இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0365அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்

(அதிகாரம்:அவாவறுத்தல் குறள் எண்:365)

பொழிப்பு (மு வரதராசன்): பற்றற்றவர் என்று கூறப்படுவோர் அவா அற்றவரே; அவா அறாத மற்றவர், அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.

மணக்குடவர் உரை: பற்றற்றவரென்பார் ஆசையற்றவரே; ஆசையறாதவர் பற்றினையறுத்தாராயினும் ஆசையற்றாரைப் போலப் பற்றறுதலிலர்.

பரிமேலழகர் உரை: அற்றவர் என்பார் அவா அற்றார் - பிறவியற்றவர் என்று சொல்லப்படுவார் அதற்கு நேரே ஏதுவாகிய அவா அற்றவர்கள், மற்றையார் அற்றாக அற்றது இலர் - பிற ஏதுக்களற்று அஃது ஒன்றும் அறாதவர்கள், அவற்றால் சில துன்பங்கள் அற்றதல்லது அவர்போற் பிறவி அற்றிலர்.
(இதனால் அவா அறுத்தாரது சிறப்பு விதிமுகத்தானும் எதிர்மறைமுகத்தானும் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: ஆசை விட்டவரே பற்று விட்டவர் ஆவார்; மற்றவர்கள் முடிவாகப் பற்று விட்டதில்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார் அற்றாக அற்றது இலர்.

பதவுரை: அற்றவர்-ஒழிந்தவர்; என்பார்-என்று சொல்லப்படுபவர்; அவா-பெருவிருப்பம்; அற்றார்-நீங்கியார்; மற்றையார்-பிறர்; அற்று-இயைந்து வருபவை; ஆக-ஆகும்படி; அற்றது-நீங்கியது; இலர்-இல்லாதார்.


அற்றவர் என்பார் அவாஅற்றார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பற்றற்றவரென்பார் ஆசையற்றவரே;
பரிப்பெருமாள்: பற்றற்றவரென்பார் ஆசையற்றவரே; br /> பரிதி: செனனம் அற்றார் என்பது அவா அற்றாரை;
காலிங்கர்: மற்று ஈண் டுள்ள பொருள் மாடு பெண்டிர் புதல்வர் சுற்றம் நட்டோர் முதலாகிய அனைத்தினும் உள்ள அவா அற்றனர் என்று சான்றோரால் சொல்லப்படுவார் யாரோ எனில், மற்று எப்பற்றுக்கும் காரணமாகிய அவாவினை அற்றவரே ஆசையற்றவராவார்;
பரிமேலழகர்: பிறவியற்றவர் என்று சொல்லப்படுவார் அதற்கு நேரே ஏதுவாகிய அவா அற்றவர்கள்;

'பற்றற்றவரென்பார் ஆசையற்றவரே' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதியும் பரிமேலழகரும் பிறவியற்றவர் என்று 'அற்றவர்க்கு'ப் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பற்றற்றவர் என்பவர் முழுதும் ஆசையற்றவரே', 'ஆசைகளை விட்டுவிட்டவர்கள் தாம் பற்றுகளை விட்டுத் துறந்தவர்களாவார்கள்', 'பிறவித்துன்பம் அற்றவரென்று சொல்லப்படுபவர் ஆசை அற்றவரே', 'பிறவி அற்றவர் என்று சொல்லப்படுவார் பெரு விருப்பு நீங்கினவரே' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எல்லாம் நீங்கியவர் என்று சொல்லப்படுபவர் ஆசையற்றவரே என்பது இப்பகுதியின் பொருள்.

மற்றையார் அற்றாக அற்றது இலர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆசையறாதவர் பற்றினையறுத்தாராயினும் ஆசையற்றாரைப் போலப் பற்றறுதலிலர்.
பரிப்பெருமாள்: ஆசையறாதவர் பற்றினையறுத்தாராயினும் ஆசையற்றாரைப் போலப் பற்றறுத்திலர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: தொடர்ப்பாடு களைந்தார்க்கு மனத்தினாற் பற்றுண்டானால் வரும் குற்றம் என்னை? அதனாறுவதோர் நுகர்ச்சியின்மையான் என்றார்க்குக் கூறப்பட்டது.
பரிதி: ஆசை விடாதாரைச் செனனம் விடாது என்றவாறு.
காலிங்கர்: மற்றையார் துறவு மேற்கொண்டு அவா அறாதார் என்றவாறு.
பரிமேலழகர்: பிற ஏதுக்களற்று அஃது ஒன்றும் அறாதவர்கள், அவற்றால் சில துன்பங்கள் அற்றதல்லது அவர்போற் பிறவி அற்றிலர்.
பரிமேலழகர் குறிப்புரை: இதனால் அவா அறுத்தாரது சிறப்பு விதிமுகத்தானும் எதிர்மறைமுகத்தானும் கூறப்பட்டது.)

'ஆசையறாதவர் பற்றினையறுத்தாராயினும் ஆசையற்றாரைப் போலப் பற்றறுதலிலர்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அங்ஙனம் ஆசையறாத மற்றையார் பற்றற்றவர்கள் போல முழுதும் ஆசை நீங்கியவர் அல்லர்', 'மற்றவர்கள் அப்படியாக விட்டுவிட்டது ஒன்றுமில்லை', 'மற்றவர்கள் முற்றிலும் துன்பத்தினின்று நீங்கினவர் அல்லர்', 'எல்லாம் நீங்கிப் பெரு விருப்பு நீங்காதவர்கள் பிறவி நீங்கினவர் அல்லர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மற்றையார் முடிவாகத் தொடர்பற்றவர் அல்லர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
எல்லாம் நீங்கியவர் என்று சொல்லப்படுபவர் ஆசையற்றவரே; மற்றையார் முடிவாகத் தொடர்பற்றவர் அல்லர் என்பது பாடலின் பொருள்.
'அற்றவர்' என்று யாரைக் குறிப்பிடுகிறது இப்பாடல்?

விட்டகுறை தொட்டகுறையாக பற்றுக்கொண்டிருப்பவர் அவ்வளவாக அவாவறுத்தார் அல்லர்.

எல்லாம் நீங்கியவர் என்று சொல்லப்படுபவர் ஆசையை அறுத்தவரே ஆவர். ஆசையினை ஒழிக்காத மற்றவர் அவ்விதமாகத் தொடர்பற்றவர் அல்லர்.
பேராசையை ஒழித்தவரே எல்லாம் நீங்கியவர் எனச் சொல்லப்படுவர். அஃதன்றி புறத்தே துறந்தார் போல் ஒழுகி அகத்துள் அவாவும் மற்றையோர் உலகப் பொருள்களிலிருந்துஅ தொடர்பை நீக்கியவர் ஆகார். மனைவி மக்கள் வீடு செல்வம் முதலியவற்றை. மட்டும் துறந்தவர்கள் அவ்வளவு தூய்மையாகப் பற்று அற்றவர்கள் அல்லர். இவர்கள் ஓரளவிற்கேனும் ஆசையைக் கொண்டவர்களாதலால் முற்றாக அவா அற்றவர் அல்லர். 'ஆசையறாதவர் பற்றினையறுத்தாராயினும் ஆசையற்றாரைப் போலப் பற்றறுதலிலர்' என்பது மணக்குடவரது விளக்கம். இதையே காலிங்கர் 'எப்பற்றுக்கும் காரணமாகிய அவாவினை அற்றவரே ஆசையற்றவராவார்' என்பார். ஆசைக்கும் பற்றுக்கும் உள்ள தொடர்பு இவ்வாறு விளக்கப்பட்டது.
சிலர் பொருளை வெறுத்துப் பேசலாம். அல்லது நீக்கலாம். ஆயினும் மனத்தில் அவா இருக்கலாம். தொடர்ப்பாடு களைந்தாராக இருந்தாலும் மனத்தினாற் பற்றிருந்தால் அவர் அவாஅறுத்தார் எனக் கொள்ளப்படமாட்டார். அதாவது அவா அறுக்காமல் வேறு என்ன அறுத்தாலும் பற்று நீங்கியவர் ஆகார் என்பது வலியுறுத்தப்படுகிறது.

'அற்றவர்' என்று யாரைக் குறிப்பிடுகிறது இப்பாடல்?

'அற்றவர்' என்றதற்குப் பற்றற்றவர், செனனம் அற்றார், பொருள் மாடு பெண்டிர் புதல்வர் சுற்றம் நட்டோர் முதலாகிய அனைத்தினும் உள்ள அவா அற்றனர், பிறவியற்றவர், பற்றற்றவர், பற்றற்ற துறவிகள், பற்று விட்டவர், பற்றுகளை விட்டுத் துறந்தவர்கள், துன்பம் அற்றுப் போனவர், பிறவித்துன்பம் அற்றவர், துறவி என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

‘அற்றவர்’ என்பதற்குப் பிறவி யற்றவர் என்னும் பொருள் பொருந்தாது. ‘இல்லார் என்ற சொல் தன்னளவில் பொருளில்லாரைக் குறிக்குமாப் போல, ‘அற்றவர்’ என்ற சொல்லும் தன்னளவில் அவா அற்றவரையே குறிக்கும் என்பது ஆசிரியர் கருத்து; அஃதறிந்து மணக்குடவர் பற்றற்றவர் என்று உரை கண்டமையின் அவ்வுரை சிறப்புடையது' என்பார் இரா சாரங்கபாணி.

'அற்றவர்' என்பது பற்று நீங்கியவர் எனப்பொருள்படும்.

எல்லாம் நீங்கியவர் என்று சொல்லப்படுபவர் ஆசையற்றவரே; மற்றையார் முடிவாகத் தொடர்பற்றவர் அல்லர் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அவாவறுத்தல் முற்றத் தொடர்பு நீங்கியவர்க்கே இயலும்.

பொழிப்பு

ஆசையற்றவரே பற்றற்றவர் ஆவார்; மற்றவர்கள் முடிவாக ஆசை நீங்கியவர் அல்லர்.