இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0391கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

(அதிகாரம்:கல்வி குறள் எண்:391)

பொழிப்பு (மு வரதராசன்): கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்ற பிறகு கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

மணக்குடவர் உரை: கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க: கற்றபின்பு அக்கல்விக்குத் தக வொழுக.
இது கற்கவும் வேண்டும்: அதனை கடைப்பிடிக்கவும் வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: கற்பவை கசடு அறக் கற்க - ஒருவன் கற்கப்படு நூல்களைப் பழுதறக் கற்க, கற்றபின் அதற்குத் தக நிற்க - அங்ஙனம் கற்றால், அக்கல்விக்குத் தக அவை சொல்லுகின்ற நெறிக்கண்ணே நிற்க. ('கற்பவை' என்றதனான், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் உணர்த்துவன அன்றிப் பிற பொருள் உணர்த்துவன, சின்னாள் பல்பிணிச் சிற்றறிவினர்க்கு ஆகா என்பது பெற்றாம். கசடறக் கற்றலாவது: விபரீத ஐயங்களை நீக்கி மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல். நிற்றலாவது: இல்வாழ்வுழிக் 'கருமமும் உள்படாப் போகமும் துவ்வாத், தருமமும் தக்கார்க்கே செய்தலினும் (நாலடி. 250)துறந்துழித் தவத்தான் மெய் உணர்ந்து அவா அறுத்தலினும் வழுவாமை. சிறப்புடை மகற்காயின்கற்றல் வேண்டும் என்பதூஉம், அவனால் கற்கப்படும்நூல்களும், அவற்றைக் கற்குமாறும், கற்றதனால் பயனும்இதனாற் கூறப்பட்டன.)

வ சுப மாணிக்கம் உரை: கற்கத்தக்க நூல்களைத் தெளிவாகக் கற்க; கற்றபின் தக்கபடி வாழ்வில் நிற்க.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கற்பவை கசடறக் கற்க கற்றபின் அதற்குத் தக நிற்க.

பதவுரை:
கற்க-கற்றுக் கொள்க; கசடற-பழுதற; கற்பவை-கற்க வேண்டியவை; கற்றபின்-கற்றபின்பு; நிற்க-ஒழுகுக; அதற்கு-அதற்கு; தக-பொருந்த.


கற்க கசடறக் கற்பவை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க;
பரிப்பெருமாள்: கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க;
பரிப்பெருமாள் குறிப்புரை: கல்வி பல வகைத்து. அவை எல்லாவற்றுள்ளும் கற்கப்படுவனவற்றைக் கற்று.
பரிதி: கல்வியைப் பிழையறக் கற்க;
காலிங்கர்: முதற்சொன்ன எண்ணும் எழுத்துமாகிய இவை இரண்டையும் துணை உறுப்பாகக் கொண்டு, தாம் கற்கும் அவற்றை மாசறக் கற்று உணர்க;
பரிமேலழகர்: ஒருவன் கற்கப்படு நூல்களைப் பழுதறக் கற்க;
பரிமேலழகர் குறிப்புரை: 'கற்பவை' என்றதனான், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் உணர்த்துவன அன்றிப் பிற பொருள் உணர்த்துவன, சின்னாள் பல்பிணிச் சிற்றறிவினர்க்கு ஆகா என்பது பெற்றாம். கசடறக் கற்றலாவது: விபரீத ஐயங்களை நீக்கி மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல்.

இப்பகுதியிலுள்ள கசடற என்பதற்குத் தொல்லாசிரியர்கள் குற்றமற, பிழையற, மாசற, பழுதற என்று பொருள் உரைத்தனர். இச்சொல்லுக்கு இவர்கள் அனைவரும் தரும் பொருள் ஒரு கருத்துடையதுவே. கற்பவை என்பதற்கு மணக்குடவரும் பரிப்பெருமாளும் 'கற்கப்படுவனவற்றை' என்று பொதுமையில் உரை கூறினர். பரிப்பெருமாள் இதை விரித்து 'கல்வி பல வகைத்து. அவை எல்லாவற்றுள்ளும் கற்கப்படுவனவற்றை' என விளக்கியுள்ளார். பரிதி பொதுவாக கல்வி என்று கூறினார். காலிங்கர் 'எண்ணும் எழுத்துமாகிய இவை இரண்டையும் குறிக்கிறார். பரிமேலழகர் கற்கப்படு நூல்களாக 'அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் உணர்த்தும்' நூல்கள் என விளக்கம் தருவார்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவன் கற்க வேண்டிய நூல்களை (எண்ணும் எழுத்தும்) குற்றமறக் கற்க', 'கற்கவேண்டிய நூல்களைப் பழுதறக் கற்றல் வேண்டும்', 'கற்க வேண்டிய நூல்களைக் குற்றம் இல்லாமல் கற்க வேண்டும்', 'கற்க விரும்பும் ஒருவன் தான் கற்கத் தக்க நூல்களைக் குற்றமறக் கற்பானாக' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கற்க வேண்டியவற்றைப் பழுதறக் கற்றல் வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்

கற்றபின் நிற்க அதற்குத் தக:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கற்றபின்பு அக்கல்விக்குத் தக வொழுக.
மணக்குடவர் குறிப்புரை: இது கற்கவும் வேண்டும்: அதனை கடைப்பிடிக்கவும் வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: கற்றபின்பு அக்கல்விக்குத் தக வொழுக.
பரிப்பெருமாள் குறிப்புரை: அக்கல்வியிற் கூறினது தப்பாமற் செய்க. அது கல்வியாற் பயன் என்றவாயிற்று. இது கற்கவும் வேண்டும்: அதனை கடைப்பிடிக்கவும் வேண்டுமென்றது.
பரிதி: கற்றால் அந்த நெறியில் நிற்க.
காலிங்கர்: இங்ஙனம் தெளியக் கற்றபின் கல்விக்குத் தகும் ஒழுக்கத்தின் கண்ணே நிலைநிற்க என்றவாறு.
பரிமேலழகர்: அங்ஙனம் கற்றால், அக்கல்விக்குத் தக அவை சொல்லுகின்ற நெறிக்கண்ணே நிற்க.
பரிமேலழகர் குறிப்புரை: நிற்றலாவது: இல்வாழ்வுழிக் 'கருமமும் உள்படாப் போகமும் துவ்வாத், தருமமும் தக்கார்க்கே செய்தலினும் (நாலடி. 250)துறந்துழித் தவத்தான் மெய் உணர்ந்து அவா அறுத்தலினும் வழுவாமை. சிறப்புடை மகற்காயின்கற்றல் வேண்டும் என்பதூஉம், அவனால் கற்கப்படும்நூல்களும், அவற்றைக் கற்குமாறும், கற்றதனால் பயனும்இதனாற் கூறப்பட்டன.)

இப்பகுதியிலுள்ள 'கற்றபின்' என்றதற்கு மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர் ஆகிய மூவரும் 'கற்றபின்பு' என்று பொருள் கொள்ள, பரிதியும் பரிமேலழகரும் 'கற்றால்' எனக் கொண்டனர். 'நிற்க' என்ற சொல்லுக்கு 'கடைப்பிடிக்க' அதாவது 'உறுதியாகப் பற்றி ஒழுகவும்' என்றும் 'நிலைநிற்க' என்றும் உரை தந்தனர். 'தக' என்ற சொல்லுக்கு 'தப்பாமல்' என்றும் 'நெறிக்கண்' என்றும் பழம் ஆசிரியர்கள் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் ';கற்றால் அக்கல்விக்கு ஏற்ப நடக்க', 'அப்படிக் கற்றபின் அக்கல்விக்குத் தக்கபடி நல்லநெறியிலே நிற்றல் வேண்டும்', 'அங்ஙனம் கற்ற பிறகு அந்நூல்களில் கூறியுள்ள நெறிக்கேற்ப ஒழுகுதல் வேண்டும்', 'அவ்வாறு கற்றபின் அந்நூல்கள் கூறும் நெறிக்கு ஏற்ப ஒழுகுவானாக' என்றபடி பொருள் இப்பகுதிக்கு உரைத்தனர்.

கற்றபின்பு அதற்குப் பொருந்த ஒழுகுக என்பது இப்பகுதியின் பொருள்

நிறையுரை:

கற்க வேண்டியவற்றைப் பழுதறக் கற்றல் வேண்டும்; கற்றபின்பு நிற்க அதற்குத் தக என்பது பாடலின் பொருள்.
'நிற்க அதற்குத் தக' என்றால் என்ன?

கற்றால் மட்டும் போதாது; அவ்வறிவை வாழ்வியலில் கொண்டுவர வேண்டும்.

கசடு என்ற சொல்லுக்கு (ஐயம் திரிபுகளாகிய) குற்றம், மாசு, அழுக்கு அடிமண்டி, தழும்பு, வடு, குறைவு எனப் பல பொருள் உண்டு. இங்கு குற்றம் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. 'கற்க கசடுஅற' என்பதற்குக் குற்றமற, பழுதற, தெளிவுற, ஐயந்திரிபின்றிக் கற்கவேண்டும் என்பது பொருள்.
கசடறக் கற்றல் என்பதற்குக் குன்றக்குடி அடிகளார் 'நம்முடைய மனக்குற்றம் இன்னதென்பதை அறிந்து கொண்டு அதனை நீக்குதற்குரிய நூல்களாகத் தேர்ந்தெடுத்துக் கற்க வேண்டும்; குற்றம் நீங்குகிறவரையில் கற்க வேண்டும்' என்று மாறுபட்ட உரை வழங்கினார். அதாவது ஒருவன் வாழ்வின் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ள குணக்குற்றங்கள் அல்லது மனக் குற்றங்கள் நீங்கக் கற்றல் என்பது கருத்து என்றார். சிலர் 'நூல்களிலேயுள்ள குற்றங்களை விலக்கிக் கற்க' என்றனர். மற்றும் சிலர் 'நூலிலுள்ள கருத்துகளை அரைகுறையாகக் கற்காமல் முற்றுமாய்க் கற்க வேண்டும்' என்றனர். கவிராசர் 'கசடறக் கற்கிறதாவது அந்தச் சாஸ்திரம் ஒருவழியிருக்க தான் ஒருவழியைச் சொல்லாமல், மெய்யான பொருளை நல்லோரிடத்திலே பலகாலும் கேட்கிறது' என்றார். கசடு என்பதற்கு அறியாமை எனப் பொருள் கொண்டு அறியாமை நீங்குவதற்காகக் கற்க எனவும் உரை செய்தனர். நுனிப்புல் மேய்வது போல் மேலோட்டமாக படித்துவிட்டு மறந்துவிடாமல், அதிலுள்ள பொருளை ஆழமாக சிந்தித்துக் கற்கவேண்டும் என்றும் உரை உளது.
ஐயந்திரிபின்றிக் கற்பதே கசடறக் கற்றல் ஆகும். ஐயம்என்பது இதுவோ அதுவோ என்று ஐயுறுதலைக் குறிக்கும். திரிபு என்பது -உண்மைப் பொருளை விட்டு வேறு பொருள் கொள்ளுவதாகும்.

'கற்பவை' என்றது கற்கத்தக்க நூல்களைக் குறிக்கும். கல்வி கரையில. கற்பவர் வாழ்நாளோ சில. எனவே காணும் நூல்களை எல்லாம் படித்துக் காலத்தைக் கழித்தலாகாது. கற்க வேண்டியவற்றை மட்டுமே கற்கவேண்டும். கற்கத் தகுந்த நூல்கள், கற்றே ஆகவேண்டிய நூல்கள், வேண்டாத நூல்கள் என்று பாகுபாடு செய்து அவற்றிலிருந்து தேர்வு செய்து படிக்கவேண்டும். வேண்டாதவற்றையும் படித்துவிட்டு, மனம் கெட்டு, நேரத்தையும் முயற்சியையும் வீணாக்கி, குழப்பமான பாதையில் செல்லக் கூடாது.
கற்பவை என்பதற்கு 'எண்ணும் எழுத்துமாகிய அவ்விரண்டும்' என்றும் 'அறம் பொருள் இன்பம், வீடு முதலான உறுதிப்பொருள் உணர்த்துவன என்றும் 'பொதுக்கல்வியும் தொழில் தொறும் வேறுபட்ட சிறப்புக்கல்வியும் என்றும்' வாழ்க்கையைப் பண்பு நெறியில் நடத்த உதவுவன என்றும் பலவாறாக உரையாளர்கள் பொருள் கூறினர்.. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப....... என அடுத்து வரும் குறள் 392-இல் சொல்லப்பட்டிருப்பதால் 'கற்பவை என்பதற்கு அதையே ஏற்றதொரு விளக்கமாகக் கொள்ளலாம்.

கற்றபின் என்ற சொற்றொடர்க்கு 'கற்றபின்பு' என்றும் 'கற்றால்' என்றும் இருவகையாகப் பொருள் உரைத்தனர்.
கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு. கல்வி கற்றற்கு முடிவே இல்லாதபோது கற்ற பிறகுதான் அதன்படி நடக்கவேண்டும் என்பது பொருத்தமாக இருக்க முடியாது. கற்றபிறகு எனக் கூறினால் கல்விக்கு எல்லை உண்டு எனவும், அதற்குமேல் கற்பதற்கு ஒன்றுமில்லை எனவும் ஆகிறது என்பது சிலர் கருத்து. பரிதியும் பரிமேலழகரும் 'பின்' என்பதை இடைச்சொல்லாகக் கொண்டு 'கற்றால்' அதாவது கற்றால் கற்ற அளவிற்குச் செயற்படுத்துக என்னுமாறு பொருள் கூறினர். 'கற்றால் நிற்க' என்பது 'கற்றபின் நிற்க' என்பதில் உள்ள கால இடைவெளியைத் தவிர்த்துப் பொருள் உணர்த்துவதால் பொருட் சிறப்புடையது என்பார் இரா சாரங்கபாணி. தண்டபாணி தேசிகரும் இதே கருத்தினரே. எல்லையில்லாக் கல்வி என்று பொருளாக்காமல் எதைக் கற்கிறோமோ அதைக் கற்றபின்பு என்று கொள்வதில் குறை ஒன்றும் இருக்க முடியாது.

இக்குறள் வல்லிசை வண்ணம் உடையது. இது ஆசிரியரின் கடுமையான கட்டளை என்பதற்காக வல்லிசை வண்ணமும் வெட்டுச் சந்தமும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆசிரியரின் ஆணை என்பது பயனிலையை ஏவல் வடிவத்தில் (கற்க) முதலில் வைத்திருப்பதாலும் அறியலாம் என்பார் செ வை சண்முகம்.

எண்ணும் எழுத்துமாகிய இரண்டையும் கருவி நூல்களாகக் கொண்டு கற்பனவற்றைக் குற்றமின்றி, ஐயம்திரிபு அகற்றி ஆழ்ந்து கற்கவேண்டும். பின் அவ்வாறு கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்தவேண்டும் என்பது இக்குறள் தரும் செய்தி.

'நிற்க அதற்குத் தக' என்றால் என்ன?

நிற்க என்ற சொல் ஒழுகுக என்ற பொருள் தரும். அதற்குத்தக என்ற தொடர்க்கு அதற்குப் பொருந்த என்று பொருள் கொள்வர். 'நிற்க அதற்குத் தக' என்ற தொடர் அதற்குப் பொருந்த ஒழுகுக எனப் பொருள்படும். நிற்க என்ற சொல் 'கற்றல்மட்டும் அமையாது; கற்ற வண்ணம் நிற்க' என விதிக்கிறது. கற்பது எதற்காக? கற்ற கல்விக்குத் தக்கவாறு நல்ல நெறியில் நிற்பதற்காகவே கற்கவேண்டும். கற்கவும் வேண்டும்: கற்றதைக் கடைப்பிடிக்கவும் வேண்டும் என்கிறது இப்பாடல்.
'நிறக அதற்குத் தக' என்ற தொடரை விளக்குமிடத்து 'கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமன்று, அந்த அறிவுக்கேற்ப ஒழுகுதலே கல்வியாகும். எனவே வாழ்வுக்காகவே கல்வி என்ற அழகிய கருத்தும் வெளியாகிறது என்பார் தெ பொ மீ.
'அதற்குத் தக நிற்க’ என்று சொல்லப்பட்டதால் இங்கே குறிக்கப்படுகிற கல்வி மனிதப்பண்புகளை வளர்த்து ஒழுக்கமுள்ள வாழ்க்கை நடத்த உதவுகிற 'கல்வி' மட்டும்தான்; கலைக் கல்விகளோ தொழிற்கல்விகளோ இதில் அடங்கா; ஏன் எனில் ''நிற்க அதற்குத் தக'' என்று வேறு எந்தக் கல்வியோடும் சேர்த்துச் சொல்ல முடியாது' என்றபடியான ஓர் கருத்தும் உள்ளது. ஆனால் 'நிற்க அதற்குத்தக' என்பதை எவ்வகைக் கல்வியாயினும், பெற்ற அறிவுக்கேற்ப ஒழுகுதல் என்பதாகவே புரிந்துகொள்ள வேண்டும். 'நிற்றலாவது, பொதுக்கல்விக்கேற்ப அறநெறியிலொழுகுதலும் சிறப்புக்கல்விக்கேற்பச் செவ்வையாய்த் தொழில் செய்தலும் ஆம். இவ்விருவகை நடத்தையிலும் நிலைத்து நிற்க வேண்டு மென்றற்கு 'நிற்க' என்றார்' என்பது தேவநேயப் பாவாணர் தரும் விளக்கம். எனவே பண்பு சார்ந்த கல்வி மட்டும்தான் இங்கு சொல்லப்பட்டுள்ளது எனப் பொருள்கொள்ள வேண்டியதில்லை.

நிற்க அதற்குத் தக' என்னும் தொடரிலுள்ள 'அதற்கு' என்பது மேலடியில் உள்ள 'கற்பவை' என்னும் சொல்லைச் சுட்டுவதாக அமைகிறது. 'கற்பவை' என்பது பன்மை காட்டும் சொல். 'அதற்கு' என்பது ஒருமையைச் சுட்டும் சொல்லாகும். 'அதற்குத் தக' என்றதற்குப் பதில் 'அவற்றிற்குத் தக' என இருத்தல் வேண்டும். இந்த முரணைக் களைவதற்காகக் கற்க வேண்டிய நூல்களை என்னும் பன்மையைத் தொகுதி ஒருமையாக்கி 'அக்கல்விக்குத்தக' எனப் பொருள் கூறினர் மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர், பரிமேலழகர் ஆகிய பழம் ஆசிரியர்கள். அவை போலக் கற்க வேண்டிய நூல்கள் என்பது பன்மையாக இருந்தாலும் அக்கல்விக்கு என்னும்போது தொகுதி ஒருமையாகிறது.அதிகார இயைபு

கல்வியின் நோக்கம் தேர்ந்தெடுத்துக் கருத்தூன்றிக் கற்பதும், கற்றதைக் கடைப்பிடிப்பதுமாம்.

பொழிப்பு

கற்கவேண்டியவற்றைத் தெளிவாகக் கற்றல் வேண்டும். அப்படிக் கற்றபின் அக்கல்விக்குத் தக்கபடி நிலைநிற்றல் வேண்டும்.