இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0388முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்

(அதிகாரம்:இறைமாட்சி குறள் எண்:388)

பொழிப்பு (மு வரதராசன்): நீதிமுறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், இறைவன் என்று தனியே கருதி மதிக்கப்படுவான்.

மணக்குடவர் உரை: குற்றஞ் செய்தாரை அதற்குச் செய்யும் முறைமை தப்பாமற் செய்து, எல்லாவுயிரையுங் காத்தலைச் செய்கின்ற அரசன் மனிதர்க்கு நாயகனென்று எண்ணப்படுவான்.

பரிமேலழகர் உரை: முறை செய்து காப்பாற்றும் மன்னவன் - தான் முறை செய்து பிறர் நலியாமற் காத்தலையும் செய்யும் அரசன், மக்கட்கு இறை என்று வைக்கப்படும் - பிறப்பான் மகனேயாயினும், செயலான் மக்கட்குக் கடவுள் என்று வேறு வைக்கப்படும்.
(முறை: அறநூலும் நீதிநூலும் சொல்லும் நெறி. 'பிறர்' என்றது மேற்சொல்லியாரை. வேறு வைத்தல்: மக்களிற் பிரித்து உயர்த்து வைத்தல்.)

வ சுப மாணிக்கம் உரை: முறையோடு காக்கும் மன்னன் குடிகட்குக் காணும் கடவுள் ஆவான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும்.

பதவுரை:
முறைசெய்து-நடுநிலை நின்று அரசாட்சி செய்து; காப்பாற்றும்-காக்கும்; மன்னவன்-ஆட்சித் தலைவன்; மக்கட்கு-மக்களுக்கு; இறை-கடவுள்; என்று-என்பதாக; வைக்கப்படும்-காணப்படும், கருதப்படுவான்.


முறைசெய்து காப்பாற்றும் மன்னவன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குற்றஞ் செய்தாரை அதற்குச் செய்யும் முறைமை தப்பாமற் செய்து, எல்லாவுயிரையுங் காத்தலைச் செய்கின்ற அரசன்;
பரிப்பெருமாள்: குற்றஞ் செய்தாரை அதற்குச் செய்யும் முறை தப்பாமல் செய்து, எல்லா உயிரையுங் காத்தல் செய்கின்ற மன்னவன்;
பரிதி: செங்கோல் முறைமை செய்து உலகங்காக்கும் அரசன்;
காலிங்கர்: அளித்தலும் செறுத்தலும் ஆகிய செய்தியின் கூறுபாடு அறிந்து, மற்று அவரவர்க்குத் தக்காங்கு செய்யும் முறை வழுவாமல் செய்து, மற்று இங்ஙனம் காத்தலைப் புரியும் மன்னவன் யாவன்;
பரிமேலழகர்: தான் முறை செய்து பிறர் நலியாமற் காத்தலையும் செய்யும் அரசன்;
பரிமேலழகர் குறிப்புரை: முறை: அறநூலும் நீதிநூலும் சொல்லும் நெறி. 'பிறர்' என்றது மேற்சொல்லியாரை.

'குற்றஞ் செய்தாரை அதற்குச் செய்யும் முறைமை தப்பாமற் செய்து, எல்லாவுயிரையுங் காத்தலைச் செய்கின்ற அரசன்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நெறி பிறழாமல் முறை செய்து பிறர் வருந்தாமல் காக்கும் அரசன்', '(தானாகவே விசாரித்தறிந்து அவரவர்கள் தரத்துகுத் தக்கபடி) நீதி செய்து குடிகளைப் பாதுகாக்கிற அரசனை', 'நடுநிலையில் நின்று குடிகளுக்கு நயஞ்செய்து அவர்களைக் காப்பாற்றும் அரசன்', 'அறநெறி தவறாமல் ஆட்சிமுறை செய்து மக்களைக் காப்பாற்றும் அரசன்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

முறை தவறாமல் ஆட்சி நடத்திக் குடிகளைக் காப்பாற்றும் ஆட்சித் தலைவன் என்பது இப்பகுதியின் பொருள்

மக்கட்கு இறையென்று வைக்கப் படும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரை:
மணக்குடவர்: மனிதர்க்கு நாயகனென்று எண்ணப்படுவான்.
பரிப்பெருமாள்: மக்களுக்கு நாயகன் என்று எண்ணப்படும்.
பரிதி: உலகத்தை இரட்சிக்கிற பரமேஸ்வரன் என்று எண்ணப்படும்.
காலிங்கர்: அவன் உலகத்து மக்கள் யாவர்க்கும் இறைவன் என்று முன் வைத்து எண்ணப்படும்.
பரிமேலழகர்: பிறப்பான் மகனேயாயினும், செயலான் மக்கட்குக் கடவுள் என்று வேறு வைக்கப்படும்.
பரிமேலழகர் குறிப்புரை: வேறு வைத்தல்: மக்களிற் பிரித்து உயர்த்து வைத்தல்.

மனிதர்க்கு நாயகன்/இறைவன் என்று எண்ணப்படுவான் என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர் மற்றவர்கள் இறை என்ற சொல்லுக்குக் கடவுள் என்ற பொருளில் உரை செய்ய, மணக்குடவர்/பரிப்பெருமாள் மட்டும் கொண்டாடத்தக்க தலைவன் என்ற பொருள் விளங்க இச்சொல்லுக்கு நாயகன் என்று பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'குடிமக்களுக்குக் கடவுள் என்று உலகோரால் மதித்துப் போற்றப் பெறுவான்', 'மக்கள் தெய்வம் போல் கருதி வணங்குவார்கள்', 'மக்கட்குக் கடவுள் என்று மதிக்கப்படுவான்', 'மக்கட்குக் கடவுள் என்று கருதப்படுவான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மக்கட்குக் கடவுளாகக் காணப்படுவான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
முறை தவறாமல் ஆட்சி நடத்தி குடிகளைக் காப்பாற்றும் ஆட்சித் தலைவன் மக்கட்குக் இறையாகக் காணப்படுவான் என்பது பாடலின் பொருள்.
'இறை' என்ற சொல் குறிப்பது என்ன?

எல்லோரும் வேண்டுவது இறைப்பண்பு கொண்ட அரசாட்சியே.

முறைமையோடு ஆட்சி செய்து மக்களைக் காப்பாற்றும் ஆட்சித்தலைவன், அம்மக்களுக்குத் தெய்வம் என்ற உயர்நிலையிலே வைத்து மதிக்கப்படுவான்.
முறை என்றால் நடுநிலை பிறழாத நல்ல முறைமையைக் குறிக்கும். முறை செய்தல் என்பது நீதி வழங்கும் முறையில் மட்டுமல்லாமல் அனைத்து அரசியல் செயல்பாடுகளிலும் நடுநிலை தவறாத ஆட்சிமுறையைக் குறிக்கும். பொருள் இயற்றல், கல்வி போன்ற துறைகளில் சம வாய்ப்பு அளித்தல், போட்டிச் சூழலில் சரிமட்ட தளம் அமைத்துக் கொடுத்தல், பொருள் வகுத்தலில் அவரவர் உழைப்புக்கேற்பப் பகிர்ந்து அளித்தல் முதலியன முறை செய்தலில் அடங்கும். பரிமேலழகர் 'குடிகளுக்குத் தான் முறைசெய்து, பிறர் அதனால் நலியாமல் காத்தலைச் செய்யும் அரசன்' அதாவது ஒருவருக்கு முறை செய்யும்போது பிறர்க்கு குறை நேராமல் பார்த்துக் கொள்வது அரசு என இக்குறளுக்கு விளக்கம் தருவார். இதைத்தான் இன்றைய மனித உரிமைக் கோட்பாடுகளும் வற்புறுத்துகின்றன. நீதிவழுவாத நல்ல நெறியே முறைசெய்தல் ஆகும்.

இப்பாடலிலுள்ள காப்பாற்றும் என்றது காத்தலைச் சொல்கிறது. காத்தல் என்பது அரசால், அரசைச் சுற்றியுள்ளோரால், கள்வரால், பகைவரால், விலங்கு முதலியவற்றால் மக்கட்கு எந்தவகையான தீமையும் நேராவண்ணம் பாதுகாத்தல் ஆகும். முறையற்ற ஆட்சியில் எளியவர்கள் வலியவர்களுக்கு அஞ்சியே வாழ்வு நடத்துவர்.

முறைசெய்யப்படும் ஆட்சியில், குடிகள் தாங்கள் யாருக்கும் அடிமைப்படாத விடுதலையுணர்வுடன் செயல்படுவர்; நாட்டில் எந்தவித பயமும் இல்லாத சூழலில் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்வர். மக்களது இத்தகைய உணர்ச்சிகளும் எண்ணங்களும் அவனைத் தெய்வமாக உயர்த்தும் என்கிறது பாடல். முறையும் காத்தலும் பொருந்தியபோது ஆட்சித்தலைவன் மக்கட்குத் தெய்வமாகத் தெரிவான் என்பது கருத்து.

'இறை' என்ற சொல் குறிப்பது என்ன?

செய்யுள் மரபில் ‘இறை’ என்னும் சொல் கடவுளுக்கும் மன்னனுக்கும் வழங்கப்பட்டது. இந்த ஒரு குறளில் மட்டும் அரசன் 'இறை' என்ற சொல்லால் குறிக்கப்பெறுகிறான். பெரும்பான்மையான உரையாசிரியர்கள் இக்குறளில் 'இறை' என்ற சொல் கடவுள் என்ற பொருளில் ஆளப்பட்டது எனக் கூறுவர்.
மணக்குடவர் 'இறை' என்றதற்கு, 'மனிதர்க்கு நாயகன்' என்று பொருள் கொள்ள, பரிமேலழகர் 'பிறப்பான் மகனே ஆயினும், செயலால் மக்கட்குக் கடவுள் என்று வேறு வைக்கப்படும்' என்று குறிப்பிடுகின்றார். இவ்விருவுரைகளையும் நோக்கும்போது, வள்ளுவர் அரசனைத் தெய்வீகத் தன்மை உடையவன் என்று சொல்லாமல், செங்கோலோச்சும் நாட்டுத்தலைவன், முறைசெய்து குடிகளைக் காத்தால் 'இறையென்று வைக்கப்படும்' என்கிறார் என்பது தெரிகிறது. 'இறையென்று' என்று சொன்னதால் அவன் 'இறையன்று' என்ற கருத்தும் பெறப்படுகிறது.

முன்பு, பிறப்பால், வழிவழியில் அல்லது மரபு வழியில் மன்னன் ஆட்சிக்குரிய உரிமை பெற்றான். இவன் ஆட்சிக்கு வந்தவுடன் கடவுள் தன்மை பெற்றவனாக அல்லது கடவுள் சார்பாக வந்தவன் என்று கூறப்பட்டு ஆட்சி நடத்தப்பெறும். அரசன், உலகின் உயர்ச்சிகளோடு திசைக்காவலரான தேவர்களின் கூட்டமாக, தெய்வாம்சமும் பெற்றவனாக, இவ்வுலக வாழ்வில் காணாதவனாக இருந்தான்; அவன் தவறு செய்யமாட்டான்; அவனைத் தவறு செய்பவனாக நினைப்பதே பாவம்; அவனிடம் குறை காணக்கூடாது; அவனைப் பழிப்பது கடவுளைப் பழிப்பது போலாகும்; அரசனின் ஆணை கடவுளின் ஆணை என்ற கருத்துகள் நிலவின.
ஆனால் வள்ளுவர் கண்ட அரசன் நிலவுலகிற்கு உரியவனாக விளங்குகிறான். அவர் ஆட்சித்தலைவனைத் தெய்வத்தன்மையுடையவனாகவோ அல்லது அரசன் தான் விரும்பியபடி ஆளலாம் எனக் கருதவில்லை. அவன் அறத்தின்வழி ஆள்தற்குரியவன் என்றார். அவ்வாறு அறத்தின் ஆட்சி புரிபவனை இறைக்குச் சமமாகக் கருதலாம் என்று கூறுகிறார். அதாவது முறைசெய்து காப்பாற்றும் செங்கோலனாக இருந்தால் மட்டுமே அவன் இறையெனக் கருதப்படுவான் என்பது வள்ளுவரின் அழுத்தமான செய்தியாகும். இறை என்னும் சொல்லைத் தலைவன் என்ற பொருளிலே ஆண்டு அவனாற்றும் முறைகண்டு மக்கள் அவனைத் தெய்வமாக ஏற்கின்றனர் என்கிறார்.

இறை என்ற சொல்லை அரசனது தலைமைச் சிறப்பைச் சுட்டிக் காட்ட வள்ளுவர் ஆண்டிருக்கலாம். இச்சொல்லுக்குத் தெய்வம் என்ற பொருளும் உள்ளதால் அரசன் தெய்வம் என்றும் வைக்கப்படும் என்ற கருத்தையும் சுட்டிக்காட்ட அவர் இச்சொல்லைப் பயன்படுத்தி இருக்கலாம். மன்னன் உயிர்த்தே மலர் தலையுலகம் (புறநானூறு 186) என்று நாடாளும் மன்னனைக் குடிமக்களின் உயிராகச் சங்கப்பாடல் போற்றும். வள்ளுவர், அத்தகைய ஆட்சித் தலைவன் தெய்வமாக உயர்த்தப் பெறுவான் என்கிறார்.
இக்குறட்பாவில் வள்ளுவர் நாடாள்வோனிடத்திலும் இறைவனிடத்திலும் பொதுவாகக் காணப்பெறும் அருளுணர்ச்சியை ஒப்பிட்டுப் பார்க்கிறார். முறை செய்யும் மன்னன் இறைவனைப் போன்று வேண்டுதல் வேண்டாமை இலானாகத் தோன்றுவான். இறைவன், தான் படைத்த உயிர்கள் அறியாமை இருளில் சிக்கி, அல்லற்பட்டு ஆற்றாது அழுகின்ற பொழுது அருள் தந்து காக்கிறான். செங்கோலாட்சி புரிகின்ற மன்னன் முறை செய்வதன்வழி எளிய குடிகள் வலியோரால் அழிந்துபடாமல் இருக்குமாறு தக்க காவலனாக அமைகிறான். இவ்வகையில் மன்னன், தெய்வத்தைப் போன்று சிறப்புற்று விளங்குகிறான் என்பது வள்ளுவரின் செய்தி. உண்மைக்கு மாறானதோ, அறிவுக்குப் பொருந்தாத அல்லது மிகையான உயர்வு நவிற்சியோ இங்கு இடம்பெறவில்லை.
இக்குறளில் மன்னன் என்ற சொல் இடம் பெற்றிருந்தாலும், வள்ளுவரின் அரசியல் கருத்து இன்றைய அறிஞர்கள் போற்றும் குடியரசு ஆட்சிமுறைக்கும் மிகவும் பொருந்தி வருகிறது என்பது அறிந்து இன்புறத்தக்கது.

முறை தவறாமல் ஆட்சி நடத்தி குடிகளைக் காப்பாற்றும் ஆட்சித்தலைவன் மக்கட்குக் கடவுளாகக் காணப்படுவான் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

செங்கோல் ஆட்சி புரியும் தலைவனின் இறைமாட்சி கூறுவது.

பொழிப்பு

முறை தவறாமல் குடிகளைக் காக்கும் ஆட்சித்தலைவன் மக்கட்குக் கடவுளாகத் தோன்றுவான்.