இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0375



நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு

(அதிகாரம்:ஊழ் குறள் எண்:375)

பொழிப்பு (மு வரதராசன்): செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு, ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு; தீயவை நல்லவை ஆதலும் உண்டு.

மணக்குடவர் உரை: செல்வம் உண்டாக்குவதற்குத் தனக்குமுன்பு தீதாயிருந்தனவெல்லாம் நன்றாம்: அச்செல்வத்தை யில்லை யாக்குவதற்கு முன்பு நன்றாய் இருந்தனவெல்லாம் தீதாம்.

பரிமேலழகர் உரை: செல்வம் செயற்கு - செல்வத்தை ஆக்குதற்கு, நல்லவைஎல்லாம் தீயவாம் - நல்லவை எல்லாம் தீயவாய் அழிக்கும்; தீயவும் நல்லவாம்-அதுவே யன்றித் தீயவை தாமும் நல்லவாய் ஆக்கும்ஊழ் வயத்தான்.
('நல்லவை' 'தீயவை' யென்பன காலமும், இடனும், கருவியும், தொழிலும் முதலியவற்றை. 'ஊழா' னென்பது அதிகாரத்தாற் பெற்றாம். அழிக்குமூழுற்றவழிக் கால முதலிய நல்லவாயினும் அழியும்; அழிக்குமூ ழுற்றவழி அவை தீயவாயினும் ஆகுமென்ப தாயிற்று. ஆகவே, கால முதலிய துணைக்காரணங்களையும் வேறுபடுக்குமென்பது பெற்றாம்.)

வ சுப மாணிக்கம் உரை: நேர்வழி செல்வம் ஈட்டுதலைக் கெடுக்கலாம்; தீவழி அதற்குத் துணையாகலாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு.

பதவுரை: நல்லவை-நல்லன; எல்லாஅம்-எவையும்; தீயவாம்-கொடியவாம்; தீயவும்-கொடியனவும்; நல்லவாம்-நன்மையானவையாம்; செல்வம்-பொருள் மிகுதி; செயற்கு-ஆக்குதற்கு.


நல்லவை எல்லாஅம் தீயவாம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அச்செல்வத்தை யில்லை யாக்குவதற்கு முன்பு நன்றாய் இருந்தனவெல்லாம் தீதாம்;
பரிப்பெருமாள்: செல்வத்தை யில்லை யாக்குவதற்கு முன்பு நன்றாய் இருந்தனவெல்லாம் தீதாம்;
பரிதி: அழிகிற ஊழ் ஆகிற காரியத்தை அழிக்கும்;
காலிங்கர்: முன் ஓர் ஊழினால் வந்துற்ற நல்லவையாகிய செல்வமெல்லாம் நிலைதடுமாறத் தீயனவாம். அங்ஙனம் செய்வதொரு விதிக்கு;
பரிமேலழகர்: நல்லவை எல்லாம் தீயவாய் அழிக்கும்;

'செல்வத்தை யில்லை யாக்குவதற்கு முன்பு நன்றாய் இருந்தனவெல்லாம் தீதாம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்களுள் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் 'முன் ஓர் ஊழினால் வந்துற்ற நல்லவையாகிய செல்வமெல்லாம் நிலைதடுமாறத் தீயனவாம்' என்றார். பரிமேலழகர் 'நல்லவை எல்லாம் தீயவாய் அழிக்கும்' என உரை செய்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'செல்வத்தைப் படைக்கும்போது தீயூழாயின், நல்ல செயலெல்லாம் தீயவாய் மாறி அச்செல்வத்தை அழிக்கும்', 'செல்வம் சம்பாதிப்பதற்கு (கல்வியறிவுடன்) நல்ல வழிகளில் செய்யப்படுகிற முயற்சிகள் கெட்டுப் போகின்றன', 'செல்வத்தை ஈட்டுவதற்கு இயற்கையில் நல்லவாயுள்ள கருவிகள் எல்லாம் தீய ஊழ் வினையாற் பயன் படாதுபோம்', 'ஊழால் செல்வத்தை இழக்கும் காலத்தில் நன்மை செய்வனவும் தீமை செய்யும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

செல்வத்தை ஆக்குவதற்கு ஊழால் நல்வழிகளிலும் செய்யப்படும் முயற்சிகள் தீயனவாய் பயனின்றிப் போகும் என்பது இப்பகுதியின் பொருள்.

தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செல்வம் உண்டாக்குவதற்குத் தனக்குமுன்பு தீதாயிருந்தனவெல்லாம் நன்றாம்.
பரிப்பெருமாள்: செல்வம் உண்டாக்குவதற்கு முன்பு தனக்குத் தீதாயினவெல்லாம் நன்றாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் துணையாகுமவை ஊழினானே யாமென்றது.
பரிதி: ஆகிற ஊழ் வருங்காலம் அழிகிற காரியத்தையாக்கும்.
காலிங்கர்: மற்று இனித் தீயன ஆகிய எல்லாம் நிலைதடுமாறியவாறே நல்லனவாகிய செல்வம் வந்துளதாம், மற்று இங்ஙனம் தாம் முன்னம் செய்த செயற்குத் தக்காங்கு என்றவாறு.
பரிமேலழகர்: செல்வத்தை ஆக்குதற்கு, தீயவும் நல்லவாம்-அதுவே யன்றித் தீயவை தாமும் நல்லவாய் ஆக்கும் ஊழ் வயத்தான்,
பரிமேலழகர் குறிப்புரை: 'நல்லவை' 'தீயவை' யென்பன காலமும், இடனும், கருவியும், தொழிலும் முதலியவற்றை. 'ஊழா' னென்பது அதிகாரத்தாற் பெற்றாம். அழிக்குமூழுற்றவழிக் கால முதலிய நல்லவாயினும் அழியும்; அழிக்குமூ ழுற்றவழி அவை தீயவாயினும் ஆகுமென்ப தாயிற்று. ஆகவே, கால முதலிய துணைக்காரணங்களையும் வேறுபடுக்குமென்பது பெற்றாம்.

'செல்வம் உண்டாக்குவதற்குத் தனக்குமுன்பு தீதாயிருந்தனவெல்லாம் நன்றாம்' என்ற பொருளில் மணக்குட்வரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை கூறினர். 'தீயன ஆகிய எல்லாம் நிலைதடுமாறியவாறே நல்லனவாகிய செல்வம் வந்துளதாம்' என்பது காலிங்கர் உரை. பரிமேலழகர் 'ஊழ் வயத்தான் செல்வத்தை ஆக்குதற்கு, தீயவும் நல்லவாம்' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'நல்லூழாயின், தீய செயலும் நல்லவாய் மாறி அச்செல்வத்தை ஆக்கும்', 'தீய வழிகளில் செய்யப்படுகிற முயற்சிகள் பலன் கொடுக்கின்றன', 'ஊழின் வலியால், கெட்டவை நல்லவையாய்ப் பயன்படுதலும் உண்டு', 'செல்வத்தை உண்டாக்கும் காலத்தில் தீமை செய்வனவும் நன்மை செய்யும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தீயவையும் நல்லனவாய் செல்வத்தை ஆக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஊழால், செல்வத்தை ஆக்குவதற்கு நல்வழிகளிலும் செய்யப்படும் முயற்சிகள் தீயனவாய் பயனின்றிப் போகும்; தீயவையும் நல்லனவாய் செல்வத்தை ஆக்கும் என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

செல்வத்துக்கான ஊழுக்கு அறம் கிடையாது.

செல்வம் தேடும் முயற்சியில் ஊழின் விளைவாக, நல்லவையெல்லாம் தீயவை தருகின்ற தன்மையவாகிவிடும். தீயவும் நல்லவைகளாகிவிடும்.
நேர்வழி பொருள் இழப்பு ஏற்படுத்துவதும் தீயவழி ஆக்கம் தருவதும் ஊழின் விளையாட்டே. பொருள்சார்ந்த உலகில் வெற்றிகரமான முயற்சி என்று ஒருவனால் நம்பப்படுபவை விளக்கமுடியாத வகையில் தோல்வியில் முடியும்; முயற்சி தோற்றுப் போகும் என்று நினைத்தது எதிர்பாராமல் வெற்றியடையும். இவையும் ஊழால் விளைவனவே,

மக்களுக்குப் பொருள் சேர்வதும் நீங்குவதும் நம் கணிப்பிற்கு உட்படாததாகவே இருக்கிறது. அறம் வெல்ல வேண்டும் என்று எண்ணுகிறோம்; நல்லவர்கள் பொருள் கிடைத்து நல்வாழ்வு பெறவேண்டும் என்று உள்ளூற விரும்புகிறோம். ஆனால் எப்பொழுதும் அதுபோன்று நடப்பதில்லை. கேடு நினைப்பவன் ஆக்கம் பெறுதலும், நல்ல மனது படைத்தவன் கெட்டழிவதும் பொருளுலகத்து இயற்கையாக உள்ளதை நாம் நாளும் காண்கிறோம்.
மேலும் எவ்வளவு முயன்றாலும் சிலர்க்குச் செல்வம் சேர்க்க முடிவதில்லை. சிறுது முயன்றாலும் சிலர்க்குப் பெருஞ்செல்வம் சேர்ந்துவிடுகிறது. முயற்சியின் பயன்கள்கூட ஊழினாலே ஏற்படுகிறது. முயற்சி-மடி என்பதைவிட ஊழ் என்பது பொருந்திய காரணமாகிவிடுகிறது.
ஒருவன் செல்வத்தை அடைதற்கு பலவாறு சிந்தித்துக் காலம், இடம், கருவி முதலானவற்றை நல்லனவாகத் தேர்ந்து, மெய்வருத்தம் பாராது, பசி நோக்காது, உறங்காது, இகழ்ச்சிகளைப் பொருட்படுத்தாது, தெளிந்து செயல்படுகின்றான். ஆனால் ஊழ் தீயதாய் இருந்தால் இவை யாவும் தீமையாக மாறி, முடிவும் மாறாக அமைகின்றது. ஊழால் கெட்ட நேரமும் நல்ல நேரமாய் மாறிவிடுகின்றது.
ஊழ் செல்வம் சேர்ப்பதற்கு எவ்விதம் துணை செய்கிறது என்பதனைச் சீவக சிந்தாமணி,
பெருமுழங்கு திரை வரைகள் நீந்திப் பிணி உறினும்
திரு முயங்கல் இல்லை எனில் இல்லை பொருள் ஈட்டம்
ஒரு முழமும் சேறல் இலரேனும் பொருள் ஊர்க்கே
வரும் வழி வினாய் உழந்து வாழ்க தவம் மாதோ
(இலக்கணையார் இலம்பகம் 2556 பொருள்: பெரிய கடல்களைக் கடந்தும் நெடிய மலைகளைத் தாண்டியும் வெளிநாடுகளுக்குச் சென்றும் உள்ளம் ஊக்கிப் பொருள் சேர்க்க விழைந்தாலும் ஒருவனுக்குப் பொருள் சேர்வதில்லை. வீட்டை விட்டு வெளியே செல்லாமல் ஒரு முழம் கூட அயலே செல்லாமல் அமர்ந்திருந்தாலும் நல்லூழ் இருந்தால் அவனுக்கு செல்வம் அவன் வீட்டிற்கு வழி கேட்டு வந்து அடையும்) என்ற பாடல் வழி உணர்த்தும்.
இங்ஙனம் வலியுடைய ஊழால் நல்லவை தீயவையாகவும் தீயவை நல்லவையாகவும் மாறும். அழிக்கும் ஊழ் உற்றவிடத்துக் காலம் முதலியன நல்லனவாக இருந்தாலும் செல்வம் அழியும். ஆக்கும் ஊழ் உற்றவிடத்து அக்காலம் முதலியன தீயனவாக இருந்தாலும் செல்வம் ஆகும்.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

அறத்துக்குப் புறம்பானவற்றையும் ஊழ் செய்யவல்லது என்கிறது இப்பாடல். பொருள்சார்ந்த உலகில் காரணகாரியத்திற்கு அப்பால் அறம் சாரா விளைவுகளை ஊழ் உண்டாக்குகின்றது. ஊழால் காலம் இடம் கருவி முயற்சி எல்லாம் துணையாய் நிற்கவும் கூடும்; எதிராக மாறி அழிக்கவும் செய்யும்.

இக்குறள் கூறும் செய்தியாக உரைகாரர்கள் கூறுவன:

  • நேர்வழி செல்வம் ஈட்டுதலைக் கெடுக்கலாம்; தீவழி அதற்குத் துணையாகலாம்.
  • செல்வம் சேர்ப்பதற்கு என்று முயன்றால், ஊழ் காரணமாக நல்ல முயற்சிகள் எல்லாம் தீமையாய் முடிதலும் தீய முயற்சிகள் நன்மையாய் முடிதலும் உண்டு.
  • செல்வத்தை ஈட்டுகின்ற வழிமுறைகளில் நல்லவை எல்லாம் தீயவாம். தீய வழிமுறைகளும் நல்லவையாக ஆகிவிடும்.
  • செல்வம் சேர்ப்பவர்க்கு நல்லவழியெல்லாம் கெட்டவழிகளாகத் தோன்றுமாம். தீயவழிகளெல்லாம் நல்லவழிகளாய்த் தோன்றுமாம்.
  • பொருள் ஈட்டும்போது தீயூழ் நல்லூழாக மாறி நிற்கும்; நல்லூழ் தீயூழாகத் தோன்றும்.
  • தீயவையாய்த் தெரிவனகூட நல்லூழால் நல்லவையாக மாறி, செல்வத்தைக் கூட்டும்; நல்லவையாகத் தோன்றுவன, தீயூழால் தீயவையாய் மாறி, செல்வத்தைப் போக்கும்.
  • இழவூழ் வளர்ந்தமையின் காரணமாக நல்லவையாக இருப்பவையும் கூடத் தீமையாக மாறும். நல்லூழ் இருக்குமாயின் தீமையும் நன்மையாக மாறும்.
  • நல்ல விதி யுற்ற விடத்துச் செய்வன எல்லாம் நல்லனவாம்; தீய விதி யுற்ற விடத்துச் செய்வன எல்லாம் தீயவாம்..

இக்குறட்கருத்தாகத் தீயவழியில்தான் ஒருவன் செல்வந்தன் ஆக முடியும் என்றும் நெறியல்லாத நெறியே செல்வம் சேர்ப்பதற்கு நெறியாகும் என்பது வள்ளுவரின் ஊழ்க்கோட்பாடு என்றும் சிலர் இக்குறளுக்குத் தவறான உரை தருகின்றனர். அவை ஏற்புடையன அல்ல. ஊழின் செயல்பாட்டால் சில வேளைகளில், சிலர்க்கு, நல்லவை தீயவையாம்; தீயவும் நல்லவையாம் என்கிறார் அவர். அவ்வளவே.

பொருள் உலகில், கெட்ட காலம் இருந்தால் எல்லாமே இழப்பாகும். நல்ல காலம் இருந்தாலோ கெட்டதும் கூட ஆக்கத்தைத் தரும். இது இக்குறள் கூறும் செய்தி.

ஊழால், செல்வத்தை ஆக்குவதற்கு நல்வழிகளிலும் செய்யப்படும் முயற்சிகள் தீயனவாய் பயனின்றிப் போகும்; தீயவையும் நல்லனவாய் செல்வத்தை ஆக்கும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பொருள் உலகில் ஊழ் பண்பற்றதாகிவிடுகிறது.

பொழிப்பு

ஊழானது நல்லவழியில் செல்வம் சேர்த்தலைக் கெடுக்கலாம்; அதுவே தீவழியில் செல்வம் ஈட்டுவதற்கு துணையுமாகலாம்.