இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0382



அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு

(அதிகாரம்:இறைமாட்சி குறள் எண்:382)

பொழிப்பு (மு வரதராசன்): அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை ஆகிய இந்த நான்கு பண்புகளும் குறைவுபடாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.

மணக்குடவர் உரை: அஞ்சாமையும் ஈகையும் அறிவுடைமையும் ஊக்கமுடைமையுமென்னும் இந்நான்கு குணமும் ஒழியாமை வேந்தனுக்கியல்பு.

பரிமேலழகர் உரை: வேந்தற்கு இயல்பு - அரசனுக்கு இயல்பாவது, அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை - திண்மையும் கொடையும், அறிவும், ஊக்கமும், என்னும் இந்நான்கு குணமும் இடைவிடாது நிற்றல். (ஊக்கம் : வினை செய்தற்கண் மன எழுச்சி. இவற்றுள் அறிவு ஆறு அங்கத்திற்கும் உரித்து; ஈகை படைக்கு உரித்து, ஏனைய வினைக்கு உரிய. உயிர்க்குணங்களுள் ஒன்று தோன்ற ஏனைய அடங்கி வரும். அவற்றுள் இவை அடங்கின், அரசற்குக் கெடுவன பல ஆமாகலின், இவை எப்பொழுதும் தோன்றி நிற்றல் இயல்பாக வேண்டும் என்பார், 'எஞ்சாமை வேந்தற்கு இயல்பு' என்றார்.)

வ சுப மாணிக்கம் உரை: அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் நான்கும் வேந்தனுக்கு நன்கு வேண்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வேந்தற்கு இயல்பு அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை.

பதவுரை:
அஞ்சாமை-திண்மை (மனம் கலங்கா நிலைமை); ஈகை-கொடை; அறிவு-அறிவு; ஊக்கம்-உள்ளக் கிளர்ச்சி; இந்நான்கும்-இந்நாலும்; எஞ்சாமை-இடைவிடாது நிற்றல்; வேந்தற்கு-ஆட்சித்தலைவர்க்கு; இயல்பு-தன்மை.


அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரை:
மணக்குடவர்: அஞ்சாமையும் ஈகையும் அறிவுடைமையும் ஊக்கமுடைமையுமென்னும் இந்நான்கு குணமும் ஒழியாமை;
பரிப்பெருமாள்: அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் இவை நான்கும்;
பரிதி: திடபுத்தியும் கொடையும் விசாரமும் அறிவுடைமையும் இந்த நான்கும் உள்ளவன்;
காலிங்கர்: அஞ்சாமை என்பது தறுகணாண்மை.ஈண்டு ஈகை என்பது கீழ்ச்சொன்ன இல்லறத்து இயல்பாகிய கொடை நெறிக்கு அடங்காது தனது பெரும்பொருட்கும் பெருந்தன்மைக்கும் ஏற்குமாறு மற்ற அந்தணர் முதலாக இழிகுலத்தாராகிய புலையர் ஈறாக அனைவர்க்கும் வரம்பற வழங்கும் வண்மை என அறிக. அறிவு என்பது மற்று இத்தகுதியும் அல்லதும் தெரிந்து உணரும் உணர்வு என்றவாறு. ஊக்கம் என்பது உள்ளமானது மேம்படக் கருதும் மேற்கோள் என்றவாறு.எஞ்சாமை என்பது ஒழியாமை என்றது, இவை நான்கும் எஞ்ஞான்றும் இடைவிடாது இருத்தலே;
பரிமேலழகர்: திண்மையும் கொடையும், அறிவும், ஊக்கமும், என்னும் இந்நான்கு குணமும் இடைவிடாது நிற்றல்;
பரிமேலழகர் விரிவுரை: ஊக்கம் - வினை செய்தற்கண் மன எழுச்சி. இவற்றுள் அறிவு ஆறு அங்கத்திற்கும் உரித்து; ஈகை படைக்கு உரித்து, ஏனைய வினைக்கு உரிய. உயிர்க்குணங்களுள் ஒன்று தோன்ற ஏனைய அடங்கி வரும். அவற்றுள் இவை அடங்கின், அரசற்குக் கெடுவன பல ஆமாகலின், இவை எப்பொழுதும் தோன்றி நிற்றல் 'எஞ்சாமை வேந்தற்கு இயல்பு' என்றார்,'

'அஞ்சாமையும் ஈகையும் அறிவுடைமையும் ஊக்கமுடைமையுமென்னும் இந்நான்கு குணமும் ஒழியாமை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் இல்லறவியலில் சொல்லப்பட்ட கொடைநெறி வேறு இங்கு சொல்லப்படும் ஈகை வேறு என்று பிரித்துப் பார்க்கிறார். பரிமேலழகர் இப்பாடலில் சொல்லப்பட்ட ஈகை படைக்கு உரித்து என்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அச்சமில்லாமையும் கொடையும் அறிவும் உள்ளக் கிளர்ச்சியும் ஆகிய நான்கு நன்மைகளும் நீங்காது நிற்கப்பெறுதல்', 'மனத்திண்மை, கொடை, அறிவு, ஊக்கம் என்னும் இந்நான்கினையும் இடைவிடாது பெற்றிருத்தலே', 'பயமில்லாத தன்மை, ஏழைகளுக்கு இரங்கி தானம் கொடுத்தல், அரசாட்சிக்கு வேண்டிய சட்ட திட்ட அறிவு, விடா முயற்சி ஆகிய இந்த நான்கும் நிறைந்திருக்க வேண்டியது', 'அஞ்சுமியல்பு இல்லாமையும், கொடையும், அறிவும், ஊக்கமும் என்னும் இந்நான்கு குணங்களையும் என்றும் பெற்றிருத்தல்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

திண்மை, கொடை, அறிவு, ஊக்கமுடைமை ஆகிய இந்நான்கு குணங்களும் நீங்காது நிறைந்து நிற்றல் என்பது இப்பகுதியின் பொருள்.

வேந்தற்கு இயல்பு:

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரை:
மணக்குடவர்: வேந்தனுக்கியல்பு.
பரிப்பெருமாள்: இயற்கையாக வேண்டும்.
பரிதியார்: அரசன் என்றவாறு.
காலிங்கர்: அரசருக்கு மரபு.
பரிமேலழகர்: அரசனுக்கு இயல்பாவது.
பரிமேலழகர் விரிவுரை: இயல்பாக வேண்டும் என்பார், 'எஞ்சாமை வேந்தற்கு இயல்பு' என்றார்.

'வேந்தனுக்கு இயல்பு/மரபு' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அரசர்க்குச் சிறந்த இயல்பாகும்', 'ஆளும் அரசர்களுக்கு இயல்பாம்', 'அரசனுக்கு வேண்டிய தகுதி', 'அரசனுக்கு இயல்பாவது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஆட்சித்தலைவர்க்கு இயல்பாக அமையவேண்டியவை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
திண்மை, கொடை, அறிவு, ஊக்கமுடைமை ஆகிய இந்நான்கு குணங்களும் நீங்காது நிறைந்து நிற்றல் ஆட்சித்தலைவர்க்கு இயல்பாக அமையவேண்டியவை என்பது பாடலின் பொருள்.
'இயல்பு' குறிப்பது என்ன?

பயமின்மை, கொடுக்கும் குணம், அறிவு, ஊக்கம் இவை ஆட்சித்தலைவனுக்கு வேண்டிய இன்றியமையாப் பண்புகள்.

அச்சமில்லாமை, வள்ளன்மை, அறிவுடைமை, ஊக்கம் உடைமை, ஆகிய இந்த நான்கு குணங்களும் குறைவு படாமல் இருத்தலே ஆட்சித்தலைவனுக்கு இயல்பு ஆகும்.
எதனையும் அஞ்சாமல் எதிர்கொள்ளும் ஆற்றல் படைத்து, நல்லதும் கெட்டதும் பகுத்துணரும் அறிவுடையனாகி, ஊக்கத்துடன் செயல்படும், ஈரநெஞ்சுள்ளவனே ஒரு நாட்டை ஆளத் தகுதியானவன். ஒரு நாட்டுத்தலைவனுக்கு இயல்பாக அமையவேண்டிய நான்கு பண்புகள் சொல்லபட்டுள்ளன. அவை:
அஞ்சாமை வீரம் நிறைந்தவனாக அதாவது அஞ்சாத மனத்திண்மை கொண்டவனாக இருத்தல். இது அஞ்சாத வலியுடைமை, தறுகணாண்மை, மாற்றார்திறங்கண்டும் அஞ்சாமை, அஞ்சத்தகாதவற்றிற்கு அஞ்சாமை எனவும் விளக்கப்படும். ஆட்சித்தலைவனுக்கு எப்பொழுதும் துணையாக இருப்பது தன் உள்ளத்திண்மையே எனக் கருதி, அஞ்சாமை அல்லால் துணை வேண்டா.....( 497) என்று குறள் மற்றோர் இடத்திலும் குறிக்கும்.
ஈகை கருணை உள்ளங் கொண்டவனாக குடிமக்கள் துயரம் தனக்குற்றதாக எண்ணி உதவி செய்யும் மனப்பான்மை கொள்ளல். வறியவர்களுக்குக் கடைசிப் புகலிடம் அரசின் வள்ளன்மைதான். எனவே ஆட்சியாளர் ஈகைக் குணம் உடையவராக இருத்தல் வேண்டும்.
அறிவு அரசியல் ஆட்சித்திறம் முடிவு காணும் ஆற்றல் உள்ளவனாயிருத்தல். எந்த ஒரு அரசியல் நெருக்கடிக்கும் இறுதியில் தானே முடிவு செய்யப் போதிய அறிவு பெற்றிருத்தலைக் குறிப்பது. இயற்கை அறிவு இங்கு குறிக்கப் பெறுகிறது.
ஊக்கம் தளராத மனக்கிளர்ச்சியுடையவனாய், விடாமுயற்சி கொண்டவனாக இருத்தல்.

காலிங்கரது உரை இக்குறட்கருத்தை நன்கு விளக்கும்: 'அஞ்சாமை என்பது தறுகணாண்மை; ஈண்டு ஈகை என்பது இல்லறத்து இயலில் கூறிய கொடை ஆகாது; தனது பெரும்பொருட்கும் பெருந்தன்மைக்கும் ஏற்குமாறு எல்லாநிலை மக்களுக்கும் வரம்பற வழங்கும் வண்மையாகும்; அறிவு என்பது மற்று தகுதியும் தகுதியல்லதும் தெரிந்து உணரும் உணர்வு; ஊக்கம் என்பது உள்ளமானது மேம்படக் கருதும் மேற்கோள் அதாவது கொள்கை. இவை நான்கும் எஞ்ஞான்றும் இடைவிடாது இருத்தலே அரசருக்கு மரபு'.

'இயல்பு' குறிப்பது என்ன?

'இயல்பு' என்ற சொல்லுக்கு இயற்கையாக வேண்டும், மரபு, இயல்பாக அமைந்திருக்க வேண்டும், நன்கு வேண்டும், இலக்கணம், தகுதி, இயல்பான தன்மை, இயல்பாக அமையவேண்டியவை என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பரிப்பொருள் 'இவை நான்கும் இயற்கையாக வேண்டும்' என்கிறார். ஒரு நாட்டை ஆளும் தலைவனுக்குச் சில இயல்புகள் இருந்தே ஆக வேண்டும். இது அவனுக்கு உரிய பண்புகளாக அமைய வேண்டுனவனவற்றைக் குறிக்கும். சில பண்புகள் இயற்கையாகவே ஒருவரிடம் அமைந்திருக்கும். சில அவர் முயற்சிகளினால் பெறக்கூடியவை. பின்னர் அவை அவரது பண்பாக மாறி அமையும் தன்மை உடையன. திண்மை, கொடை, அறிவு, ஊக்கம் ஆகியவை ஆட்சித்தலைவனிடம் இயல்பாய் அமைந்திருக்க வேண்டும் என்கிறது இப்பாடல்.

திண்மை, கொடை, அறிவு, ஊக்கமுடைமை ஆகிய இந்நான்கு குணங்களும் நீங்காது நிறைந்து நிற்றல் ஆட்சித்தலைவர்க்கு இயல்பாக அமையவேண்டியவை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஆட்சித்தலைவர்க்கு இருந்தே ஆகவேண்டிய பண்புகளைக் கூறும் இறைமாட்சிப் பா.

பொழிப்பு

மனத்திண்மை, ஈகை, அறிவு, ஊக்கம் என்னும் இந்நான்கினையும் இயல்பாய் முழுதும் பெற்றிருப்பவனே அரசன்.