இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0384அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா
மானம் உடையது அரசு

(அதிகாரம்:இறைமாட்சி குறள் எண்:384)

பொழிப்பு(மு வரதராசன்): ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல், அறமல்லாதவற்றை நீக்கி, வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.

மணக்குடவர் உரை: அறத்திற் றப்பாமலொழுகி அறமல்லாத காம வெகுளியைக் கடிந்து மறத்திற் றப்பாத மானத்தையுடையவன் அரசன்.

பரிமேலழகர் உரை: அறன் இழுக்காது - தனக்கு ஒதிய அறத்தின் வழுவாது ஒழுகி, அல்லவை நீக்கி - அறனல்லவை தன் நாட்டின் கண்ணும் நிகழாமல் கடிந்து, மறன் இழுக்கா மானம் உடையது அரசு - வீரத்தின் வழுவாத தாழ்வு இன்மையினை உடையான் அரசன்.
(அவ்வறமாவது, ஓதல், வேட்டல், ஈதல் என்னும் பொதுத்தொழிலினும், படைக்கலம் பயிறல், பல் உயிரோம்பல், பகைத்திறம் தெறுதல் என்னும் சிறப்புத்தொழிலினும் வழுவாது நிற்றல். மாண்ட, 'அறநெறி முதற்றே அரசின் கொற்றம்' (புறநா. 55) - என்பதனால், இவ்வறம் பொருட்குக் காரணமாதல் அறிக. அல்லவை, கொலை, களவு முதலாயின. குற்றமாய மானத்தின் நீக்குதற்கு, 'மறன் இழுக்கா மானம்' என்றார். அஃதாவது,
வீறின்மையின் விலங்காம் என மதவேழமும் எறியான்
ஏறுண்டவர் நிகராயினும் பிறர் மிச்சில் என்று எறியான்
மாறன்மையின் மறம்வாடும் என்று இளையாரையும் எறியான்
ஆறன்மையின் முதியாரையும் எறியான் அயில் உழவன் (சீவக. மண்மக.159) எனவும் , அழியுநர் புறக்கொடை அயில்வேல் ஓச்சான'.(பு.வெ. வஞ்சி. 20) எனவும் சொல்லப்படுவது. அரசு: அரசனது தன்மை : அஃது உபசார வழக்கால் அவன்றன்மேல் நின்றது.)

குன்றக்குடி அடிகளார் உரை: அறநெறி பிறழாது அறமல்லாதனவற்றை நீக்கி வீரத்திலும் குறைவில்லாது மானமுடையதாக விளங்குவது அரசு. இங்கு "அறம்" என்று குறிப்பிடப் பெறுவது சமுதாய நியதியின் பொது அறங்களாகும். அல்லவை நீக்கி என்றதால் அறம் அல்லாதன அரசின் ஆட்சியிலும் குடிமக்கள் வாழ்வியலிலும் நிகழாவண்ணம் நீக்கி என்பது பொருள். அரசுக்கு மானமாவது, அறநெறி பிறழாமை, முறை கோடாமை, தன் நாட்டு மக்களுக்கு வாழ்வளித்தல் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய பெருமை என்பர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன் இழுக்கா மானம் உடையது அரசு.

பதவுரை:
அறன்-அறநெறி; இழுக்காது-வழுவாது; அல்லவை-அறமல்லாதவைகளை; நீக்கி-விலக்கி; மறன்-வீரம்; இழுக்கா-தவறாத; மானம்-தாழ்வின்மை; உடையது-உடைமையாகக் கொண்டது; அரசு-அரசு.


அறன் இழுக்காது அல்லவை நீக்கி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரை:
மணக்குடவர்: அறத்திற் றப்பாமலொழுகி அறமல்லாத காம வெகுளியைக் கடிந்து;
பரிப்பெருமாள்: அறத்திற் றப்பாமலொழுகி அறமல்லாத காம வெகுளி மயக்கம் என்னும் இவை கடிந்து;
பரிதி: தன்மநீதி குன்றாமல், பாவமான காரியத்தை நீக்கி;
காலிங்கர்: அளித்தற்குத் தகுவதாகிய அறநெறிப் பொருளை வழுவாது செய்து, அதற்குத் தகுவதாகிய அறம் அல்லனவற்றையும் கடிந்து;
பரிமேலழகர்: தனக்கு ஒதிய அறத்தின் வழுவாது ஒழுகி, அறனல்லவை தன் நாட்டின் கண்ணும் நிகழாமல் கடிந்து;
பரிமேலழகர் குறிப்புரை: அவ்வறமாவது, ஓதல், வேட்டல், ஈதல் என்னும் பொதுத்தொழிலினும், படைக்கலம் பயிறல், பல் உயிரோம்பல், பகைத்திறம் தெறுதல் என்னும் சிறப்புத்தொழிலினும் வழுவாது நிற்றல். மாண்ட, 'அறநெறி முதற்றே அரசின் கொற்றம்' (புறநா. 55) - என்பதனால், இவ்வறம் பொருட்குக் காரணமாதல் அறிக. அல்லவை, கொலை, களவு முதலாயின.

மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி ஆகியோர் அரசன் அறத்தின் வழி ஒழுகி தீவினைகளைக் கடியவேண்டும் என்ற வகையில் உரை தருவர். காலிங்கர் அறத்தின்வழி பொருள் ஈட்டி, அதை வகுத்தலில் அறம் அல்லாதனவற்றைக் கடிந்து என்கிறார். பரிமேலழகர் அரசனுக்கு ஓதிய ஆறு அறங்களில்-மூன்று பொதுத்தொழில் அறம், மூன்று சிறப்புத் தொழில் அறம், வழுவாது ஒழுகி, கொலை, களவு போன்ற அறன் அல்லவை தன் நாட்டின் கண் நிகழாமல் காத்து என்பார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறம் வழுவாது தீமைகளை நீக்கி', 'அறநெறியினின்றும் வழுவாமல் நெறியல்லவற்றை நீக்கி', 'தன்னுடைய தர்மங்களில் தவறிவிடாமல் நடந்துகொண்டு குடிமக்களிடை அதர்மங்கள் ஏற்பட்டால் அவற்றை நீக்கி', 'அறநெறியில் தவறாது, மக்கட்குத் தீமை பயப்பனவற்றை நீக்கி', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அறத்திலிருந்து வழுவாமல் அறமல்லாதன நிகழவொட்டாமல் காத்து என்பது இப்பகுதியின் பொருள்.

மறன் இழுக்கா மானம் உடையது அரசு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரை:
மணக்குடவர்: மறத்திற் றப்பாத மானத்தையுடையவன் அரசன்.
பரிப்பெருமாள்: மறத்திற் றப்பாத மானத்தையுடையவன் அரசனாவன்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மானமும் கடிய வேண்டுதலின் மறத்தில் தப்பாத மானம் வேண்டும் என்றார். இஃது ஒழுக்கமும் நிலைமையும் வேண்டும் என்றது.
பரிதி: வெற்றிப்பாட்டினால் மானமுள்ளவன் அரசன் என்றவாறு.
காலிங்கர்: மற்று இதற்கு ஏற்ற மறத்தினையும் வழுவாது ஏனை அறநெறிப் பொருட்கு ஏற்ற மானத்தை உடையவன் யாவன்; மற்று அவனே அரசன் ஆவான்.
பரிமேலழகர்: வீரத்தின் வழுவாத தாழ்வு இன்மையினை உடையான் அரசன்.
பரிமேலழகர் குறிப்புரை: குற்றமாய மானத்தின் நீக்குதற்கு, 'மறன் இழுக்கா மானம்' என்றார்.அஃதாவது,
வீறின்மையின் விலங்காம் என மதவேழமும் எறியான்
ஏறுண்டவர் நிகராயினும் பிறர் மிச்சில் என்று எறியான்
மாறன்மையின் மறம்வாடும் என்று இளையாரையும் எறியான்
ஆறன்மையின் முதியாரையும் எறியான் அயில் உழவன் (சீவக. மண்மக.159)
எனவும், 'அழியுநர் புறக்கொடை அயில்வேல் ஓச்சான' (புறப்பொருள்.வெண்பாமாலை. வஞ்சி. 20) எனவும் சொல்லப்படுவது. அரசு: அரசனது தன்மை: அஃது உபசார வழக்கால் அவன்றன்மேல் நின்றது.

பழைய ஆசிரியர்கள் 'வீரத்தின் வழுவாத மானத்தை உடையான் அரசன்' என்ற வகையில் இப்பகுதிக்குப் பொருள் கண்டனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மறம் வழுவாது மானம் காப்பது அரசு', 'போர் வீரத்திலும் வழுவாத பெருமையுடையவனே அரசன்', 'ஆண்மைக்குக் குறைவு வராதபடி மானத்தோடு இருப்பவனே அரசன்', 'வீரத்தில் தவறாமல், மானம் உடையவனாக இருப்பவனே அரசுக்குரியவன்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வீரத்தில் வழுவாது மானம் உடையதாக இருப்பது அரசு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அறத்திலிருந்து வழுவாமல் அறமல்லாதன நிகழவொட்டாமல் காத்து மறன் இழுக்கா மானம் உடையதாக இருப்பது அரசு என்பது பாடலின் பொருள்.
மறன் இழுக்கா மானம் என்பது என்ன?

அறம், மறம், மானம் காப்பது அரசு.

அறநெறிகளிலிருந்து வழுவக்கூடாது; தீயவற்றை அகற்றி வீரத்துக்கு இழுக்குவராது துணிந்து நடக்கவேண்டும்; இறையாண்மை காக்கப்பட வேண்டும்.
அரசை நடத்திச் செல்லும் வழிமுறைகள் சொல்லப்படுகின்றன. ஓர் அரசு அறத்தினின்றும் பிறழாததாக, தீயவைகளைக் களைவதாக, நாட்டின் மானத்தைக் காப்பதாக இருக்கவேண்டும் என்று கூறுகிறது பாடல். அறன் இழுக்காது என்பது முறைதவறாத செங்கோல் ஆட்சியையும், 'அல்லவை நீக்கி' என்பது நாட்டிலிலுள்ள தீயவைகளை ஒழித்தலையும் 'மறனிழுக்காமானம்' என்பது வன்முறை, கலகம் விளைவிக்கும் உள்நாட்டுப்பகைவரையும் எல்லைதாண்டி வந்து தாக்கும் வெளிநாட்டுப் பகைவரையும் தொலைத்தலையும் குறிப்பதாகக் கொள்வர்.

அறம் நனி சிறக்க! அல்லது கெடுக!(ஐங்குறுநூறு 7 பொருள்: அறம் மிக ஓங்குக! அறமல்லாதது கெடுக!) என்று சொல்லும் சங்கப் பாடல்.
பரிமேலழகர் உரையில் சொல்லப்பட்டுள்ள புறநானூற்றுப் பாடல் அரசவறத்தின் தன்மையை நன்கு உணர்த்தும். அப்பாடல்:
..........................மாண்ட
அறநெறி முதற்றே யரசின் கொற்றம்
அதனால் தமரெனக் கோல் கோடாது
பிறரெனக் குணங்கொல்லாது
ஞாயிற் றன்ன வெந்திற லாண்மையுந்
திங்க ளன்ன தண்பெருஞ் சாயலும்
வானத் தன்ன வண்மையு மூன்றும்
உடையை யாகி
(புறநானூறு. 55 பொருள்: மாட்சிமைப்பட்ட அறநெறியை முதலாக வுடைத்து வேந்தரது வெற்றி. அதனால் இவர் நம்முடையரென அவர் செய்த கொடுந் தொழிலைப் பொறுத்துக் கோல் வளையாது, இவர் நமக்கு அயலோ ரென்று அவர் நற்குணங்களைக் கெடாது, ஞாயிற்றைப் போன்ற வெய்ய திறலையுடைய வீரமும், திங்களைப் போன்ற குளிர்ந்த பெரிய மென்மையும், மழையைப் போன்ற வண்மையுமென்ற மூன்றையு முடையையாகி.)
'அறனிழுக்காது அல்லவை நீக்குதல்' என்பதற்கு பெரியபுராணத்திலிருந்து பாடல் ஒன்றை தேவநேயப் பாவாணர் மேற்கோள் காட்டியுள்ளார். அது:
மாநிலங்கா வலனாவான் மன்னுயிர்காக் குங்காலைத்
தானதனுக் கிடையூறு தன்னால்தன் பரிசனத்தால்
ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால்
ஆனபயம் ஐந்துந்தீர்த் தறங்காப்பான் அல்லனோ.
(பெரியபுராணம், 4:36 பொருள்: பெரிய நிலவுலகத்திற்கு அரசனாவான், நிலை பெற்ற உயிர்களைக் காக்குங் காலத்து, அவ்வுயிர்களுக்குத் தன் காரண மாயும், தன் கீழ்ப் பணிபுரியும் அமைச்சர் முதலானோரின் காரண மாயும், குற்றத்தை விளைவிக்கும் பகைவர்கள் காரணமாயும், கள்வர் காரணமாயும், பிற உயிர்கள் காரணமாயும் வருகின்ற துன்பங்களால் வரும் ஐந்து அச்சங்களையும் நீக்கி அறத்தை வழுவாமல் காப்பவன் அல்லனோ?)

மறன் இழுக்கா மானம் என்பது என்ன?

அரசானது வீரம் வழுவாத மானம் உடையதாக இருக்கவேண்டும். அரசுக்கு மானம் உண்டு. அதுவே இறையாண்மை எனப்படுவது. அது காக்கப்பட வேண்டும். 'மறன் இழுக்கா மானம்' என்று வீரத்திற்கு ஏற்புடைய மானம் சொல்லப்பட்டது. நாட்டின் மானமே குறிக்கப்பெறுகிறது.
மானம் உடையது என்பதற்கு 'நாட்டின் மானமே தன் மானமாகக் கொண்டு அவன் வாழ்க்கை நடத்தவேண்டும். நாட்டிற்கு உண்டாகும் சிறுமை தன் சிறுமை என்றும், அதன் பெருமை தன் பெருமை என்றும் வாழவேண்டும். தன் தனிமானத்தை நாட்டு வாழ்க்கையில் புகுத்தி நாட்டு மக்களுக்குப் போர் முதலிய தொல்லைகளை விளைக்கக்கூடாது. தன்னைக் குறைகூறினால் பொறுத்து, நாட்டைக் குறைகூறினால், புறக்கணிக்காத மானம் வேண்டும்' என்று விளக்கம் அளிப்பார் மு வ.

அறன் என்பது நல்வினையையும், மறன் என்பது தீவினையையும் பொதுவாகக் குறிக்கும். இரண்டும் ஒன்றற்கொன்று மறுதலைச் சொல்லாய் அமையும். ஆனால் இப்பாடலில் உள்ள மறன் 'வீரம்' என்னும் பொருளை உணர்த்துவது. அரசுக்குரிய மானம் வீரத்தின் வழி வருவது. எனவே 'மறன் இழுக்கா மானம்' எனப்பட்டது. குற்றமான மானத்திற்கு பரிமேலழகர் உரையிற் காட்டிய சிந்தாமணிப் பாடல் நல்ல விளக்கம் தரும். காப்பியத் தலைவனான சீவகனின் தம்பி விபுலன் தோன்றும் அந்த வீரக் காட்சி:
வீறின்மையின் விலங்காம் என மதவேழமும் எறியான்
ஏறுண்டவர் நிகராயினும் பிறர் மிச்சில் என்று எறியான்
மாறன்மையின் மறம்வாடும் என்று இளையாரையும் எறியான்
ஆறன்மையின் முதியாரையும் எறியான் அயில் உழவன்
(சீவகசிந்தாமணி. மண்மகள் இலம்பகம்.261 பொருள்: வேலேந்திய உழவனாகிய (காப்பியத் தலைவனான சீவகனின் தம்பி விபுலன்) மத யானையை எறிந்தாலும் விலங்கை எறிந்ததாகும் என எண்ணி, அதனாலே வெற்றியில்லை என்பதால், அதனையும் வெட்டாமல்; முன்பு பிறரால் வெட்டுண்டவர், தனக்கு ஒப்பாராயினும், பிறர் படை தீண்டிய எச்சில் என்று அவரையும் வெட்டாமல்; தனக்கு இளையவரையும், நிகர் இல்லாததால், வீரம் இழுக்குறுமென்று நினைத்து வெட்டாமல்; தன்னின் முதிர்ந்தோரையும் எறிதல் அறமன்மையின் வெட்டாமல் நின்றான்.)
மறனிழுக்குதல் என்பதற்கு வீரத்தில் வழுவுதலான பகையில்லார் மேல் படையெடுத்துச் செலுத்தும், புறங்காட்டி ஓடியவன் மேல் ஆயுதம் பிரயோகித்தலும் பெண்கள் மேற் போர் புரிதலும் இன்னும் இவை போல்வனவும் எனவும் விளக்கந் தருவர்.

அறத்திலிருந்து வழுவாமல் அறமல்லாதன நிகழவொட்டாமல் காத்து வீரத்தில் வழுவாது மானம் உடையதாக இருப்பது அரசு என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அறம் காக்கும் அதேவேளை மறமும் காக்கப்பட வேண்டும் என்னும் இறைமாட்சி பா.

பொழிப்பு

அறநெறியினின்று வழுவாமல் அறமற்றவற்றை நீக்கி வீரத்திலும் குறைவுபடாது மானம் காப்பது அரசு.