உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்
(அதிகாரம்:கல்வி
குறள் எண்:395)
பொழிப்பு (மு வரதராசன்): செல்வர்முன் வறியவர் நிற்பதுபோல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்வி கற்றவரே உயர்ந்தவர்; கல்லாதவர் இழிந்தவர்.
|
மணக்குடவர் உரை:
பொருளுடையார் முன்பு பொருளில்லாதார் நிற்குமாறு போல, அதனைக் காதலித்து நிற்றலுமன்றிக் கற்றாரிடத்தாவர் கல்லாதார்.
இது கற்றார் எல்லாரினுந் தலையாவாரென்றது.
பரிமேலழகர் உரை:
உடையார்முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார் - 'பிற்றை நிலைமுனியாது கற்றல் நன்று' (புறநா.183) ஆதலான் , செல்வர்முன் நல்கூர்ந்தார் நிற்குமாறு போலத் தாமும் ஆசிரியர்முன் ஏக்கற்று நின்றும் கற்றார் தலையாயினார். கல்லாதவர் கடையரே - அந்நிலைக்கு நாணிக் கல்லாதவர் எஞ்ஞான்றும் இழிந்தாரேயாவர்.
(உடையார், இல்லார் என்பன உலகவழக்கு. ஏக்கறுதல் ஆசையால் தாழ்தல். கடையர் என்றதனான், அதன் மறுதலைப் பெயர் வருவிக்கப்பட்டது. பொய்யாய மானம் நோக்க மெய்யாய கல்வி இழந்தார் பின் ஒரு ஞான்றும் அறிவுடைய ராகாமையின், 'கடையரே' என்றார். இதனால் கற்றாரது உயர்வும் கல்லாதாரது இழிவும் கூறப்பட்டன.)
வ சுப மாணிக்கம் உரை:
செல்வர் முன் வறியர்போல ஏக்கத்தோடு படித்தவரே மேல்; படியாதவர் கீழ்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் [தலையாயினார்] கல்லாதவர் கடையரே.
பதவுரை:
உடையார்-உடையவர். இங்கு செல்வம் உடையவர் எனக் கொள்வர்; முன்-எதிரில்; இல்லார்போல்-இல்லாதவர் போல. இங்கு செல்வம் இல்லாதவர் அதாவது வறியர் எனக் கொள்ளப்படும்; ஏக்கற்றும்-ஆசையால் தாழ்ந்தும்; கற்றார்-கல்வி பெற்றவர்; கடையரே-இழிந்தவரே என்றும் இடத்தவரே என்றும் இருவிதமாகப் பொருள் காண்பர்; கல்லாதவர்-கல்வி பெறாதவர்.
|
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளுடையார் முன்பு பொருளில்லாதார் நிற்குமாறு போல அதனைக் காதலித்து நிற்றலுமன்றிக் கற்றார்;
பரிப்பெருமாள்: பொருளுடையார் முன்பு பொருளில்லாதார் நிற்குமாறு போலத் தாழ்ந்தும் கற்றார் ;
பரிதி: செல்வர் முன்னே செல்வமில்லாதார் நிற்பது ஒக்கும் கல்வியுடையார் முன் கல்வியில்லாதார் நிற்பது;
காலிங்கர்: கற்றார்முன் சென்று கல்லாதார் கற்குமிடத்துச் செல்வம் உடையார் முன்சென்று வறியவர் ஏக்கற்று ஒடுங்கி ஒரு பொருளை விரும்புமாப்போல், விரும்பிக் கற்றவர் கற்றார் ஆவர்;
பரிமேலழகர்: 'பிற்றை நிலைமுனியாது கற்றல் நன்று' (புறநா.183) ஆதலான், செல்வர்முன் நல்கூர்ந்தார் நிற்குமாறு போலத் தாமும் ஆசிரியர்முன் ஏக்கற்று நின்றும் கற்றார் தலையாயினார்;
பரிமேலழகர் குறிப்புரை: உடையார், இல்லார் என்பன உலகவழக்கு. ஏக்கறுதல் ஆசையால் தாழ்தல். கடையர் என்றதனான், அதன் மறுதலைப் பெயர் வருவிக்கப்பட்டது.
இப்பகுதியிலுள்ள 'உடையார்முன் இல்லார்போல்' என்றதற்கு அனைத்து பழம் ஆசிரியர்களும் செல்வர் முன்னே வறியர் நிற்பது போல என்று உரை செய்தனர். கற்றார் என்பதற்கு அனைவரும் கற்றவர் அல்லது கல்விபெற்றவர் என்று ஒரே பொருளே கூறினர். ஏக்கற்றும் என்றதற்கு மணக்குடவர் 'காதலித்து நிற்றல்' என்று சொல்லி, 'அன்றி' என ஒரு சொல்லையும் கூட்டி, உரைக்கிறார். பரிப்பெருமாள் ஏக்கற்றும் என்றதற்குத் 'தாழ்ந்தும்' எனப் பொருள் கண்டார். காலிங்கர் ஏக்கற்றும் என்பதற்கு 'ஏக்கற்று ஒடுங்கி ஒரு பொருளை விரும்புமாப்போல்' என்றபடி உரை கண்டார். பரிமேலழகர் இதற்கு 'ஏக்கற்று நின்றும்' என்கிறார்.
இன்றைய ஆசிரியர்கள் 'செல்வர்முன் ஏழைபோல, ஆசிரியர் முன் ஏங்கித் தாழ்ந்து நின்று கற்றவரே உயர்ந்தவர்', 'எந்தவிதமான குறைச்சலும் இல்லாவிட்டாலும் பணக்கரர்களுடைய வாசலில் ஏழைகள் குறையிரந்து நிற்பதைப்போல் கற்றவர்கள்', 'செல்வரிடம் வறியவர்போலக் கற்றவரிடம் விருப்புடன் தாழ்மையாக நடந்து அறிய வேண்டுவற்றைக் கற்றவர்களே உயர்ந்தோர்', 'பொருளில்லாதார் வருந்தி ஈட்டுதல் போல ஆர்வமுற்று வருந்தியும் கற்றவர்களே எல்லாம் உடையவர்களாவார்கள்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
செல்வம் உடையவர் முன்பு வறியவர்போல ஏக்கத்தோடு நின்றும் கல்வி பெற்றவர் (உயர்ந்தோர்) என்பது இப்பகுதியின் பொருள்.
கடையரே கல்லா தவர்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இடத்தாவர் கல்லாதார்.
மணக்குடவர் குறிப்புரை: இது கற்றார் எல்லாரினுந் தலையாவாரென்றது.
பரிப்பெருமாள்: இடத்தர் ஆவர் கல்லாதார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது எல்லாரினுந் தலைவனாம் என்றது.
காலிங்கர்: மற்றுக் கடையர் என்பது புலைமக்கள் உயர்ந்தோர்முன் ஒன்றினைச் சொல்லக் கூசுமாப்போலக் கல்லாதார் ஆகிய கடுவினையாளரும் கற்றார் முன் சொல்லத் தாமே கூசுவர் என்றவாறு.
பரிமேலழகர்: அந்நிலைக்கு நாணிக் கல்லாதவர் எஞ்ஞான்றும் இழிந்தாரேயாவர்.
பரிமேலழகர் குறிப்புரை: பொய்யாய மானம் நோக்க மெய்யாய கல்வி இழந்தார் பின் ஒரு ஞான்றும் அறிவுடைய ராகாமையின், 'கடையரே' என்றார். இதனால் கற்றாரது உயர்வும் கல்லாதாரது இழிவும் கூறப்பட்டன.
மணக்குடவர்/பரிப்பெருமாள் இருவரும் 'கடை' என்றதற்கு இடப்பொருள் கண்டனர். அதாவது 'கடை'யர் என்பதை (கற்றார்)'இடத்து' என்று கொள்கின்றனர். கல்லாதாரும் கற்றாரிடத்துக் கொள்ளப்படுவர் என்பது இவர்கள் தரும் விளக்கம். காலிங்கரும் பரிமேலழகரும் கடையர் என்றதற்கு இழிந்தவர் என்று பொருள் கூறி கல்லாதவர் இழிந்தோர் ஆவர் என்கின்றனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அம்முறைப்படி கல்லாதவர் இழிந்தவரே', 'வாசலில் நிற்க வேண்டியவர்களே கல்லாதவர்கள்', 'கல்லாதவர்கள் இழிந்தவரே ஆவர்', 'அங்ஙனம்
கல்லாதவர்கள் யாவும் அற்று யாவரினும் தாழ்ந்தவர் ஆவார்கள் ' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
கல்லாதவர்கள் இழிந்தவரே என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
செல்வம் உடையவர் முன்பு வறியவர்போல ஏக்கத்தோடு நின்றும் கல்வி பெற்றவர் உயர்ந்தோர்; கல்லாதவர்கள் இழிந்தவரே என்பது பாடலின் பொருள்.
'ஏக்கற்றும்' என்ற சொல் குறிப்பது என்ன?
|
கல்வியைக் காதலித்துக் கற்கவேண்டும்; கல்விச் செல்வம் பெற்றவர் தலைநிமிர்ந்து நிற்பர்.
வறியவனொருவன் செல்வரிடம் பொருளுதவி பெறுவதற்காக, பொருளின் இன்றியமையாமையை அறிந்து, ஏக்கத்துடன், தன் குறையை நீக்கிக் கொள்ள முயல்வதுபோலக் கற்பவனும் ஆசிரியரிடத்தே விரும்பி நின்று கல்வியின் தேவையை உணர்ந்து அதன் மேலே காதல்கொண்டு கற்கவேண்டும். அவ்விதம் கல்வி பெற்றவர் உயர்ந்தவராகிறார்; கல்லாதவன் மெய்யாய கல்வி இழந்து இழிந்தவன் ஆகிறான்.
இப்பாடல் மாணவர் கல்வி கற்கும் முறையைச் சொல்கிறது. கற்றவர் உயர்ந்தவர் கல்லாதவர் இழிந்தவர் என்பதுவும் கூறப்பட்டது.
கற்பவனுக்குக் கல்வியில் இருக்கும் விருப்பத்தையும் கல்வியின் இன்றியமையாமையையும், வற்புறுத்த வேண்டி ஆசிரியர் முன் ஏங்கி நின்று யாசித்தல் போலக் கல்வி கற்கவேண்டும்; அந்நிலைக்கு நாணிக் கல்லாதவர் எஞ்ஞான்றும் அறிவுடையராகாமல் இழிந்தார் ஆவர் என்றும் இக்குறளுக்குப் பொருள் கூறினர்.
இதனால் இக்குறள் கல்வியைக் காதலித்துக் கற்கவேண்டும் என்கிறதா அல்லது மாணாக்கன் ஆசிரியரிடம் பணிவுடன் கற்க வேண்டும் என்கிறதா? என்ற கருத்தாடல் எழுந்தது.
பணிவைத்தான் இப்பாடல் குறிக்கிறது என்றால் 'கூனிக் குறுகிக் கல்லாதவனுக்கு கல்வி புகட்ட முடியாது; அது பயன் தராது' என்றல்லவா குறள் படைத்திருக்கப்படவேண்டும்? கல்வி கற்கும்போது மாணாக்கனுக்கு செறுக்கற்ற நிலை வேண்டும்தான். ஆனால் தாழ்ந்து நின்றுதான் கற்கவேண்டும் என்பதற்காக ஒருபாடலை வள்ளுவர் யாத்திருப்பாரா? இருக்காது. மாணவரை இழிவாகக் காட்ட வள்ளுவர் விரும்பி இருக்கமாட்டார். அப்பொருள் கற்றுக் கொடுக்கும் ஆசிரியருக்கும் பெருமை சேர்க்காது.
தாழ்ந்து நின்று பணிவுடன் கற்கவேண்டும் என்பதைவிட கல்வியைக் காதலித்துக் கற்கவேண்டும் என்ற கருத்து சிறந்தது.
தெ பொ மீனாட்சிசுந்தரம் இப்பாடல் பற்றிச் சொல்வதாவது: 'முன்னரே அறிந்திருந்தாலும் அறிதொறும் அறியாமை காணும் நிலையில் ஒன்றும் கல்லாதவன் போலவே மிகத் தாழ்ந்து நின்று பேராசையோடு கற்கவே கற்கின்றவர்கள் முயல்கின்றார்கள்; செருக்குடன் கற்றவர்கள் கல்வியை உடைமையாகக் கொள்வதில்லை; கற்பதற்குத் தக்கதொரு முயற்சி வேண்டும்; இக்குறள் இக்காலத்தார் வற்புறுத்தும் ஒரு சிறந்த உண்மையை அதாவது அக்கறை, இன்றியமையாமை, ஈடுபாடு என்று இதுவொன்று இல்லாவிடின் கல்வி மலராது என்பதை விளக்குகிறது.
இக்குறளில் இரண்டு வாக்கியங்கள் இருக்கின்றன. அவற்றுள் முதலில் உள்ளது குறைவாக்கியமாக அமைந்துள்ளதால், வாக்கியக் குறையை நிரப்பிக் கொள்ளும் நோக்கில் கடையர் என்றதன் மறுதலைப் பெயரை அதாவது தலையாயினார் என்ற ஒரு சொல்லை வருவித்து உரை செய்கிறார் பரிமேலழகர். இவர் உரைப்படி 'உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் தலையர்; கடையரே கல்லாதவர்' என்று வாசித்தால் முற்றான ஒரு கருத்து கிடைக்கிறது. (இக்குறள் நடை பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார் (10) என்பதன் நடை போல உள்ளது. அதில் வரும் நீந்துவர் என்பதற்குச் சேர்ந்தார் என ஒரு சொல் வருவித்து முடிப்பது போல் இங்கு வரும் ‘கற்றார்’ என்பதற்குத் தலையாயினார் என ஒரு சொல் வருவித்து முடிக்கப்பட்டது).
இக்குறளுக்கான பலரது உரைகளிலிருந்து வேறுவேறான விளக்கங்கள் கிடைத்தன. அவற்றுள் சில:
- பொருளுடையார் முன்பு பொருள் இல்லாதார் நிற்குமாறு போல, அதனைக் காதலித்து நின்று கற்றால் கல்லாதார் கற்றார் இடத்தாவார்.
- செல்வர்முன் இல்லாதார் நிற்குமாறு போலத் தாமும் ஆசிரியர்முன் ஏக்கற்று நின்றும் கற்றார் தலையாயினார். அந்நிலைக்கு நாணிக் கல்லாதவர் இழிந்தாரேயாவர்.
- எந்தவிதமான குறைச்சலும் இல்லாவிட்டாலும், பணக்காரர்களுக்கு முன்னால் இரந்து நிற்பது போல கற்றவர்கள் வாசலில் நிற்க வேண்டியவர்களே கல்லாதவர்கள்.
- இப்பொழுது கல்வியுடைவராயிருப்பவர் தாம் கல்வியுடையவராதற்குமுன் வறுமைப்பட்டவர் எவ்வாறு பல துன்பங்களுக் குள்ளாவார்களோ அவ்வாறு
வருத்தப்பட்டுக் கற்றவரே யாவர்.
- பொருளில்லாதார் வருந்தி ஈட்டுதல் போல ஆர்வமுற்று வருந்தியும் கற்றவர்களே எல்லாம் உடையவர்களாவார்கள். அங்ஙனம் கல்லாதவர்கள்
யாவும் அற்று யாவரினும் தாழ்ந்தவர் ஆவார்கள்.
- கல்வியும் செல்வமும் ஆகிய இரண்டையுமே செல்வம் என வள்ளுவர் வழங்கலின் பூரியார் கண்ணும் உள பொருட்செல்வத்திற்கு ஏக்கற்று
நிற்றலை, சிறந்தார் மாட்டேயுளதாகிய கல்விச் செல்வத்திற்காக நிற்க.
கல்வியையும் செல்வமாக எண்ணித் தம்பாலுள்ள கல்வியின்மையை வறுமையாக எண்ணிக் கற்கவேண்டும் என்பதும் கல்விச்செல்வம் பெற்றவர் பொருட்செல்வம் உடையார் போல் உயர்வாகக் கருதப்படுவர் என்பதும் இப்பாடல் தரும் செய்திகளாம்.
|
'ஏக்கற்றும்' என்ற சொல் குறிப்பது என்ன?
'ஏக்கற்றும்' என்பதற்கு காதலித்து நிற்றலும், தாழ்ந்தும், ஏக்கற்று ஒடுங்கி ஒரு பொருளை விரும்புமாப்போலும், ஏக்கற்று நின்றும், ஏங்கித் தாழ்ந்து நின்றும், ஆசையால் தாழ்ந்து நிற்றல், ஏக்கத்தோடு தாழ்ந்து நின்றும், ஏக்கத்தோடு, ஏங்கித் தாழ்ந்து நின்றும், பணிவுடன், விருப்புடன் தாழ்மையாக நடந்து, ஆர்வமுற்று வருந்தியும், ஏங்கி நின்று பணிவுடன், ஆசையால் தாழ்ந்துநின்றும், நாணித் தலையிறங்கியும், இரங்கி நின்று யாசிப்பது போலவும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
ஏக்கற்று என்பதற்குச் செருக்கு அற்று எனப் பொருள் கூறி ஏக்கழுத்தம் அல்லது ஏக்கு என்ற செருக்கு உண்மையாகக் கற்றவனிடம் இருப்பதற்கில்லை எனக் குறிப்பார் தெ பொ மீனாட்சிசுந்தரம். நாமக்கல் இராமலிங்கம் ஏக்கற்று என்பதை ஏக்கு+அற்று எனப்பிரித்து ஏக்கம் இல்லாவிடினும் என்று பொருள் கண்டார். இவர் ஏக்கு என்பது 'ஒரு பொருள் இல்லையென்ற ஏக்கம் (கவலை) எனவும் கூறுகிறார். ந சி கந்தையா பிள்ளையின் உரை இச்சொல்லுக்கு 'வருத்தப்பட்டுக் கற்று' என்கிறது.
கம்பரும் 'ஒருத்தி முலைக் கிடந்த ஏக்கறவால்' (கம்ப இராமாயணம், யுத்த காண்டம், மாயா சனகப் படலம்) என எக்கறவு என்ற சொல்லை 'ஆசையால்' என்ற பொருளில் ஆண்டுள்ளார்.
ஏக்கற்று என்ற சொல்லுக்குப் பல்லெல்லாம் தெரியக்காட்டிப் பருவரல் முகத்தில் தேக்கி நிற்றலைக் குறிப்பதாகப் பொருள் கூறினர். ஏக்கற்றும் என்ற சொல் முன்பு வழக்கிலிருந்தது; இப்போது இல்லை என்பது ஆய்வாளர் முடிவு.
மணக்குடவரின் காதலித்து நின்றும் என்ற பொருள் சிறந்தது.
'ஏக்கற்றும்' என்ற சொல் 'விரும்பி ஏங்கிநின்றும்' என்ற பொருள் தரும்.
|
செல்வம் உடையவர் முன்பு வறியவர்போல ஏக்கத்தோடு நின்றும் கல்வி பெற்றவர் உயர்ந்தோர்; கல்லாதவர்கள் இழிந்தவரே என்பது இக்குறட்கருத்து.
பொருட்செல்வம் கொண்டோர் போல் கல்விச் செல்வம் உடையோரும் தலைநிமிர்ந்து நிற்பர் என்று சொல்லும் பாடல்.
செல்வர் முன் வறியர்போல ஏக்கத்தோடு நின்றும் கற்றோர் மேல்; கல்லாதவர் கீழ்.
|