இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0390



கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க்கு ஒளி

(அதிகாரம்:இறைமாட்சி குறள் எண்:390)

பொழிப்பு (மு வரதராசன்): கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிகளைக் காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்.

மணக்குடவர் உரை: கொடுத்தலும், தலையளி செய்தலும், செங்கோன்மையும் குடிகளைப் பாதுகாத்தலுமென்று சொல்லப்படுகின்ற இந்நான்கினையு முடையவன் வேந்தர்க்கெல்லாம் விளக்காம்.
கொடுத்தல்-தளர்ந்த குடிக்கு விதை ஏர் முதலியன கொடுத்தல்: அளித்தல்- அவரிடத்துக் கொள்ளுங் கடமையைத் தளர்ச்சி பார்த்து விட்டு வைத்துப் பின்பு கோடல்: செங்கோன்மை- கொள்ளும் முறையைக் குறையக் கொள்ளாமை: குடியோம்பல்- தளர்ந்த குடிக்கு இறை கழித்தல். இது குடிக்கு அரசன் செய்யுந் திறங் கூறிற்று.

பரிமேலழகர் உரை: கொடை - வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தலும், அளி- யாவர்க்கும் தலையளி செய்தலும், செங்கோல் - முறை செய்தலும், குடி ஓம்பல் - தளர்ந்த குடிகளைப் பேணலும் ஆகிய, நான்கும் உடையான் -இந்நான்கு செயலையும் உடையான், வேந்தர்க்கு ஒளியாம் - வேந்தர்க்கு எல்லாம் விளக்கு ஆம்.
(தலையளி - முகம் மலர்ந்து இனிய கூறல், செவ்விய கோல்போறலின், 'செங்கோல்' எனப்பட்டது. 'குடி ஓம்பல்' எனஎடுத்துக் கூறியமையால், தளர்ச்சி பெற்றாம். அஃதாவது,ஆறில் ஒன்றாய பொருள் தன்னையும் வறுமை நீங்கியவழிக் கொள்ளல்வேண்டின், அவ்வாறு கோடலும், இழத்தல் வேண்டின்இழத்தலும் ஆம். சாதி முழுதும் விளக்கலின், 'விளக்கு'என்றார். ஒளி - ஆகுபெயர். இவை ஐந்து பாட்டானும் மாட்சியும்பயனும் உடன் கூறப்பட்டன.)

வ சுப மாணிக்கம் உரை: கொடை, அன்பு, நேர்மை, குடிபோற்றல் உடையவனே மன்னர்க்கு ஒளியாவான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கொடை, அளி, செங்கோல், குடிஓம்பல், நான்கும் உடையான் வேந்தர்க்கு ஒளி ஆம்.

பதவுரை:
கொடை-கொடுத்தல்; அளி-அருள்; செங்கோல்-முறை செய்தல்; குடி-குடி மக்கள்; ஓம்பல்-பேணல் நான்கும்-நாலும்; உடையான்-உடையவன் அதாவது உடைமையாகக் கொண்டவன்; ஆம்-ஆகும்; வேந்தர்க்கு-ஆட்சித்தலைவர்க்கு; ஒளி-விளக்கு.


கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும் உடையான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கொடுத்தலும், தலையளி செய்தலும், செங்கோன்மையும் குடிகளைப் பாதுகாத்தலுமென்று சொல்லப்படுகின்ற இந்நான்கினையு முடையவன்;
மணக்குடவர் குறிப்புரை: கொடுத்தல்-தளர்ந்த குடிக்கு விதை ஏர் முதலியன கொடுத்தல்: அளித்தல்- அவரிடத்துக் கொள்ளுங் கடமையைத் தளர்ச்சி பார்த்து விட்டு வைத்துப் பின்பு கோடல்: செங்கோன்மை- கொள்ளும் முறையைக் குறையக் கொள்ளாமை: குடியோம்பல்- தளர்ந்த குடிக்கு இறை கழித்தல்.
பரிப்பெருமாள்: கொடுத்தலும், தலையளி செய்தலும், செங்கோன்மையும் குடிகளைப் ஓம்புதலும் என்று சொல்லப்படுகின்ற இந்நான்கினையு முடையவன்;
பரிப்பெருமாள் குறிப்புரை: கொடுத்தல்-தளர்ந்த குடிக்கு விதையும் எரு முதலியனவும் கொடுத்தல்: அளித்தல்- அவரிடத்துக் கொள்ளுங் கடமையைத் தளர்ச்சி பார்த்து இட்டுவைத்துப் பின்பு முதலுண்டானால் கோடல்: செங்கோன்மை- கொள்ளும் முறைமை ஒழியக் கொள்ளாமை: குடியோம்பல்- தளர்ந்த குடிக்கு இறையை இழப்பித்தல்..
பரிதி: கொடையும், செங்கோல் நீதியும், குடியைப் பார்த்துக் காத்தலும், கருணையும் இந்த நாலு காரியமுள்ளவன்;
காலிங்கர்: அனைவர்க்கும் பொருள் வழங்கும் கைவணக்கமும், அளிக்கத் தகுவார்மாட்டு நிகழும் தண்ணளியும், அவரவர் குற்றமும் குணமும் தெரிந்து நடாத்தும் செங்கோலும், தனது குடைநிழற்கீழ் வாழும் குடிகளைப் பாதுகாக்கும் குறிக்கோளும் என்று சொல்லப்பட்ட இந்நான்கும் உடையவன் யாவன்.
பரிமேலழகர்: வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தலும், யாவர்க்கும் தலையளி செய்தலும், முறை செய்தலும், தளர்ந்த குடிகளைப் பேணலும் ஆகிய இந்நான்கு செயலையும் உடையான்;
பரிமேலழகர் குறிப்புரை: தலையளி - முகம் மலர்ந்து இனிய கூறல், செவ்விய கோல்போறலின், 'செங்கோல்' எனப்பட்டது. 'குடி ஓம்பல்' எனஎடுத்துக் கூறியமையால், தளர்ச்சி பெற்றாம். அஃதாவது, ஆறில் ஒன்றாய பொருள் தன்னையும் வறுமை நீங்கியவழிக் கொள்ளல்வேண்டின், அவ்வாறு கோடலும், இழத்தல் வேண்டின்இழத்தலும் ஆம்.

மற்ற பழைய உரையாசிரியர்கள் கொடை, அளி, செங்கோல், குடிஓம்பல் என்பனவற்றிற்கு வழக்கமான உரை விளக்கம் காண, மணக்குடவர்/பரிப்பெருமாள் ஆகிய இருவரும் கொடை, அளி, செங்கோல், குடிஓம்பல் என்ற சொற்களுக்கான விளக்கவுரையில் தளர்ந்த குடியை முன்னிறுத்தியே விளக்கம் தருகின்றனர். பரிமேலழகரும் இவ்வுரையைப் பின்பற்றி குடிஓம்பலுக்கு மட்டும் 'தளர்ந்த குடிகளைப் பேணல்' என்று உரை பகன்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறர்க்கு வேண்டுவன கொடுத்தல், அருள், நல்லாட்சி, குடிகாத்தல் என்னும் நான்கினையும் உடையான்', 'உதார குணம், ஜீவகாருண்யம், நீதி தவறாமை, குடிகளின் உடலுக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பளிக்கக்கூடிய ஆற்றல், ஆகிய நான்கும் அமைந்த அரசன்', 'ஈகையும் அன்பும் நடுநிலையும், தளர்குடி பேணுதலும் ஆகிய நான்கு நற் செயலையும் உடையவன்', 'வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தலும் யாவர்க்கும் உதவுதலும், செம்மையான வழியில் ஆளுதலும், மக்களைத் துன்பமின்றிக் காத்தலும் ஆகிய செயல்களை உடையவன்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கொடை, கருணை, முறைசெய்தல், குடிபேணுதல் என்னும் நான்கு மாட்சிகளையும் உடையவன் என்பது இப்பகுதியின் பொருள்.

ஆம் வேந்தர்க்கு ஒளி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வேந்தர்க்கெல்லாம் விளக்காம்.
மணக்குடவர் குறிப்புரை: இது குடிக்கு அரசன் செய்யுந் திறங் கூறிற்று.
பரிப்பெருமாள்: வேந்தர்க்கெல்லாம் விளக்காம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது குடிக்கு அரசன் செய்யுந் திறங் கூறிற்று.
பரிதி: இராசசூரியன்.
காலிங்கர்: மற்று அவனே அரசர்க்கு எல்லாம் அருக்கன். [அருக்கன் - சூரியன், பகலவன்]
பரிமேலழகர்: வேந்தர்க்கு எல்லாம் விளக்கு ஆம்.
பரிமேலழகர் குறிப்புரை: சாதி முழுதும் விளக்கலின், 'விளக்கு' என்றார். ஒளி - ஆகுபெயர். இவை ஐந்து பாட்டானும் மாட்சியும்பயனும் உடன் கூறப்பட்டன.

வேந்தர்க்கு என்ற சொல்லுக்கு தொல்லாசிரியர்கள் அனைவரும் 'அரசர்க்கு எல்லாம்' என்ற பொருளில் உரை தந்தனர். ஒளி என்ற சொல்லுக்கு உரை வழங்கும்போது மணக்குடவர், பரிமேலழகர் இருவரும் விளக்கு என்று சொல்ல, பரிதியாரும் காலிங்கரும் சூரியன் என்று உரை கூறினர். நாடாள்பவருள் கதிரவன் போல்வான் என்னும் பொருள் சிறப்புடையது

இன்றைய ஆசிரியர்கள் 'அரசர்கட்குக் கதிரவனாவான்', 'மற்ற அரசர்களுக்கு வழிகாட்டும் வெளிச்சமாவான்', 'அரசருக்கு எல்லாம் விளக்குப் போல் ஆவான்', 'அரசர்கட்கு எல்லாம் விளக்குப் போன்றவன்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஆட்சியாளர்கட்கு ஒளியாவான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கொடை, கருணை, முறைசெய்தல், குடிபேணுதல் என்னும் நான்கு மாட்சிகளையும் கொண்டவன் வேந்தர்க்கு ஒளி ஆவான் என்பது பாடலின் பொருள்.
'வேந்தர்க்கு ஒளி' குறிப்பது என்ன?

நலப்பணி அரசாட்சி செய்பவன் பிற ஆட்சியாளர்களுக்கு விளக்காக ஒளிர்வான்.

நலிந்த குடிகளுக்காக ஈதல், அருள் செய்தல், நடுநிலை நீதி வழங்குதல், பாதுகாப்பு தருவது என்னும் இந்நான்கு மாட்சிகளையும் உடைய ஆட்சியாளன் நாட்டுத்தலைவர்களுக்கெல்லாம் வழிகாட்டக்கூடிய விளக்கு ஆவான்.
நலப்பணி திட்டம் என்று இன்று அரசியல் உலகில் பேசப்படும் சமூக-பொருளாதார நலப்பணி செயற்பாடுகள் (Welfare Measures) பற்றிய கருத்துக்களைக் கொண்ட குறளாக இது உள்ளது. தளர்ந்தோரைத் தாங்குதலிலும் அக்கறை காட்டும் அரசு பற்றிய பாடல் இது.
எந்த ஒரு அரசமைப்பை உடைய நாடானாலும் - குடியரசு, முடியரசு, பொதுவுடைமை அல்லது வேறு- அங்கு நலப்பணித் திட்டங்கள் ஏதோ ஒருவகையில் இருக்கும். வளர்ந்த நாடுகளில் கூட - அரசின் இடையீடற்ற, தடையில்லாப் பொருளாதார (free market economy) முறையில் இயங்கும் நாடுகளிலும்- முதியோர்க்குப் பாதுகாப்பு, கல்வி, உடல்நலம், வறட்சி மீட்சி போன்ற நெருக்கடிகால உதவி- மக்கள் நலத் திட்டங்கள் நடைமுறப்படுத்தப்படுகின்றன.

இப்பாடலிலுள்ள குடிஓம்பல் என்னும் சொல்லுக்கு மணக்குடவர் தளர்ந்த குடிகளைப் பேணுதல் என்று பொருள் கூறினார். அவரைத் தழுவி பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகியோரும் அதே பொருளில் உரைசெய்தனர். 'தளர்ந்த குடி' என்று இப்பாடலில் சொல்லப்படவில்லை. அச்சொல் ஏன் வருவிக்கப்பட்டது? குடிஓம்பல் என்பதற்கு நேர்பொருள் குடிகாத்தல் என்பது. ஓர் அரசின் தலையாய பணி குடிஓம்பலே என்பது சொல்லாமலேயே அறியப்படும். இதே அதிகாரத்தில் இதற்கு முன்னரே வந்த 'முறைசெய்து காப்பாற்றும் மன்னவன்' என்னும் குறளில் குடிகாத்தல் குறிக்கப்பெற்றுள்ளது. அது போலவே ஈகையும், அளித்தலும், முறை செய்தலும் (கொடை, அளி, செங்கோல்) இவ்வதிகாரத்து முந்தைய குறள்களில் கூறப்பட்டுவிட்டன. எனவே மறுபடியும் இந்நான்கும் இங்கு குறிக்கப்பட்டமைக்கு ஒரு காரணம் இருக்கவேண்டும் என்று உணர்ந்த மணக்குடவர், வேந்தர்க்கு ஒளி என்ற சொற்றொடரையும் எண்ணி, குடிஓம்பல் என்பதற்குத் 'தளர்ந்த குடிகாத்தல்' என்று உரைத்தார். இவர் பதவுரையாகக் கூறிய, கொடுத்தல்-தளர்ந்த குடிக்கு விதை ஏர் முதலியன கொடுத்தல்: அளித்தல்- அவரிடத்துக் கொள்ளுங் கடமையைத் தளர்ச்சி பார்த்து விட்டு வைத்துப் பின்பு கோடல்: செங்கோன்மை- கொள்ளும் முறையைக் குறையக் கொள்ளாமை: குடியோம்பல்- தளர்ந்த குடிக்கு இறை கழித்தல். என்பனவற்றை வாசிக்கும்போது இக்குறளில் சொல்லப்பட்ட நான்கு மாட்சிகளும் தளர்ந்த குடி சூழ்ந்தே உள என்பதை உணரலாம். இக்குறள் கூற வந்த கருத்தும் அதுவே.

ஆட்சியாளர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக விளங்கவல்ல தலைவனது மாட்சிகள் நான்கு இங்கு கூறப்படுகின்றன. அவை நலிந்த குடிகளுக்கு உதவும் செயல்திறன்களாக உள்ளன:
கொடை தளர்ந்த குடிக்கு வேண்டுவன கொடுத்தல்.
அளி: அளி என்பது துன்பப்படுகின்றவர்கள்பால் அன்பு காட்டுதல், நலிவுற்ற மக்களைக் கனிவோடு நோக்கிடும் பண்பு இவற்றைக் குறிக்கும். அடக்கு முறைகள் இல்லாமல், கடுவிதிகளைத் தளர்த்தலும் அளி செய்வதுதான், மழையின்மையினாலோ பருவமழை தவறியதாலோ-பஞ்சம், வெள்ளம், கொள்ளை, நோய் காரணமாகவோ பயிர் சேதமுறின் குடிகளின் தளர்ச்சி கண்டு வரியை விட்டுவைத்துப் பின் வாங்குதல் அல்லது முற்றாகத் தவிர்த்தல் ஆகியன அரசு நலிந்த குடிகளுக்குக் காட்டும் இரக்கச் செயல்களாகும்.
செங்கோன்மை: செவ்விய கோல் போன்ற நீதி என்பது பொருள். குடிகள் செய்த குற்றங்களை ஆராய்ந்து, வேண்டியவன் வேண்டாதவன் என்ற பாகுபாடு காட்டாமல் நடுநிலைமையாகச் செயல்படுவது செங்கோன்மை ஆகும். இடம் நோக்கியோ, தகுதி நோக்கியோ வளைந்து கொடுக்காததைக் குறிக்கும். நலிந்தவர் தம் பக்கத்து நீதியை எடுத்துக் கூற வலி அற்றவராக இருக்கலாம். அரசு அவர்க்கு சட்ட உதவி போன்றவற்றைச் செய்து செல்வாக்கான வலியார் தப்பித்துப் போகாமல் நீதியை நிலை நாட்ட வழி செய்யலாம். மணக்குடவர் 'கொள்ளும் முறையைக் குறையக் கொள்ளாமை' என்றும் பரிப்பெருமாள் 'கொள்ளும் முறைமை ஒழியக் கொள்ளாமை' என்றும் தளர்ந்த குடிகளுக்கு முறைமை தவறாமையக் குறித்தனர்.
குடிஓம்பல்: மக்களைத் துன்பத்திலிருந்து பாதுகாத்து வைத்திருப்பது ஓம்பல் ஆகும். வறுமையுற்றோர், ஆதரவற்ற மூத்தோர்-சிறுவர், நோய்வாய்ப்பட்டோர், ஊனமுற்றோர், போன்ற இவர்கள் தளர்ந்தகுடிகளாகக் கருதப்படுவர். இவர்களைப் பேணுதல் நல்லாட்சியின் மாட்சியாகும்.

தாய்மையுணர்ச்சியுடன் மன்னவன் மக்களைப் போற்றிக் காக்க வேண்டும் என்பது இப்பாடலின் சாரம்.
ஒரு பொறுப்புள்ள தாய் எல்லாக் குழந்தைகளிடம் சம அன்பு செலுத்துவாள். ஆயினும் சுறுசுறுப்பான பிள்ளையை விட பலவீனமான பிள்ளையிடம் தனி அக்கறை எடுத்துப் பேணுவாள். அதுபோல நாட்டுத்தலைவன் தளர்ந்த குடிகளைத் தனிக் கவனிப்புடன் அணுகவேண்டும்; அது பெருமைக் குணமாகும் என்று இப்பாடல் வழி வள்ளுவர் அறிவுறுத்துகிறார்.
அன்பின்தாய் ஒக்கும்... (கம்ப இராமாயணம், பாலகண்டம்: அரசியற் படலம் - பொருள்: அன்பு செலுத்துவதில் பெற்ற தாயை ஒப்பவனாவான்) என்று பின்னாளில் தசரதன் என்ற பேரரசனை அறிமுகப்படுத்துவார் கம்பர்.

'வேந்தர்க்கு ஒளி' குறிப்பது என்ன?

'வேந்தர்க்கு ஒளி' என்ற தொடர்க்கு வேந்தர்க்கெல்லாம் விளக்கு, இராசசூரியன், அரசர்க்கு எல்லாம் அருக்கன், வேந்தர்கள் இனத்திற்கே ஒளிதரும் விளக்கு, அரசருக்கெல்லாம் விளக்கு, மன்னர்க்கு ஒளி, அரசர்கட்குக் கதிரவன், மற்ற அரசர்களுக்கு வழிகாட்டும் வெளிச்சம், அரசாட்சி செய்யும் இனத்திற்கெல்லாம் வழிகாட்டும் கலங்கரை விளக்கு, ஆட்சியாளர்க் கெல்லாம் சுடர், அரசர்கட்கு எல்லாம் விளக்கு, வேந்தருக்குள் விளக்கு, அரசரெல்லார்க்கும் விளக்கு, மற்ற அரசர்களுக்கு வழிகாட்டும் விளக்கு, வேந்தர்களுக்கெல்லாம் விளக்கு, அரசுக்குப் புகழொளி என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இவ்வதிகாரத்துக் கூறப்பட்ட இறைமாட்சிகளான காட்சிக்கு எளியனாதலும், கடுஞ்சொல்லன் அல்லனாதலும், இன்சொலால் ஈத்தளிக்க வல்லனாதலும், முறைசெய்து காத்தலும், சொற்பொறுத்தலும் எல்லாக் குடிகளுக்கும் பொருந்துவன. ஆனால் இவற்றில் இங்கு கொடை, அளி, செங்கோல், குடிஓம்பல் என்ற நான்கு மாட்சிகளைத் தனித்துச் சொல்வதால் இக்குறள் தளர்ந்தகுடியினரை மனதில் வைத்தே பாடப்பெற்றது என்பது எளிதில் உணரப்படும். நலிந்த குடியினர் நலம் காப்பதற்கு சிறப்பான செயல்திறங்கள் தேவை. இத்திறங்கள் பெற்ற ஆட்சியாளன் அவற்றை உள்ளுணர்வோடு செயற்படுத்தினால் அவன் மற்ற நாட்டுத் தலைவர்களுக்கெல்லாம் வழிகாட்டும் விளக்காகிறான். அவன் ஆற்றல் மிக்கவன். ஞாயிறு போல் ஒளி தருபவன். ஆட்சித் தலைவர்களுக்குள் மதிப்புடன் தனித்துத் தோன்றுவான்.

'வேந்தர்க்கு ஒளி' என்ற தொடர்க்கு ஆட்சியாளர்க்கெல்லாம் மதிப்புடன் கூடிய மிக்குத் தோன்றும் வெளிச்சம் என்பது பொருள்.

நலிந்தோர்க்குக் கொடை, கருணை, முறைசெய்தல், குடிபேணுதல் என்னும் நான்கு மாட்சிகளையும் கொண்டவன் ஆட்சியாளர்கட்கு ஒளியாவான் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நலிந்த மக்கள் நலனில் தனிஅக்கறை கொண்ட அரசுக்கான இறைமாட்சி கூறும் பாடல்.

பொழிப்பு

நலிந்தோர்க்குக் கொடுத்தல், அருள்காட்டுதல், முறைசெய்தல், குடிகாத்தல் என்னும் நான்கினையும் உடையவன் ஆட்சியாளர்க்கெல்லாம் விளக்கு ஆவான்.