இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0376



பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம

(அதிகாரம்:ஊழ் குறள் எண்:376)

பொழிப்பு (மு வரதராசன்): ஊழால் தமக்கு உரியவை அல்லாத பொருள்கள் வருந்திக் காப்பாற்றினாலும் நில்லாமல் போகும்; தமக்கு உரியவை கொண்டுபோய்ச் சொரிந்தாலும் போகா.

மணக்குடவர் உரை: தம்முடைய பகுதியல்லாதனவற்றை வருந்திக் காப்பினும் அவை தமக்கு ஆகா: தம்முடைய பகுதியாயினவற்றைக் கொண்டு சென்று சொரிந்து விடினும் அவை போகா.
இது முன்புள்ள செல்வம் காவற்படுதலும் களவு போதலும் ஊழினாலேயா மென்றது.

பரிமேலழகர் உரை: பால் அல்ல பரியினும் ஆகாவாம் - தமக்கு ஊழல்லாத பொருள்கள் வருந்திக்காப்பினும் தம்மிடத்து நில்லாவாம், தம உய்த்துச் சொரியினும் போகா - ஊழால் தமவாய பொருள்கள் புறத்தே கொண்டுபோய்ச் சொரிந்தாலும் தம்மை விட்டுப் போகா.
(பொருள்களின் நிலையும் போக்கும் ஊழினான் ஆவதல்லது. காப்பு இகழ்ச்சிகளான் ஆகா என்பதாம். இவை ஆறு பாட்டானும் பொருட்குக் காரணமாய ஊழின் வலி கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: வருந்தினும் உனக்கு இல்லாதவை வாரா; வாரி எறியினும் உரியவை போகா.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பாலல்ல பரியினும் ஆகாவாம்; தம உய்த்துச் சொரியினும் போகா.

பதவுரை: பரியினும்-வருந்திக் காப்பினும்; ஆகாவாம்-ஆகமாட்டாதாம்; பாலல்ல- ஊழால் (தமக்கு) இல்லாத, (தம்முடைய) பகுதியல்லாதன; உய்த்து-கொண்டுபோய்; சொரியினும்-வீசி எறியினும், பெய்தாலும்; போகா-நீங்கமாட்டா; தம-தம்முடையவை.


பரியினும் ஆகாவாம் பாலல்ல:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்முடைய பகுதியல்லாதனவற்றை வருந்திக் காப்பினும் அவை தமக்கு ஆகா:
பரிப்பெருமாள்: தம்முடைய பகுதியல்லாதனவற்றை வருந்திக் காப்பினும் அவை தமக்கு ஆகா:
பரிதி: அழிகிற காலத்தில் உடைமையை எத்தனை பாதுகாத்தாலும் போம் என்றவாறு.
காலிங்கர்: தாம் செல்வத்தைப் பெரிதும் காதலிப்பினும் தமக்குள்ளவர்க்கு ஆகாவாம்; யாவை எனில் அதற்கு ஏய்ந்த ஊழுடைய அல்லாதன;
பரிமேலழகர்: தமக்கு ஊழல்லாத பொருள்கள் வருந்திக்காப்பினும் தம்மிடத்து நில்லாவாம்;

'ஊழ் அல்லாத பொருள்கள் வருந்திக்காப்பினும் தம்மிடத்து நில்லாவாம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஊழல்லாத பொருள்களை வருந்திக் காத்தாலும் தம்மிடம் நிலைபெறா', 'தமக்கு வந்து சேரவேண்டிய நல்வினை இல்லாத பொருள்களில் எவ்வளவு ஆசைவைத்து முயன்றாலும் அவை கிடைத்து விடமாட்டா', 'விதியினால் நம்மிடத்து நிலைக்கக் கூடாத பொருள்களை வருந்திப் பாதுகாத்தாலும் அவை நில்லாவாம்', 'தமக்கு ஊழால் உரிய அல்லாத பொருள்கள் வருந்திக் காத்தாலும் தம்மிடத்து நில்லாவாம்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஊழால் தமக்கு இல்லாதவை வருந்திக் காத்தாலும் தங்கா என்பது இப்பகுதியின் பொருள்.

உய்த்துச் சொரியினும் போகா தம:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்முடைய பகுதியாயினவற்றைக் கொண்டு சென்று சொரிந்து விடினும் அவை போகா.
மணக்குடவர் குறிப்புரை: இது முன்புள்ள செல்வம் காவற்படுதலும் களவு போதலும் ஊழினாலேயா மென்றது.
பரிப்பெருமாள்: தம்முடையவாயினவற்றைக் கொண்டு சென்று சொரிந்து விடினும் அவை போகாவாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது முன்புள்ள செல்வம் காவற்படுதலும் களவு போதலும் ஊழினாலேயா மென்றது.
பரிதி: ஆகிற காலத்தில் உடைமையைப் புறத்திலே போட்டாலும் போகாது.
காலிங்கர்: மற்று இவ்வாறன்றி அகத்திருந்த பொருளையும் புறத்துக்கொண்டு சென்று கொடுப்பினும் போகா, ஒருவாற்றால் புகுந்தெய்தும், மற்று அவ்விதியால் தம்முடையன ஆதற்கு உரிய பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: ஊழால் தமவாய பொருள்கள் புறத்தே கொண்டுபோய்ச் சொரிந்தாலும் தம்மை விட்டுப் போகா.
பரிமேலழகர் குறிப்புரை: பொருள்களின் நிலையும் போக்கும் ஊழினான் ஆவதல்லது. காப்பு இகழ்ச்சிகளான் ஆகா என்பதாம். இவை ஆறு பாட்டானும் பொருட்குக் காரணமாய ஊழின் வலி கூறப்பட்டது.

'ஊழால் தமவாய பொருள்கள் புறத்தே கொண்டுபோய்ச் சொரிந்தாலும் தம்மை விட்டுப் போகா' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஊழால் வந்த தமக்குரிய பொருள்களைப் புறத்தே கொண்டு போய் வீசி எறிந்தாலும் தம்மை விட்டு நீங்கா', 'தமக்குச் சொந்தமாக இருக்க நலவினையால் கிடைத்த பொருள்களை வேண்டாமென்று எங்கேனும் கொண்டு போய்க் கொட்டிவிட்டாலும் அவை மீண்டும் தம்மிடமே வந்து சேர்ந்துவிடும்', 'நம்மிடத்து நிற்றற்குரியனவற்றைப் புறத்தே கொண்டு போய் எறிந்தாலும் அவை நம்மைவிட்டு அகலமாட்டா; என்ன வியப்பு!', 'ஊழால் உரிய பொருள்கள், புறத்தே கொண்டுபோய்ச் சேர்த்தாலும் தம்மை விட்டுப் போகா' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஊழால் தமக்கென அமைந்த பொருள்கள் புறத்தே கொண்டு போய் எறிந்துவிட்டாலும் தம்மை விட்டு நீங்கா என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஊழால் பாலல்ல வருந்திக் காத்தாலும் தங்கா; ஊழால் தமக்கென அமைந்த பொருள்கள் புறத்தே கொண்டு போய் எறிந்துவிட்டாலும் தம்மை விட்டு நீங்கா என்பது பாடலின் பொருள்.
'பாலல்ல' என்றால் என்ன?

பொருள் தங்குவதும் நீங்குவதும் நம் கையில் இல்லை.

வருந்திக் காப்பாற்றினாலும் தீயூழ் நின்றால் நமக்கென்று இல்லாதது தங்கா; கொண்டு போய் வெளியே கொட்டினாலும் தமக்கென அமைந்த பொருள் போகாது திரும்ப வந்து சேரும்.
சில வேளைகளில் பொருள்களைப் பெருமுயற்சியாலும் நம்மால் தக்கவைக்க முடியவில்லை; பிறபொழுது அவற்றை வீசி எறிந்தாலும், நம்மை விட்டுப் போகாமல் திரும்ப வந்து அடைகின்றன. இவற்றிற்குக் காரணம் என்ன? ஊழே காரணம் என்கிறது இப்பாடல். செல்வம் ஈட்டுவது ஊழின் ஆற்றலால்தான் முடியும் என்று முற்குறள்கள் கூறின. இங்கு சேர்த்த பொருளைக் காப்பாற்றுவதையும் ஊழே முடிவு செய்கிறது எனச் சொல்லப்படுகிறது. ஊழ் வரையறுத்திருக்காவிட்டால் எவ்வளவுதான் வருந்திக் காப்பாற்றினாலும் அப்பொருள் நம்மிடம் தங்காது; நம்மை விட்டு போவதைத் தடுக்க முடியாது, அதுபோல் நமக்கென்று ஏற்பட்ட பொருளைத் தள்ளித்தள்ளி விலக்கினாலும், அதை அகற்றவும் முடியாது; அது போகாது நம்மிடமே வந்து சேரும்.

'பாலல்ல' என்றால் என்ன?

'பாலல்ல' என்ற தொடர்க்குப் பகுதியல்லாதன. ஏய்ந்த ஊழுடைய அல்லாதன, ஊழல்லாத பொருள்கள், ஊழால் தமக்கு உரியவை அல்லாத பொருள்கள், ஊழ்ச்சூழல் காரணமாக அவனுக்குரித்தல்லாதவை, ஒருவனுக்கு இல்லாதவை, ஊழல்லாத பொருள்கள், தமக்கு வந்து சேரவேண்டிய நல்வினை இல்லாத பொருள்கள், தாம் அடைதற்கு முறைமை இல்லாதவை, விதியினால் நம்மிடத்து நிலைக்கக் கூடாத பொருள்கள், தமக்கு ஊழால் உரிய அல்லாத பொருள்கள், விதியின் காரணமாகத் தமக்கு உரியன அல்லாதவை, நமக்குப் பொருந்தாதன, தமக்கு உரிமையல்லாதவை, விதியால் (தம் முடையன) அல்லாத பொருள்கள் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பால் என்ற சொல்லுக்கு பகுதி என்றும் ஊழ் என்றும் பொருள் கொண்டு உரை செய்திருக்கின்றனர். பகுதி என்று கொண்டவர்கள் தொல்காப்பியம் 'பால் வரை தெய்வம்' தொல்காப்பியம், கிளயாவிக்கம்,58) என்று பகுத்து வரையிடும் தெய்வம் என்ற பொருளில் கூறியதைச் சான்று காட்டுவர். இங்கு பாலல்ல என்பது தம்முடைய 'பகுதி அல்லாதவற்றை' என்று வந்தது என இவர்கள் கூறுவர்.
பால் என்பதற்கு ஊழ் என்றும் பொருள் உண்டு. பெரும்பான்மையான உரையாசிரியர்கள் ஊழ் என்ற பொருளிலேயே உரை கண்டுள்ளனர். பால் என்பது ஒரு நெறிமுறை எனவும் இவர்கள் கூறுவர். அந்த நெறிமுறைப்படி, பொருள் காப்பிற்கும் ஊழ்தான் காரணம் என்பது இவர்கள் கருத்து.
அதிகாரத்துக் கேற்ப பால் என்ற சொல்லுக்கு ஊழ் எனப் பொருள் கொள்வதே சிறக்கும்.

'பாலல்ல' என்றது ஊழால் ஒருவருக்கு உரியவை அல்லாத பொருள்கள் என்ற பொருள் தரும்.

ஊழால் தமக்கு இல்லாதவை வருந்திக் காத்தாலும் தங்கா; ஊழால் தமக்கென அமைந்த பொருள்கள் புறத்தே கொண்டு போய் எறிந்துவிட்டாலும் தம்மை விட்டு நீங்கா என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பொருட்காப்பையும் ஊழ்தான் ஆள்கிறது.

பொழிப்பு

வருந்திக் காப்பினும், ஊழால், தமக்கு இல்லாதவை நில்லா; தமக்குரிய பொருள்களைப் புறத்தே போய் எறிந்துவிட்டாலும் தம்மை விட்டு அகலா.