செவிகைப்பச் சொல்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு
(அதிகாரம்:இறைமாட்சி
குறள் எண்:389)
பொழிப்பு (மு வரதராசன்): குறைகூறுவோரின் சொற்களைச் செவி கைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பு உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.
|
மணக்குடவர் உரை:
தன் செவி வெறுக்கும்படியாகப் பிறர் செய்த குற்றங்களைக் கேட்டு வைத்தும், அதனைப் பொறுக்கவல்ல குணமுடைய வேந்தனது குடைக் கீழே உலகு தங்கும்.
சொற்பொறுக்கும் என்பதற்குப் புரோகிதர் தன்னிடத்துச் சொல்லுஞ் சொற்களைப் பொறுக்கவல்ல என்பாருமுளர்.
பரிமேலழகர் உரை:
சொல் செவி கைப்பப் பொறுக்கும் பண்பு உடை வேந்தன் - இடிக்கும் துணையாயினார் சொற்களைத் தன் செவி பொறாதாகவும். விளைவுநோக்கிப்
பொறுக்கும் பண்புடைய அரசனது, கவிகைக்கீழ்த் தங்கும் உலகு - குடைநிழற் கண்ணே தங்கும் உலகம்.
('செவி கைப்ப' என்றதற்கு ஏற்ப, இடிக்குந் துணையாயினார் என்பது வருவிக்கப்பட்டது. நாவின் புலத்தைச் செவிமேல் ஏற்றிக் 'கைப்ப' என்றார்.
பண்பு உடைமை : விசேட உணர்வினராதல். அறநீதிகளில் தவறாமையின், மண் முழுதும் தானே ஆளும் என்பதாம்.)
சி இலக்குவனார்:
மக்களின் குறைகளும் அமைச்சரின் அறிவுரைகளும் தன் காதுகட்கு வெறுப்பை விளைவிக்கக் கூடியனவாக இருந்தாலும் அவர்கள் நாட்டின் நலன்கருதிப் பொறுமையோடு கேட்கும் பண்பினையுடைய அரசன் ஆட்சியில் உலகம் நிலை பெற்றிருக்கும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
செவிகைப்பச் சொல்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.
பதவுரை:
செவி-காது; கைப்ப-கசக்கும்படியாக; சொல்-மொழி (இங்கு இடித்துச் சொல்லப்படும் உரை என்பது பொருள்); பொறுக்கும்-தாங்கும்; பண்புடை-குணமுடைய; வேந்தன்-ஆட்சித்தலைவன்; கவிகை-குடை(இங்கு ஆட்சியைக் குறிக்கும்); கீழ்-கீழ்; தங்கும்-நிலைபெறும்; உலகு-உலகம்(இங்கு நாட்டு மக்களைச் சுட்டும்).
|
செவிகைப்பச் சொல்பொறுக்கும் பண்புடை வேந்தன்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன் செவி வெறுக்கும்படியாகப் பிறர் செய்த குற்றங்களைக் கேட்டு வைத்தும், அதனைப் பொறுக்கவல்ல குணமுடைய வேந்தனது;
மணக்குடவர் குறிப்புரை: சொற்பொறுக்கும் என்பதற்குப் புரோகிதர் தன்னிடத்துச் சொல்லுஞ் சொற்களைப் பொறுக்கவல்ல என்பாருமுளர்.
பரிப்பெருமாள்: தன் செவி வெறுக்கும்படியாகப் பிறர் செய்த குற்றங்களைக் கேட்டு வைத்தும், அதனைப் பொறுக்கவல்ல குணமுடைய வேந்தனது;
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அமாத்தியர் குற்றம் செய்தார் என்று பலரும் சொல்லுங்கால் பலவற்றானும் பொறுக்கவேண்டும் என்றது.
அன்றியும் மந்திரி புரோகிதர் அடர்த்துச் சொல்லும் சொற்களைப் பொறுக்க வேண்டும் என்பாரும் உளர்.
பரிதி: பொறுத்தற்கரிய சொல்லைக் குடியானபேர் வாசலிற் பதினெட்டுப்பேர் சொன்னாலும் குற்றம் பாராட்டாமல் பொறுப்பான்;
காலிங்கர்: நெறியல்ல செய்வோர் ஆகிய மறமக்களும், கொடுங்கோன்மை செய்வோராகிய மற மன்னரும், தனது செவிகைப்பச் சொல்லுவன எல்லாம் வரையாது பொறுத்து ஒழுகும் மரபுடை மன்னவன் யாவன்;
காலிங்கர் குறிப்புரை: இதனான் மற்று இவனது பொறை முனிவரைப் போலன்று மற்று அஃது எங்ஙனமோ எனின், அப்பொழுதைக்கு வரையாது நின்று அதனை ஓர்ந்துணர்ந்து பின் செறுப்போரைச் செறுத்தும் பொறுப்போரைப் பொறுத்தும் இங்ஙனம் ஒழுகுதலே ஆசிரியர் கருத்து என்றவாறு.
பரிமேலழகர்: இடிக்கும் துணையாயினார் சொற்களைத் தன் செவி பொறாதாகவும். விளைவுநோக்கிப் பொறுக்கும் பண்புடைய அரசனது;
பரிமேலழகர் குறிப்புரை: 'செவி கைப்ப' என்றதற்கு ஏற்ப, இடிக்குந் துணையாயினார் என்பது வருவிக்கப்பட்டது. நாவின் புலத்தைச் செவிமேல் ஏற்றிக் 'கைப்ப' என்றார். பண்பு உடைமை-விசேட உணர்வினராதல்.
'இடிக்கும் துணையாயினார் சொற்களைத் தன் செவி பொறாதாகவும். விளைவுநோக்கிப் பொறுக்கும் பண்புடைய அரசன்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். யார் யாரைப் பற்றிச் செவி கைப்பக் கூறினர் என்பதில் இவர்கள் வேறுபடுகின்றனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கசப்பான சொல்லையும் கேட்கும் பண்புள்ள வேந்தனது', 'செவிக்கு இன்னாத சொற்களைப் பிறர் கூறினும் அவற்றைப் பொறுத்துக் கேட்கும் பண்புடைய அரசனின்', '(குற்றங் கண்டு சீர்திருத்தும் எண்ணத்துடன் இடித்துக் கூறுகின்றவர்கள்) காது கசக்கும்படியாகக் கண்டித்துப் பேசினாலும் அதைப் பொறுத்துக் கொள்ளுகிற உயர்ந்த குணம் உள்ள அரசனுடைய', 'தக்கவர்கள் பொதுநன்மையின் பொருட்டுச் சொல்லுங் கடுஞ்சொற்கள் காதுக்கு வெறுப்பாய் இருந்தாலும் அவற்றைப் பொறுத்து ஏற்றுக் கொள்ளும் நல் இயல்புடைய அரசனது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
செவி வெறுக்கும்படியாகத் தன் ஆட்சி பற்றி யார் குற்றச் சொற்களை மொழிந்தாலும் அதனைப் பொறுமையாகக் கேட்கும் ஆட்சித்தலைவன் என்பது இப்பகுதியின் பொருள்.
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குடைக் கீழே உலகு தங்கும்.
பரிப்பெருமாள்: குடைக் கீழே உலகு கிடக்கும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: வேறு ஒரு நிழல் தேடாது என்று ஆயிற்று.
பரிதி: இராச்சியம் அடங்கும்.
காலிங்கர்: மற்று அவனது குடைநிழற் கீழ்த்தங்கும் இவ்வுலகு.
காலிங்கர் குறிப்புரை: எனவே இவ்வுலகில் வாழும் உயிரெல்லாம் ஒரு வெம்மையுறாது மற்றவன் தண்ணளி நிழற்கீழ் நிலைபெறும் என்பது பொருள்.
பரிமேலழகர்: 'குடைநிழற் கண்ணே தங்கும் உலகம்'. இவரது விரிவுரை பகர்வது 'அறநீதிகளில் தவறாமையின், மண் முழுதும் தானே ஆளும் என்பதாம்'.
மணக்குடவர், காலிங்கர், பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகியோர் அம்மன்னன் குடை நிழல் கீழ்த்தங்கும் என உரை வழங்குவர். காலிங்கர் உரை இதை இன்னும் விரித்து 'அவன் ஆட்சியில் வெம்மை நேராததால் குளிர் நிழலில் மக்கள் நிலை பெறுவர்' எனச் சொல்லும். பரிப்பெருமாள் மக்கள் வேறு ஒரு நிழல் தேடார் என்கிறார். பரிதியார் அரசு அடங்கும் என்று உரை செய்தார். பரிமேலழகர் உரையில் 'சிறந்த அறிவுரைகளைக் கைக்கொள்வதால் உலகம் முழுதும் ஆள்வான்' என்றார்.
இன்றைய ஆசிரியர்கள் 'குடைக்கீழ் உலகம் தங்கும்', 'குடை நிழற் கீழ் உலகம் தங்கும்', 'ஆட்சியின் கீழ் மக்கள் விருப்புடன் தங்கி வாழ்வார்கள்', 'குடைநிழற்கீழே உலக முழுவதும் அடங்கி நிலைபெறும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
குடை நிழலில் உலகம் தங்கும் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
செவி கைப்பக் குற்றச் சொற்களை மொழிந்தாலும் அதனைப் பொறுமையாகக் கேட்கும் ஆட்சித்தலைவன் குடை நிழலில் உலகம் தங்கும் என்பது பாடலின் பொருள்.
'செவிகைப்ப' என்ற தொடர் குறிப்பது என்ன?
|
இடிப்புரைகளைத் திறந்த உள்ளத்துடன் கேட்கும் தலைவன் நல்லாட்சி தருவான்.
தன் ஆட்சி பற்றிய குறைபாடுகளைப் பிறர் சொல்லும்போது அவை கேட்பதற்கு வெறுக்கத்தக்கனவாக இருந்தாலும் அத்தகைய கடுஞ்சொற்களையும் பொறுமையோடு செவிமடுக்கும் குணமுடைய தலைவனது ஆட்சியின் கீழ் வாழ உலகம் விரும்பும்.
இக் குறளில், ஆட்சிக் கூறுகளுள் உயர்வானதான 'அரசியல் விமர்சனம்' பேசப்படுகிறது. தலைவனிடம் காணப்படும் குறைகளைச் சுட்டுதலும் அதனால் உண்டாகும் மேன்மையும் இங்கு சொல்லப்படுகின்றன.
தனிப்பட்ட முறையில் கடுஞ்சொற்களை ஏற்பது விரும்பத்தகாததாக இருந்தாலும் நல்ல அறிவுரைகளை நல்லாட்சி செய்பவன் வரவேற்பான். கேட்பதற்குக் கடுமையாக இருந்தாலும் இடித்துரைகளை ஏற்கும் தலைவன் உள்ள நாட்டில்தான் மக்கள் தண்மையான உணர்வில் இருப்பர் என்கிறார் வள்ளுவர்.
ஆட்சித்தலைவன் எல்லோரிடமும் கடுஞ்சொல் அல்லனாக, இன்சொல் உடையவனாக இருக்கவேண்டும் என்று முந்தைய பாடல்களில் சொல்லப்பட்டன. பிறர் எல்லாரும் தலைவனிடம் இன்சொல் மட்டுமே கூறி ஒழுகுவேண்டியதில்லை என்கிறது இப்பாடல்.
எந்தவிதமான ஆட்சிமுறை என்றாலும் குற்றம்/குறை நேர்வதை தவிர்க்க முடியாது. தன் முதுகிலுள்ள கறையைத் தானே தெரிந்து கொள்வது எளிதல்ல. நாட்டில் தோன்றும் அனைத்துக் குற்றம் குறைகளை நாடாள்பவன் தானாக உணர்வது பெரும்பாலான சமயங்களில் இயலாதது. அவற்றை மற்றவர்கள் சுட்டிக் காட்டினால்தான் தெரியவரும்.
ஆட்சிமுறை சிறப்புற நடைபெற வேண்டுமானால் சுற்றத்தார்க்கும் (தலைவனை சூழ்ந்து இருந்து அரசு நடத்துவோர்க்கும்) குடிகளுக்கும் அரசைக் கண்டித்துக் குறை கூறும் உரிமை இருக்க வேண்டும். அவனது குற்றங்களை அச்சமில்லாமல் எடுத்துக் காட்டும் சூழலைத் தலைவன் உருவாக்கிக் கொள்ளவேண்டும். அவன் சினம் கொள்வானே என்ற அச்சம் இருந்தால், அவனைச் சுற்றி இருப்பவர்களும் மற்றவர்களும், அவன் மனம் குளிரும்படியாகப் பேச வேண்டும் என்பதிலேயே நாட்டமாக இருப்பார்கள். எதைச் சொன்னால் அவனுக்குப் பிடிக்குமோ அதையே சொல்வார்கள். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் புகழ்மொழியை கேட்டு மனமகிழப் பழக்கப்பட்டுவிடுகிறார்கள். இப்படிப்பட்ட குணம் கொண்ட தலைவனின் செவிகளுக்கு உண்மை போய்ச் சேராது. இதனால் தவறான தகவல்களையே அவன் பெற நேரிடும். மாறாக, தான் வெறுக்கும்படியான சொற்களைப் பிறர் கூறினாலும் அதைப் பொறுத்துக்கொள்ளும் இயல்பு தலைவனுக்கு இருக்குமானால், உள்ளவற்றை உள்ளவாறே எல்லோரும் பயமின்றி அவனிடம் எடுத்துச் சொல்லுவார்கள். அப்போது உண்மை நிலை அவனுக்குப் புரியும். தனது ஆட்சியைக் குறை கூறுவோர் சொற்கள் எல்லாவற்றையும் கேட்டு அவற்றில் உண்மையானவற்றைத் தெளிந்து, குறைகள் இருந்தால் அவற்றைக் களைய முயலவேண்டும். அப்படி அவனைக் குறைகூறுவோர் இன்சொல்லாலே எடுத்துக் கூறுவர் என எதிர்பார்க்க முடியாது. குற்றத்தின் தன்மையைப் பொறுத்தும், கொடுஞ்சொல்லே விரைவில் பயனளிக்கும் என்ற நம்பிக்கையாலும் சிலர் செவி பொறுக்க முடியாத கொடுஞ்சொற்களைக் கூறலாம். அவற்றையும் பொறுமையுடனும், சினம் கொள்ளாமலும் கேட்டு, குற்றம் நீக்குதலிலும் குற்றம் ஏற்படுத்திய இன்னல்களில் இருந்து மீட்சி காண்பது என்ற நோக்குடன் அவன் செயல்படவேண்டும். குறைகூறுவோர் மீது கடுமையான அடக்குமுறையை ஏவி விட எண்ணக்கூடாது.
வெறுக்கும்படியான சொற்களையும் பொறுமையாகக் கேட்கும் ஆட்சியாளனிடம் குடிகளுக்கு அழுத்தமான நம்பிக்கை ஏற்படும்; அவர்கள் அவனிடம் பற்றுள்ளத்துடனும் இருப்பார்கள். 'கவிகைக் கீழ் தங்கும் உலகு' என்றது அத்தலைவனுடைய ஆட்சியின் கீழ் வாழ மக்கள் விரும்புவார்கள் என்பதை உணர்த்தும். சிறந்த அறிவுரைகளைக் கைக்கொள்வதால் அவன் ஆட்சியில் வெம்மை நேராது; அதனால் அங்கு அமையும் குளிர் நிழலில் உலகமே வாழவிரும்பும் என்றும் கூறப்பட்டது.
காதுக்குக் கசக்குமாறு நாவின் புலமாகிய கசப்பை செவியின் புலமாக மாற்றிக் கூறியது உபசார வழக்கு என்று இலக்கண விளக்கம் அளிப்பர்.
மல்லர் என்ற பழம் உரையாசிரியர் 'அரசன் ஒரு காரியம் செய்யவேண்டும் என்று இருக்கும்போது மந்திரிமார் இது அநியாயம்; இது தாறுமாறு; இது செய்யலாகாது என்று சொன்னால் அரசனுடைய காதுக்குப் பொருந்தாத சொல்லாயிருக்குமே, இப்படிப்பட்ட சொற்களைப் பொறுமையோடு கேட்டுக்கொண்டு, அதற்குத் தக நடக்கிற அரசனிடத்திலே புண்ணியமும் நீதியும் நீங்காமல் நிற்பதால் அவனுக்கு ஒரு விக்கினமும் வாராது [விக்கினம் - இடையூறு]' என்று இக்குறட்பாவிற்கு பேச்சுவழக்கு நடையில் உரை வரைந்திருப்பது படிக்கச் சுவையாக உள்ளது.
தற்பொழுது முழுமையாகக் கிடைக்கப்பெற்ற குறளுக்கான உரை வழங்கிய ஐந்து தொல்லாசிரியர்களில் காலத்தால் முற்பட்டவர் மணக்குடவர்.
'சொற்பொறுக்கும்' என்பதற்குப் 'புரோகிதர் தன்னிடத்துச் சொல்லுஞ் சொற்களைப் பொறுக்கவல்ல என்பாருமுளர்' என்று இவர் உரையில் சொல்லப்பட்டுள்ளதால் மணக்குடவருக்கு முன்னரும் உரையாசிரியர்கள் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.
|
'செவிகைப்ப' என்ற தொடர் குறிப்பது என்ன?
செவிகைப்ப என்ற தொடர் காதுகள் கசக்க என்ற பொருள் தருவது. கசப்பு என்பது யாரும் விரும்பி ஏற்றுக்கொள்ளாத சுவையாகும். காதுகள் கசக்க என்றது கேட்பதற்கு வெறுக்கத்தக்க எனப் பொருள்படும்.
ஆற்றல் மிகக்கொண்ட ஆட்சியாளனது காதுகள் கேட்கப் பொறுக்க முடியாதவற்றை யார், என்ன சொல்வர்?
நெறியல்ல செய்வோர் ஆகிய மறமக்களும், கொடுங்கோன்மை செய்வோராகிய மற மன்னரும், இடிக்கும்துணையாயினாராகிய புரோகிதர், அமைச்சர், சான்றோர், பெரியோர், ஆசிரியர், சினேகிதர் ஆகியோரும், குடியானபேர் வாசலிற் பதினெட்டுப்பேர், குடிகளில் ஒவ்வொருவரும் என்றவாறு யார் அவற்றைக் கூறினர் என்பதை விளக்கினர். இன்னும் சிலர் தலைவனைச் சினமூட்டி அழிப்பதற்காகப் பகைவர்கள் பயன்படுத்தக்கூடிய சொற்களும் கசப்பானவற்றில் அடங்கும் என்று பொருள் கூறினர். தலைவனது குற்றங்களை அவன் முன்னேயே குறைகாணும் இழிநோக்குடனோ அல்லது இடித்துரைத்துத் திருத்தும் நன்னோக்குடன் சொல்வதையோ சொல்கிறது என்றும், அமைச்சர் போன்ற பிறர் செய்த குற்றங்கூற அவற்றைத் தலைவன் பொறுத்தல் சொல்லப்படுகிறது என்றும் இக்குறளுக்கு விளக்கம் தந்தனர்.
தம் ஆட்சி பற்றிக் கேட்பதற்கு இன்னாத சொற்களைக் காது வெறுக்கும்படி, யார் கூறினாலும் அவற்றைப் பொறுத்துக் கொண்டிருக்கும் ஆட்சித்தலைவனுடைய குடை நிழலில்தான் அவனது நாடு நிலைத்திருக்கும். காலிங்கர் 'தீவினை செய்வோரும் கொடுங்கோலரான பிற மன்னர்களும் தன்னைப் பற்றிச் சொல்லும் கடுஞ்சொற்களைப் பொறுக்கும் மன்னன்' எனக்கூறி விரிவுரையில் 'அப்பொழுதைக்கு வரையாது நின்று அதனை ஓர்ந்துணர்ந்து பின் செறுப்போரைச் செறுத்தும் பொறுப்போரைப் பொறுத்தும் இங்ஙனம் ஒழுகுதலே' என்றது குறட்கருத்தை தெளிவாக்குகிறது.
'செவிகைப்ப' என்றது ஆட்சித் தலைவனது செவிகைக்கும்படி அவன் ஆட்சி பற்றி சுற்றம், குடிகள் யாராலும் இடித்துச் சொல்லப்படும் சொற்களாகும்.
|
செவி வெறுக்கும்படியாகத் தன் ஆட்சி பற்றி யார் கசப்பான கொடுஞ்சொற்களை மொழிந்தாலும் அதனைப் பொறுமையாகக் கேட்கும் ஆட்சித்தலைவன் குடை நிழலின் கீழ் வாழ உலகம் விரும்பும் என்பது இக்குறட்கருத்து.
அரசியல் கடிந்துரைகளைப் பொறுமையுடன் எதிர்கொள்வது சிறந்த இறைமாட்சி ஆகும்.
செவிக்கு இன்னாத இடித்துரைகளைப் பொறுத்துக் கேட்கும் பண்புடைய ஆட்சித்தலைவனின் குடை நிழற் கீழ் உலகம் தங்கும்.
|