இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0392எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு

(அதிகாரம்:கல்வி குறள் எண்:392)

பொழிப்பு (மு வரதராசன்): எண் என்று சொல்லப்படுவன, எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இருவகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

மணக்குடவர் உரை: எண்ணென்று சொல்லப்படுவனவும் மற்றை எழுத்தென்று சொல்லப்படுவனவுமாகிய இவ்விரண்டு பொருளையும் உலகின்கண் வாழுமுயிர்களுக்குக் கண்ணென்று சொல்லுவர் அறிவோர்.

பரிமேலழகர் உரை: எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும் - அறியாதார் எண் என்று சொல்லுவனவும் மற்றை எழுத்து என்று சொல்லுவனவும் ஆகிய கலைகள் இரண்டினையும், வாழும் உயிர்க்குக் கண் என்ப - அறிந்தார் சிறப்புடை உயிர்கட்குக் கண் என்று சொல்லுவர்.
(எண் என்பது கணிதம். அது கருவியும் செய்கையும் என இருவகைப்படும். அவை ஏரம்பம் முதலிய நூல்களுள் காண்க. எழுத்து எனவே, அதனோடு ஒற்றுமையுடைய சொல்லும் அடங்கிற்று. இவ்விருதிறமும்,அறமுதற்பொருள்களைக் காண்டற்குக் கருவியாகலின், கண் எனப்பட்டன. அவை கருவியாதல் 'ஆதி முதலொழிய அல்லாதன எண்ணி. நீதி வழுவா நிலைமையவால் - மாதே, அறமார் பொருள் இன்பம் வீடுஎன்று இவற்றின் , திறமாமோ எண்ணிறந்தால் செப்பு'. 'எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான், மொழித்திறத்தின் முட்டறுப்பான் ஆகும், மொழித்திறத்தின், முட்டறுத்த நல்லோன் முதல் நூல் பொருள் உணர்ந்து , கட்டறுத்து வீடு பெறும்'. இவற்றான் அறிக. 'என்ப' என்பவற்றுள் முன்னைய இரண்டும் அஃறிணைப் பன்மைப் பெயர். பின்னது உயர்திணைப் பன்மை வினை. அறியாதார், அறிந்தார் என்பன வருவிக்கப்பட்டன. சிறப்புடைய உயிர் என்றது மக்கள் உயிருள்ளும் உணர்வு மிகுதி உடையதனை. இதனால் கற்கப்படும் நூல்கட்குக் கருவியாவனவும் அவற்றது இன்றியமையாமையும் கூறப்பட்டன.)

சி இலக்குவனார் உரை: எண் என்று சொல்லப்படும் அறிவியலும் (Science) எழுத்து என்று சொல்லப்படும் கலை இயலும் (Arts) உண்மையாக வாழ்கின்றவர்கட்குக் கண்கள் என்று சொல்லுவார்கள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் வாழும் உயிர்க்கு கண்என்ப.

பதவுரை: எண்-கணிதம்; என்ப-என்று சொல்லப்படுபவை (அஃறிணைப் பன்மைப் பெயர்); ஏனை-மற்றும்; எழுத்து-எழுதப்படுவது, இலக்கண இலக்கிய அறிவு; என்ப-என்று சொல்லப்படுபவை (அஃறிணைப் பன்மைப் பெயர்); இவ்விரண்டும்-இவை இரண்டும்; கண்-விழி; என்ப-என்று சொல்லுவர் (உயர்திணைப் பன்மைவினை); வாழும்-வாழும், சிறப்புடைய; உயிர்க்கு-உயிருக்கு.


எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எண்ணென்று சொல்லப்படுவனவும் மற்றை எழுத்தென்று சொல்லப்படுவனவுமாகிய இவ்விரண்டு பொருளையும்;
பரிப்பெருமாள்: எண்ணென்று சொல்லப்படுவனவும் ஒழிந்த எழுத்தென்று சொல்லப்படுவனவுமாகிய இவ்விரண்டு பொருளையும்;
பரிதி: எண்ணாகிய சோதிடமும் எழுத்து முதலாகிய அஞ்சு லட்சணமும்; [அஞ்சு லட்சணமும்-எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்து இலக்கணங்களும்]
காலிங்கர்: எண் என்றது இருமை இன்பமும் தமது உள்ளத்தால் தெரிந்து பிரித்து எண்ணிக் கொள்வது. எழுத்து என்றது தாம் கற்கும் கல்விக்குத் துணையுறுப்பாகிய எழுத்து என்று ஆயிற்று. மற்று இவ்வாறன்றிக் கணக்கு நிலை ஆகிய சிற்றெண்ணும், பேரெண்ணும், நிறை எண்ணும், நிலவெண்ணும், பிறவும் ஆகிய நுண்குறி எண் என்றும், மற்று இவற்றின் அறிகுறி எழுத்தாய் அடிப்பட வருகின்ற தொகை விரி எழுத்தும் என்றும்; [துணையுறுப்பு-கருவி நூல்]
பரிமேலழகர்: அறியாதார் எண் என்று சொல்லுவனவும் மற்றை எழுத்து என்று சொல்லுவனவும் ஆகிய கலைகள் இரண்டினையும்
பரிமேலழகர் விரிவுரை: எண் என்பது கணிதம். அது கருவியும் செய்கையும் என இருவகைப்படும். அவை ஏரம்பம் முதலிய நூல்களுள் காண்க. எழுத்து எனவே, அதனோடு ஒற்றுமையுடைய சொல்லும் அடங்கிற்று. அவை கருவியாதல் 'ஆதி முதலொழிய அல்லாதன எண்ணி
நீதி வழுவா நிலைமையவால் - மாதே
அறமார் பொருள் இன்பம் வீடுஎன்று இவற்றின்
திறமாமோ எண்ணிறந்தால் செப்பு'

'எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான்
மொழித்திறத்தின் முட்டறுப்பான் ஆகும், மொழித்திறத்தின்
முட்டறுத்த நல்லோன் முதல் நூல் பொருள் உணர்ந்து
கட்டறுத்து வீடு பெறும்'
இவற்றான் அறிக. 'என்ப' என்பவற்றுள் முன்னைய இரண்டும் அஃறிணைப் பன்மைப் பெயர். பின்னது உயர்திணைப் பன்மை வினை. அறியாதார், அறிந்தார் என்பன வருவிக்கப்பட்டன. [அவை கருவியாதல்-எண்ணும் எழுத்தும் காரணமாதல்]

இங்குள்ள எண் என்றதற்குத் தொல்லாசிரியர்கள் அனவருமே கணிதம் என்றே கொண்டதாகத் தெரிகிறது. பரிதி 'எண்ணாகிய சோதிடமும்' என்கிறார். காலிங்கர் முதலில் எண்ணிக் கொள்வது என்று பொருள் கூறிவிட்டுப் பின் கணிதப் பிரிவுகளைக் குறிப்பிடுகிறார். பரிமேலழகர் மட்டுமே கணிதம் என்று நேரடியாகத் தெரிவித்தார். மேலும் இவர் ஏரம்பம் என்னும் கணிதநூலின் பெயரையும் சுட்டுகிறார்.
எழுத்து என்ற சொல்லுக்கு மணக்குடவரும் பரிப்பெருமாளும் எழுத்து என்று குறிப்பிட்டு விளக்கம் ஏதும் அளிக்கவில்லை. பரிதி எழுத்து முதலாகிய அஞ்சு லட்சணம் அதாவது எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்து இலக்கணங்களைக் குறிக்கிறார். காலிங்கர் கல்விக்குக் கருவி நூலாகும் எழுத்து என்றார். பரிமேலழகர் எழுத்து என்பது எழுத்தையும் சொல்லையும் குறித்தது என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'எண்ணும் எழுத்தும் ஆகிய இரண்டும்', 'எண் என்று சொல்வனவும் எழுத்து என்று சொல்வனவும் ஆகிய இவ்விருவகைக் கல்வியும்', 'கணக்கெண்ணுதல், எழுத்தறிதல் ஆகிய இரண்டும்', 'கணக்கு நூலென்றும் எழுத்து நூலென்றும் பிறர் கூறுவனவற்றை' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எண் என்று சொல்லப்படுவனவும் எழுத்து என்று சொல்லப்படுவனவும் ஆகிய இவை இரண்டையும் என்பது இப்பகுதியின் பொருள்.

கண்என்ப வாழும் உயிர்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உலகின்கண் வாழுமுயிர்களுக்குக் கண்ணென்று சொல்லுவர் அறிவோர்.
பரிப்பெருமாள்: ஓருலகின்கண் வாழுமுயிர்களுக்குக் கண்ணென்று சொல்லுவர் அறிவார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேற்பொதுப்படக் கூறிய கல்வி பலவற்றுள்ளும் இவை இரண்டும் சிறப்புடைத்து என்று கூறிற்று. உயிர் என்றது மக்களை. இவையறிவார் மக்கள் ஆதலின்.
பரிதி: இரண்டு கண்ணாம்.
காலிங்கர்: இவை இரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு எனலுமாம்.
பரிமேலழகர்: அறிந்தார் சிறப்புடை உயிர்கட்குக் கண் என்று சொல்லுவர்.
பரிமேலழகர் குறிப்புரை: இவ்விருதிறமும்,அறமுதற்பொருள்களைக் காண்டற்குக் கருவியாகலின், கண் எனப்பட்டன. சிறப்புடைய உயிர் என்றது மக்கள் உயிருள்ளும் உணர்வு மிகுதி உடையதனை. இதனால் கற்கப்படும் நூல்கட்குக் கருவியாவனவும் அவற்றது இன்றியமையாமையும் கூறப்பட்டன. [உணர்வு மிகுதியுடையது-அறிவு மிகுந்திருப்பது; கருவியாவன-காரணமாவன]

'வாழும் உயிர்க்கு' என்ற சொற்றொடர்க்கு மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர் மூவரும் 'வாழும் உயிர்க்கு' என்றே கொண்டனர். பரிப்பெருமாள் எண்ணையும் எழுத்தையும் அறியக்கூடியவர் மக்கள் ஆதாலால் உயிர் என்றது உயர்திணைப் பொருளில் வந்ததாக விரித்தார். பரிமேலழகர் சிறப்புடை உயிர்களுக்கு என்று உரை தருவார்.

இன்றைய ஆசிரியர்கள் 'வாழ்வார்க்குக் கண்கள் என்பர்', 'உயிர் வாழும் மக்களுக்குக் கண் என்று சொல்லுவார்கள்', 'மனிதன் நல்லறிவு அடைவதற்கு வழிகாட்டும் இருகண்களைப் போன்றவை', 'உலகத்து வாழும் அறிவுடை மக்களுக்கு இரு கண்களென்று அறிஞர் சொல்லுவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உயிர்வாழ் மக்களுக்குக் கண்கள் என்று சொல்வார்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
எண் என்று சொல்லப்படுவன மற்றும் ஏனைய எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இவை இரண்டையும் வாழும் உயிர்களுக்குக் கண்கள் என்பர் என்பது பாடலின் பொருள்.
'வாழும்உயிர்' குறிப்பது என்ன?

கணிதமும் இலக்கியமும் மாந்தர்க்கு இன்றியமையாத் தேவையான அறிவுக் கண்களாம்.

எண் என்று சொல்லப்படும் கணிதநூல் அறிவும், எழுத்து என்று சொல்லப்படும் இலக்கண இலக்கிய நூலறிவு ஆகிய இவ்விரண்டும் உலகில் வாழும் மக்களுக்குக் கண்கள் போன்றவை என்று கூறுவர்.
எண்ணும் எழுத்தும் என்றது எண்ணூலறிவு, எழுத்தறிவு இவற்றைக் கற்றலைக் குறிக்கும். எண்ணூலென்பது எண்ணை அடிப்படையாகக் கொண்டது. எழுத்து நூலென்பது எழுத்தை உறுப்பாகக் கொண்ட சொற்களால் அமைந்தது. வள்ளுவர் காலத்தில் எண் என்பது கணக்கும் இலக்கணங்களும் ஆகியவற்றைக் குறித்தது என்று பழைய உரைகள் வாயிலாக அறியமுடிகிறது. எண் என்பதற்குக் காலிங்கர் வேற்றுரையாக 'கணக்கு நிலை ஆகிய சிற்றெண்ணும், பேரெண்ணும், நிறை எண்ணும், நிலவெண்ணும், பிறவும் ஆகிய நுண்குறி எண் என்றும்' எனக் கணிதவகைகளைக் குறிப்பிடுகிறார். பரிமேலழகரும் கணிதம் பற்றி 'ஏரம்பம் முதலிய நூல்களுட் காண்க' எனக் கூறுவதால் அவர் காலத்திலும் முன்னரும் கணிதம் பற்றிப் பல நூல்கள் இருந்துள்ளன எனத் தெரிகிறது. ('ஏரம்பம்' இன்று நமக்குக் கிடைக்கவில்லை; அது அழிந்து போயிருக்கக்கூடும்). கணித நூல் என்பதில் அளவையியல் (logic தர்க்கம்), நூல்களும் அறிவியல் நூல்களும் அடங்கும். அது பொருளாதரத்துறைக்கும் வணிகத்துக்கும் நல்ல கருவிப் பொருளாகவும் உள்ளது.
எழுத்துநூல் என்று சொல்லப்பட்டது கணிதம் தவிர்த்த ஏனைய கலை நூல்கள் குறித்தது. கலை நூல்கள் என்னும்போது இலக்கிய இலக்கண நூல்களன்றி அரசியல், பொருளியல், கவிதை, காப்பியங்கள், சமயம், தத்துவம், மருத்துவம், இன்னபிற நூல்களும் அடங்கும். எழுத்து நூல்கள் தகவல் பரிமாற்றங்களுக்குப் பெரிதும் உதவுவன. மேலும் பொருளியல் போன்ற அனைத்து வாழ்வியல் கருத்துக்களையும் தெரிந்துகொள்ளும் கருவியாகவும் உள்ளன. எழுத்துநூலான இலக்கியம் கவின் கலையாய் உள்ளத்துக்கு உவகை ஊட்டும் இயல்பு கொண்டது.
வா செ குழந்தைசாமி இக்குறளில் உள்ள. 'ஏனை எழுத்தென்ப' என்ற தொடரை ஆய்ந்து எண்ணுக்கு வள்ளுவர் தெரிந்தே இக்குறளில் முதலிடம் தந்துள்ளார் என்பதை இவ்வாறு விளக்குகிறார்: 'எண்ணென்ப ஏனை எழுத்தென்ப என்கிறார். 'ஏனைய' என்று சொல்லும்போதே சொல்லப்படும் பொருள் முதல் இடத்தை இழந்து விடுகிறது. வள்ளுவர் எண்ணுக்கு முதல் இடத்தையும் எழுத்துக்கு அடுத்த இடத்தையும் வெறும் எதுகை நயத்துக்காக மட்டும் இப்பாடலில் கொடுக்கவில்லை. அன்றையக் காலத்தில் தத்துவ அறிஞர்கள் என்று கூறப்பட்ட பல மேதைகள் கணித மேதைகளாகவும் இருந்திருக்கின்றனர். இவர்கள் எண்ணை, கணிதத்தை, கடவுளுக்கு இணையாக வியந்து போற்றினர். அன்றைய உலகின் அறிவுத்துறைகள் பலவற்றின் வளர்ச்சியை முழுமையாக உணர்ந்து, எண்ணின் இடத்தையும், எழுத்தின் இடத்தையும் ஆழமாய்ச் சிந்தித்து கணிதத்தின் முக்கியத்துவம் அறிந்தே எழுதியிருக்கிறார்.'
இன்றைய கல்வி முறையிலும் அறிவியல், கலையியல் என இருபெரும் பிரிவுகளாகப் பாடங்கள் பிரித்து அமையப்பெற்றுள்ளமை எண்ணத்தக்கது. இப்பொழுது உள்ள பகுப்புப்படி எண்ணையும் எழுத்தையும் இக்குறளில் திணித்ததாகக் கொள்ளப்பட வேண்டியதில்லை. முழுக்க முழுக்க இப்பாகுபாடே அன்றைக்கும் இருந்தது என்று சொல்லமுடியாவிட்டாலும் பெரிதும் அந்தவகையில் இருந்தது என்று கொள்வதில் குற்றம் ஏதும் இல்லை.

செயற்கை அறிவு தரும் கல்வியானது எண், எழுத்து என்னும் இரு பெரும் பிரிவில் அடங்கக் கூடியது. இன்று அவை அறிவியல், கலை என அறிப்படுகின்றன.
கணித அறிவின் பயன் மிகப்பல. கணிதமானது எல்லாத்துறைகளிலும் கோலோச்சுவது. அது அறிவியல் துறைகளுக்கெல்லாம் தாய் என்றும் அறிவியற் கலைகளின் அரசி (The Queen of Sciences) என்றும் கூறப்படுகிறது. நாகரீக உலகம் கணிதம் இன்றி இயங்க முடியாது. எழுத்து இலக்கியம் வாழ்வியலின் சிறப்புக்குரிய அறங்களை உணர்த்தி இன்பம் பயப்பது. எண் கற்பது அறிவியல் அறிவை வளர்ப்பதற்காக; எழுத்து பயில்வது பண்பாட்டை மேம்படச் செய்வதற்காக. எனவே இவை கண்கள் எனப்பெற்றன. ஒளவையாரும் "எண்ணும் எழுத்தும் கண்ணெணத் தகும்" என்று இன்னும் சுருக்கமாகக் கூறினார்.
கணிதத்திலும் இலக்கியத்திலும் சிறந்தோர் நிறைவான வாழ்வுபெறுவர் என்பது உண்மை.
சிறந்ததாக நாம் போற்றுவதை கண் எனக் கூறுவோம்; வள்ளுவர் கல்வியைக் கண் எனக் குறிக்கிறார். இரண்டு கண்களும் பொருந்தி இருத்தல் முகத்திற்கு அழகு. எண்ணும் எழுத்தும் பொருந்தியிருத்தல் கற்ற கல்விக்கு அழகு. கண்கள் என்றதால், இவற்றின் வழியே உலகப் பொருள்களையறியலாம் என்பது பெறப்படும். கண்களிலே எந்தக் கண் தேவை-இடது கண்ணா வலது கண்ணா? இரண்டுமே வேண்டும். அதுபோல எண் எழுத்து இரண்டுமே கண்கள் போல் சிறப்புப்பெற்றவை. கண்கள் என்றதனால் இவ்விருவகை நூலறிவும் பெறுதல் ஒருவரது வாழ்க்கைக்கு இன்றியமையாதது என அறியலாம். இவ்விருவகை நூல்வகுப்புக்களும், உலகப்பொருள்களை அறிதற்குக் கண்கள்போல் உதவுவன. எண்ணும் எழுத்தும் ஆகிய எல்லா நூல்களையும் கற்பது மேன்மை தரும் என்பது கருத்து.

'வாழும்உயிர்' குறிப்பது என்ன?

வாழுமுயிர்க்கு என்ற தொடர் வாழ்கின்ற உயிர்களுக்கு என்று பொருள்படும்.
எல்லோரும் கற்க என்பதே வள்ளுவம். 'கற்றற்கு இன்னார் உரியர்; இன்னார் உரியல்லர் என்ற ஆளொதுக்கம் திருக்குறளில் அறவே இல்லை. வாழ்வு வேண்டின் வேண்டுக கல்வி என்னும் அடிப்படை நனி சுருக்கமாக 'கண் என்ப வாழும் உயிர்க்கு' என்றார் வள்ளுவர் (வ சுப மாணிக்கம்).
வாழும் உயிர்க்கு என்று மக்கள் அனைவர்க்கும் பொதுவாகக் கூறியுள்ளார் அவர். ஆள்வோர், குடிமக்கள், ஆடவர், பெண்டிர், ஏழை, பணக்காரன் என்று எந்தவித பாகுபாடும் இல்லாமல் மக்களாய்ப் பிறந்த அனைவரும் கற்க வேண்டும் என வேற்றுமை பாராட்டாமல் அனைவருக்கும் கல்வியுரிமை வழங்குகின்றார்.
வாழும் உயிர் என்பது நல்வாழ்வு நடத்த விரும்பும் மனிதன் என்ற பொருள் தருவது. வாழும் உயிர்கட்கு எண்ணும் எழுத்தும் இன்றியமையாதன என்றதனால், எண்ணையும் எழுத்தையும் கல்லாதவர்கள் வாழாதவர்கள் ஆகின்றனர் என்பதும் பெறப்படுகிறது.

'வாழும்உயிர்' என்றது உலகில் உயிர் வாழும் மக்கள் குறித்தது.

கணிதம் எழுத்து அறிவு இவை இரண்டும் உயிர்வாழ் மக்களுக்குக் கண்கள் போன்றவை என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கல்வி உலகப்பொருள்களை உணர்ந்து கொள்ளும் ஆற்றலைத் தரும்.

பொழிப்பு

எண் எனப்படுவனவும் மற்று எழுத்து எனப்படுவனவும் ஆகிய இவ்விருவகைக் கல்வியும் வாழ்வார்க்குக் கண்கள் என்பர்.