இருவேறு உலகத்து இயற்கை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆதலால் இரண்டு வகையாதல் உலகத்தியல்பு;
பரிப்பெருமாள்: ஆதலால் இரண்டு வகையாதல் உலகத்தியல்பு;
பரிதி: இரண்டுவகைப்படும் செல்வம்;
காலிங்கர்: இரண்டு கூறுபட்டிருக்கும் உலகத்தார் ஊழாம் இயற்கை; எங்ஙனம் எனில் செல்வம் உண்டாதலும் ஒரு நல்லூழின் கூறு; கல்வியால் தெளிந்த நல்லறிவு உடையராகலும் மற்றொரு நல்விதிக்கு அமைந்த கூறு;
பரிமேலழகர்: உலகத்து ஊழினான் ஆய இயற்கை இரண்டு கூறு;
'இரண்டு வகையாதல் உலகத்தியல்பு' என்ற பொருளில் பழம் ஆசிரியர்களில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'இரண்டு கூறுபட்டிருக்கும் உலகத்தார் ஊழாம் இயற்கை' என்கிறார் காலிங்கர். பரிமேலழகர் 'உலகத்து ஊழினான் ஆய இயற்கை இரண்டு கூறு' எனப் பொருள் தருகிறார்.
இன்றைய ஆசிரியர்கள் 'உலகத்தின் இயல்பு இருவேறு பட்டது', 'ஊழினால் உலகத்தியற்கை இரு கூறு உடையது', 'உலகத்தில் ஒன்றுக்கொன்று பொருத்தமில்லாத இரண்டு உண்மைகள் இருக்கின்றன', 'உலகத்து இயல்பு இரண்டு வகைப்படும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
உலகத்து இயல்பு இரண்டு வகைப்பட்டது என்பது இப்பகுதியின் பொருள்.
திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செல்வமுடையாராதலும் தெள்ளியாராதலும் வேறு வேறு ஊழினால் வரும்.
பரிப்பெருமாள்: செல்வமுடையாராதலும் தெள்ளியாராதலும் வேறு வேறு ஊழினால் வரும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: ஒன்றுடையார்க்கு ஒன்று இன்னாதற்குக் காரணம் முன்செய்த நல்வினை வேறுபாட்டானே என்றது.
பரிதி: எப்படியென்றால், எட்டுவகையான செல்வமும், கல்வியும் என்றவாறு. [எட்டுவகைச் செல்வம்: தனம், தானியம், தைரியம், வீரியம், சந்தானம், வெற்றி, புகழ், அரசாட்சி]
காலிங்கர்: எனவே முன்னமே இல்லறத்(தாராகலும் பின்) னும் துறவறமியற்றியவழித் தெளிந்த நல்லறிவுடைய ஞானத்தாராகலும் என இங்ஙனம் இரண்டு கூறுபடும் என்றவாறு.
பரிமேலழகர்: ஆதலால் செல்வமுடையராதலும் வேறு, அறிவுடையராதலும் வேறு.
பரிமேலழகர் குறிப்புரை: செல்வத்தினைப் படைத்தலும் காத்தலும் பயன்கோடலும் அறிவுடையார்க்கல்லது இயலாவன்றே? அவ்வாறன்றி, அறிவுடையார் வறியராகவும் ஏனையார் செல்வராகவும் காண்டலான், அறிவுடையராதற்கு ஆகும் ஊழ் செல்வமுடையராதற்கு ஆகாது, செல்வமுடையராதற்கு ஆகும் ஊழ் அறிவுடையராதற்கு ஆகாது என்றதாயிற்று. ஆகவே, செல்வம் செய்யுங்கால் அறிவாகிய துணைக்காரணமும் வேண்டா என்பது பெற்றாம்.
'செல்வமுடையாராதலும் தெள்ளியாராதலும் வேறு வேறு ஊழினால் வரும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்களில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கர் 'இல்லறத்(தாராகலும் துறவறமியற்றியவழித் தெளிந்த நல்லறிவுடைய ஞானத்தாராகலும் இரண்டு கூறு' எனப் பொருள் கூறினார். பரிமேலழகர் 'செல்வமுடையராதலும் வேறு, அறிவுடையராதலும் வேறு' என உரை தந்தார்.
இன்றைய ஆசிரியர்கள் 'செல்வமுறை வேறு, அறிவுமுறை வேறு', 'செல்வராதலும் வேறு; அறிஞராதலும் வேறு', 'செல்வமுள்ளவர்களாக இருப்பது வேறு. தெளிந்த அறிவுடையவர்களாக இருப்பதும் வேறு', 'செல்வமுடையராதல் ஒரு வகை; தெளிந்த அறிவினை உடையராதல் இன்னொரு வகை. (இரண்டுக்கும் தொடர்பின்று.)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
செல்வமுறை வேறு, தெளிந்த அறிவினை உடையராதல் வேறு என்பது இப்பகுதியின் பொருள்.
|