இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0364தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்

(அதிகாரம்:அவாவறுத்தல் குறள் எண்:364)

பொழிப்பு (மு வரதராசன்): தூயநிலை என்று கூறப்படுவது அவா இல்லாதிருத்தலே யாகும்; அவா அற்ற அத்தன்மை, மெய்ப் பொருளை விரும்புவதால் உண்டாகும்.

மணக்குடவர் உரை: ஒருவர்க்கு அழுக்கறுத்தலாவது ஆசையின்மை; அவ்வாசை யின்மை மெய் சொல்லுதலை விரும்ப வரும்.
இது பொருள்மேலாசையில்லாதார் பொய் கூறாராதலின் மெய் சொல்ல அவாவின்மை வரும் என்று அவாவறுத்தற்குக் கருவி கூறிற்று.

பரிமேலழகர் உரை: தூஉய்மை என்பது அவா இன்மை - ஒருவர்க்கு வீடு என்று சொல்லப்படுவது அவா இல்லாமை,அது வாஅய்மை வேண்ட வரும் - அவ்வவா இல்லாமைதான் மெய்ம்மையை வேண்டத் தானே உண்டாம்.
(வீடாவது: உயிர் அவிச்சை முதலிய மாசு நீங்குதல் ஆகலின்,அதனைத் 'தூய்மை' என்றும், காரணத்தைக் காரியமாக உபசரித்து, 'தூய்மை' என்பது அவா இன்மை என்றும் மெய்ம்மையுடைய பரத்தை ஆகுபெயரால் 'மெய்ம்மை' என்றும் கூறினார். 'மற்று' மேலையது போல வினைமாற்றின்கண் வந்தது. வேண்டுதல் - இடைவிடாது பாவித்தல். அவா அறுத்தல், வீட்டிற்குப் பரம்பரையான் அன்றி நேரே ஏது என்பதூஉம் அது வரும் வழியும் இதனால் கூறப்பட்டன.)

இரா சாரங்கபாணி உரை: மாசற்ற நிலை என்பது மனத்தில் ஆசை கொள்ளாமையே. அந்நிலை மெய் சொல்லுதலை விரும்ப வரும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும்.

பதவுரை: தூஉய்மை-அழுக்கறுத்தல், மாசு நீங்குதல், வான்மை; என்பது-என்று சொல்லப்படுவது; அவாவின்மை-விருப்பம் இல்லாதிருத்தல்; மற்று-'ஆனால்', 'பின்'; அது-அது; வாஅய்மை-மெய்ம்மை; வேண்ட-விரும்ப; வரும்-உண்டாம்.


தூஉய்மை என்பது அவாவின்மை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவர்க்கு அழுக்கறுத்தலாவது ஆசையின்மை;
பரிப்பெருமாள்: ஒருவர்க்கு அழுக்கறுத்தலென்பது ஆசையின்மை;
பரிதி: உபதேசமுறுவதில் பெறுவது ஆசையை விடுதல்;
காலிங்கர்: ஒருவன் மனத்தூய்மை என்று சொல்லப்படுவது யாதோ எனில் யாதொன்றின்மாட்டும் அவா இல்லாமையே;
பரிமேலழகர்: ஒருவர்க்கு வீடு என்று சொல்லப்படுவது அவா இல்லாமை;

'மனத்தூய்மை என்று சொல்லப்படுவது யாதோ எனில் யாதொன்றின்மாட்டும் அவா இல்லாமையே' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். தூய்மை என்ற சொல்லுக்குப் ,பரிமேலழகர் 'வீடு' எனப் பொருள் கொள்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'மனத்தூய்மை என்பது ஆசையின்மையே', 'மாசற்ற நிலை என்பது மனத்தில் ஆசை கொள்ளாமையே', 'பரிசுத்தத் தன்மை என்பது மனதில் ஆசை என்ற அழுக்கு இல்லாதிருப்பது', 'ஒருவர்க்குத் தூய தன்மை என்று சொல்லப்படுவது விருப்பமற்ற தன்மையே' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மனத்தூய்மை என்பது அவா இன்மையே என்பது இப்பகுதியின் பொருள்.

மற்றது வாஅய்மை வேண்ட வரும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வாசை யின்மை மெய் சொல்லுதலை விரும்ப வரும்.
மணக்குடவர் குறிப்புரை: இது பொருள்மேலாசையில்லாதார் பொய் கூறாராதலின் மெய் சொல்ல அவாவின்மை வரும் என்று அவாவறுத்தற்குக் கருவி கூறிற்று.
பரிப்பெருமாள்: அவ்வாசை யின்மை மெய் சொல்லுதலை விரும்ப வரும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பொருள்மேலாசையில்லாதார் பொய் கூறாராதலின் மெய் சொல்ல (அவாவின்மை) வரும் என்று அவாவறுத்தற்குக் கருவி கூறிற்று.
பரிதி: உபதேசம் உண்மையாகில் ஆசை வேண்டினது தரும் என்றவாறு.
காலிங்கர்: மற்று அவ் அவாவானது இல்லாமைதான் யாதினால் வருவது எனில், மெய்ம்மையை விரும்ப வந்து எய்தும்.
பரிமேலழகர்: அவ்வவா இல்லாமைதான் மெய்ம்மையை வேண்டத் தானே உண்டாம்.
பரிமேலழகர் குறிப்புரை: வீடாவது: உயிர் அவிச்சை முதலிய மாசு நீங்குதல் ஆகலின்,அதனைத் 'தூய்மை' என்றும், காரணத்தைக் காரியமாக உபசரித்து, 'தூய்மை' என்பது அவா இன்மை என்றும் மெய்ம்மையுடைய பரத்தை ஆகுபெயரால் 'மெய்ம்மை' என்றும் கூறினார். 'மற்று' மேலையது போல வினைமாற்றின்கண் வந்தது. வேண்டுதல் - இடைவிடாது பாவித்தல். அவா அறுத்தல், வீட்டிற்குப் பரம்பரையான் அன்றி நேரே ஏது என்பதூஉம் அது வரும் வழியும் இதனால் கூறப்பட்டன. [பரம்பரை - ஒன்றைப் பின்பற்றி வழிவருதல்]

'அவ்வாசை யின்மை மெய் சொல்லுதலை விரும்ப வரும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் வாய்மை என்பதற்குப் பரம்பொருள் என விளக்கம் கூறுகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அத்தன்மை வாய்மையினால் வரும்', 'அந்நிலை மெய் சொல்லுதலை விரும்ப வரும்', 'அந்த ஆசையில்லாத பரிசுத்தத் தன்மையும் சத்தியமாக விரும்பினால்தான் கைகூடும்', 'அவ்விருப்பமற்ற தன்மை மெய்ப்பொருளை விரும்பத் தானே உண்டாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அந்நிலை வாய்மையினால் வரும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மனத்தூய்மை என்பது அவா இன்மையே; அந்நிலை வாய்மையினால் வரும் என்பது பாடலின் பொருள்.
'வாய்மை' என்ற சொல்லின் பொருள் என்ன?

அவாவின்மையே தூய்மை நிலை.

தூய்மை என்று சொல்லப்படுவது ஆசையற்ற தன்மையே ஆகும். அத்தகைய நிலை வாய்மையை விரும்ப வரும்.
ஒருவன் பேராசையை நீக்கிவிட்டால் அவனது மன மாசு நீங்கிவிடும். அதைத் தூய்மை நிலை என்கிறார் வள்ளுவர். அவ் அவாவின்மை மெய் சொல்லுதலை விரும்புதலால் கிடைக்கும் எனவும் கூறுகிறார். மணக்குடவர் 'பொருள் மேலாசையில்லாதார் பொய் கூறாராதலின் மெய் சொல்ல அவாவின்மை வரும் என்று அவாவறுத்தற்குக் கருவி கூறிற்று' எனக் குறட்பொருளைத் தெளிபுபடுத்துகிறார்.
எவ்வளவு உறுதியுடைய மனமும், ஒரு பொருளை விரும்பிவிட்டால் அதைப் பற்றிக் கொள்ளவே முனையும். அப்பொழுது உள்ளத்தில் அழுக்குப் படியத் தொடங்குகிறது. எனவே மனத்தைப் பேராசை கொள்ளாமல் தொடர்ந்து தடுக்க வேண்டியுள்ளது. தன்னல ஆசைகள் இல்லாத இடங்களில் தூய்மை இருக்கும். வாய்மை ஒன்றே அவா என்ற அழுக்கை நீக்கவல்லது. மனஅழுக்கான பெருவிருப்பத்தை நீக்கினால் பிற குற்றங்கள் தாமே நீங்கிவிடும். இதனால், ஒருவன் வாய்மையை வேண்டும்போது அந்தத் தூய்மை வரும் எனச் சொல்லப்பட்டது.

'வாய்மை' என்ற சொல்லின் பொருள் என்ன?

வாய்மை என்ற சொல்லுக்கு மெய் சொல்லுதல், மெய்ம்மை, மெய்ப் பொருள், பொய்யாமை, அகத்தூய்மை, மெய்ப்பொருளைப் பற்றிக் கொள்ளல், மெய்ம்மைப் பொருளாகிய கடவுள், உண்மை, மெய்யான பரம்பொருள், வாய்மைப் பொருளாகிய இறைவன் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்

வாய்மை என்ற சொல்லுக்கு மெய் சொல்லுதல் என்று ஒருசாராரும் மெய்யான பரம்பொருள் அதாவது இறைவன் என்று இன்னொரு சாராரும் பொருள் கூறியுள்ளனர். பரிமேலழகர் 'மெய்ம்மையுடைய பரத்தை ஆகுபெயரால் 'மெய்ம்மை' என்றும் கூறினார்' எனக் கூறி 'பரம்பொருளை இடைவிடாது பாவித்தல் வேண்டும்' என விளக்கமும் தருகிறார். வாய்மை என்பதற்குப் பரம்பொருள் என்பதினும் மெய் சொல்லுதல் என்ற பொருள் இயல்பானது.
தூயநிலை என்று கூறப்படுவது அவா இல்லாதிருத்தல்; அவாவின்மை மெய்ம்மையை விரும்புவதால் உண்டாகும் என்று தூய்மைக்கும் வாய்மைக்கும் உள்ள தொடர்பு விளக்கப்பட்டது. .......அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் (வாய்மை 298 பொருள்: மனந்தூய்மை பொய் சொல்லாமையால் அறியப்படும்) என்று வாய்மை அதிகாரத்திலும் இத்தொடர்பு கூறப்பட்டது. ஆசைகளற்ற ஒருவருக்கு பொய்களைச் சொல்லவேண்டிய தேவை இல்லை. வாய்மையை விரும்ப அவாவறுத்தல் வந்து எய்தும், தூய்மை என்ற அவாவின்மையைப் பெற வாய்மை மிகத்தேவை.

'வாய்மை' என்ற சொல்லுக்கு அதன் நேர்பொருளான மெய் சொல்லுதல் என்பதே இங்கு பொருத்தம்.

மனத்தூய்மை என்பது அவா இன்மையே; அந்நிலை வாய்மையினால் வரும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அவாவறுத்தல் அகந்தூய்மையால் வரும்.

பொழிப்பு

மனமாசற்ற நிலை என்பது ஆசையின்மையே; அந்நிலை வாய்மையை விரும்ப வரும்