இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0385



இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு

(அதிகாரம்:இறைமாட்சி குறள் எண்:385)

பொழிப்பு (மு வரதராசன்): பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும், வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும், காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.

மணக்குடவர் உரை: பொருள் வரும்வழி யியற்றலும் அதனை அழியாம லீட்டலும் அதனைச் சோர்வுபடாமற் காத்தலும் காத்த அதனை வேண்டுவனவற்றிற்குப் பகுத்தலும் வல்லவன் அரசனாவான்.
பகுத்தல்- யானை குதிரை முதலிய படைக்குக் கொடுத்து அவையிற்றை யுண்டாக்குதல். இது பண்டாரங் கூறுமாறு கூறிற்று.

பரிமேலழகர் உரை: இயற்றலும் - தனக்குப் பொருள்கள் வரும் வழிகளை மேன்மேல் உளவாக்கலும், ஈட்டலும் - அங்ஙனம் வந்தவற்றை ஒருவழித் தொகுத்தலும், காத்தலும் - தொகுத்தவற்றைப் பிறர் கொள்ளாமல் காத்தலும், காத்த வகுத்தலும் - காத்தவற்றை அறம், பொருள், இன்பங்களின் பொருட்டு விடுத்தலும், வல்லது அரசு - வல்லவனே அரசன்.
(ஈட்டல், காத்தல் என்றவற்றிற்கு ஏற்ப, இயற்றல்என்பதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. பொருள்களாவன:மணி, பொன், நெல் முதலாயின. அவை வரும் வழிகளாவன : பகைவரை அழித்தலும் , திறை கோடலும் , தன் நாடு தலையளித்தலும் முதலாயின. பிறர் என்றது பகைவர், கள்வர், சுற்றத்தார். வினைசெய்வார் முதலாயினர். கடவுளர், அந்தணர், வறியோர் என்று இவர்க்கும் புகழிற்கும் கொடுத்தலை அறப்பொருட்டாகவும், யானை, குதிரை, நாடு, அரண் என்று இவற்றிற்கும், பகையொடு கூடலின் பிரிக்கப்படுவார்க்கும், தன்னில்பிரிதலின் கூட்டப்படுவார்க்கும் கொடுத்தலைப் பொருட் பொருட்டாகவும், மண்டபம், வாவி, செய்குன்று, இளமரக்கா முதலிய செய்தற்கும், ஐம்புலன்களான் நுகர்வனவற்றிற்கும் கொடுத்தலைஇன்பப் பொருட்டாகவும் கொள்க. இயற்றல் முதலியதவறாமல் செய்தல் அரிதாகலின், 'வல்லது' என்றார்.
இவை நான்கு பாட்டானும் மாட்சியேகூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: நாட்டுக்குப் பொருள் வரும் வழிகளை உண்டாக்குதலும், நாட்டில் கிடைக்கப் பெறாதனவற்றைக் கிடைக்குமிடங்களிலிருந்து சேர்த்தலும், உள்ள பொருள்களை வீணாக்காமல் காப்பாற்றுதலும், காப்பாற்றியுள்ள பொருள்களைப் பயன்படும் வழிகளில் வகுத்துச் செலவிடுதலும் ஆகிய இவற்றுள் வல்லவனே அரசு செய்வதற்குரியவன்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு.

பதவுரை:
இயற்றலும்-உண்டாக்குதலும், உருவாக்கலும்; ஈட்டலும்-ஒருவழித் தொகுத்தலும்; காத்தலும்-காப்பாற்றுதலும்; காத்த-காப்பாற்றியவற்றை; வகுத்தலும்-வகை செய்தலும்; வல்லது-வன்மை கொண்டது; அரசு-அரசு.


இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரை:
மணக்குடவர்: பொருள் வரும்வழி யியற்றலும் அதனை அழியாம லீட்டலும் அதனைச் சோர்வுபடாமற் காத்தலும் காத்த அதனை வேண்டுவனவற்றிற்குப் பகுத்தலும்;
மணக்குடவர் விரிவுரை: பகுத்தல்- யானை குதிரை முதலிய படைக்குக் கொடுத்து அவையிற்றை யுண்டாக்குதல். இது பண்டாரங் கூறுமாறு கூறிற்று.
பரிப்பெருமாள்: பொருள் பெறுவழி முயறலும் அதனை அழியாம லீட்டலும் அதனைச் சோர்வுபடாமற் காத்தலும் அதனை வேண்டுவனவற்றிற்கு வகுத்தலும்;
பரிப்பெருமாள் விளக்கவுரை: வகுத்தலாவது யானை,குதிரை,படைக்குக் கொடுத்து அவையிற்றை உண்டாக்குதலும், அரண் செய்தல்,படைக்கலன்கள் பண்ணுதல் முதலாயினவற்றிற்கும் கொடுத்தல். இவை எல்லாம் பண்டாரம் ஆதலின் ஒரு பொருளைப் பலவாக வகுத்தல் என்றார். இது பண்டாரம் கூட்டுமாறு கூறிற்று.
பரிதி: பொருளைத் தேடுதலும், பொருளை வளர்த்தலும், பொருளைக் காத்தலும், பொருளை வழங்குதலும்;
காலிங்கர்: அரசு நெறி வழுவாமல் ஆறில் ஒன்றாகிய அறநெறிப் பொருளும், மற்று இங்ஙனம் வரும் வழி அறிந்து உள ஆக்குதலும், இங்ஙனம் கூடிய பொருளைச் சோர்வு படாமல் தமது ஆணையால் பாதுகாத்தலும், மற்று இங்ஙனம் காத்த பொருளை அகத்துளார்க்கும் புறத்துளார்க்கும் வகுக்கும் நெறி வழுவாமல் வகுத்தலும்;
பரிமேலழகர்: தனக்குப் பொருள்கள் வரும் வழிகளை மேன்மேல் உளவாக்கலும், அங்ஙனம் வந்தவற்றை ஒருவழித் தொகுத்தலும், தொகுத்தவற்றைப் பிறர் கொள்ளாமல் காத்தலும், காத்தவற்றை அறம், பொருள், இன்பங்களின் பொருட்டு விடுத்தலும்;
பரிமேலழகர் விரிவுரை: ஈட்டல், காத்தல் என்றவற்றிற்கு ஏற்ப, இயற்றல்என்பதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. பொருள்களாவன: மணி, பொன், நெல் முதலாயின. அவை வரும் வழிகளாவன : பகைவரை அழித்தலும் , திறை கோடலும் , தன் நாடு தலையளித்தலும் முதலாயின. பிறர் என்றது பகைவர், கள்வர், சுற்றத்தார். வினைசெய்வார் முதலாயினர். கடவுளர், அந்தணர், வறியோர் என்று இவர்க்கும் புகழிற்கும் கொடுத்தலை அறப்பொருட்டாகவும், யானை, குதிரை, நாடு, அரண் என்று இவற்றிற்கும், பகையொடு கூடலின் பிரிக்கப்படுவார்க்கும், தன்னில்பிரிதலின் கூட்டப்படுவார்க்கும் கொடுத்தலைப் பொருட் பொருட்டாகவும், மண்டபம், வாவி, செய்குன்று, இளமரக்கா முதலிய செய்தற்கும், ஐம்புலன்களான் நுகர்வனவற்றிற்கும் கொடுத்தலை இன்பப் பொருட்டாகவும் கொள்க. இவை நான்கு பாட்டானும் மாட்சியேகூறப்பட்டது.
[திறை கோடல் - வென்ற பகைவரிடமிருந்து கப்பம் கொள்ளுதல்-வரியினும் வேறானது; தலையளித்தல் - காத்தலும் சிறப்புச் செய்தலும்; வாவி - குளம்; செய்குன்று - செயற்கையாகக் கட்டப்பெற்ற மலை; இளமரக்கா - பூஞ்சோலை.]

தொல்லாசிரியர்கள் அனைவரும் இப்பகுதிக்குப் 'பொருளைத் தேடுதலும், பொருளை வளர்த்தலும், பொருளைக் காத்தலும், பொருளை வழங்குதலும்' என்ற பொருள்படும்படி உரை பகன்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொருளை ஆக்கி ஈட்டிக் காத்து வகைசெய்யும்', 'பொருள் வருவாய்க்குரிய வழிகளைச் செய்தலும் அதாவது தொகுத்தலும் அதனைப் பிறர் கொள்ளாமல் காத்தலும் காத்தவற்றை மக்கள் நலனுக்காக வகுத்தளித்தலும்', 'நீதி பரிபாலனம் செய்வதையும் நாட்டின் செல்வத்தை அதிகப்படுத்துவதையும் செல்வம் சீர்குலையாதபடி சேமிப்பதையும் சேமித்த செல்வத்தைத் திட்டமிட்டுப் பகிந்து செலவு செய்வதையும்', 'பொருள்வரும் வழிகளை உண்டாக்கிக் கொள்ளுதலும், பொருள்களைச் சேர்த்தலும், சேர்த்ததைப் பாதுகாத்தலும், காத்ததை நல்ல வழிகளில் செலவு செய்யப் பகுத்துவைத்தலுஞ்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பொருள் வளங்களை ஆக்குதலும், வருவாய் இலக்குகளை அடைதலும், தொகுத்த பொருளைப் பாதுகாத்தலும், அச்செல்வத்தை வகை செய்து வழங்குவதும் என்பது இப்பகுதியின் பொருள்.

வல்லது அரசு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரை:
மணக்குடவர்: வல்லவன் அரசனாவான்.
பரிப்பெருமாள்: வல்லவன் அரசனாவான்.
பரிதி: வல்லவன் அரசன்.
காலிங்கர்: செய்யவல்லது யாது; மற்று அதுவே அரசு ஆவது.
பரிமேலழகர்: வல்லவனே அரசன்.
பரிமேலழகர் கருத்துரை: இயற்றல் முதலிய தவறாமல் செய்தல் அரிதாகலின், 'வல்லது' என்றார்.

இப்பகுதிக்குப் பழைய ஆசிரியர்கள் 'வல்லவன் அரசன்' என்று உரைத்தனர். காலிங்கர் மட்டும் 'செய்யவல்லது அரசு' என்று அஃறிணையில் குறளில் கூறப்பட்டது போலவே உரை தந்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆற்றல் உடையதே அரசு', 'வல்லனே அரசன்', 'திறமையுடன் செய்யத் தக்கவனே அரசன்', 'செய்ய வல்லவன் அரசன் ஆவான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வன்மையுடையதே அரசு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பொருள் வளங்களை ஆக்குதலும், வருவாய் இலக்குகளை அடைதலும், தொகுத்த பொருளைப் பாதுகாத்தலும், அச்செல்வத்தை வகை செய்து வழங்குவதும் செய்ய வல்லது அரசு என்பது பாடலின் பொருள்.
'வல்லது அரசு' என்ற தொடர் குறிப்பது என்ன?

ஓர் அரசின் பொருள்செயல் வகையை ஆக்குதல், தொகுத்தல், காத்தல், அவற்றை பங்கீடு செய்தல் என்ற நாற்பெரும் பணிகள் கொண்டதாக விளக்கம் செய்யும் குறள்.
அரசின் வரவு-செலவு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முறை இக்குறளில் கூறப்படுகிறது. ‘அரச நிதி’ என்று ஒரு தொகுப்பாய் இன்றைய பொருளியல் வல்லுநர்கள் கூறும் வருவாய்த் துறைகளான இயற்றல், வருவாய்களை ஈட்டல், வருவாய்களைக் காத்தல், செலவுகளை வகுத்தல் இவையே இங்கு குறிக்கப்படுகின்றன. இவைதான் பொது வருவாய் (Public Revenue) நிதி நிருவாகம் (Financial administration) பொதுச்செலவீடு (Public Expenditure) என நிதியியல் உலகில் அறியப்படுகின்றன. (நிதியீட்டல், காத்தல் என்று வள்ளுவர் கண்ட இரண்டும் இன்று 'நிதி நிருவாகம்' என்பதனுள் அடங்கும்.)
வளங்கள் காணத் திட்டமிடுதலும், திட்ட இலக்குகளை எய்தலும், எய்தியவற்றை அழியாது காத்தலும், காத்தவற்றை முறைப்படி பங்கீடு செய்தலும் வல்லது எதுவோ அதுவே அரசு என்றும் இக்குறட்கருத்தை விளக்குவர்.

நிதி நிர்வாகத்தில் அரசுக்கு உரிய செயல்களாக இங்கு சொல்லப்படுவன:
இயற்றல்: இச்சொல் இங்கு பொருளாக்கம் குறித்து நின்றது. பொருளாக்கம் செல்வம் உண்டாக்குவது பற்றியது. செல்வம் தானாக வருவதன்று. அது உருவாக்கப்பட வேண்டிய ஒன்றாகும். உலகம் வளர்ந்து கொண்டிருக்கிறது. மக்களின் தேவைகளும் வளர்ந்து கொண்டிருக்கின்றன. தேவைகளை நிறைவு செய்துகொள்வதற்கான நிதி ஆதாரங்களின் அளவும் விரிவடைகிறது. புதிய பொருள் காண புதிய வழிகளைத் தேடவேண்டிய கட்டாயம் உள்ளது. விளைச்சல் நிலங்களும் கனிமவளங்களும் இல்லாத நாடுகள் வணிக மையமாய் மாறிப் பொருள் வருவாய்க்கு வழி தேடுகின்றன; சில நாடுகள் சுற்றுலாவை மையமாகக் கொண்டே வருவாயைப் பெருக்கிக் கொள்கின்றன. இவ்வாறு பொருள் வருவதற்கான வழிகளை அறிகின்ற திறமையே இயற்றல் எனப்படுகிறது. இயற்கை வளம், காலநிலை, இடம், மனிதவளம் இவற்றிற்கு ஏற்றவாறு வேளாண்மை, தொழில், வாணிகம், மற்ற சேவைகள் போன்றவற்றைப் பெருக்கத் தூண்டுகோலாக இருந்து பொருளை இயற்ற வேண்டும்; இவற்றை அரசே நடத்த முயலக்கூடாது. எளிதான வருவாய் வாயில்கள் என்பதற்காக கள்ளுக்கடைகளை நடத்துதல், பரிசுச் சீட்டுகளை விற்றல், சூதாட்டவிடுதிகள் நடத்துதல் போன்றவற்றில் அரசு நேரிடையாக ஈடுபடவே கூடாது.
ஈட்டல்: வரி, திறை, தீர்வை போன்றவற்றின் வழியாக வருவாய்ப்பொருளை முறையாகச் சேர்த்துத் தொகுக்க வேண்டும். இது ஈட்டல் எனப்படுகிறது.
காத்தல்: ஈட்டிய பொருளைப் பாதுகாப்போடு வைத்திருப்பது காத்தல் எனப்படும். பொருளை ஓரிடத்துக் குவித்துக் காப்பது தேவையான நேரங்களில் எடுத்துப் பயன்படுத்துவதற்காகவே. வேளாண்பொருள் போன்றவற்றை மழை, காற்று, வெயில்களால் அழுகல், உலறல், அழிதல் ஆகிய குறைகள் நேராது பாதுகாப்பதும் காத்தலில் அடங்கும். பொருளை மூலதனமாக வளர்த்து முதலீடு ஆக்கி மக்களுக்கு வேலை வாய்ப்பும் ஊதியமும் அரசுக்கு ஈட்டமும் கிடைக்கத்தக்க வகையில் செய்வதும் காத்தலில் அடங்கும். எதிர்காலத் தேவைகள், அவசர காலத் தேவைகள் இவற்றைக் கருத்தில் கொண்டும் காத்தல் அமையவேண்டும். ஈட்டிய பொருளைப் பகைவர், கள்வர், தீயர், அரசியல் சுற்றம் ஆகியோர் கொள்ளாமல் பாதுகாத்தலும் வேண்டும். அரசாங்கக் கருவூலத்தைக் காலியாக வைத்தல் சிறந்த ஆட்சி மரபன்று.
வகுத்தல்: செல்வப்பங்கீடே வகுத்தல் ஆகும்; தொகுக்கப்பட்ட செல்வம் பயன் தரும் வழியில் முறையாக வகுக்கப்படவேண்டும். பொருள் பங்கீடு முறையை நடைமுறைப் படுத்துதல் அரசின் முக்கியக் கடமையாகும். வகுத்தல் என்பது நாட்டு மக்கள் செல்வம் அனைவருக்கும் முறைமையானதும் நேர்மையானதுமான வகையில் சென்று சேர நெறிப்படுத்துவது குறித்தது. வெளிக்காவல், உள்நாட்டுக் காவல், சட்டம்-ஒழுங்கு மேலாண்மை, சாலைகள், தகவல்தொடர்பு போன்ற கட்டமைப்புகளை உருவாக்குதல், பஞ்சம், பிணி, மழையின்மைகளால் வருந்தும் இடங்களுக்கு உடனடியாக வேண்டிய அளவு பங்கிட்டுக் கொடுத்தல், கல்வி, சுகாதாரம் போன்றவை செலவினங்களாக இருக்கும். விளம்பரம், பொழுதுபோக்கு போன்ற பயனற்ற வீண் செலவுகளைக் கட்டுப்படுத்தல் தேவையானது. செல்வப் பங்கீடு சரியாக இல்லாத நாட்டில் வறுமை-வளம் என்ற வேறுபாடு அகலமாக இருக்கும்; அவ்வழி ஒழுக்கங்கள் சிதையும்; அமைதி குன்றும்; கலகத்துக்கு வித்தாக அமையும். வகுத்தல் பணி செம்மையாக நடைபெறாத நாட்டில் சிலர் ஆரத் துய்ப்பர்; பலர் வறுமையில் வாடுவர்.

'வல்லது அரசு' என்ற தொடர் குறிப்பது என்ன?

மேற்சொன்ன நிதி நிர்வாகப் பணிகளைச் செயற்படுத்தத் தனித்திறம் தேவை. தரிசு நிலங்களை விளை நிலங்களாக்குவது, கனிம வளங்களைப் பயன்படுத்தி அதை வருவாய்க்கு உரியதாக மாற்றுவது, புதிய வரிகளைச் சுமை தெரியாவண்ணம் இட்டு வருமானம் ஈட்டுவது போன்ற வருவாய் பெருக்கும் துறைப் பணிகளை நிறைவேற்றுவது எளிதல்ல. தொகுத்தலும் தொகுத்ததைக் காத்தலும் அரிய பணிகளாம். அது போலவே வகுத்து வழங்குவதும் அரசுக்குத் துன்பம் தரும் செயல்களே. அரசியல் வலுமிக்கக் குழுக்கள் தம்நலம் கருதி எதிர்ப்பு தெரிவிக்கும். ஒட்டுமொத்த சமுதாய மக்களுக்கு எவை நல்லவையோ அவற்றைக் கருத்தில் இருத்தி அரசு உறுதியுடன் செயல்படவேண்டும். இச்செயல்களின் அருமை கருதி வல்லது அரசு என்றார் வள்ளுவர்.

'அரசு', 'வல்லது' என அஃறிணையிலேயே குறிக்கப் பெற்றாலும் இவற்றைப் பொருளால் அரசன் வல்லவன் என்று உயர்திணையிலேயே பெரும்பான்மை உரையாசிரியர்களும் கொள்வர். குறளில் கண்டபடியே 'வல்லது அரசு' என்று கொள்வதே பொருத்தமானது.

ஆட்சியியலுக்குரிய பொருள் வாயில்களை உருவாக்கலும் பொருளை ஈட்டுதலும் ஈட்டிய பொருளை மூலதனமாகும் வரை தொகுத்துக் காத்தலும், அங்ஙனம் காத்த மூலதனத்தை மக்களுக்குப் பயன்படும் வழியில் வகுத்துச் செலவிடுதலும் தெரிந்து செய்யக்கூடிய வன்மையுடையதே அரசு என்பது இக்குறள் கூறும் கருத்து.





அதிகார இயைபு

அரசின் நிதி நிருவாகத்தின் செயல்திறங்கள் அடுக்கப்பட்டுள்ள இறைமாட்சி பாடல்.

பொழிப்பு

பொருளை ஆக்கி, தொகுத்து, காத்து, வகுத்தளிக்கும் ஆற்றல் உடையதே அரசு.