நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும்
(அதிகாரம்:ஊழ்
குறள் எண்:373)
பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும், ஊழிற்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ளதாகும் அறிவே மேற்பட்டுத் தோன்றும்.
|
மணக்குடவர் உரை:
நுண்ணியவாக வாராய்ந்த நூல்கள் பலவற்றையுங் கற்றானாயினும், பின்னையும் தனக்கு இயல்பாகிய அறிவே மிகுத்துத் தோன்றும் என்றவாறு.
மேல் அறிவிற்குக் காரணம் ஊழ் என்றார். அஃதெற்றுக்கு? கல்வியன்றே காரணமென்றார்க்கு ஈண்டுக் கல்வியுண்டாயினும் ஊழானாய அறிவு வலியுடைத்தென்றார்.
பரிமேலழகர் உரை:
நுண்ணிய நூல் பல கற்பினும் - பேதைப்படுக்கும் ஊழுடையான் ஒருவன் நுண்ணிய பொருள்களை உணர்த்தும் நூல் பலவற்றையும் கற்றானாயினும், மற்றும் தன் உண்மை அறிவே மிகும் - அவனுக்குப் பின்னும் தன் ஊழான் ஆகிய பேதைமை உணர்வே மேற்படும்.
(பொருளின் உண்மை நூலின்மேல் ஏற்றப்பட்டது. மேற்படுதல் - கல்வியறிவைப் பின் இரங்குவதற்கு ஆக்கிச் செயலுக்குத் தான் முற்படுதல். 'காதன் மிக்குழிக் கற்றவும் கைகொடா, ஆதல் கண்ணகத்தஞ்சனம் போலுமால்' (சீவக.கனக. 76) என்பதும் அது. செயற்கையானாய அறிவையும் கீழ்ப்படுத்தும் என்பதாம்.)
வ சுப மாணிக்கம் உரை:
நுண்ணிய நூல்பல கற்றாலும் ஒருவர்க்குத் தன் போக்கிலேதான் அறிவு வளரும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன் உண்மை அறிவே மிகும்.
பதவுரை: நுண்ணிய-நுட்பமான; நூல்-நூல்; பல-பல; கற்பினும்-கற்றாலும்; மற்றும்-பின்னும்; தன்-தனது; உண்மை-(ஊழால்)உள்ளதாந்தன்மை; அறிவே-அறிவே; மிகும்-மேற்படும்.
|
நுண்ணிய நூல்பல கற்பினும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நுண்ணியவாக வாராய்ந்த நூல்கள் பலவற்றையுங் கற்றானாயினும்;
பரிப்பெருமாள்: நுண்ணிதாக வாராய்ந்த நூல்கள் பலவற்றையுங் கற்றானாயினும்;
பரிதி: சென்மாந்திர வினையாகிற ஆகிற ஊழ், அழிகிற ஊழைக் கல்வியினாலே வெல்லப்படாது;
காலிங்கர்: நன்னெறி பெறுதற்குக் காரணமாகிய ஞானத்தைத் தரும் நுண்ணிய நூல்கள் பலவற்றையும் கற்றாரெயாயினும்;
பரிமேலழகர்: பேதைப்படுக்கும் ஊழுடையான் ஒருவன் நுண்ணிய பொருள்களை உணர்த்தும் நூல் பலவற்றையும் கற்றானாயினும்;
'நுண்ணிய நூல்கள் பலவற்றையும் கற்றாரெயாயினும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் 'பேதைப்படுக்கும் ஊழுடையான் ஒருவன்' என்பதைச் சேர்த்து உரைக்கிறார்.
இன்றைய ஆசிரியர்கள் 'நுட்பமான நூல்கள் பலவற்றை ஒருவன் கற்றாலும்', '(ஒரு பொருள் கைகூடுவதற்கென்று அதற்கான) பல நுட்பமான நூல்களைப் படித்து வேண்டிய உபாயங்களை அறிந்து வைத்திருந்தாலும்', 'நுட்பமான நூல்கள் பலவற்றை ஒருவன் கற்றான் ஆயினும்', 'நுட்பமான பொருள்களை உணர்த்தும் நூல்கள் பலவற்றையும் கற்றாலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
நுட்பமான நூல்கள் பலவற்றையும் கற்றாலும் என்பது இப்பகுதியின் பொருள்.
மற்றும்தன் உண்மை அறிவே மிகும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பின்னையும் தனக்கு இயல்பாகிய அறிவே மிகுத்துத் தோன்றும் என்றவாறு.
மணக்குடவர் குறிப்புரை: மேல் அறிவிற்குக் காரணம் ஊழ் என்றார். அஃதெற்றுக்கு? கல்வியன்றே காரணமென்றார்க்கு ஈண்டுக் கல்வியுண்டாயினும் ஊழானாய அறிவு வலியுடைத்தென்றார்.
பரிப்பெருமாள்: பின்னையும் தனக்கு இயல்பாகிய அறிவே மிகுத்துத் தோன்றும் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் அறிவிற்குக் காரணம் ஊழ் என்றார். அஃதெற்றுக்கு? கல்வியன்றே காரணமென்றார்க்கு ஈண்டுக் கல்வியுண்டாயினும் ஊழானாய அறிவு வலியுடைத்தென்றது.
பரிதி: அது எப்படி என்றால், அழிகிற ஊழாகில், எத்தனை கற்றாலும், அற்ப புத்தியைக் காட்டும் என்றவாறு.
காலிங்கர்: அவ்வளவே தமது ஊழாய் மற்று அதன் பயன் எய்துதற்கு ஓர் ஊழ் முன்னமில்லை எனில், பின்னும் தன் உண்மையறிவே மிகும்;
காலிங்கர் குறிப்புரை :எனவே இந்நெறி அறிதல் அன்றிப் பின்னும் தான் அநுபவித்தற்கு உரிய முறைவழி அறிவே மிக்குச் செல்லும்; மற்று இவ் அறிவு எய்தாது என்பது பொருள் ஆயிற்று என்றவாறு.
பரிமேலழகர்: அவனுக்குப் பின்னும் தன் ஊழான் ஆகிய பேதைமை உணர்வே மேற்படும்.
பரிமேலழகர் குறிப்புரை: பொருளின் உண்மை நூலின்மேல் ஏற்றப்பட்டது. மேற்படுதல் - கல்வியறிவைப் பின் இரங்குவதற்கு ஆக்கிச் செயலுக்குத் தான் முற்படுதல். 'காதன் மிக்குழிக் கற்றவும் கைகொடா, ஆதல் கண்ணகத்தஞ்சனம் போலுமால்' (சீவக.கனக. 76) என்பதும் அது. செயற்கையானாய அறிவையும் கீழ்ப்படுத்தும் என்பதாம்.
'பின்னையும் தனக்கு இயல்பாகிய அறிவே மிகுத்துத் தோன்றும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். உண்மை அறிவு என்றதற்கு இயல்பாகிய அறிவு, அற்ப புத்தி, முறைவழி அறிவு, ஊழான் ஆகிய பேதைமை உணர்வு என இவர்கள் பொருள் கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தீய ஊழினால் அவனுக்கு இயல்பாக உள்ள அறிவே மிகுந்து நிற்கும். நூலறிவு தோன்றாது', '(தீவினைப் பயன்கள் வரும்போது, படித்தறிந்த அறிவு தருணத்தில் உதவாமல்) முன்னிருந்த தன்னுடைய சாதாரண அறிவுதான் முன்னால் வந்து நிற்கும்', 'ஊழின் வலியால் அவனுக்கு ஏற்படக்கூடிய தப்புணர்ச்சியே மேற்பட்டு நிற்கும்', 'ஊழால் உண்மை அறிவே மேற்படும். கற்ற அறிவு பயன்படாது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
தன் ஊழ் ஆணைப்படியான அறிவே மிகுந்து தோன்றும் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
நுட்பமான நூல்கள் பலவற்றையும் கற்றாலும் தன் உண்மை அறிவே மிகுந்து தோன்றும் என்பது பாடலின் பொருள்.
'உண்மை அறிவு' குறிப்பது என்ன?
|
கல்வியறிவால் இழவூழை வெல்லமுடியாது.
நுண்மையான நூல்கள் பலவற்றை ஒருவன் கற்றாலும், ஊழ்நிலைக்கேற்றவாறு உண்டான அறிவுதான் வெளிப்பட்டுத் தோன்றும்.
அறிவு பெறுதற்குரிய ஒருவழி நூல் பல கற்றல்; நூலறிவை விட நுண்ணறிவு சிறந்தது. நுண்ணறிவு என்பது எதையும் நுணுகிப் பார்த்து உண்மையை அறிவது. நூல்கள் கற்றிருந்தாலும் என்பதால் கல்வியறிவு அதாவது செயற்கை அறிவு பேசப்படுகிறது. நுண்ணிய நூல்கள் என்றதால் மேலான கல்வி அறிவு பெற்றவர் என்றாகிறது. மிகுந்த கல்வியறிவு பெற ஒருவன் நுண்ணிய நூல்கள் பல கற்கின்றான். ஆனால் சில வேளைகளில் அவ்வளவு கற்றதற்கேற்ப அவன் அறிவு மிகுந்து காணப்படாமல் தோன்றுகிறான். அவன் படித்த நூல்களில் குற்றமில்லை; அவன் வாசிப்பிலும் பழுதில்லை. கற்றதைச் சிந்திக்கவும் சிந்தனையில் தெளிவும் துணிவும் பெறவும் திறன் கொண்டவன்தான். பின் ஏன் அவன் குறை நலம் உறுகிறான்? அது ஊழின்பாற்பட்ட அறிவே மேம்பட்டு நிற்கும் என்பதால் என்று வள்ளுவர் சொல்கிறார். நுண்மாண் நுழைபுலமும் ஊழின் முன்னே ஆற்றல் பெறுவதில்லை என்கிறார் அவர்.
ஊழ் வலியைச் சொல்லும் அதிகாரத்தில் உள்ள பாடல் இது. எனவே ஊழை இயைத்துப் பொருள் காணுதலே முறை. இதற்கு முந்தைய குறள் 'பேதைப் படுக்கும் இழவூழ்' என்று பொதுவாக அறிவுடையவன் ஊழ் ஆட்சியால் பேதுறுவான் என்றது. இப்பாடல் ஊழின் ஆணை நுண்கல்வியறிவின் சிந்தனையையும் தாண்டிச் செல்லும் என்கிறது.
ஊழ் மாறிக்கொண்டிருக்கும் தன்மையது. எனவே தன் சூழ்நிலையறிவு அதாவது தன் ஊழால் நின்ற அறிவுக்கு முன் தான் பெற்ற கல்வியறிவு கீழ்ப்பட்டுத் தோன்றுவது நிலையானது அல்ல. ஒருவனது செல்வநிலை ஊழால் எவ்வாறு மாறிக்கொண்டிருக்கிறதோ அதுபோன்றே கற்ற அறிவும் ஊழின்சூழலுக்கேற்ப மாறும் தன்மையுடையது. ஊழ் மாறும்போது நுண்கல்வி அறிவு மறுபடியும் மிகுந்து தோன்றும். எளிதில் அறிய முடியாத சூழ்நிலையின் மறைமுகச் செல்வாக்கை- ஊழின் பெருவலியை -அழுந்த நினைவூட்ட வந்த பாடல் இது.
கல்வியறிவு - உண்மை அறிவு எது மேம்படும்? என்பதற்கு விடை தேடும் நோக்கில் இப்பாடலுக்குப் பலர் உரை கண்டனர். ஆனால் இப்பாடல் கல்வியறிவையும் உண்மை அறிவையும் ஒப்பு நோக்குவதல்ல. இப்பாடலை அறிவாற்றல் பெரிதா? ஊழின் ஆற்றல் பெரிதா? என்ற கண்ணோட்டத்தில் அணுகினால் தெளிவு உண்டாகும்.
உண்மை என்ற சொல்லுக்கு நேர்பொருள் 'உளதாகும் தன்மை' என்பது. உண்மை அறிவு என்பதற்கு 'உளதாகும் தன்மைத்தாய் அறிவு அல்லது இயல்பான அறிவு' என்பது பொருளாகிறது.
மணக்குடவர் உண்மை அறிவு என்பதற்கு தனக்கு இயல்பாகிய அறிவு எனப் பொருள் கூறி 'கல்வி உண்டாயினும் ஊழானாய அறிவு வலியுடைத்து' என்று முடிவு கட்டுகிறார்.
பரிமேலழகரது உரையும் மணக்குடவருரையை ஒட்டி 'ஊழான் ஆகிய உணர்வு' என்று பொருள்படும்படியாகவே அமைகிறது.
மு வரதராசன் 'ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும், ஊழிற்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ளதாகும் அறிவே மேற்பட்டுத் தோன்றும்' என்ற உரை நல்குகிறார்.
இம்மூன்று உரைகளையும் கலந்து நோக்கும்போது இக்குறளுக்கான பொருளாக 'நுட்பமான நூல் பலவற்றைக் கற்றிருந்தாலும், ஊழ் நிறுத்தும் அளவிலான அறிவுதான் ஒருவனுக்கு வெளிப்பட்டுத் தோன்றும்; நுண்ணறிவு தோன்றாது' என்னும் உரை கிடைக்கிறது. இதுவே இக்குறள் கூறும் செய்தி.
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு. (கல்வி, 396 பொருள்: மணலில் தோண்டப்படும் கேணியில் தோண்டுகிற அளவிற்கு நீர் சுரப்பது போல கற்கக் கற்க அறிவு பெருகும்) எனச் சொல்லும் குறள் 'என்னதான் கற்றாலும் தன் உண்மை அறிவே மிகும்' என்ற இப்பாடற்கருத்துடன் முரணுவது போல் தோன்றுகிறதே என வினா எழுப்பினர். 'முன் கூறியது ஊழ்வினை நல்லதாக இருக்கிறவரையில் படிப்புக்கேற்ப அறிவு வளர்தலைக் கூறியது என்றும், இது ஊழ் நல்லதல்லாவிடத்து உள்ள நிலைமை யென்றும் வேறுபாடு அறிக' என்பது வை மு கோபாலகிருஷ்ணமாச்சாரியாரின் கருத்துரை. இப்பாடலின் கருத்து குறள் 396-உடன் முரண்படவில்லை.
|
'உண்மை அறிவு' குறிப்பது என்ன?
'உண்மை அறிவு' என்ற தொடர்க்கு இயல்பாகிய அறிவு, அற்ப புத்தி, அநுபவித்தற்கு உரிய முறைவழி அறிவு, ஊழான் ஆகிய பேதைமை உணர்வு, ஊழிற்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ளதாகும் அறிவு, அவனுக்குளதாகியப் பிறவியிலமைந்த அறிவு, தன் போக்கிலான அறிவு, அவனுக்கு இயல்பாக உள்ள அறிவு, சாதாரண அறிவு, அவனுக்கு உள்ளதாந் தன்மையில் அமைந்த உண்மை அறிவு, ஊழின் வலியால் அவனுக்கு ஏற்படக்கூடிய தப்புணர்ச்சி, ஊழால் உண்மை அறிவு, அவனுக்கு ஊழினால் இயல்பாகிய இருக்கின்ற அறிவு, இயற்கை தந்த அறிவு, அவனுடைய ஊழின் வயத்ததாகிய அறிவு, தனது விதியின் அறிவு, உள்ளத்து அறிவு, மரபணுக்களில் இயல்பாகத் தோன்றியுள்ள அறிவு, நூலறிவினும் பன்மடங்கு சிறந்த கூர்மையான அறிவு, ஒரு வழிவழிக் குடிப் பிறப்பால் வரும் அறிவு, அவன் பிறந்த பிறப்பின் முறைப்படி உண்டாகிய அறிவு, அவனுடைய பிறப்பொடு வந்த (genetic character) உண்மை அறிவு, எனப் பலவாறாக உரையாளர்கள் பொருள் கூறினர்
உண்மை அறிவு என்பதற்குப் பரிமேலழகர் 'தன் ஊழான் ஆகிய பேதைமை உணர்வு' என உரை காட்டுவார். ஆனால் ''உண்மையறிவு' என்ற தொடருக்குப் 'பேதைமையுணர்வு' என ஓரவுரை செய்தல் முறையாகுமா? ஊழ் என்பது உலகச் சூழ்நிலை. அஃது ஒருவனுக்கு நன்று தீது ஆகிய இருதிறமும் செய்ய மாட்டுவது எனப் பரிமேலழகருரையை மறுப்பார் வ சுப மாணிக்கம். உண்மை அறிவு என்பதற்குப் பேதைமை உணர்வு என்னும் பரிமேலழகர் உரை பொருத்தமின்று என்று இரா சாரங்கபாணியும் கூறுவார்.
சிந்தாமணியில் கனகமாலையாரிலம்பகத்தில் 'கண்ணில் பூசப்பட்ட அஞ்சன மை, கண்ணில் கிடந்தாலும், அந்த அஞ்சனத்தால் கண்ணிற்கு ஏதும் பயனில்லை. அதே போலக் கற்ற கல்வி நெஞ்சிலும் அறிவிலும் கிடந்தாலும் அக்கல்வியால் அறிவிற்கோ அதன் காரணமாக நெஞ்சிற்கோ பயன் ஏதும் இல்லை' என்ற பாடற் கருத்துடன் ஒப்பிட்டு இவ்வாறு கற்றதனால் பெற்ற நூலறிவு பயன்படாமல் போகும் எனவும் உரைத்தார் பரிமேலழகர்.
பல உரையாசிரியர்கள் குடிப் பிறப்பால் வரும் அறிவே உண்மை அறிவு எனவும் அது பரம்பரைக்குத் தொடரும் எனவும் பொருள் கூறினர். இதற்கு உயிரணு அல்லது மரபணு, DNA மூலக்கூறு போன்ற அறிவியற் கருத்துக்களை ஆதாரமாகக் கூறுவர் இவர்கள். ஒருவர் மீது சினம் தோன்றினால், அவர் எந்த இனத்தைச் சேர்ந்தவராய் இருந்தாலும், 'அவன் சாதிப் புத்தியைக் காட்டிவிட்டான்' என்று வழக்கில் பேசப்படுவதை மனதில் நிறுத்தி எழுதப்பட்டன போல் தோன்றுகின்றன இவ்வாறான உரைகள். இவர்களில் சிலர் 'இனம் முதலியவற்றின் சார்பில் ஒருவருக்குள் பதிந்து விடுவது உண்மையறிவு' (452), 'இனத்தான் ஆம் இன்னான் எனப்படும் சொல்' (453) என்ற குறட்கருத்துக்களையும் மேற்கோள் காட்டினர்.
'உண்மை அறிவு' என்பதற்கு (தன் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு) 'உள்ளதாகும் அறிவு' என்பது பொருள்
|
நுட்பமான நூல்கள் பலவற்றையும் கற்றாலும் தன் ஊழ் ஆணைப்படியான அறிவே மிகுந்து தோன்றும் என்பது இக்குறட்கருத்து.
என்ன நுண்ணறிவு பெற்றிருந்தாலும் ஒருவரது அறிவுநிலையை முடிவு செய்வது ஊழ்தான்.
நுண்ணிய நூல்பல கற்றாலும் ஒருவர்க்கு ஊழினால் உள்ள அறிவே மிகுந்து நிற்கும்.
|