இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0370



ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்

(அதிகாரம்:அவா அறுத்தல் குறள் எண்:370

பொழிப்பு (மு வரதராசன்): ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும்.



மணக்குடவர் உரை: நிறையா இயல்பினையுடைய ஆசையை விடுவானாயின் அது விட்ட பொழுதே அழியாத இயல்பினைத் தரும்.
இயல்பாவது என்றும் ஒருபடிப்பட்டது. இது தன்னுடைய உருவத்தைப் பெறுமென்றது.

பரிமேலழகர் உரை: ஆரா இயற்கை அவா நீப்பின் - ஒருகாலும் நிரம்பாத இயல்பினையுடைய அவாவினை ஒருவன் நீக்குமாயின், அந்நிலையே பேரா இயற்கை தரும் - அந்நீப்பு அவனுக்கு அப்பொழுதே எஞ்ஞான்றும் ஒரு நிலைமையனாம் இயல்பைக் கொடுக்கும்.
(நிரம்பாமையாவது: தாமேயன்றித் தம்பயனும் நிலையாமையின் வேண்டாதனவாய பொருள்களை வேண்டி மேன் மேல் வளர்தல். அவ்வளர்ச்சிக்கு அளவின்மையின், நீத்தலே தக்கது என்பது கருத்து. களிப்புக்கு கவற்சிகளும் பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களும் முதலாயின இன்றி, உயிர் நிரதிசய இன்பத்தாய் நிற்றலின் வீட்டினை 'பேரா இயற்கை' என்றும், அஃது அவாநீத்த வழிப்பெறுதல் ஒரு தலையாகலின், 'அந்நிலையே தரும்' என்றும் கூறினார். 'நன்றாய் ஞானங்கடந்துபோய் நல்லிந்திரியம் எல்லாம்ஈர்த்து. ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ் உலப்பிலதனை உணர்ந்துணர்ந்து, சென்றாங்கு இன்பத்துன்பங்கள் செற்றுக்களைந்து பசையற்றால், அன்றே அப்போதே வீடும் அதுவே வீடு வீடாமே' (திருவாய் 78-6)என்பதும் இக்கருத்தே பற்றி வந்தது. இந்நிலைமை உடையவனை வடநூலார் 'சீவன் முத்தன' என்ப. இதனால் வீடாவது இது என்பதூஉம், அஃது அவா அறுத்தார்க்கு அப்பொழுதே உளதாம் என்பதூஉம் கூறப்பட்டன.)

இரா சாரங்கபாணி உரை: போதும் என்னும் மனநிறைவறாத இயல்பே ஆசையாகும். அவ்வாசையை அழித்தால் அப்பொழுதே மாறா இயல்பினதாகிய பேரின்பம் மிகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஆரா இயற்கை அவா நீப்பின், அந்நிலையே பேரா இயற்கை தரும்.

பதவுரை: ஆரா - நிரம்பாத; இயற்கை-தன்மை; அவா-விருப்பம்; நீப்பின்-நீக்கினால்; அந்நிலையே-அப்பொழுதே. பேரா-மாறாத. இயற்கை-தன்மை. தரும்-கொடுக்கும்.


ஆரா இயற்கை அவாநீப்பின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நிறையா இயல்பினையுடைய ஆசையை விடுவானாயின்;
பரிப்பெருமாள்: நிறையா இயல்பினையுடைய ஆசையை விடுவானாயின்;
பரிதி: அளவு காணப்படாத ஆசையை;
காலிங்கர்: ஒன்றினாலும் நிரம்பாத் தன்மையுடைய ஆசையை நீக்கவல்லனாயின்;
பரிமேலழகர்: ஒருகாலும் நிரம்பாத இயல்பினையுடைய அவாவினை ஒருவன் நீக்குமாயின்;
பரிமேலழகர் குறிப்புரை: நிரம்பாமையாவது: தாமேயன்றித் தம்பயனும் நிலையாமையின் வேண்டாதனவாய பொருள்களை வேண்டி மேன் மேல் வளர்தல். அவ்வளர்ச்சிக்கு அளவின்மையின், நீத்தலே தக்கது என்பது கருத்து. [தாமேயன்றித் தம்பயனும் - பொருள்களே அல்லாமல் அப்பொருள்களால் வரும் (சிற்றின்பம்) பயன்களும்]

'நிரம்பாத் தன்மையுடைய ஆசையை நீக்கவல்லனாயின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'என்றும் நிரம்பாத ஆசையை நீக்கிவிடின்', 'எவ்வளவு கிடைத்தாலும் திருப்தியடையாத சுபாவமுள்ளது ஆசை', 'ஒருகாலும் நிரம்பாத தன்மையுடைய அவாவினை ஒருவன் ஒழிப்பானாயின்', 'ஒருகாலும் நிரம்பாத இயல்பினையுடைய பெரு விருப்பினை ஒருவன் நீக்குவானாயின்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தணியாத இயல்புடைய ஆசையை விட்டு விட்டால் என்பது இப்பகுதியின் பொருள்.

அந்நிலையே பேரா இயற்கை தரும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அது விட்ட பொழுதே அழியாத இயல்பினைத் தரும்.
மணக்குடவர் குறிப்புரை: இயல்பாவது என்றும் ஒருபடிப்பட்டது. இது தன்னுடைய உருவத்தைப் பெறுமென்றது.
பரிப்பெருமாள்: அது விட்ட பொழுதே அழியாத இயல்பினைத் தரும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இயல்பாவது என்றும் ஒருபடிப்பட்டது. இது தன்னுடைய உருவத்தைப் பெறுமென்றது
பரிதி: அளவு காண்பானாகிய அறிவு குலையாது இன்பமே வரும் என்றவாறு.
காலிங்கர்: மற்று அப்பொழுதே எஞ்ஞான்றும் இடைபெயராது ஒருபடிபட்ட முத்தியின் இயல்பினைத் தரும் என்றவாறு.
பரிமேலழகர்: அந்நீப்பு அவனுக்கு அப்பொழுதே எஞ்ஞான்றும் ஒரு நிலைமையனாம் இயல்பைக் கொடுக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: களிப்புக்கு கவற்சிகளும் பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களும் முதலாயின இன்றி, உயிர் நிரதிசய இன்பத்தாய் நிற்றலின் வீட்டினை 'பேரா இயற்கை' என்றும், அஃது அவாநீத்த வழிப்பெறுதல் ஒரு தலையாகலின், 'அந்நிலையே தரும்' என்றும் கூறினார். 'நன்றாய் ஞானங்கடந்துபோய் நல்லிந்திரியம் எல்லாம்ஈர்த்து, ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ் உலப்பிலதனை உணர்ந்துணர்ந்து, சென்றாங்கு இன்பத்துன்பங்கள் செற்றுக்களைந்து பசையற்றால், அன்றே அப்போதே வீடும் அதுவே வீடு வீடாமே' (திருவாய் 78-6)என்பதும் இக்கருத்தே பற்றி வந்தது. இந்நிலைமை உடையவனை வடநூலார் 'சீவன் முத்தன' என்ப. இதனால் வீடாவது இது என்பதூஉம், அஃது அவா அறுத்தார்க்கு அப்பொழுதே உளதாம் என்பதூஉம் கூறப்பட்டன. [களிப்புக்கு கவற்சிகளும் - இன்ப துன்பங்களும்; நிரதிசய இன்பம் - தன்னின் உயர்ந்த இன்பம் ஒன்றில்லாமை]

'அது விட்ட பொழுதே அழியாத இயல்பினைத் தரும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நீங்காத இன்பம் உடனே கிடைக்கும்', 'அதை நீக்கிவிட்டால் அந்த நிலைதான் முத்தி நிலை', 'அந்நிலை அவனுக்கு அப்பொழுதே என்றும் மாறாத இயற்கைத்தாகிய இன்பத்தைக் கொடுக்கும்', 'அந்நிலை என்றும் மாறாத பேரின்ப நிலையைத் தரும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அந்த நிலையே மாறாத இயல்பையுடைய தன்மையைத் தரும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தணியாத இயல்புடைய ஆசையை விட்டு விட்டால் அந்த நிலையே பேரா இயற்கை தரும் என்பது பாடலின் பொருள்.
'பேரா இயற்கை' என்றால் என்ன?

ததும்பாத மனநிலையை அவாவின்மை உண்டுபண்ணும்.

ஒருபோதும் நிரம்பாத தன்மையுடைய ஆசையை ஒழித்துவிட்டால் அந்நிலையே மாறாத தன்மையினையுடைய அமைதியைத் தரும்.
மனிதனுக்கு எவ்வளவோ வகையான தேவைகள் உண்டு. அவற்றைப் பெற அவா கொண்டு தேடிக்கொண்டே இருக்கிறான். தேவைகளும் குறைவில்லாமல் நீண்டு கொண்டே செல்கின்றன. 'ஆரா இயற்கை' என்றது நிறைவே காணாத மனப்பாங்கைக் குறிக்கும். என்றும் தணியாத இயல்புடைய வேட்கை அல்லது தீராத இயல்புடைய ஆசை என்பது பொருள். ஒருக்காலும் நிறைவு பெறாத இயல்பினையுடையது ஆசை. அது எல்லையற்றது; ஒன்று கிடைத்தவுடன் வேறொன்றை நாடி மேன்மேலும் அலையும் தன்மை உடையது; எத்துணை கிடைக்கப் பெற்றாலும், எத்துணை அனுபவித்தாலும், மேலும் ஓர் இன்பம் இருப்பதாக அதை நாடிச் செல்லும் இயல்பினது அவா. இதனையே ஆரா இயற்கை அவா என்கிறார் வள்ளுவர்.
ஒருவனது வாழ்வின் இறுதி நாட்களில் மாறாத அமைதி பெற வேண்டுமானால் மனம் முற்றிலும் மாறுபட்ட வேறு திசையில் செல்ல வேண்டும். அதற்கு அவன் ஆரா இயற்கை அவாவை நீத்துவிட வேண்டும். ஆசைகளை முழுக்க விட்ட அந்நிலையில் எவ்விதமான தடுமாற்றமும் இல்லாது மனம் அமைதியுறும். அவாவை அறுத்தல் அதாவது எந்தவகையான விருப்ப நினைவையும் முற்றிலும் அழித்துவிடுதலே இங்கு சொல்லப்படுகிறது. அவா நீங்கியவுடனேயே நல் அமைதி கிட்டும் என்கிறது பாடல்.

உயிர்வாழ்க்கையின் இறுதி நிலையில், எல்லா வகையான ஆசைகளையும் நீக்கிய நிலையில், இன்பமும் இல்லாத துன்பமும் உணர இயலாத நிலையில் மனம் இருக்கும். அது மாறாத அமைதிக்கு வழிவகுத்து இறப்புக்கு அணியமாக்கும். அவா நீத்தவர்க்கு அழியாப் பேரின்பம் மேவுதல் உறுதி என்று கூறுவதைவிட அவாநீத்தார் உலக வாழ்க்கையின் இறுதிக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறார் என இக்குறட்பொருளைப் புரிந்து கொள்வது சிறக்கும்.

'அந்நிலையே' என்னும் மொழிநடையினுள் அமைந்து விளங்கும் ஏகாரம் காலத்தாழ்ச்சியின்மையை, விரைவை விளக்கும். அது அவா அறுத்தார்க்கு 'அப்பொழுதே' உளதாம் என்பதைக் குறிக்கும்.

'பேரா இயற்கை' என்றால் என்ன?

'பேரா இயற்கை' என்றதற்கு அழியாத இயல்பு, இடைபெயராது ஒருபடிபட்ட முத்தியின் இயல்பு, ஒரு நிலைமையனாம் இயல்பு, எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வு, எப்பொழுதும் அழியாத இயல்பு, இறவாத இயல்பாய நிலை, நீங்காத இன்பம், மாறா இயல்பினதாகிய பேரின்பம், மாறாத தன்மை(முத்தி நிலை), மாறாத பேரின்ப நிலை, மாறாத இயற்கைத்தாகிய இன்பம், என்றும் மாறாத பேரின்ப நிலை, எந்தக் காலத்திலும் மாறாத தன்மையினையுடைய இன்பம், அழிவற்ற இயற்கையோடு ஒன்றிநிற்கும் பெருநிலை, அசையாத தன்மை, ஒருகாலும் மாறாத இயல்பையுடைய பேரின்பம், என்றும் ஒரே தன்மையான இயல்பு என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

உயிர் பிறந்து பிறந்து துன்பத்தில் உழலாது அதிலிருந்து விடுதலை பெற்று நிலைபெறுதல் அதாவது மீண்டும் பிறவா நிலையே வீடுபேறு அடைதல்; மறுபிறவிக்கு ஆரா இயற்கை அவா என்னும் அமைதியின்மையே காரணம்; அவா நீங்கிய அமைதியே பிறவி இன்மைக்கு காரணமாவதால் வீடுபேறே பேரா இயற்கை எனச் சுட்டப்படுகிறது என்று இக்குறளுக்கான சமயம் சார்ந்த விளக்கங்கள் கூறுகின்றன.
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி. (மெய்யுணர்தல் 356 பொருள்: இவ்வுலகின் மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்தவர், பின்,வாழ்க்கைத் துன்பங்கள் இங்கு தோன்றாத வழிகளை அடைய முற்படுவர்) என்ற குறளில் 'மற்றீண்டு வாரா நெறி' என்று குறிப்பிடப்பட்டுள்ளதை பிறவா நெறி, பிறவா இயல்பு என்றுதான் கொள்ளவேண்டும் என்று பேரா இயற்கையை வீடு பேறு எனச் சொல்வோர் மேற்கோள் காட்டுவர்.
ஆனால் கு ச ஆனந்தன் போன்றோர் இக்கருத்தை ஒப்புக்கொள்வதில்லை. குறளில் கூறப்பட்டுள்ள பேரா இயற்கை என்பது வீடுபேற்றிலும் வேறுபட்டது என்பர் இவர்கள். "பேரா இயற்கை என்பது நிலை குலையாத அல்லது பெயராத இயல்பை அதாவது பிறழ்தல் இல்லாத இயல்பைக் குறிக்கும்" என்று இவர்கள் விளக்கம் அளிப்பர்.
"இவ்வகைப் பேரா இயற்கை பெறுவது என்பதும், இடையறாத இன்பம் தருவது என்பதும், உயிர்கள் பரம்பொருளுடன் கொள்ளுகிற உறவினால் அல்லது இணைப்பினால் ஏற்படுகிறது என்று திருக்குறள் கூறுவதில்லை. "பேரா இயற்கை" என்பது சைவ சித்தாந்தத்தின் "சாயுச்சீயமோ" வைணவத்தின் திரு "வைகுண்ட மோட்சமோ" சைவத்தின் 'இறைவனடி சேர்தலோ' (வீடு பேறோ), வேதாந்தத்தின் 'பரப்பிரம்மத்தோடு கலத்தலோ' பெளத்தத்தின் 'நிப்பாணமோ' சமணத்தின் 'நீட்சியோ', கீதையின் 'பிறவா நிலையோ' அன்று; வைதீக சமயங்கள் குழப்புகிற 'சீவன் முக்த நிலையும்' அன்று. திருக்குறளில் வீடுபேறு என்ற ஓர் நிலை எங்கும் பேசப்படவில்லை; "அறம்", பொருள், இன்பம்' என்ற உறுதிப் பொருட்களின் தொடர்கள் திருக்குறளில் பயிலப்பட்டுள்ளன; ஆனால் 'வீடு' என்பது வலிந்து விடப்பட்டுள்ளது." இவ்வாறு கூறி பேரா இயற்கை என்பது வீடு பேறல்ல என்று கு ச ஆனந்தன் மறுப்பார்.

வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் உள்ள மாந்தர் பற்றிப் பேசுவது அவா வறுத்தல் அதிகாரம். அமைதியாகச் சாவை எதிர்கொள்வதற்கு அவா இடையூறாக இருப்பதால் அதை விட்டொழிக்க வேண்டும் எனச் சொல்வது. அவாவை நீக்கினால், அப்போதே மாறாத தன்மையுள்ள அமைதியான வாழ்க்கை வாய்க்கும்; பேரா இயற்கை எய்தலாம் என்கிறது இப்பாடல்.

'பேரா இயற்கை' என்றதற்கு ஒரே தன்மையான இயல்பு என்பது பொருள்.

தணியாத இயல்புடைய ஆசையை விட்டு விட்டால் அந்த நிலையே மாறாத இயல்பையுடைய தன்மையைத் தரும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அவா அறுத்தல் அமைதியின்மையை நீக்கும்.

பொழிப்பு

எந்த வகையிலும் நிரம்பாத் தன்மையுடைய ஆசையை நீக்கிவிடின் அப்பொழுதே நீங்காத இன்பம் கிடைக்கும்.