிகாரம்:கல்வி குறள் எண்:396)

பொழிப்பு (மு வரதராசன்: மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும்; அதுபோல், மக்களுக்குக் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.



மணக்குடவர் உரை: அகழ்ந்த அளவு மணற்கேணி நீருண்டாம்: அதுபோல மாந்தர்க்குக் கற்ற அளவும் அறிவுண்டாம்.
இஃது அறிவுண்டாமென்றது.

பரிமேலழகர் உரை: மணற்கேணி தொட்ட அனைத்து ஊறும் - மணலின்கண் கேணி தோண்டிய அளவிற்றாக ஊறும், மாந்தற்கு அறிவு கற்றனைத்து ஊறும் - அதுபோல மக்கட்கு அறிவு கற்ற அளவிற்றாக ஊறும்.
(ஈண்டுக் 'கேணி' என்றது, அதற்கண் நீரை. 'அளவிற்றாக' என்றது, அதன் அளவும் செல்ல என்றவாறு. சிறிது கற்ற துணையான் அமையாது, மேன்மேல் கற்றல் வேண்டும் என்பதாம். இஃது ஊழ் மாறு கொள்ளாவழியாகலின், மேல் 'உண்மை அறிவே மிகும்' (குறள் .373) என்றதனோடு மலையாமை அறிக.)

நாமக்கல் கவிஞர் உரை: (கற்றவனாவதற்கு எவ்வளவு படித்தால் போதும் என்ற கணக்கில்லை) எவ்வளவுக் கெவ்வளவு தோண்டுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு மணற்கேணியில் நீர் ஊறுவதைப்போல் எவ்வளவுக் கெவ்வளவு கல்வி கற்கிறோமோ அவ்வளவுக் கவ்வளவு அறிவு பெருகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மணற்கேணி தொட்ட அனைத்து ஊறும்; மாந்தற்கு அறிவு கற்றனைத்து ஊறும்.

பதவுரை:
தொட்ட-தோண்டிய; அனைத்து-அளவுக்கு; ஊறும்-சுரக்கும்; மணல்-மணல்; கேணி-கிணறு. மாந்தர்க்கு-மக்களுக்கு; கற்ற-ஓதிய; அனைத்து-அவ்வளவு; ஊறும்-பெருகும்; அறிவு-அறிவு.


தொட்டனைத்து ஊறும் மணற்கேணி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அகழ்ந்த அளவு மணற்கேணி நீருண்டாம்;
பரிப்பெருமாள்: அகழ்ந்த அளவு மணற்கேணி நீருண்டாம்;
பரிதியார்: ஊற்று எத்தனையாழமுண்டு, அத்தனையாழமும் தண்ணீர் ஊறும்;
காலிங்கர்: ஒருவன் கல்லுதற்கு முயலும் முயற்சியானது (எவ்வளவைத்து) மற்று அவ்வளவைத்தாகி வந்து ஊறாநிற்கும் மணற்கேணியின் நீரானது; [கல்லுதற்கு-தோண்டுதற்கு]
பரிமேலழகர்: மணலின்கண் கேணி தோண்டிய அளவிற்றாக ஊறும்;
பரிமேலழகர் விரிவுரை: ஈண்டுக் 'கேணி' என்றது, அதற்கண் நீரை. 'அளவிற்றாக' என்றது, அதன் அளவும் செல்ல என்றவாறு.

'மணற்கேணியில் தோண்டிய அளவு நீர் ஊறும்' என்ற பொருளில் அனைத்துத் தொல்லாசிரியர்களும் இப்பகுதிக்குப் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மணற்கேணி தோண்டத் தோண்ட நீர் ஊறும்', 'மணலில் தோண்டிய கிணறு தோண்டிய அளவுக்கேற்ப நீர் ஊறும்', 'மணலில் தோண்டிய கிணறு இறைத்த அளவு நீர் சுரக்கும்', 'மணலின்கண் உள்ள கிணறு தோண்டிய அளவாக ஊறும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மணலின்கண் உள்ள கிணறு தோண்டிய அளவாக ஊறும் என்பது இத்தொடரின் பொருள்.

மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதுபோல மாந்தர்க்குக் கற்ற அளவும் அறிவுண்டாம்.
மணக்குடவர் கருத்துரை: இஃது அறிவுண்டாமென்றது.
பரிப்பெருமாள்: அதுபோல மாந்தர்க்குக் கற்ற அளவும் அறிவுண்டாம்.
பரிப்பெருமாள் கருத்துரை: இஃது அறிவுண்டாமென்றது.
பரிதியார்: அதுபோலக் கல்விமிடுக்கு எத்தனையுண்டு,அத்தனையும் அறிவூஉம் என்றவாறு.
காலிங்கர்: அதுபோல உலகத்துப் பண்புடையோர்க்குத் தாம் கற்கும் கல்வி முயற்சியானது எவ்வளவைத்து, மற்று அவ்வளவைத்தான் வந்து ஊறா நிற்கும் அக்கல்வியின் நிகழும் அறிவு என்றவாறு.
பரிமேலழகர்: அதுபோல மக்கட்கு அறிவு கற்ற அளவிற்றாக ஊறும்.
பரிமேலழகர் விரிவுரை: சிறிது கற்ற துணையான் அமையாது, மேன்மேல் கற்றல் வேண்டும் என்பதாம். இஃது ஊழ் மாறு கொள்ளாவழியாகலின், மேல் 'உண்மை அறிவே மிகும்' (குறள் 373) என்றதனோடு மலையாமை அறிக.)

'மக்கட்கு அறிவு கற்ற அளவிற்றாக ஊறும்' என்ற பொருளில் அனைத்து பழம் ஆசிரியர்களும் உரை கண்டனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நூல்கள் கற்கக்கற்க அறிவூறும்', 'அதுபோல, மக்களுக்குக் கற்ற கல்வியின் அளவுக்கு ஏற்ப அறிவு பெருகும்', 'அதுபோல மக்களுக்கு அறிவானது படித்த அளவு விளக்கம் அடையும்', 'அதுபோல மக்கட்கு அறிவு கற்ற அளவாகத்தான் பெருகும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்

கற்ற அளவிற்கு மக்களுக்கு அறிவு பெருகும் என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
மணலில் தோண்டப்படும் கேணியில் தோண்டுகிற அளவிற்கு நீர் சுரப்பது போல கற்கக் கற்க அறிவு பெருகும் என்பது பாடலின் பொருள்.
குறள் 373 'நூல்பல கற்பினும் மற்றும்தன் உண்மை அறிவே மிகும்' என்கிறதே. இது இப்பாடற்கருத்துடன் முரணாகாதா?

கற்றதை மறவாதிருக்கவும் மேலும் அதைப் பெருக்கவும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.

மணலின்கண் உள்ள கிணறு தோண்டிய அளவாக ஊறும். அதுபோல கற்ற அளவிற்கு மக்களுக்கு அறிவு பெருகும்.
'தொட்டல்' என்பது தோண்டுதல் குறித்தது. தொட்டனைத்து என்பது 'தோண்டும் அளவுக்கு' என்ற பொருள் தரும்.
மூன்றுவகையான கேணிகள் உண்டு. அவை மணற்கேணி, நிலக்கேணி(கிணறு), பாறைக்கேணி(சுனை) என்பன. மணற்கேணி என்பது ஊற்று என்றும் அழைக்கப்படும். இங்கு தொட்டனைத் தூறும் மணற்கேணி என்றது மணலில் தோண்டிய கிணற்றைக் குறித்து அதில் பெருகும் ஊற்று நீரை உணர்த்தியது.
மக்கள் மணற்படுகையைத் தோண்டித் தோண்டி மணற்கேணியை உருவாக்குவர். மணலும் நீரும் மயங்கிக் கிடக்கும் இடத்தில் மணலை அகழ்ந்து அகற்றிக் குழியாக்கினால் அக்குழியில் நீர் சுரந்து நிரம்பி நிற்கும். தோண்டி எடுக்கும் அளவு நீர் நிறையும். தோண்டி ஆழமாய் எடுக்க எடுக்க நீர் ஊற்றும் மிகுதியாகும். ஆழத்தின் அளவு நீர் குவியும். கேணியில் உள்ள நீர் பெற மணலைத் தோண்ட வேண்டும். அறிவும் மக்களுக்கு இயல்பாக அமைந்துள்ளது; ஆயினும் கற்க வேண்டும்; கற்றால்தான் மேலும் அறிவு வெளிப்படும். எவ்வளவு ஆழம் கேணியைத் தோண்டுகிறோமோ அந்த அளவு நீர் கிடைக்கும். அது போலவே எவ்வளவுக்கு எவ்வளவு கற்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அறிவு பெருகும் என்கிறது இக்குறள்

கல்வி என்ற சொல்லின் மூலச்சொல் ‘கல்’. இதற்கும் தோண்டுதல் என்ற பொருள் உண்டு. காலிங்கர் 'ஒருவன் கல்லுதற்கு முயலும் முயற்சியானது (எவ்வளவைத்து) மற்று அவ்வளவைத்தாகி வந்து ஊறாநிற்கும் மணற்கேணியின் நீரானது" என்று கிணற்றில் தோண்டுவதைக் கல்லுதல்' என்று கூறுகிறார். 'காலிங்கர் கல்லுதல் முயற்சிக்கும் கல்வி என்ற முயற்சிக்கும் ஒற்றுமை காண்கிறார். 'கல்' என்ற பகுதிக்கு இவ்வாறு இரண்டு பொருள் கண்டு அவற்றினிடையே ஓர் ஒற்றுமையயும் கண்டு மகிழ்கின்றார் அவர். இவ்வாறு கல்லும் போதெல்லாம் நீர்தோன்றி வருதலின் அந்த முயற்சி வெற்றி கண்டுமகிழும் முயற்சியாகிறது' என்பார் தெ பொ மீ.
கற்கும்போது ஈடுபாட்டுடன் கற்று அதன் பின்னர் அதனை மறவாது கூட்டிக் கொள்ளுதல் வேண்டும் என்பதையும் இப்பாடல் வலியுறுத்துகிறது.

குறள் 373 'நூல்பல கற்பினும் மற்றும்தன் உண்மை அறிவே மிகும்' என்கிறதே. இது இப்பாடற்கருத்துடன் முரணாகாதா? .

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன் உண்மை அறிவே மிகும் என்னும் குறள் எண்:373 ஊழ் அதிகாரத்தில் வருவது. இதன் பொருள் 'ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும், அவனுக்கு உள்ளதாகும் அறிவே மேற்பட்டுத் தோன்றும்' என்பது. ஆனால் இது கற்கக் கற்க அறிவு பெருகும் என்கிற இக்குறட் (396) கருத்துடன் மாறுபடுவதாகத் தோன்றுவதால் பரிமேலழகர் 'ஊழ் மாறு கொள்ளாவழியாகலின், மலையாமை [முரண்படாமை] அறிக' என்கிறார். அதாவது 'ஊழ் மாறுபடின், விளக்கமுறாது இயற்கையறிவே மிக்குத் தோன்றும்' என்பது பரிமேலழகரின் அமைதி. ஆனால் தேவநேயப் பாவாணர் 'அங்கு கூறியது அறிவு பயன்படும் வகை பற்றியது; இங்குக் கூறியது அறிவு வளரும் வகை பற்றியது' என்று கூறி மாறுபாடு இல்லை. எனவே அமைதி கூறவேண்டுவதில்லை என்பதுபோல் தனது உரையில் எழுதியுள்ளார்.
தண்டபாணி தேசிகர் 'இரண்டு குறள்களுக்கும் உள்ள மாறுபாட்டை மறுப்பதற்கில்லை' எனச் சொல்லி மேலும் 'பரிமேலழகர் கூறியதும் தேவநேயர் முடிவும் இதற்கு ஏற்ற அமைதியாகாது' என்றும் கூறுகிறார். மாறுபாடு இருக்கிறதா? இல்லையா? 'குறள் 373 உயிர்க்குணமாகிய உண்மை அறிவு (இயற்கை அறிவு) மிகும் என்கிறது; இப்பாடலில் பயிலும் முயற்சிக்கேற்பச் சிறிது சிறிதாக ஊறிக்கொண்டே இருக்கும்; இரண்டிடத்தும் உழைப்பின் அளவாக ஊதியம் கிடைத்தலே அறிவிக்கப் பெறுகின்றன; ஊழ்துணையாயின் சிற்றுழைப்பால் பெரும்பயனை எய்தலாம் என்பதே. அங்கும் 'மிகும்' என்றாரே அல்லாமல் பயன்படும் என்றார் அல்லர்' என்ற விளக்கம் தந்தார் தண்டபாணி தேசிகர்.
இப்பாடல் கருத்து குறள் 373-உடன் முரண் ஆகாது.

மணலில் தோண்டப்படும் கேணியில் தோண்டுகிற அளவிற்கு நீர் சுரப்பது போல கற்கக் கற்க அறிவு பெருகும் என்பது இக்குறட்கருத்து.

அதிகார இயைபு

கல்வி கொண்டு தோண்ட வெளிவருவது அறிவு என்னும் குறள் இது.

பொழிப்பு

அகழ்ந்த அளவிற்குத் மணற்கேணியின் தண்ணீர் வெளிவரும்: மக்களுக்குக் கற்ற கல்வியின் அளவுக்கு ஏற்ப அறிவு பெருகும்.