இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0372பேதைப் படுக்கும் இழவூழ் அறிவுஅகற்றும்
ஆகல்ஊழ் உற்றக் கடை

(அதிகாரம்:ஊழ் குறள் எண்:372)

பொழிப்பு (மு வரதராசன்): பொருள் இழத்தற்குக் காரணமான ஊழ், பேதை யாக்கும்; பொருள் ஆவதற்குக் காரணமான ஊழ், அறிவைப் பெருக்கும்.

மணக்குடவர் உரை: கெடுக்கும் ஊழ் தோன்றினால் அறியாமையை யுண்டாக்கும்; ஆக்கும் ஊழ் தோன்றினால் அறிவை விரிக்கும்.
இஃது அறிவும் அறியாமையும் ஊழால் வருமென்றது.

பரிமேலழகர் உரை: இழவு ஊழ்(உற்றக்கடை) அறிவு பேதைப் படுக்கும் - ஒருவனுக்கு எல்லா அறிவும் உளவாயினும், கைப்பொருள் இழத்தற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து, அஃது அதனைப் பேதையாக்கும், ஆகல் ஊழ் உற்றக்கடை அகற்றும் - இனி அவன் அறிவு சுருங்கியிருப்பினும்,கைப்பொருளாதற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து அஃது அதனை விரிக்கும்.
(கைப்பொருள்என்பது அதிகாரத்தான் வந்தது. 'இழவு ஊழ்,' 'ஆகல் ஊழ்' என்பன இரண்டும் வேற்றுமைத்தொகை. 'உற்றக்கடை' என்பது முன்னும் கூட்டப்பட்டது. இயற்கையானாய அறிவையும் வேறுபடுக்கும் என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: அழிவு காலம் அறியாமையைத் தரும்; ஆகுங்காலம் அறிவைப் பெருக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இழவூழ் அறிவு பேதைப்படுக்கும் ஆகல்ஊழ் உற்றக் கடை அகற்றும்.

பதவுரை: பேதைப்படுக்கும்-அறியாமையிற் செலுத்தும்; இழவு-இழத்தல்; ஊழ்-ஊழ், முறை; அறிவு-அறிவு; அகற்றும்-விரிக்கும்; ஆகல்-ஆதல்; ஊழ்-ஊழ், முறை; உற்றக்கடை-எய்தும்பொழுது.


பேதைப் படுக்கும் இழவூழ் அறிவுஅகற்றும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கெடுக்கும் ஊழ் தோன்றினால் அறியாமையை யுண்டாக்கும்;
பரிப்பெருமாள்: கெடுக்கும் ஊழ் தோன்றினால் அறியாமையை யுண்டாக்கும்;
பரிதி: அழிக்கிற ஊழ் கெடு புத்தியைக் கொடுக்கும்;
காலிங்கர்: எய்திய ஆக்கமும் இழத்தற்கு எல்லையாகிய இழவூழ் வந்து எய்தும் எனில், மற்றவ்வூழ் இழத்தற்கு ஏய்ந்த பேதமை உளதாக்கும்;
காலிங்கர் குறிப்புரை: படுக்கும் என்பது உளதாக்கும் என்பது. அறிவகற்றும் என்பது இடம்படுத்தும் என்றது.
பரிமேலழகர்: ஒருவனுக்கு எல்லா அறிவும் உளவாயினும், கைப்பொருள் இழத்தற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து, அஃது அதனைப் பேதையாக்கும்;
பரிமேலழகர் குறிப்புரை: கைப்பொருள்என்பது அதிகாரத்தான் வந்தது.

'கெடுக்கும் ஊழ் தோன்றினால் அறியாமையை யுண்டாக்கும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கரும் பரிமேலழகரும் இழவூழ் என்பதற்குக் ஆக்கம்/கைப்பொருள் இழத்தற்கு ஏதுவாகிய ஊழ்' என ஆக்கம்/கைப்பொருள் என்றிவற்றைக் கூட்டி உரை வகுக்கினறனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கெடும் ஊழ் வந்தால் அறியாமையை உண்டாக்கும்', 'கைப் பொருளை இழக்க வேண்டிய தீவினைப் பயன் வரும்போது அது அறிவைக் கெடுத்துவிடும்', 'பொருள் இழத்தற்கு ஏதுவாகிய விதி அறியாமையைக் கொடுக்கும்', 'நன்மை இழப்பதற்குக் காரணமாகிய விதி அறிவினை அறியாமையின்பால் படுத்தும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கேடான ஊழ் அறியாமையைக் கொடுக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

ஆகல்ஊழ் உற்றக் கடை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆக்கும் ஊழ் தோன்றினால் அறிவை விரிக்கும்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அறிவும் அறியாமையும் ஊழால் வருமென்றது.
பரிப்பெருமாள்: ஆக்கும் ஊழ் தோன்றினால் அறிவை விரிக்கும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அறிவும் அறியாமையும் ஊழால் வருமென்றது.
பரிதி: ஆகிற ஊழ் அதிக புத்தியைத் தரும் என்றவாறு.
காலிங்கர்: இனி அவ்வாறன்றி ஆகலூழ் வந்துற்ற இடத்தால் ஏய்ந்த முயற்சிக்கண் இயல்பாவதோர் அறிவு இடம்படுத்தும்.
எனவே துறவறிவும் பிறவறிவும் அவரவர் உள்ளத்து நிகழ்வது, அவை அவற்றுக்கு அமைந்த விதியானே என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: இனி அவன் அறிவு சுருங்கியிருப்பினும்,கைப்பொருளாதற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து அஃது அதனை விரிக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'இழவு ஊழ்,' 'ஆகல் ஊழ்' என்பன இரண்டும் வேற்றுமைத்தொகை. 'உற்றக்கடை' என்பது முன்னும் கூட்டப்பட்டது. இயற்கையானாய அறிவையும் வேறுபடுக்கும் என்பதாம்.

'ஆக்கும் ஊழ் தோன்றினால் அறிவை விரிக்கும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். இங்கும் காலிங்கரும் பரிமேலழகரும் முயற்சி/கைப்பொருள் இயைந்த ஆகல்ஊழ் எனப் பொருள் கூறுகின்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆகும் ஊழ் வந்தால் அறிவினை விரிவாக்கும்', 'செல்வம் வரவேண்டிய நல்வினைப் பயன் வரும்போது அறிவை அதிகப்படுத்தும்', 'பொருள் உண்டாதற்கு ஏதுவாய ஊழ் ஏற்பட்டபோது அஃது அறிவினை விரிவுபடுத்தும்', 'நன்மை உண்டாவதற்குக் காரணமாகிய விதி அடைந்தபொழுது உள்ள அறிவினைப் பெருக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நல்ல ஊழ் தோன்றினால் அறிவுப்பெருக்கம் உண்டாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கேடான ஊழ் வந்தால் அறியாமையைக் கொடுக்கும்; நல்ல ஊழ் தோன்றினால் அறிவுப்பெருக்கம் உண்டாகும் என்பது பாடலின் பொருள்.
பேதைமை- அறிவு- ஊழ் தொடர்பு என்ன?

முறைமை இல்லையென்றால் அறிவும் மழுங்கிப் போகும்.

இழவூழ் வந்தால் அது அறிவுள்ளவனது அறிவை மங்கச் செய்து அறியாமையை உண்டாக்கும். ஆகலூழ் நின்றால் அது அவனது பேதைமையைப் போக்கி அறிவை விரிக்கச் செய்யும்.
இழவூழ், ஆகலூழ் என்பன முறையே தீயூழ், நல்லூழ் இவற்றைக் குறிப்பன. தீயூழ் சூழல் உள்ளபோது அறிவிருக்கும், ஆனால் அது வேலை செய்யாது. தீயூழால் பாதிக்கப்பட்டவர் உணர்விருந்தும் உணர்வில்லாதிருப்பர். இழப்பு ஊழ் மேலோங்கி இருக்கும்போது அறிவு மழுங்கி பேதைமை நிலை அடைவர். மறுதலையாக, ஆகலூழ் நிற்கும் காலத்தில் விரிந்த அறிவு உண்டாகும்.
செல்வத்தை ஆக்கவும் போக்கவும் செய்ய வல்லது ஊழ் என்று முற்குறளில் சொல்லப்பட்டது. இங்கு, அறிவைத் திரிக்கச் செய்வது அல்லது அதற்கு ஒளியூட்ட வல்லது ஊழால் இயலும் எனப்படுகிறது. அறிவு குன்றியவன் நல்லூழால் அறிவு பெற்று வெற்றி காண முடிகிறது; அறிவாளன் தீயூழால் பேதைமை அடைகிறான் என ஊழின் ஆற்றல் உணர்த்தப்படுகின்றது. உயிர்களிடை வாழ்வும் சிறப்பும் ஊழின் வழியே நிகழ்கின்றது என்பதைக் காட்ட வந்த பாடல் இது.

பேதைமை- அறிவு- ஊழ் தொடர்பு என்ன?

இழவூழ் உள்ள அறிவையும் குறைத்து அதைக் கெடுத்துவிடும்; ஆகலூழ் புதுப்புது சிறப்பான சிந்தனைகளைத் தோற்றுவித்து அறிவை அதிகப்படுத்தும் என்று ஊழுக்கும் அறிவுக்கும் உள்ள உறவு கூறப்படுகிறது. ஆனால் அறிவுக்கு ஊழ் முற்றுரிமை கொண்டது எனச் சொல்லவில்லை வள்ளுவர்.
தீயூழ் ஒருவனை வென்றது எனின், அதனால் வெல்லப்பட்டவன் நனிபேதையன் என்பது கருத்தாகும், 'அறிவு வழங்கும் சூழ்நிலையானால் அதைப் பற்றுக; பேதைமையை விளைக்கும் சூழ்நிலை என்றால் அதனின்றும் நீங்குக' என அறிவுறுத்துகிறது பாடல். அதாவது ஆகாச் சூழ்நிலையைப் பிரித்து ஆகுஞ் சூழ்நிலையை நட்புக் கொள்' என்பபா வ சுப மாணிக்கம். சிலர் அறிவுக்கும் செல்வத்திற்கும் இடையே நடைபெறும் போட்டியை முன்வைத்து வள்ளுவர் இங்கு கருத்துக்களைச் சொல்லியுள்ளார் என்றனர்.

அறிவு எப்படி சுருங்கும்/விரியும் என்று எண்ணிய சில உரையாசிரியர்கள், கைப்பொருள் இழத்தற்கேதுவாகிய ஊழ், கைப்பொருள் ஆகற்கேதுவாகிய ஊழ் என முற்குறளில் கூறப்பட்ட கைப்பொருளோடு இணைத்து உரை செய்தனர். இப்பொருள் சிறக்கவில்லை. கைப்பொருளை இங்கு கொண்டுவர வேண்டிய தேவை இல்லை. அறிவு, அறியாமை என்பனவற்றை நேரே ஊழுடன் பொருத்திப் பொருள் காணலாம்.

ஒருவருக்கு தீயூழ் தோன்றும் போது, அது அவர் அறிவுள்ளவராயிருந்தும், அவரைப் பேதைமையில் கொண்டு சேர்க்கும்; நல்லூழ் பிறக்கும் போது அறிவு விரிவடைந்து துலங்கும். இதுவே பேதைமை- அறிவு- ஊழ் இடையேயான தொடர்பு.

கேடான ஊழ் வந்தால் அறியாமையைக் கொடுக்கும்; நல்ல ஊழ் தோன்றினால் அறிவுப்பெருக்கம் உண்டாகும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

ஊழ் அறிவையும் ஆட்சி செய்வது.

பொழிப்பு

கேடுகால ஊழ் வந்தால் அறியாமை தோன்றும்; ஆகுகால ஊழின்போது அறிவு பெருகும்.