இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0369



இன்பம் இடையறாது ஈண்டும் அவாஎன்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்

(அதிகாரம்:அவாவறுத்தல் குறள் எண்:369)

பொழிப்பு (மு வரதராசன்): அவா என்றுசொல்லப் படுகின்ற துன்பங்களுள் பொல்லாத துன்பம் கெடுமானால் இவ்வுலகிலும் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.

மணக்குடவர் உரை: அவாவாகிய துன்பங்களுள் மிக்க துன்பம் கெடுமாயின் இன்பமானது இடையறாமல் வந்து மிகும்.
இஃது இன்பமும் இதனாலே வருமென்றது.

பரிமேலழகர் உரை: அவா என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் - அவா என்று சொல்லப்படுகின்ற மிக்க துன்பம் ஒருவற்குக் கெடுமாயின்; ஈண்டும் இன்பம் இடையறாது. அவன் வீடு பெற்ற வழியே அன்றி உடம்போடு நின்ற வழியும் இன்பம் இடையறாது.
(துன்பத்துள்துன்பம் - ஏனைத் துன்பங்கள் எல்லாம் இன்பமாக வரும்துன்பம். விளைவின் கண்ணே அன்றித் தோற்றத்தின்கண்ணும் துன்பமாகலின், இவ்வாறு கூறப்பட்டது. காரணத்தைக்காரியமாக உபசரித்து அவா என்றும், 'துன்பத்துள்துன்பம்' என்றும், அது கெட்டார்க்கு மனம் தடுமாறாதுநிரம்பி நிற்றலான் 'ஈண்டும் இன்பம் இடையறாது'என்றும் கூறினார். இனி 'ஈண்டும்' என்பதற்குப் 'பெருகும்'என்று உரைப்பாரும் உளர். இதனால் அவா அறுத்தார்வீட்டின்பம் உடம்பொடு நின்றே எய்துவர் என்பதுகூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: பெரு விருப்பம் என்று சொல்லப்படுகின்ற பெரும் துன்பம் நீங்குமானால், இன்பம் ஒழியாது பெருகிக் கொண்டே இருக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அவாஎன்னும் துன்பத்துள் துன்பம் கெடின் இன்பம் இடையறாது ஈண்டும்.

பதவுரை: இன்பம்-மகிழ்ச்சி; இடையறாது-இடைவிடாது, தொடர்ந்து; ஈண்டும்-வரும், பெருகும், (இங்கும், இவ்வுலகிலும்); அவா-விருப்பம்; என்னும்-என்கின்ற; துன்பத்துள்-துயரத்துள்; துன்பம்-துயரம்; கெடின்-கெட்டால்.


இன்பம் இடையறாது ஈண்டும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இன்பமானது இடையறாமல் வந்து மிகும்;
மணக்குடவர் குறிப்புரை: இஃது இன்பமும் இதனாலே வருமென்றது.
பரிப்பெருமாள்: இன்பமானது இடையறாமல் வந்து மிகும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இன்பமும் இதனாலே வருமென்றது.
பரிதி: இன்பம் மேன்மேல் உயரும்;
காலிங்கர்: வீட்டின்பமாகிய முத்தி இடையறாது நிரம்புவதாம்;
பரிமேலழகர்: அவன் வீடு பெற்ற வழியே அன்றி உடம்போடு நின்ற வழியும் இன்பம் இடையறாது.

'இன்பமானது இடையறாமல் வந்து மிகும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். இன்பம் என்றதற்கு வீட்டின்பம் என்று பொருள் காண்பர் காலிங்கரும் பரிமேலழகரும்.

இன்றைய ஆசிரியர்கள் 'இன்பம் வந்துகொண்டே இருக்கும்', 'இன்பமானது இடையீடு படாமல் பெருகிவரும்', 'இந்த உலகத்திலும் இன்பம் இடைவிடாது அனுபவிக்கலாம்', 'இம்மையிலேயே நிலைத்த இன்பமானது இடையறாது உளதாகும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இன்பமானது இடைவிடாது பெருகிநிற்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

அவாஎன்னும் துன்பத்துள் துன்பம் கெடின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவாவாகிய துன்பங்களுள் மிக்க துன்பம் கெடுமாயின்.
பரிப்பெருமாள்: அவாவாகிய துன்பங்களுள் மிக்க துன்பம் கெடுமாயின்.
பரிதி: ஆசையை விடுவானாகில்; துன்பத்துள் மனமில்லை என்றவாறு.
காலிங்கர்: அது யார்க்கோ எனில் எனைத்து வகைப்பட்ட துன்பங்கள் எல்லாவற்றினுள்ளும் மிக்க கொடிதாகிய அவா என்னும் பெரிய துன்பத்துள் துன்பம் கெடின் (அவர்க்கு) என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: அவாவானது தானும் துன்பத்தைச் செய்து எல்லாத் துன்பத்துக்கும் காரணமாதலால் 'துன்பத்துள் துன்பம்' என்றார்.
பரிமேலழகர்: அவா என்று சொல்லப்படுகின்ற மிக்க துன்பம் ஒருவற்குக் கெடுமாயின்.
பரிமேலழகர் குறிப்புரை: துன்பத்துள்துன்பம் - ஏனைத் துன்பங்கள் எல்லாம் இன்பமாக வரும்துன்பம். விளைவின் கண்ணே அன்றித் தோற்றத்தின்கண்ணும் துன்பமாகலின், இவ்வாறு கூறப்பட்டது. காரணத்தைக்காரியமாக உபசரித்து அவா என்றும், 'துன்பத்துள்துன்பம்' என்றும், அது கெட்டார்க்கு மனம் தடுமாறாதுநிரம்பி நிற்றலான் 'ஈண்டும் இன்பம் இடையறாது'என்றும் கூறினார். இனி 'ஈண்டும்' என்பதற்குப் 'பெருகும்'என்று உரைப்பாரும் உளர். இதனால் அவா அறுத்தார்வீட்டின்பம் உடம்பொடு நின்றே எய்துவர் என்பதுகூறப்பட்டது.

'அவாவாகிய துன்பங்களுள் மிக்க துன்பம் கெடுமாயின்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆசையாகிய பெருந்துன்பம் அகன்று விட்டால்', 'ஆசை என்று சொல்லப்படுகின்ற பெருந்துன்பம் அழிந்தால்', 'ஆசை என்கிற துன்பங்களிலெல்லாம் கொடிய துன்பம் இல்லாமற் போனால்', 'துன்பங்கள் எல்லாவற்றிற்குங் காரணமாகிய அவா என்னுந் துன்பங் கெட்டொழிந்தால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஆசை என்று சொல்லப்படுகின்ற பெருந்துன்பம் கெட்டொழிந்தால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஆசை என்று சொல்லப்படுகின்ற பெருந்துன்பம் கெட்டொழிந்தால் இன்பமானது இடைவிடாது ஈண்டும் என்பது பாடலின் பொருள்.
'ஈண்டும்' என்ற சொல்லின் பொருள் என்ன?

அவாவின்மை இன்பப் பெருக்கம்.

துன்பங்களுள் பெரியதாகிய ஆசை என்னும் துன்பம் ஒருவனுக்கு இல்லாமல் ஒழித்துவிடுவானேயானால், அவனுக்கு இன்பம் இடைவிடாது மேன்மேலும் வந்து சேரும்.
துன்பங்களிலெல்லாம் மிகுதுன்பம் அவா என்கிறது இக்குறள். அவா இருந்தால் துன்பமும் அழியாமல் மேன்மேலும் வந்து கொண்டேயிருக்கும் என்று முற்குறளில் கூறப்பட்டது. அவா அழிந்தால் இன்பம் மேன்மேலும் இடையறாமல் பெருகும் என இங்கு சொல்லப்படுகிறது. பேராசை என்னும் கொடிய மனநிலையை இல்லாமல் செய்துவிட்டால் உள்ளத்தில் மாசு நீங்கி குறைவில்லா இன்பம் பெறலாம்.

காலிங்கர் 'அவாவானது தானும் துன்பத்தைச் செய்து எல்லாத் துன்பத்துக்கும் காரணமாதலால் 'துன்பத்துள் துன்பம்' என்றார்' எனத் துன்பத்துள் துன்பம் என்பதை விளக்குவார். அதை 'மற்றதுன்பங்களை இன்பமாக உணரச்செய்யக்கூடிய அளவுக்கு கொடிய துன்பம்' என்பார் பரிமேலழகர்.
'இன்பம் இடையறாது ஈண்டும்' என்றதால் அதை வீட்டின்பம் என்றும் கருதினர். இவர்கள் ஒருவர்க்கு பிறப்புக்குப்பின் வரும் முத்தியைத் தவிர இவ்வுலக இன்பங்களும் இடையறமால் வரும் எனக் கூறுவர். பரிமேலழகரும் 'இதனால் அவா அறுத்தார் வீட்டின்பம் உடம்பொடு நின்றே எய்துவர் என்பது கூறப்பட்டது' என உரைக்கிறார்.

'ஈண்டும்' என்ற சொல்லின் பொருள் என்ன?

'ஈண்டும்' என்றதற்கு மிகும், நிரம்புவதாம், வாய்க்கும், வந்து சேரும், வந்துகொண்டே இருக்கும், குறையாதிருக்கும், தொடர்ந்துவரும், உளதாகும், பெருகிக் கொண்டே இருக்கும், வந்து தழுவிக் கொள்ளும், தொடரும், பெருகி நிற்கும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

ஈண்டும் என்பதற்கு இங்கும் எனவும் ஒரு பொருள் உண்டு. இதனால் அதற்கு இவ்வுலகத்தின் கண்ணும் என்று பொருள் கண்ட உரைகளும் உள. ஆனால் இங்கு அப்பொருள் பொருந்தாது.
'ஈண்டுமின்பமிடையறாது' என மாற்றிப்பொருள் காண்கிறார் பரிமேலழகர்.

'ஈண்டும்' என்ற சொல்லுக்கு மிகும் என்பது பொருள்.

ஆசை என்று சொல்லப்படுகின்ற பெருந்துன்பம் கெட்டொழிந்தால் இன்பமானது இடைவிடாது பெருகிநிற்கும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அவாவறுத்தல் இன்பத்துள் இன்பம் நல்கும்.

பொழிப்பு

ஆசை என்று சொல்லப்படுகின்ற பெருந்துன்பம் ஒழிந்தால் இன்பம் இடைவிடாது மிகுந்துவரும்.