இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0379நன்றுஆங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவது எவன்

(அதிகாரம்:ஊழ் குறள் எண்:379)

பொழிப்பு (மு வரதராசன்): நல்வினை விளையும்போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றவர், தீவினை விளையும்போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ?

மணக்குடவர் உரை: நன்மை வருங்காலத்து நன்றாகக் காண்பவர் தீமை வருங்காலத்து அல்லற்படுவது யாதினுக்கு?
இஃது அறிந்தவர் வருவனவெல்லாம் இயல்பென்று கொள்ளவேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை: நன்று ஆங்கால் நல்லவாக் காண்பவர் - நல்வினை விளையுங்கால், அதன் விளைவாய இன்பங்களைத் துடைக்கும் திறன் நாடாது, இவை நல்ல என்று இயைந்து அனுபவிப்பார், அன்று ஆங்கால் அல்லற்படுவது எவன் - ஏனைத் தீவினை விளையுங்கால் அதன் விளைவாய துன்பங்களையும் அவ்வாறு அனுபவியாது, துடைக்கும் திறன் நாடி அல்லல் உழப்பது என் கருதி?
(தாமே முன் செய்து கொண்டமையானும், ஊட்டாது கழியாமையானும், இரண்டும் இயைந்து அனுபவிக்கற்பால, அவற்றுள் ஒன்றிற்கு இயைந்து அனுபவித்து, ஏனையதற்கு அது செய்யாது வருந்துதல் அறிவன்று என்பதாம். இவை மூன்று பாட்டானும் இன்பத்துன்பங்கட்குக் காரணமாய ஊழின் வலி கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: நன்மை உண்டாகும் பொழுது நன்மைகளாகக் கருதி இன்பம் அடைபவர், நன்மை அல்லாதன உண்டாகும்கால் அவற்றையும் பொறுமையோடு ஏற்றுக்கொள்ளாது துன்பப்படுவது ஏன்? (இன்பத்தை ஏற்றல் போல் துன்பத்தையும் ஏற்றல் விதியை உணர்ந்தார் செயலாகும்.)


பொருள்கோள் வரிஅமைப்பு:
நன்றுஆங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவது எவன்.

பதவுரை: நன்று-நன்மை; ஆங்கால்-விளையுங்கால்; நல்லவா-நன்மையானவையாகும்படி; காண்பவர்-இயைந்து அனுபவிப்பவர்; அன்று-அதற்கு மறுதலையானது; ஆங்கால்-ஆகும்போது; அல்லல்-துன்பம்; படுவது-உழத்தல்; எவன்-என்னத்துக்கு?.


நன்றுஆங்கால் நல்லவாக் காண்பவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நன்மை வருங்காலத்து நன்றாகக் காண்பவர்;
பரிப்பெருமாள்: நன்மை வருங்காலத்து நன்றாகக் காண்பவர்கள்;
பரிதி: நல்வினை வருங்கால் பிரியமாயிருக்கவும்;
காலிங்கர்: நல்விதியானே தமக்கு நன்றாங் காலத்து அங்ஙனம் நல்லனவாகக் கண்டு வருகின்றவர்;
பரிமேலழகர்: நல்வினை விளையுங்கால், அதன் விளைவாய இன்பங்களைத் துடைக்கும் திறன் நாடாது, இவை நல்ல என்று இயைந்து அனுபவிப்பார்;

'நன்மை வருங்காலத்து நன்றாகக் காண்பவர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நன்மை தரும்போது நல்லதாக மதிப்பவர்', 'நல்லது வரும் காலத்து ஏற்றதாகக் கொண்டு இன்பம் துய்ப்பவர்', 'நன்மை வரும்போது இன்பப்படுகிற மனிதர்கள்', 'நல்வினை நன்மைகளைக் கொடுக்குங்கால் அவற்றை நல்லன என்று மனம் பொருந்தி அனுபவிக்கின்றவர்கள்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நன்மை தரும்போது நல்லதாக ஏற்றுக்கொள்பவர்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

அன்றாங்கால் அல்லற் படுவது எவன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தீமை வருங்காலத்து அல்லற்படுவது யாதினுக்கு?
மணக்குடவர் குறிப்புரை: இஃது அறிந்தவர் வருவனவெல்லாம் இயல்பென்று கொள்ளவேண்டு மென்றது.
பரிப்பெருமாள்: தீமை வருங்காலத்து அல்லற்படுவது யாதினுக்கு?
பரிப்பெருமாள் குறிப்புரை: நன்மையும் தீமையும் தமதுடன்பாடின்றி வரும். அதனையியல்பென்று கொள்ளாது நன்மையை நன்றெனக் கொண்டிருந்தவர் தீமையைத் தீதென்றிராது அதனைப் போக்குதற்காக அல்லற்பட்டு முயல்வது எற்றுக்கு என்றவாறாயிற்று. இஃது அறிந்தவர்கள் வருவனவெல்லாம் இயல்பென்று கொள்ளவேண்டு மென்றது.
பரிதி: அழிகிறஊழ் வந்தகாலம் வருந்த ஒண்ணாது; ஆகிறஊழ் என்று கொள்க என்றவாறு.
காலிங்கர்: மற்று ஏனை ஊழானே நன்கையல்லவாங்காலத்து அல்லலுழப்பது என்னை;
காலிங்கர் குறிப்புரை: எனவே, இங்ஙனம் வரும் அல்லலும் அப்பொழுதைக்கு அது அல்லது பிறிதொன்று வந்து உதவாது என்பது பொருள் என்றவாறு,
பரிமேலழகர்: ஏனைத் தீவினை விளையுங்கால் அதன் விளைவாய துன்பங்களையும் அவ்வாறு அனுபவியாது, துடைக்கும் திறன் நாடி அல்லல் உழப்பது என் கருதி?
பரிமேலழகர் குறிப்புரை: தாமே முன் செய்து கொண்டமையானும், ஊட்டாது கழியாமையானும், இரண்டும் இயைந்து அனுபவிக்கற்பால, அவற்றுள் ஒன்றிற்கு இயைந்து அனுபவித்து, ஏனையதற்கு அது செய்யாது வருந்துதல் அறிவன்று என்பதாம். இவை மூன்று பாட்டானும் இன்பத்துன்பங்கட்குக் காரணமாய ஊழின் வலி கூறப்பட்டது.

'தீமை வருங்காலத்து அல்லற்படுவது யாதினுக்கு?' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தீமை தரும்போது துன்பம் கொள்வதேன்?', 'தீயது வரும் காலத்து ஏற்றுக் கொள்ளாது துன்பப்படுவது என் கருதி?', 'தீமை வருகிறபோது மட்டும் துன்பப்பட்டுத் தவிப்பது எதற்காக?', 'தீவினை விளையுங்காலத்துத் துன்பங்களையும் அவ்வாறு நுகராது, மனவருத்தப்படுவது எதனால்?' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தீமை நேரும்போது ஏற்கமுடியாது வருந்துவது ஏனோ? என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நன்மை தரும்போது நல்லதாக ஏற்றுக்கொள்பவர்கள் தீமை நேரும்போது ஏற்கமுடியாது வருந்துவது ஏனோ? என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

ஊழ் தீயன மட்டுமா செய்கிறது? அது நன்மைகளையும் செய்கிறதே!

ஊழால் நன்மை விளையும்போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றவர், அதனால் கேடு விளையும்போது இயல்பாக ஏற்றுக்கொள்வதில்லையே ஏன்?
ஊழ்க் கோட்பாட்டின்படி ஒருவர் புதிரான விளைவுகளை இயல்பு என்று நினைக்க வேண்டும். நல்லதோ கெட்டதோ ஊழ் வகுத்ததை அப்படியே எடுத்துக் கொள்க என்கிறது பாடல். ஊழ் என்கிற உலகத்து இயற்கை ஒருவனது செயல்களுக்கும் எண்ணங்களுக்கும் ஒத்து நல்லவை நடக்கும்போது, அவை நன்மை என்பதால் ஏற்றுக் கொள்ளும் மாந்தர், ஒவ்வாதும் இருக்கும்போது தமக்குத் தீயன நிகழும்போது அதுபோல் இயல்பாக அவற்றை ஏற்றுக் கொள்வதில்லை. மனதைச் சமநிலை செய்து 'இயற்கையாக' வரும் இன்பத்தையும் துன்பத்தையும், ஒத்துக்கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும் எனச் சொல்கிறார் வள்ளுவர். நல்லூழ் சிரிக்கும்போது எல்லாவற்றிலும் நன்மையும் மகிழ்ச்சியையும் காணும் போது, தீயூழ் வரும்போது துன்பத்தைத் தாங்கிக்கொள்ளப் பயிலவேண்டும். துன்பத்தை ஏற்கும் நெஞ்சுறுதியும் மனநிலையும் வாய்த்துவிட்டால் உள்ளத்தில் அமைதி எஞ்ஞான்றும் நின்று நிலவும்.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

நல்லது நடக்கும்போது நல்லது என அகமகிழ்ந்து அனுபவிப்பவர், தீயது நிகழும்போது துயர் கொள்வது ஏன்? என வினவுகிறது இப்பாடல். நல்லூழை ஏற்றுக் கொண்டது போல் தீயூழையும் ஏற்றுக் கொள்க என்பது இதன் பொருள். தீயூழ் உற்றவழி வருந்தித் தவித்து என்ன பயன்? அதைக் கடந்து வாழ முயலவேண்டும். ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம்ஒருவந்தம் கைத்துஉடை யார் (ஊக்கமுடைமை 593 பொருள்: ஊக்கத்தைத் திண்ணமாகக் கைப்பொருளாக உடையவர், செல்வத்தை இழந்து விட்டோம் என்று வருந்தார்) எனச் சொல்வார் வள்ளுவர். அதாவது எல்லாவற்றையும் இழந்து விட்டோமே என்று தளர்ந்து விடாது, இழந்தவற்றை ஊக்கத்தால் மீண்டும் ஆக்கிக் கொள்வர் என்கிறார். மக்களாய்ப் பிறந்தார் வாழ்க்கை எப்பொழுதும் அயராது அதிராது அசையாது முயற்சிக்கொண்டே இருந்து ஊழையும் உப்பாக்கம் காண வேண்டும்.

'நன்மை வருங்காலத்து நன்றாகக் காண்பவர் தீமை வருங்காலத்து அல்லற்படுவது யாதினுக்கு? இஃது அறிந்தவர் வருவனவெல்லாம் இயல்பென்று கொள்ளவேண்டும்' என்று மணக்குடவர் இக்குறளுக்குச் சிறந்த பொருள் தருகிறார். ஊழின் நன்மையான நிகழ்வுகளால் மகிழ்ந்து நெகிழாமலும் தீய விளைவுகளால் நொந்து போகாமலும், இரண்டையும் ஒப்பக் கருதி ஒழுகுவதே ஊழினைக் கடப்பதற்கான சிறந்த வழி.
இராமபிரான் எப்போதும் ஒன்றுபோல மலர்ந்த முகத்தோடு இருப்பவன். அவன் மனத்தை இன்பமோ துன்பமோ எதுவும் பாதிப்பதில்லை. “அயோத்தியின் மாமன்னன் நீதான்” என்று அவனை முடிசூட்டிக்கொள்ளச் சொன்னபோதும், “இல்லை, அரசு துறந்து நீ காட்டுக்குப் போ” என்று சொன்னபோதும் இராமனின் முகம் எவ்வாறு ஓவியத்தில் மலர்ந்த செந்தாமரை ஒன்று எப்போதும் மலர்ந்ததாகவே இருக்கிறதோ அதேபோல இருந்ததாம். பரிதி 'அழிகிறஊழ் வந்தகாலம் வருந்த ஒண்ணாது; ஆகிறஊழ் என்று கொள்க' என உரை தந்தார். இதன் பொருள் 'தீயுழினையும் நல்லூழாகக் கொள்க' என்பது.

ஊழால் ஏற்படுகின்ற நன்மையும், தீமையும் மாறி மாறி வரும். ஊழே இன்ப துன்பங்கள் அமைவதற்குக் காரணமுமாகின்றது. நல்லவை நிகழும்போது அகமகிழ்வது மனிதன் இயல்பு. நல்லது அல்லாத இடர்கள், துன்பங்கள், தீங்குகள் இவற்றை அடைவதற்கு மட்டுமே ஊழ் உதவுகின்றது என எண்ணாமல் ஊழே பொருளையும் இன்பத்தையும் அடைவதற்கும் உதவுகின்றது என்பதையும் நினைக்க என்கிறது பாடல்.

நல்லவற்றிற்கும் தீயனவற்றிற்கும் இடைப்பட்ட அமைதிகொண்ட உள்ளமே ஊழை வெல்ல உதவும் என்பது இக்குறள் கூறும் செய்தி.

நன்மை தரும்போது நல்லதாக ஏற்றுக்கொள்பவர்கள் தீமை நேரும்போது ஏற்கமுடியாது வருந்துவது ஏனோ? என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

ஊழ் விளைவுகளை இயல்பாக ஏற்றுகொள்க.

பொழிப்பு

நன்மை வரும்போது நல்லதாக ஏற்றுக்கொள்வது போல் ஊழால் தீமை நேரும்போது வருந்தாது ஏற்றுக் கொள்ளலாமே.