இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0366அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை
வஞ்சிப்பது ஓரும் அவா

(அதிகாரம்:அவாவறுத்தல் குறள் எண்:366)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம்; ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டு கெடுத்து வஞ்சிப்பது அவாவே.

மணக்குடவர் உரை: ஒருவனை வஞ்சனை செய்வது ஆசை: ஆதலால் அதனை அஞ்சுவதே அறம்.
வஞ்சனை செய்தல்- நன்றி செய்வாரைப் போல முன்னே நின்று, பின்னே தீக்கதியுள் உய்த்தல். இஃது ஆசையின்மை வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: ஒருவனை வஞ்சிப்பது அவா - மெய்யுணர்தல் ஈறாகிய காரணங்கள் எல்லாம் எய்தி அவற்றான் வீடு எய்தற்பாலனாய ஒருவனை மறவி வழியால் புகுந்து பின்னும் பிறப்பின்கண்ணே விழித்துக் கெடுக்கவல்லது அவா, அஞ்சுவதே அறன் - ஆகலான், அவ்வவாவை அஞ்சிக் காப்பதே துறவறமாவது.
(ஓரும் என்பன அசைநிலை, அநாதியாய்ப் போந்த அவா, ஒரோவழி வாய்மை வேண்டலை ஒழிந்து பராக்கால் காவானாயின், அஃது இடமாக அவன் அறியாமல் புகுந்து பழைய இயற்கையாய் நின்று, பிறப்பினை உண்டாக்குதலான், அதனை 'வஞ்சிப்பது' என்றார். காத்தலாவது வாய்மைவேண்டலை இடைவிடாது பயின்று அது செய்யாமல் பரிகரித்தல். இதனால், அவாவின் குற்றமும் அதனைக் காப்பதே அறம்என்பதூஉம் கூறப்பட்டன.)

வ சுப மாணிக்கம் உரை: ஆசை யாரையும் ஏய்த்து விடும் ஆதலின் அதற்கு அஞ்சி நடப்பதே அறம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை வஞ்சிப்பது ஓரும் அவா.

பதவுரை: அஞ்சுவது-நடுங்கத்தகுவது; ஓரும்-(அசைநிலை); அறனே-அறமே, நற்செயலே; ஒருவனை-ஒருவனை; வஞ்சிப்பது-ஏமாற்றுவது; ஓரும்-(அசைநிலை); அவா-விருப்பம்.


அஞ்சுவது ஓரும் அறனே:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆதலால் அதனை அஞ்சுவதே அறம்;
பரிப்பெருமாள்: ஆதலால் அதனை அஞ்சுவதே அறம் ஆவது;
பரிதி ('அறிவே' பாடமாகலாம்): ஆசையை நினைத்தபோது பயப்படும் அறிவுடைமை;
காலிங்கர்: ஆதலால், இதனைப் பெரிதும் அஞ்சத்தகுவதொன்றாக விசாரியும்;
பரிமேலழகர்: ஆகலான், அவ்வவாவை அஞ்சிக் காப்பதே துறவறமாவது.;

'ஆசையை அஞ்சுவதே அறம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆதலால் ஆசைக்கு அஞ்சி நல்வழியில் நடப்பதே அறநெறியாம்', 'அதற்கு அஞ்சி எச்சரிக்கையாக இருக்க வேண்டியதுதான் துறவியின் தர்மம்', 'அவ் ஆசைக்குப் பயந்து அது வராமல் தடுப்பதே துறவறமாகும்', 'ஆதலின் அதனை அஞ்சித் தடுப்பதே அறநெறி யாகும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஆசைக்கு அஞ்சி நடப்பது அறநெறி என்பது இப்பகுதியின் பொருள்.

ஒருவனை வஞ்சிப்பது ஓரும் அவா:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவனை வஞ்சனை செய்வது ஆசை.
மணக்குடவர் குறிப்புரை: வஞ்சனை செய்தல்- நன்றி செய்வாரைப் போல முன்னே நின்று, பின்னே தீக்கதியுள் உய்த்தல். இஃது ஆசையின்மை வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: ஒருவனை வஞ்சனை செய்வது ஆசை.
பரிப்பெருமாள் குறிப்புரை: வஞ்சனை செய்தல்- நன்றி செய்வாரைப் போல முன்னே நின்று, பின்னே தீக்கதியுள் உய்த்தல். இஃது அவாவின்மை வேண்டுமென்றது.
பரிதி: ஒருவருக்குக் கொடுக்கின்றபோது வஞ்சனை செய்யும் ஆசை என்றவாறு.
காலிங்கர்: இவ்வுலகின் கணத்தோடு பொருந்தி அதனை இறந்த பெரியோனையும் பொருள் கருதி வஞ்சிப்பதே சூழும் நெஞ்சில் அவாவானது; எனவே, அவாவினை என்றும் அணையற்க என்று பொருளாம் என உணர்க என்றவாறு.
பரிமேலழகர்: மெய்யுணர்தல் ஈறாகிய காரணங்கள் எல்லாம் எய்தி அவற்றான் வீடு எய்தற்பாலனாய ஒருவனை மறவி வழியால் புகுந்து பின்னும் பிறப்பின்கண்ணே விழித்துக் கெடுக்கவல்லது அவா;
பரிமேலழகர் குறிப்புரை: ஓரும் என்பன அசைநிலை, அநாதியாய்ப் போந்த அவா, ஒரோவழி வாய்மை வேண்டலை ஒழிந்து பராக்கால் காவானாயின், அஃது இடமாக அவன் அறியாமல் புகுந்து பழைய இயற்கையாய் நின்று, பிறப்பினை உண்டாக்குதலான், அதனை 'வஞ்சிப்பது' என்றார். காத்தலாவது வாய்மைவேண்டலை இடைவிடாது பயின்று அது செய்யாமல் பரிகரித்தல். இதனால், அவாவின் குற்றமும் அதனைக் காப்பதே அறம்என்பதூஉம் கூறப்பட்டன.

'ஒருவனை வஞ்சனை செய்வது ஆசை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவனைப் பேரின்பம் எய்தாவாறு வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே', 'ஒருவனை அவனறியாதபடி, ஏமாறச் செய்து விடுவது ஆசைதான்', 'ஒருவனை வீடு எய்தாமல் ஏமாற்றிப் பிறப்பின்கண்ணே வீழ்த்திக் கெடுப்பது ஆசையாகும்', 'ஒருவனை வஞ்சித்துப் பிறவியின் கண்ணே தள்ளுவது பெருவிருப்பே' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஒருவனை ஏமாற்றி விடுவது ஆசையே என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒருவனை வஞ்சிப்பது அவா. ஆதலால் அதற்கு அஞ்சி நடப்பது அறநெறி என்பது பாடலின் பொருள்.
'வஞ்சிப்பது அவா' குறிப்பது என்ன?

பேராசையை அஞ்சுவதும் அறமாம்.

ஒருவனை வஞ்சித்துத் துன்பத்துள் உழலச் செய்வது அவா என்னும் உலக ஆசையே; ஆதலால், அந்த அவா தன்னிடம் நெருங்காதபடி அதற்கு அஞ்சி வாழ்வது அறமாகவும் கருதப்படும்.
ஒருவனை வஞ்சித்துத் துன்ப வாழ்க்கையில் செலுத்தி அவனை அழித்துவிடும் தன்மை கொண்டது அவா. ஆசையே குற்றம் புரிவதற்குத் தூண்டுகோலாக நிற்கின்றது. பேராசையினால் மாந்தர் சிலவேளைகளில் குற்றங்களில் ஈடுபட்டு கொடுமை நிறைந்த செயல்களைச் செய்யவும் துணிவர். அதனால்தான் ஆசைக்கு அஞ்சவேண்டும் என்கிறார் வள்ளுவர். அஞ்சுவது அறம் என்றது ஆசையை ஒழித்துக் குற்றமற்ற வாழ்க்கை நடத்துவதற்கே. ஆசை ஒருவனை அறத்திற்கு மாறாக நடக்கத்தூண்டும் ஆதலால் தீச்செயலுக்கு அஞ்சுவது போல ஆசையை அண்டவிடாமல் அஞ்சி அஞ்சி நேரிய வழியை நாடி வாழவேண்டும். அப்படி அஞ்சி வாழ்வது அறநெறிப்பட்டதுமாகும். அறமெனும் பேராற்றல் மனிதனைத் தீங்கினின்றும் காப்பாற்றும்; அது அவனை வாழ்வாங்கு வாழவைக்கும்.

காலிங்கர் முதலில் வரும் ‘ஓரும்’ என்பதற்கு 'விசாரியும்' எனவும் பின் வருவதற்குச் 'சூழும்' எனவும் பொருள் கொள்கிறார். ‘ஓரும்’ என்று வரும் இருவிடங்களிலும் அசை நிலையாகக் கொள்வதே குறட்கருத்தினைத் தெளிவு செய்கிறது. நாமக்கல் இராமலிங்கம் 'ஓரும்' என்பது உறுதியைக் குறிக்கும் அசைச் சொல் என்கிறார்.
இப்பாடல் நடையில் அமைந்த மற்றொரு குறள்: செயற்பாலது ஓரும் அறனே ஒருவற்கு உயற்பாலது ஓரும் பழி (அறன் வலியுறுத்தல் 40).

'வஞ்சிப்பது அவா' குறிப்பது என்ன?

வஞ்சிப்பது என்றதற்கு 'நன்றி செய்வாரைப் போல முன்னே நின்று, பின்னே தீக்கதியுள் உய்த்தல்' என மணக்குடவர் விளக்கம் அளித்தார். வஞ்சிப்பது என்பதற்கு ஏமாற்றுதல் என்பது பொருள். வஞ்சிப்பது அவா என்பது ஆசை ஏமாற்றுவது எனப் பொருள்படும்.
ஆசை ஏமாற்றும் இயல்பு கொண்டதாகையால் மன உறுதி படைத்தவரையும் அவர் தளர்ச்சி கண்டு ஆசை ஏமாற்றிக் கேடு உண்டாக்கி விடும். எனவே அடுத்துக்கெடுக்கும் வஞ்சக ஆசையின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டு அதன் வலையில் விழாமல் ஒருவன் தன்னைக் காத்துக்கொள்ளவேண்டும். அவாவைக் வஞ்சகக் குற்றமுள்ளதாகக் காட்டி, அதனை அஞ்சி நீங்கலே அறமென்று சொல்கிறது குறள்.

ஒருவனை ஏமாற்றி விடுவது ஆசையே. ஆதலால் அதற்கு அஞ்சி நடப்பதே அறநெறி என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அவாவறுத்தல் குற்றம் கடியும்.

பொழிப்பு

ஆசை ஒருவரை ஏமாற்றி விடும். ஆதலால் அதற்கு அஞ்சி நடப்பதே அறநெறியாம்.