இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0378



துறப்பார்மன் துப்புரவு இல்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின்

(அதிகாரம்:ஊழ் குறள் எண்:378)

பொழிப்பு (மு வரதராசன்): வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால், நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்கொள்வர்.

மணக்குடவர் உரை: நுகரும்பொரு ளில்லாதார் துறக்க அமைவர்: தமக்கு வந்துறுந் துன்பப்பகுதியானவை உறாதுபோமாயின்.
இது துறவறமானது ஊழினால் வருமென்றது.

பரிமேலழகர் உரை: துப்புரவு இல்லார் துறப்பார் - வறுமையான் நுகர்ச்சி இல்லாதார் துறக்கும் கருத்துடையராவர், உறற்பால ஊட்டா கழியும் எனின் - ஊழ்கள் உறுதற்பாலவாய துன்பங்களை உறுவியாது ஒழியுமாயின்.
('துறப்பார்' என்பது ஆர்ஈற்று எதிர்கால முற்றுச்சொல். தம்மால் விடப்பெறுவன தாமே விடப்பெற்று வைத்தும், கருத்து வேறுபாட்டால் துன்பமுறுகின்றது ஊழின் வலியான் என்பது எஞ்சி நிற்றலின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது.)

வ சுப மாணிக்கம் உரை: அடைய வேண்டுவன அடையா என்றால் வறியோரும் துறவியாகி இருப்பார்களே?


பொருள்கோள் வரிஅமைப்பு:
துப்புரவு இல்லார் உறற்பால ஊட்டா கழியும் எனின் துறப்பார்மன்.

பதவுரை: துறப்பார்-துறவு கொள்வர்; மன்-(ஒழியிசை); துப்புரவு-நுகரப்படுவன; இல்லார்-இல்லாதவர்; உறல்-அடைதல்; பால-முறைமையுடையவை; ஊட்டா-ஊட்டாமல், உறுவியாமல்; கழியும்-நீங்கும்; எனின்-என்றால்.


துறப்பார்மன் துப்புரவு இல்லார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நுகரும்பொரு ளில்லாதார் துறக்க அமைவர்:
பரிப்பெருமாள்: நுகரும்பொரு ளில்லாதார் துறக்க வமையும்:
பரிதி: உடனே அழிகிற ஊழ் வந்தால் அத்துறவறத்தைக் கெடுத்து இல்லறமாக்கும்; ஆகையால், ஆகிறஊழ், அழிகிறஊழ் என்று பாராமல் எப்போதும் போலிருப்பான் என்றவாறு.
காலிங்கர்: மற்றதனால் இங்ஙனம் துறப்பாராவார் மற்றுத் தாமுறுதல் தன்மையவாகிய ஊழானவை நுகர்வியாது ஒழியுமாயின் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: துப்புரவு என்பது நுகர்வு.
பரிமேலழகர்: வறுமையான் நுகர்ச்சி இல்லாதார் துறக்கும் கருத்துடையராவர்;
பரிமேலழகர் குறிப்புரை: 'துறப்பார்' என்பது ஆர்ஈற்று எதிர்கால முற்றுச்சொல். தம்மால் விடப்பெறுவன தாமே விடப்பெற்று வைத்தும், கருத்து வேறுபாட்டால் துன்பமுறுகின்றது ஊழின் வலியான் என்பது எஞ்சி நிற்றலின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது.

'நுகரும்பொரு ளில்லாதார் துறக்க அமைவர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நுகர்பொருள் இல்லா வறியவர் துறவு மேற்கொள்வார்', '(பெற்ற செல்வத்தை) அனுபவிக்க வேண்டிய நல்வினையில்லாதவர்களாக (அந்தப் பெருஞ் செல்வத்தை அப்படியே) விட்டுப் பிரிந்துவிடுவார்கள்', 'வறியவர்கள் துறவறத்தை மேற்கொள்ளுவர்', 'வறியர் துறவியாகுவாராக' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நுகர்பொருள் இல்லா வறியவர் துறவியாகி விடுவார்களே? என்பது இப்பகுதியின் பொருள்.

உறற்பால ஊட்டா கழியும் எனின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தமக்கு வந்துறுந் துன்பப்பகுதியானவை உறாதுபோமாயின்.
மணக்குடவர் குறிப்புரை: இது துறவறமானது ஊழினால் வருமென்றது.
பரிப்பெருமாள்: தமக்கு வந்துறுந் துன்பப்பகுதியானவை உறாதேபோமாயின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: செல்வமில்லாதார்க்குத் துறவறஞ் செய்தல் எளிதன்றே. அது செய்ய நினைப்பினும் அவரைத் துன்பமுறுக்கும் ஊழ் அதனைச் செய்யாமல் காக்கும் என்றவாறாயிற்று. இது துறவு ஊழினானே வருமென்றது.
பரிதி: உடனே அழிகிற ஊழ் வந்தால் அத்துறவறத்தைக் கெடுத்து இல்லறமாக்கும்; ஆகையால், ஆகிறஊழ், அழிகிறஊழ் என்று பாராமல் எப்போதும் போலிருப்பான் என்றவாறு.
காலிங்கர்:தமது ஊழினால் வந்து எய்தற்பாங்கானவை பலபல நுகர்வும் வந்து ஊட்டாவாய்க்கழியும் ஊழ் உளதாயின்.
பரிமேலழகர்: ஊழ்கள் உறுதற்பாலவாய துன்பங்களை உறுவியாது ஒழியுமாயின்.

'தமக்கு வந்துறுந் துன்பப்பகுதியானவை உறாதுபோமாயின்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஊழ் ஒருவர் அடையக்கூடிய துன்பங்களை அவர் அடையாமல் செய்யுமானால்', 'வரவேண்டிய 'தீவினைகள்' வந்து (அடைந்துள்ள செல்வத்தை) அனுபவிக்க முடியாமல் காலம் கடந்துவிடுமானால்', 'விதியால் நேரிடக்கூடிய துன்பங்கள் நேரிடாது ஒழியுமாயின்', 'தம்மை அடைய வேண்டியன விதியால் அடையாமல் போனால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஊழினால் அவர் அடையக்கூடியன நேராது கழிந்தால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஊழினால் அவர் அடையக்கூடியன நேராது கழிந்தால் நுகர்பொருள் இல்லா வறியவர் துறவியாகி விடுவார்களே? என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

பொருள் இல்லாமல் செய்வதோடு பொருளில்லாமல் துன்பம் உறுவதையும் பார்த்திருக்கும் ஊழ்.

துய்க்கும் பொருள் இல்லாதவர்கள் ஊழின் இடையீடு இல்லாமலிருந்தால் துறவு மேற்கொண்டிருப்பார்களே.
துப்புரவு இல்லார் என்ற தொடர்க்கு நுகர்பொருள் இல்லாதவர் அதாவது வறியவர் என்பது பொருள். சிலர் நுகரஇயலாதவர் என்றனர். உறற்பால என்றது உறவேண்டியன, அடையத் தக்கவை எனப்பொருள்படும். அதிகாரம் ஊழ் என்பதால் ஊழால் உறவேண்டியவை அல்லது அடையத்தக்கவை எனக் கொள்வர். ஊட்டா கழியுமெனின் என்ற தொடர் அடையாமல் நீங்குமானால் எனப் பொருள் தரும். 'துப்புரவு இல்லார், உறற்பால ஊட்டா கழியும் எனின் துறப்பார் மன்' எனக் குறளைக் கொண்டால் ஊழால் அடையத்தக்கவை விலகிப் போனால் வறியவர்கள் துறவியாகி இருப்பார்களே என்பது குறளின் பொருளாகிறது.
வறியோர் துறவியர் ஆகியிருந்தால் வறுமைத் துன்பங்களை உற்றிருக்க மாட்டார்கள். எனவே ஊழ் அவர்களைத் துறவியர் ஆகவிடாமல் தடுக்கிறது. இக்கருத்தை வறியவர் ஊழினால் அடைக்கூடிய துன்பங்களை, துறவு மேற்கொண்டு. உறாமல் சென்றுவிடுவார்களே என்று சற்று வேறுபாடான நடையில் இக்குறள் சொல்கிறது.

துறவு மேற்கொள்வதற்கும் துன்பம் உறாமல் தப்பிச்செல்வதற்கும் என்ன தொடர்பு?
யார் துறவு நெறி மேற்கொள்வர்? இளம் வயதிலேயே மெய்யுணர்விலும் வீடுபேற்றிலும் ஆர்வமுடையோர் இளமையிலேயே துறவு பூணுதல் கூடும். வாழ்க்கையின் கடமைகள் முடிந்தபின் மீதியுள்ள நாட்களை மெய்யுணர்வு பெறும் முயற்சியில் செலவிட விரும்பினோர் முதுமையில் துறவு பூணுவர். இவ்வாறன்றி வறுமையினாலோ உலகவாழ்வில் ஏற்படும் பிற துன்பங்களை எதிர்கொள்ளத் துணிவின்றியோ துறவு வாழ்க்கையைச் சிலர் ஏற்றல் கூடும். வறுமையால் நுகர்வதற்குரிய பொருள்கள் இல்லாதவர் துறப்பது பசியாற்றுவதற்கு ஓர் வழி என்று பிறிதோரிடத்தில் வள்ளுவர் கூறுவார். துப்புரவு இல்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று (நல்குரவு 1050 பொருள்: நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்கக் கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும் (அதாவது துறப்பாராயின், இன்ப முறலாமென்பதாம்)) கடும் வறுமையில் அல்லல் உறுபவர்கள், துறவியாகிவிடலாம் அதாவது துறவு வறுமையைப் போக்கும் எனச் சொல்வதுபோல் அமைந்ததது குறள் 1050.
அவர் அவ்வாறு துறவு மேற் செல்லாமலிருக்கச் செய்வது அவர் துன்பம் அடைதல் வேண்டும் என்னும் நோக்கத்துடன் கூடிய ஊழின் செயலாலே என்கிறது இப்பாடல் (குறள் 378).

மேற்குறளில் கோடி தொகுத்தவனும் ஊழ் துணையின்றி பொருள்களைத் துய்த்தல் இயலாது எனச் சொல்லப்பட்டது. இங்கு ஒன்றுமற்றவர் வறுமைத் துன்பத்தை நீக்கத் துறவு மேற்கொள்வர்; ஆனாலும் அதையும் ஊழ் செய்யவிடாது எனக் கூறப்படுகிறது.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

நுகர்வதற்கு ஒன்றும் இல்லாதவர்கள், ஊழினால் அவர்கள் அடைய வேண்டிய துன்பங்கள் விலகிப் போய்விட்டன என்றால் துறவு மேற்கொள்வரே என்பது குறளின் நேர்பொருள்.
மெய்ப்பொருளை நாடுபவர்களின் துறவு உலக நோக்கம் கொண்டது; தூய ஒழுக்கங்களும் நிறைந்தது. ஆனால் வறுமையாளர்களின் துறவு வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ள உதவுவது, வயிற்றுப் பசியை அடிப்படையாகக் கொண்டது. வறியர் பொருள்களால் பெறும் பயன் எதுவும் கிட்டாதிருப்பதால் அவற்றைத் துறந்துவிடலாம்; ஆனால் செல்வம் சேர்ப்பதற்கும் நுகர்தல் இல்லாமல் இருப்பதற்கும் ஊழ் காரணமாக இருப்பதால், அவர்கள் அவ்வாறு துறக்க முடிவதில்லை. ஊழால் உண்டாகும் துன்பங்களை அவர்கள் உற்றே ஆகவேண்டும். எனவே இக்குறள் அத்துன்பங்கள் தாக்காமல் நீங்குமானால் அவர்கள் துறந்து விடுவார்கள். ஆனால் ஊழின் ஆட்சி அவர்களை அங்ஙனம் துறவில் சென்று ஊழின் விளைவுகளிலிருந்து விலகி ஓட விடாது என்கிறது.
துறவுக்கும் ஊழ் உதவ வேண்டும் என்றும் இக்குறளை விளக்கம் செய்வர்.

வறியவர் துறவின் மேற்செல்லாமல் தடுப்பதும் ஊழின் செயலே என்பது இக்குறள் கூறும் செய்தி.

ஊழினால் அவர் அடையக்கூடியன நேராது கழிந்தால் நுகர்பொருள் இல்லா வறியவர் துறவியாகி இருப்பார்களே? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வறுமையாளரைச் துறவுநெறியில் செல்லாமல் தடுக்கவும் செய்யவல்லது ஊழ்.

பொழிப்பு

ஊழினால் ஒருவர் அடைய வேண்டுவன உறாது போனால் நுகர்பொருள் இல்லாத வறியவர் துறவியாகி இருப்பார்களே?