இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0393



கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்

(அதிகாரம்:கல்வி குறள் எண்:393)

பொழிப்பு (மு வரதராசன்): கண்ணுடையவர் என்று உயர்வாகக் கூறப்படுகின்றவர் கற்றவரே; கல்லாதவர் முகத்தில் இரண்டு புண் உடையவர் ஆவர்.

மணக்குடவர் உரை: கற்றோர் கண்ணுடைய ரென்று சொல்லப்படுவர்: கல்லாதார் முகத்தின்கண்ணே இரண்டு புண்ணுடைய ரென்று சொல்லப்படுவர்.
அறிவு கல்வியின் கண்ணதாகலான் அக்கல்வியில்லாதார் கண் புண்ணாயிற்று.

பரிமேலழகர் உரை: கண் உடையர் என்பவர் கற்றோர் - கண்ணுடையர் என்று உயர்த்துச் சொல்லப்படுவார் கற்றவரே, கல்லாதவர் முகத்து இரண்டு புண் உடையர் - மற்றைக் கல்லாதவர் முகத்தின்கண் இரண்டு புண்ணுடையர், கண்ணிலர்.
(தேயம்இடையிட்டவற்றையும் காலம் இடையிட்டவற்றையும் காணும் ஞானக்கண்உடைமையின் கற்றாரைக் கண்ணுடையர் என்றும் அஃதின்றி நோய்முதலியவற்றால் துன்பம் செய்யும் ஊனக்கண்ணேஉடைமையின், கல்லாதவரைப் புண்ணுடையர் என்றும் கூறினார்.மேல் கண்ணன்மை உணரநின்ற ஊனக்கண்ணின் மெய்ம்மைகூறியவாற்றான், பொருள் நூல்களையும் கருவிநூல்களையும்கற்றாரது உயர்வும், கல்லாதாரது இழிவும் இதனான் தொகுத்துக்கூறப்பட்டன.)

இரா சாரங்கபாணி: உரை: கண் உடையவர் என்று உயர்த்திச் சொல்லப்படுபவர் கற்றவரே! மற்றைக் கல்லாதவர் முகத்தில் இரண்டு புண்ணுடையவரே யன்றிக் கண்ணுடையவர் அல்லர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கண்ணுடையர் என்பவர் கற்றோர்; கல்லாதவர் முகத்துஇரண்டு புண்ணுடையர் .

பதவுரை:
கண்-விழி; உடையர்-பெற்றுள்ளவர்; என்பவர்-என்று சொல்லப்படுபவர்; கற்றோர்-கல்வி பெற்றவர்; முகத்து-முகத்தின்கண்; இரண்டு-இரண்டு; புண்-வடு; உடையர்-பெற்றுள்ளவர்; கல்லாதவர்-கல்வி அறிவு பெறாதவர்கள்.


கண்ணுடையர் என்பவர் கற்றோர்:

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கற்றோர் கண்ணுடைய ரென்று சொல்லப்படுவர்:
பரிப்பெருமாள்: கண்ணுடையரென்று சொல்லப்படுவோர் கற்றோர்:
பரிதி: கல்வியான கண்ணுடைய பேர் கண்ணுள்ளவர்;
காலிங்கர்: கண்ணுடையர் என்று எடுத்து ஏற்றிச் சொல்லப்படுவார் கற்றவரே.
காலிங்கர் குறிப்புரை: மற்று அஃது எப்படியோ எனின் கண் முதலாகிய ஐம்பொறிகளும் தத்தம் பொருள்களைக் காணுமிடத்துக் கருவியாகிய ஞானக்கண்ணினால் அவற்று உண்மைத் தன்மையையும் அளவிறந்த வீடு ஆகிய நுண்பொருளையும் பழுதறக் காண்பர்;
பரிமேலழகர்: கண்ணுடையர் என்று உயர்த்துச் சொல்லப்படுவார் கற்றவரே;

'கற்றோரே கண்ணுடையர்' என்று பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்குப் பொருள் கண்டனர். காலிங்கர் 'கண்ணுடையர் என்று எடுத்து ஏற்றிச் சொல்லப்படுவார் கற்றார்' என்று விரித்தார். அதைப் பின்பற்றி பரிமேலழகரும் 'கண்ணுடையர் என்று உயர்த்துச் சொல்லப்படுவார் கற்றவர்' என்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'கற்றோர்க்கே கண் உண்டு', '(எண்ணும் எழுத்துமே கண்களாவதால்) கண்ணுள்ளவர்கள் என்று சொல்லத் தகுந்தவர்கள் எண்ணும் எழுத்தும் கற்றவர்களே ', 'படித்தவர்களே கண் உடையர் என்று சிறப்பிக்கப்படுவர்', 'சான்றோரே முகத்தில் கண்கள் உடையவர் என்று சொல்லப்படுவதற்கு உரியவர்கள்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கண்ணுடையவர் என்று சொல்லப்படுவர் கல்வி பெற்றவர் என்பது இப்பகுதியின் பொருள்.

முகத்துஇரண்டு புண்ணுடையர் கல்லாதவர்:

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கல்லாதார் முகத்தின்கண்ணே இரண்டு புண்ணுடைய ரென்று சொல்லப்படுவர்.
மணக்குடவர் குறிப்புரை: அறிவு கல்வியின் கண்ணதாகலான் அக்கல்வியில்லாதார் கண் புண்ணாயிற்று.
பரிப்பெருமாள்: கல்லாதார் முகத்திலே இரண்டு புண்ணுடையரென்று சொல்லப்படுவர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: அறிவு கல்வியின் கண்ணது ஆகலான், அக்கல்வியில்லாதார் கண் புண்ணாயிற்று. இது மேற்கூறி அதனை வலியுறுத்திற்று.
பரிதி: கல்வியான கண் இல்லாதார் குருடர்.
காலிங்கர்: இனிக் கல்லாதார், முகத்து இரண்டு புண்ணுடையார் அல்லது, மற்று யாது ஒன்றனையும் பழுதறக் காண்பதொரு கண்ணுடையர் அல்லர்.
காலிங்கர் குறிப்புரை: மற்ற அஃது இல்லார், புறத்தாகிய முகத்து இரண்டு நீர்ப்பசையறாது நெகிழ்ந்து, தோலும் தசையும் உடைய புண்கண்ணர்.
பரிமேலழகர்: மற்றைக் கல்லாதவர் முகத்தின்கண் இரண்டு புண்ணுடையர், கண்ணிலர்.
பரிமேலழகர் குறிப்புரை: தேயம்இடையிட்டவற்றையும் காலம் இடையிட்டவற்றையும் காணும் ஞானக்கண்உடைமையின் கற்றாரைக் கண்ணுடையர் என்றும் அஃதின்றி நோய்முதலியவற்றால் துன்பம் செய்யும் ஊனக்கண்ணேஉடைமையின், கல்லாதவரைப் புண்ணுடையர் என்றும் கூறினார்.மேல் கண்ணன்மை உணரநின்ற ஊனக்கண்ணின் மெய்ம்மைகூறியவாற்றான், பொருள் நூல்களையும் கருவிநூல்களையும்கற்றாரது உயர்வும், கல்லாதாரது இழிவும் இதனான் தொகுத்துக்கூறப்பட்டன.

பழைய ஆசிரியர்கள் 'கல்லாதார் முகத்திலே இரண்டு புண்ணுடையரென்று சொல்லப்படுவர்' என்று பொருள் உரைத்தனர். பரிதி 'கல்விக் கண் இல்லாதார் குருடர்' என்றும் காலிங்கர் 'கல்லாதார் யாது ஒன்றனையும் பழுதறக் காண்பதொரு கண்ணுடையர் அல்லர்' என்றும் கூறினர். பரிமேலழகர் 'ஞானக்கண்உடைமையின் கற்றாரைக் கண்ணுடையர் என்றும் பொருள் நூல்களையும் கருவிநூல்களையும் கல்லாதவர் ஊனக்கண் உடையவர் என்று சொல்லி கற்றவர் உயர்வும் கல்லாதவர் இழிவும் தொகுத்துக் கூறப்பட்டன' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'கல்லாதவர்க்கோ முகத்தில் இரண்டு புண் உண்டு', 'மற்றவர்களுடைய முகத்திலிருக்கும் கண்கள் புண்களுக்கு ஒப்பாகும்', 'படியாதவர்கள் தங்கள் முகத்திலே இரண்டு புண் உடையரேயன்றிக் கண் உடையார் ஆகார்', 'கல்லாதவர்கள் முகத்தில் இரண்டு புண்கள் உடையவராகக் கருதப்படுவர்' என்றபடி பொருள் இப்பகுதிக்கு உரைத்தனர்.

கல்லாதவர் முகத்திலே இரண்டு புண்கள் உடையவர்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கற்றவர்களே கண்ணுடையவர்கள் என்று அறியப்படுவர். கல்லாதவர் முகத்தில் புண்களை உடையவர்கள் என்பது பாடலின் பொருள்.
ஏன் கல்லாதவர் கண்களைப் புண்கள் என்கிறது இக்குறள்?

எண்ணையும் எழுத்தையும் பார்த்து அடையாளம் புரிந்துகொள்ளக் கூடியவரே கண்களுடையவர்; அங்ஙனம் இயலாதார் முகத்தில் புண்கள் உடையர்.

கற்றவர் கண்ணுடையவர். கல்லாதவர் கண் ஊனமுற்றது என்று சொல்லும் இப்பாடல் எழுதப்படிக்கத் தெரிதலின் இன்றியமையாமையை வலியுறுத்துவது. கண் படைத்தவர் எல்லாரும் உலகப் பொருள் அனைத்தையும் கண்டு இன்புறும் பேறு பெற்றவர்களே. ஆனால் எழுதப் படிக்கத் தெரியாத ஒருவர்க்குக் கண்பார்வை இருந்தும், அவரால் எண், எழுத்து வடிவங்களில் உள்ளவற்றைப் படித்து அறியவோ, தான் எண்ணுவதை அவ்வடிவங்களில் உணர்த்தவோ முடியாது என்பதால் அவர்கள் கண்கள் நோவுற்றுதாகத் தோன்றும். எனவே அவை புண்கள் எனப்பட்டன.
கல்வி என்பது எழுதப் படிக்கத் தெரிதலும், எண், எழுத்து வடிவில் அமைந்த நூல்களைக் கற்றலுமே. எழுதப்படிக்கத் தெரிவது கல்வியின் அடிப்படைக் கூறு. அப்பயிற்சியின் இன்றியமையாமையை உணர்த்துவதற்காகவே அது கண்ணுக்கு ஒப்பிட்டுச் சொல்லப்படுகிறது.

கல்லாதவர் கண்கள் ஏன் புண்கள் எனப்பட்டன?

கல்லாதவர் கண்கள் ஏன் புண்கள் என்று சொல்லப்பட்டதற்கு உரையாளர்கள் கூறிய காரணங்களிலிருந்து சில:

  • அறிவு கல்வியின் கண்ணதாகலான் அக்கல்வியில்லாதார் கண் புண்ணாயிற்று.
  • கண் முதலாகிய ஐம்பொறிகளும் தத்தம் பொருள்களைக் காணுமிடத்துக் கருவியாகிய ஞானக்கண்ணினால் அவற்று உண்மைத் தன்மையையும் அளவிறந்த வீடு ஆகிய நுண்பொருளையும் பழுதறக் காண்பர்; மற்ற அஃது இல்லார், புறத்தாகிய முகத்து இரண்டு நீர்ப்பசையறாது நெகிழ்ந்து, தோலும் தசையும் உடைய புண்கண்ணர்.
  • தேயம்இடையிட்டவற்றையும் காலம் இடையிட்டவற்றையும் காணும் ஞானக்கண்உடைமையின் கற்றாரைக் கண்ணுடையர் என்றும் அஃதின்றி நோய் முதலியவற்றால் துன்பம் செய்யும் ஊனக்கண்ணேஉடைமையின், கல்லாதவரைப் புண்ணுடையர் என்றும் கூறினார்.
  • பொருள்களின் உண்மைத்தன்மையை அறிவதற்குக் கல்வி தேவை. கல்விக்கண் இல்லாத பொழுது தவறாகவுணர்ந்து தீமையும் பயத்தலால் கல்வியறிவற்ற கண்களை புண்கள் என்றார்.
  • கல்வியில்லாதவர், பொருள்களின் தன்மையறியாமையினால் முறை பிறழக் கண்டும் முறை பிறழ நுகர்ந்தும் அல்லற்படுவதால், அவர்களுடைய கண்ணைப் புண் என்றார்.
  • பல வழிகளில் கற்ற பிறரைப் பார்க்கப் பார்க்கத் தமக்குத் துன்பத்தை உண்டாக்கக் காரணமாக இருப்பதால் அவர்களுடைய கண்கள் புண்களுக்குச் சமானம் எனப்பட்டது.
  • கல்லாதவர் தம் கண்களின் வயப்பட்டு பல பொருள்களைக் கண்டு ஆசைகொண்டு அவற்றையடைய முயன்று துன்புறுவர். ஆதலின் அவர் கண்களைத் துன்பம் தரும் புண்கள் என்று கூறினார்.
  • அயல்நாட்டைப் பற்றியும் பழங்காலத்தைப் பற்றியும் அறியும் அறிவுக் கண்ணுடைமையான் கற்றாரைக் கண்ணுடையர் என்றும் நோய் வருதல் பீளை தோன்றுதல் முதலிய துன்பஞ்செய்யும் ஊனக்கண்ணே உடைமையின் கல்லாரை முகத்திரண்டு புண்ணுடையர் என்றும் கூறினார்.
  • கல்லாதவர், கற்றார் முகத்துப் புண்; கல்லாதவர்க்குக் கற்றோரே கண்.
  • காலங்கடந்த கருத்துக்களையும் கண்டு, கருத்தை வளர்ப்பதால் கண் கண்ணாயிற்று. அதனையிழந்தது புண்ணாயிற்று என்பதாம். புண் நோவு செய்யும். அது போலக் கல்லார் கண் காண வேண்டிய முறையின்படி வரம்பின்படி கண்டு கருத்தை வளர்க்காது தவறான வழியினும் தூண்டி வருத்தம் விளைப்பதால் புண் ஆயிற்று.

'முகத்திரண்டு' என்று வெளிப்படையாகச் சொல்லப்பட்டதால் உடலுறுப்புக்களான முகத்திலுள்ள கண்களையே அவை குறிக்கும்.
புண் என்று அச்சொல்லின் நேர்ப்பொருளிலேயே அது இங்கு பயன்படுத்தப்பட்டது. புண் என்பது நோய் குறித்தது. நோய்வாய்ப்பட்ட கண் முழுமையாக இயங்கமுடியாமல் துன்பம் தரும். கல்லாதவர் பார்வை பெற்றிருந்தும் எண் எழுத்து வரிவங்களைக்கண்டு அவற்றைப் படிக்க இயலாமையால் துன்பத்தை உணர்வார்கள் ஆதலால் அக்கண்கள் புண்கள் எனச் சொல்லப்பட்டது. இப்பாடல் குறிக்கும் கல்லாதார் எழுதப் படிக்கத் தெரியாதவர்களே. எழுத்தறிவு பெற்றவனுக்கு அக்கல்வி. அவனது கண்ணுக்கும் ஒரு கண்ணாக அமையும் கல்வி பெறாதவனுக்கு அக்கண் இல்லை ஆதலால் புண் ஆகிறது.
மாந்தர் அனைவரும் எழுதப்படிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தவே இப்பாடலில் மிகக் கடுஞ்சொல்லான புண்ணுடையவர் என்று கல்லாதவரது கண்களை நலம் குறைந்த உறுப்புக்களாக இழித்துரைக்கிறார் வள்ளுவர்.

கற்றவர்களே கண்ணுடையவர்கள் என்று அறியப்படுவர். கல்லாதவர் முகத்தில் புண்களையுடையவர்கள் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

எழுதப்படிக்கப் பயிலும் கல்வி கண்போல் இன்றியமையாதது.

பொழிப்பு

கற்றவர்க்கு இருப்பனவே கண்கள். கல்லாதவர்க்கோ முகத்தில் இரண்டு புண்களே உள.