உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்
(அதிகாரம்:கல்வி
குறள் எண்:394)
பொழிப்பு (மு வரதராசன்): மகிழும்படியாகக் கூடிப் பழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.
|
மணக்குடவர் உரை:
மக்களிருவர் உவக்குமாறு கூடி அவர் நினைக்குமாறு பிரிதல் போலும்: கற்றோர் செய்யுந்தொழில்.
இஃது இன்பம் நுகரினும் வினை செய்யினும் பிறர்க்கும் இன்பம் பயக்கச் செய்தல் கல்வியாலாமென்றது.
பரிமேலழகர் உரை:
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே - யாவரையும். அவர் உவக்குமாறு தலைப்பெய்து, இனி இவரை யாம் எங்ஙனம் கூடுதும்?
என நினையுமாறு நீங்குதலாகிய அத்தன்மைத்து, புலவர் தொழில் - கற்றறிந்தாரது தொழில்.
(தாம் நல்வழி ஒழுகல் பிறர்க்கு உறுதி கூறல் என்பன இரண்டும் தொழில் என ஒன்றாய் அடங்குதலின், 'அத்தன்மைத்து' என்றார். அத்தன்மை:
அப்பயனைத் தரும் தன்மை. நல்லொழுக்கம் காண்டலானும், தமக்கு மதுரமும் உறுதியுமாய கூற்றுக்கள் நிகழ்வு எதிர்வுகளின் இன்பம் பயத்தலானும்
கற்றார்மாட்டு எல்லாரும் அன்புடையராவர் என்பதாம். இதனால் கற்றாரது உயர்வு வகுத்துக் கூறப்பட்டது.)
வ சுப மாணிக்கம் உரை:
மகிழுமாறு பழகுவர்; நினைக்குமாறு பிரிவர்; இதுவே புலவரின் பண்பு.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்.
பதவுரை: உவப்ப-மகிழ; தலைக்கூடி-கலந்து பழகி; உள்ள-நினைக்க; பிரிதல்-நீங்குதல்; அனைத்தே-போலுமே, அளவே, அத்தன்மைத்தே, என்ற பொருள்களுள் அத்தன்மைத்தே இங்கு பொருத்தம்; புலவர்-கற்பிக்கும் ஆசிரியர் (அறிஞர், கற்றறிந்தார் எனவும் பொருள் கூறுவர்; தொழில்-தொழில் (செயல், இயல்பு, பண்பு, வேலை எனவும் பொருள் கொள்வர்)
|
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே:
இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மக்களிருவர் உவக்குமாறு கூடி அவர் நினைக்குமாறு பிரிதல் போலும்;
பரிப்பெருமாள்: உவக்குமாறு கூடி அவர் நினைக்குமாறு பிரிதல் போலே;
பரிதி: நல்லோரும் நல்லோரும் மனப்பூர்ணமாகக் கூடியிருந்து, பிரிகிறபோது ஒருவரை ஒருவர் அனவரதகாலமும் நினைந்திருப்பார். அதுபோல [அனவரதகாலமும்-எஞ்ஞான்றும்];
காலிங்கர்: தாம் பிறர் ஒருவருடன் கூடுங்காலம் எல்லாம் நம்மை அவர் பெரிதும் உவக்குமாறு அவரிடத்துக் கூடி, மற்று யாதானும் ஒருவழியால்
பிரிய வேண்டிற்று ஆயினும் மற்று அவர் தம்மையே எப்பொழுதும் சிந்திக்குமாறு பிரிதல்;
பரிமேலழகர்: யாவரையும் அவர் உவக்குமாறு தலைப்பெய்து, இனி இவரை யாம் எங்ஙனம் கூடுதும்? என நினையுமாறு நீங்குதலாகிய அத்தன்மைத்து;
பரிமேலழகர் விரிவுரை: தாம் நல்வழி ஒழுகல் பிறர்க்கு உறுதி கூறல் என்பன இரண்டும் தொழில் என ஒன்றாய் அடங்குதலின், 'அத்தன்மைத்து' என்றார்.
அத்தன்மை: அப்பயனைத் தரும் தன்மை. நல்லொழுக்கம் காண்டலானும், தமக்கு மதுரமும் உறுதியுமாய கூற்றுக்கள் நிகழ்வு எதிர்வுகளின் இன்பம் பயத்தலானும்
கற்றார்மாட்டு எல்லாரும் அன்புடையராவர் என்பதாம். [மதுரம்-இனிமை];
தொல்லாசிரியர்கள் அனைவரும் கூடிப் பிரிதலையும் அப்படிப் பிரியும்போது அக்கூட்டத்தைப் பற்றி நினைப்பர் என்ற பொருளில் உரைத்தனர். ஆனால் யார் யாருடன் கூடும்பொழுது என்பதை விளக்குவதில் அவர்கள் வேறுபடுகின்றனர். மணக்குடவர் யாராவது இருவர் என்ற பொருளில் 'மக்களிருவர்' என்று சொல்ல, பரிதி 'நல்லோரும் நல்லோரும்' என்று பொருள் தருகிறார். காலிங்கரும் பரிமேலழகரும் 'கற்றவருடன் மற்றவர்' என்கின்றனர்.
இன்றைய ஆசிரியர்கள் மகிழுமாறு மனங்கலந்து பழகி அடுத்து எப்பொழுது கூடி மகிழ்வோம் என நினையுமாறு வருந்திப் பிரிதலாகிய அவ்வளவே', 'கல்வி என்பது கற்ற வித்தையைக் காட்ட வாது புரியும் புலமை அல்ல) கூடும்போது தாமும் பிறரும் மகிழும்படியாகச் சபையிற்கூடிப் புலமைத் திறமைகளைக் காட்டுவதில் கருத்து வேற்றுமைகள் உண்டாகிப் பின் பிரியும்போது வருத்தத்தோடு பிரிந்து போவதுதான்', 'யாவரும் மகிழ்ந்து தம்மோடு கலக்கவும் எப்போது தம்மைக் காண்போம் என்று நினைந்து வருந்திப் பிரியவும் இருக்கும் அவ்வளவினதே', 'மகிழுமாறு கூடி வருந்துமாறு பிரிதல்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
மகிழுமாறு கலந்து பழகி, பிரியும்போது கூடியதையே எண்ணச் செய்யும் அத்தன்மைத்தே என்பது இப்பகுதியின் பொருள்.
புலவர் தொழில்:
இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கற்றோர் செய்யுந்தொழில்.
மணக்குடவர் கருத்துரை: இஃது இன்பம் நுகரினும் வினை செய்யினும் பிறர்க்கும் இன்பம் பயக்கச் செய்தல் கல்வியாலாமென்றது.
பரிப்பெருமாள்: கற்றோர் செய்யுந்தொழிலும் ஆம்.
பரிப்பெருமாள் கருத்துரை: இன்பம் நுகரினும் வினை செய்யினும் தமக்கும் பிறர்க்கும் இன்பம் பயக்கச் செய்தல் கல்வியாலான் ஆம் என்றது.
பரிதி: கற்கும்போதும் பிரியத்துடனே கற்க; கற்றுவிட்டால் கற்ற கல்வியை மறவாது அதிகரிக்க.
காலிங்கர்: அதுவே கல்வியாற் சிறந்த அறிவினை உடையோர் தொழில் என்றவாறு.
பரிமேலழகர்: கற்றறிந்தாரது தொழில்.
பரிமேலழகர் கருத்துரை: இதனால் கற்றாரது உயர்வு வகுத்துக் கூறப்பட்டது.
பழம் ஆசிரியர்கள் புலவர் என்றதற்கு கற்றோர் தொழில் என்று பொருள் கொண்டனர். மணக்குடவரும் பரிப்பெருமாளும் கருத்துரையில் தாம் இன்பம் நுகர்தலும் பிறர்க்கு இன்பம் உண்டாக்கச் செய்தலும் கல்வியாலே என்று கூறியதால் புலவர் தொழில் கல்வியின் பயன் எனப் பெறப்படுகிறது. பரிதி உரை விருப்பத்துடன் கற்றலைக் குறிக்கிறது.
இன்றைய ஆசிரியர்கள் 'புலவர் தொழில்', 'புலவர்கள் செய்யும் வேலை', 'கற்றவர்களுடைய சிறப்பாகிய செய்கை யாதெனின்', 'கற்றறிந்த புலவர் தொழிலாகும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
கற்பிப்பார் தொழில் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
உவப்பத் தலைக்கூடி பிரியும்போது கூடியதையே எண்ணச் செய்யும் அத்தன்மைத்தே கற்பிப்பார் தொழில் என்பது பாடலின் பொருள்.
இங்கு சொல்லப்பட்டுள்ள 'புலவர்' யார்?
|
கல்விச்சாலையில் கூடும்பொழுது மகிழ்வளிப்பதும் அதைவிட்டு நீங்குபோது மீண்டும் கலந்து பழகுவதை நினைக்கச் செய்வதும் கல்வியின் தன்மையாம். பயிற்சிக் கூடத்தில் கற்பிக்கும் ஆசிரியரின் பண்பும் திறனும் சிறப்பித்துச் சொல்லப்படுகின்றன.
'உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்' என்பதற்கு மகிழும்படி கூடி, இனி இவரை யாம் எப்பொழுது மீண்டும் கூடுதும் என நினைத்துக் கொண்டே நீங்குதல் ”என்பது நேர் பொருள். இதற்கு அன்றைய ஆசிரியர்களும் இக்கால ஆசிரியர்களும் இப்பொருள்படவே உரை பகன்றனர். ஆனால் யார் யார் கூடினர் என்பதில் வேறுபட்டனர். அவ்வாறே அனைத்து என்ற சொல்லுக்கு 'போலும்', 'அத்தன்மைத்து', 'அவ்வளவே' என்று வேறுவேறாகப் பொருள் கொண்டனர். இவற்றால் இக்குறட்பொருள் விளக்கங்களில் மாறுபாடுகள் காணப்படுகின்றன.
கல்வி பெற்றவர்கள் கூடி கற்றவற்றைப் பற்றி உரையாடியபொழுது மகிழ்ந்தனர். பின் பிரியும் நேரத்தில் மீண்டும் இவர்களை எப்பொழுது சந்திப்போம் என்ற சிந்தனையில் செல்வர் என்று கூறி இது கல்வியின் பயன் என்று பெரும்பான்மையோர் உரை செய்தனர். புலவர் வாதிடும் திறன் பற்றியது இப்பாடல் என்றபடி ஓர் உரை உள்ளது. மற்றவர்களுக்கு உறுதிப்பொருள்கள் கூறி நல்வழிப்படுத்தும் புண்ணியம் செய்வது பற்றிய பாடல் இது என்கிறது மற்றொரு உரை. பிரிதல் என்றதற்கு இறத்தல் என்று பொருள் கொண்டு இறந்த பிறகும் தம்மை எண்ணச்செய்தல் புலவர் தொழில் என்றும் உரை இருக்கிறது.
புலவர்கள் தம்முள்ளோ அல்லது பிறர் யாருடனோ பழகும் போதும், பிரியும் போதும் உளதாம் நிலையைக் குறித்ததான விளக்கம் சிறப்பாகப்படவில்லை. உரையாடுவதற்காகக் கூடி மகிழ்வது கல்வியின் பயன் என்றோ அல்லது நாளும் யாருடனாவது உரையாடிக்கொண்டிருப்பதுவே புலவர் தொழில் என்றோ வள்ளுவர் சொல்லியிருப்பார் என்று கருதமுடியவில்லை.
புலவர் என்பதற்கு ஆசிரியர் என்ற ஒரு பொருளும் உண்டு. இக்குறளில் புலவர் என்பதற்குக் கற்றறிந்தார் என்பதைவிட கற்பிப்பவர் அல்லது ஆசிரியர் என்ற பொருள் பொருத்தமாகிறது. கூட்டத்தில் உவத்தலும், பிரிவில் நினைத்தலுமாகிய இரு தன்மைகளையுடையது புலவர் தொழில் என்று கூறுகிறது இச்செய்யுள். மாணவர்கள் ஆசிரியருடன் உவப்பத்தலைக்கூடி கல்வி கற்பர்; கலந்து பழகியதை எப்பொழுதும் நினைத்துக்கொண்டிருக்கும்படி அதாவது கற்றது பற்றி நினைத்துக் கொள்ளுமாறு அவர்கள் பிரிவர் என்பது இதன் பொருள்.
இப்பாடலின் பொருள் புரிந்து கொள்ள ''நல்லோரும் நல்லோரும் உள்ளம்நிறையக்; கூடியிருந்து, பிரிகிறபோது ஒருவரை ஒருவர் எஞ்ஞான்றும் நினைந்திருப்பார். அதுபோல
கற்கும்போதும் பிரியத்துடனே கற்க; கற்றுவிட்டால் கற்ற கல்வியை மறவாது அதிகரிக்க' என்ற பரிதியின் உரை பெரிதும் உதவுகிறது. பரிதியார் 'தலைக்கூடி' என்பதற்கு அதிகாரப் பொருளாகிய 'கல்வியைக்கூடி' எனவும், 'உள்ள' என்பதற்கும் 'அக்கல்வியையே விடாத தன்மைத்து' எனவும் பொருள் கண்டார். மாணவன் ஒருவன் கற்கும்போது நூல்களை விழைவுடன் கற்றுக் கல்வியை மிகுத்தல் வேண்டும் என இவர் உரை கூறுகிறது. பரிதியின் இவ்வுரைக்குத் தண்டபாணி தேசிகர் தரும் 'நல்லோரைப் போலக் கல்வியைப் பயிலும் விருப்புடன் பயிலவேண்டும்; பயிற்சியை முடித்துக் கொண்டாலும் மறவாமல் நினைத்துக் கொண்டேயிருக்க வேண்டும் எனத் தலைக்கூடுதலையும் பிரிதலையும் கல்விப் பயிற்சிக்கும், பயிற்சியின் முடிவுக்கும் ஆக்குவர்' என்ற விளக்கம் மேலும் தெளிவு தருகிறது.
கூடுதல்-பிரிதலை கல்வியின் பயனுக்கு உவமை எனக்கொள்ளாமல் கல்விக்குக் காரணமான முயற்சியின் தன்மை கூறப்பட்டது எனக் கொண்டால், அதிகார இயைபுடன் அமைந்து குறட்கருத்து நன்கு புலப்படும்.
உவப்ப என்ற சொல்லுக்கு மகிழும்படி என்பது பொருள். தலைக்கூடி என்ற சொல் ஒன்று சேர்ந்து அல்லது கலந்து பழகி என்ற பொருள் தரும். உவப்பத்தலைக்கூடுதல், உள்ளப்படுதல். என்ற தன்மைகள் ஆசிரியர்-மாணாக்கர் உறவுக்கு மிகவும் இணக்கமாக அமைகிறது. இவர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் சந்தித்து அறிவிற்கு விருந்தென அளவளாவி மீண்டும் என்று சந்திக்க நேரிடும் என்ற சிந்தனையை மாணவர் பெற்றுப் பிரியாவிடை அளித்துச் செல்லும் காட்சியை இப்பாடல் படைக்கிறது.
பள்ளியிலும் கல்லுரியில் பயின்ற காலத்திலும் சில ஆசிரியர்கள் பாடம் ஓதும் முறையில் முற்றிலும் ஈர்க்கப்பட்டு அவர் பாடநேரங்களை எதிர்பார்த்து
இருப்பதையும் அவருடன் அளவளாவதில் மகிழ்ந்ததையும் மாணவர்கள் அனுபவமாகக் கண்டிருப்பர். 'பேராசிரியர் சீனிவாசராகவனது ஷேக்ஸ்பியர் வகுப்பைத் தவறவே விடக்கூடாது', 'விரிவுரையாளர் எடிஸனது இயற்பியல் (Physics) பாடம் நடத்தும் முறை மிகவும் ஆர்வமூட்டுவதாக இருக்கும்' என்பன போன்று ஒவ்வொரு ஆசிரியர் பாடம் கற்பிப்பது பற்றி மாணவர்கள் கருத்துக்கள் கொண்டிருப்பர். அதுபோல் கல்விக்கூடத்தை விட்டு நீங்கும் நேரம் இவ்வாசிரியர்களுடன் மீண்டும் எப்பொழுது உரையாடுவோம் என்ற ஏக்கத்துடன் அவர்கள் வகுப்புகளை நினைவில் நீங்காமல் வைத்தும் இருப்பர். கல்விச்சாலையில் பயிலுங் காலத்து நிலவும் சூழலையும் கற்றபின் பயிற்சிசாலையை நீங்கும்போது உண்டாகும் உணர்வுகளையும் பற்றியது இக்குறள்.
|
இங்கு சொல்லப்பட்டுள்ள 'புலவர்' யார்?
'புலவர்' என்ற சொல்லுக்குக் கற்றோர், கல்வியாற் சிறந்த அறிவினை உடையோர், கற்றறிந்தார், புலவர், நூற்கல்வி மிக்க புலவர், கற்றறிந்த அறிவுடையார், புலமையாளர், கற்றவர், கல்வியிற் சிறந்த புலவர், சிறந்த கல்வியுடையார், கல்வி அறிவு உடையவர் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
புலவர் என்றதை கற்றார் என்றே பெரும்பான்மையனர் கொண்டனர். கற்றார் என்பதைவிட கற்பிப்பவர் என்ற பொருள் இங்கு பொருத்தமாகும்.
இங்கு சொல்லப்பட்ட புலவர் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் ஆவார். புலவர் தொழில் என்பது ஆசிரியர் தொழிலான கற்பித்தல் ஆகும்.
|
ஆசிரியர் கல்விச்சாலையில் மாணவர்கள் எல்லாருடனும் கூடி இனிமையாய் உரையாடி, அறிவுச்செய்தி பலவுரைத்து பிரிந்திடும் நேரத்திலே இனியென்று இந்த வாய்ப்பு கிட்டும் எனக் கற்பாரை ஏங்கச் செய்வார். இத்தன்மைத்து கற்பிப்பார் தொழில் என்பது இக்குறள் கூறும் கருத்து.
கல்விக் கூடத்தின் இனிமையான சூழலை விளக்கும் செய்யுள்.
மகிழுமாறு மனங்கலந்து பழகி அடுத்து எப்பொழுது கூடி மகிழ்வோம் என நினையுமாறு வருந்திப் பிரிதலைச் செய்யும் அத்தன்மைத்து புலவர் தொழிலாகிய கற்பித்தல்.
|