இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0362வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்

(அதிகாரம்:அவாவறுத்தல் குறள் எண்:362)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் ஒன்றை விரும்புவதானால், பிறவா நிலைமையை விரும்பவேண்டும்; அது, அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.

மணக்குடவர் உரை: வேண்டுங்கால் பிறவாமையை விரும்புதல் வேண்டும்: அப்பிறவாமை பொருளை விரும்பாமையை விரும்பத் தானே வரும்.
இது பிறவாமையும் இதனாலே வருமென்றது.

பரிமேலழகர் உரை: வேண்டுங்கால் பிறவாமை வேண்டும் - பிறப்புத் துன்பம் ஆதல் அறிந்தவன் ஒன்றை வேண்டின் பிறவாமையை வேண்டும், அது வேண்டாமை வேண்ட வரும் - அப் பிறவாமைதான் ஒரு பொருளையும் அவாவாமையை வேண்ட அவனுக்குத் தானே உண்டாம்.
(அநாதியாகத் தான் பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களால் துன்பமுற்று வருகின்றமையை உணர்ந்தவனுக்கு ஆசை இன்பத்தின் கண்ணேயாகலின், பிறவாமையை வேண்டும் என்றும் ஈண்டைச் சிற்றின்பம் கருதி ஒருபொருளை அவாவின் அது பிறப்பீனும் வித்தாய்ப் பின்னும் முடிவில்லாத துன்பமே விளைத்தலின், அது வேணடாமை வேண்ட வரும் என்றும் கூறினார். பிறவாமையின் சிறப்புக் கூறி, பின் அதுவரும்வழி கூறத்தொடங்குகின்றமையின் 'மற்று' வினை மாற்றின்கண் வந்தது.)

சிற்பி பாலசுப்பிரமணியம் உரை: ஆசை ஒன்றை வேண்டும்போது, அவ்வாசை பிறவாமல் காக்கவேண்டும். ஆசை பிறவாமல் காக்கவேண்டுமானால், 'வேண்டாமை' (விரும்பாமை)யை வளர்த்துக் கொள்ள வேண்டும். (இவை ஒன்றுக்குள் ஒன்றாக இருக்கும் ஆபத்துக்கள்)


பொருள்கோள் வரிஅமைப்பு:
வேண்டுங்கால் பிறவாமை வேண்டும் மற்றது வேண்டாமை வேண்ட வரும்.

பதவுரை: வேண்டுங்கால்-விரும்பினால்; வேண்டும்-விரும்பும்; பிறவாமை-பிறக்காமல் இருத்தல்; மற்றுஆனால். பின்; அது-அது; வேண்டாமை-அவாவாமை; வேண்ட-விரும்ப; வரும்-உண்டாம்.


வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வேண்டுங்கால் பிறவாமையை விரும்புதல் வேண்டும்;
பரிப்பெருமாள்: விரும்புங்கால் பிறவாமையை விரும்புதல் வேண்டும்;
பரிதி: ஒன்றையும் வேண்டக்கடவனல்லன்; வேண்டினனாகில் பிறவா நெறியை வேண்டுவான்;
காலிங்கர்: ஒருவனுக்கு யாதானும் ஒன்றனையும் விரும்புமிடத்துப் பிறவாமையே விரும்பலாவது;
பரிமேலழகர்: பிறப்புத் துன்பம் ஆதல் அறிந்தவன் ஒன்றை வேண்டின் பிறவாமையை வேண்டும்;

'ஒன்றை வேண்டின் பிறவாமையை விரும்புதல் வேண்டும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒன்று விரும்பின் பிறவாமையை விரும்புக', 'பிறப்பு துன்பமானவன் என்பதனை அறிந்தவன் ஒன்றை வேண்டும்போது பிறவாமையை வேண்டுவான்', 'துறவு பூண்டவன் எதன் மீதாவது ஆசை கொண்டால் பிறவாமை பெறுவதன் மீதுதான் ஆசை கொள்ள வேண்டும்', 'விரும்ப வேண்டுமென்று கருதினால் பிறவாமையை விரும்புதல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒன்று விரும்பின் துன்பம் தோன்றாமையை விரும்புக என்பது இப்பகுதியின் பொருள்.

மற்றது வேண்டாமை வேண்ட வரும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அப்பிறவாமை பொருளை விரும்பாமையை விரும்பத் தானே வரும்.
மணக்குடவர் குறிப்புரை: இது பிறவாமையும் இதனாலே வருமென்றது.
பரிப்பெருமாள்: பிறவாமைதான் பொருள்களை விரும்பாமையை விரும்ப வரும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பிறவாமையும் இதனாலே வருமென்றது.
பரிதி: அல்லது ஆசையை வேண்டாமலிருந்தானாகிலும் வேண்டினது வரும்.
காலிங்கர்: இங்ஙனம் பிறவாமையை விரும்புமிடத்து அவா எவ்வாறும் வருவதில்லை; ஆதலால் அவாவினை விரும்பாது ஒழியின் பிறவாமையாகிய முத்தி தான் விரும்பிவந்து எய்தும் என்றவாறு.
பரிமேலழகர்: அப் பிறவாமைதான் ஒரு பொருளையும் அவாவாமையை வேண்ட அவனுக்குத் தானே உண்டாம்.
பரிமேலழகர் குறிப்புரை: அநாதியாகத் தான் பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களால் துன்பமுற்று வருகின்றமையை உணர்ந்தவனுக்கு ஆசை இன்பத்தின் கண்ணேயாகலின், பிறவாமையை வேண்டும் என்றும் ஈண்டைச் சிற்றின்பம் கருதி ஒருபொருளை அவாவின் அது பிறப்பீனும் வித்தாய்ப் பின்னும் முடிவில்லாத துன்பமே விளைத்தலின், அது வேணடாமை வேண்ட வரும் என்றும் கூறினார். பிறவாமையின் சிறப்புக் கூறி, பின் அதுவரும்வழி கூறத்தொடங்குகின்றமையின் 'மற்று' வினை மாற்றின்கண் வந்தது. [அநாதியாக - தொன்று தொட்டு]

'பிறவாமைதான் ஒரு பொருளையும் அவாவாமையை வேண்ட அவனுக்குத் தானே உண்டாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'விரும்பாமையை விரும்பின் அது கைகூடும்', 'ஒன்றையும் விரும்பாமையை வேண்ட அப்பிறவாமை அவனுக்குத் தானே உண்டாகும்', 'ஆனால் அதுவும்கூட ஆசையில்லாமையின் மீது ஆசை வைத்தால்தான் கிடைக்கும்', 'அப்பிறவாமை, விரும்பாமையை விரும்ப உண்டாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

விரும்பாமையை விரும்பின் அது உண்டாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒன்று விரும்பின் துன்பம் தோன்றாமையை விரும்புக; விரும்பாமையை விரும்பின் அது உண்டாகும் என்பது பாடலின் பொருள்.
'வேண்டாமை வேண்ட' என்ற தொடர் குறிப்பதென்ன?

எதையாவது விரும்ப வேண்டுமென்றால் ஆசை பிறவாமையை விரும்புக.

ஒருவன் ஒன்றனை விரும்பவேண்டுமானால் துன்பம் தோன்றாமையை விரும்ப வேண்டும்; ஒரு பொருளையும் வேண்டாமையை விரும்பினால் துன்பமின்மை தானே உண்டாகும்.
அதிகாரம் அவாஅறுத்தல் அதாவது ஆசையை விடுதல். ஆனால் 'உனக்கு ஏதாவது ஆசை வந்தால் துன்பம் தோன்றாமைக்கு ஆசைப்படு' என்கிறது இக்குறள். ஆம் ஆசையை அடைவதற்குக் கூட ஒரு ஆசை வேண்டியிருக்கிறது! துன்பங்களுக்கெல்லாம் காரணம் ஆசை. ஆதலால் துன்பமில்லாமைக்கு விரும்பவேண்டுவதெல்லாம் அவாவாமைதான் என்கிறது பாடல்.

ஒன்றை மட்டும் விரும்பிக் கேட்பதென்றால் உலகில் துன்பங்கள் இல்லாத வாழ்வு வேண்டும் என விரும்ப வேண்டும். அந்த நிலை பேராசை இல்லாத நிலையை விரும்பினால் வரும். தேவையற்றவை வேண்டாம் என்னும் பக்குவமான மனநிலையில் பேராசைப்படுவது மனதிலிருந்து நீங்கும் அப்போது துன்பமில்லா அமைதியான வாழ்வு கிட்டும். துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவதே மனித வாழ்வின் நோக்கமாதல் வேண்டும் என்று வள்ளுவம் உணர்த்துகிறது; அவாவறுத்தலைத் வாழ்க்கைத் துன்பத்திற்குத் தீர்வாக வள்ளுவர் காட்டுகிறார்.
பல உரையாளர்கள் இங்கு கூறப்பட்டுள்ள 'பிறவாமை' பிறப்பினின்றும் விடுதலையடைந்து வீடு பேறு பெறுவதையே குறிப்பதாகக் கொள்கின்றனர். வீடு என்பது விளக்கப்பட இயலாதது. உயிர் வாழ்க்கையை வள்ளுவர் உடன்பாட்டு நோக்கில் அணுகுபவர் ஆதலால் அவர் பிறப்பைத் துன்பம் எனக் கொள்ளார். அவர் பிறவா வரம் வேண்டும் என விரும்பவேண்டுமெனக் கூறுவார் என எண்ண முடியவில்லை. எனவே பிறவாமை என்பதற்கு துன்பம் தோன்றாமை எனப் பொருள் கொள்ளப்படுகிறது.

இரு மாறுபட்ட குறுஞ்சொற்கள் இணைப்பால் பொருட்செறிவோடு சிறந்த ஒலிநயம் கூடிய அமைப்பு கொண்ட பாடல் இது.

'வேண்டாமை வேண்ட' என்ற தொடர் குறிப்பதென்ன?

'வேண்டாமை வேண்ட' என்றதற்கு விரும்பாமையை விரும்ப, அவாவினை விரும்பாது ஒழியின், ஒரு பொருளையும் அவாவாமையை வேண்ட, அவா அற்ற நிலையை விரும்பினால், ஒன்றையும் விரும்பாமையை வேண்ட, ஆசையில்லாமையின் மீது ஆசை வைத்தால், விரும்புதலை விரும்பாத நிலை உண்டாகும் போது, ஒரு பொருளையும் வேண்டாமையை விரும்பினால், அவாவின்மையை விரும்ப, ஆசைகொள்ளாமையை விரும்பி மேற்கொள்ளின், ஒன்றனையும் விரும்பாத அவா அறுதலினாலே என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

அவாவின்மையை விரும்ப என்பது இத்தொடர்க்கான பொருள். ஒரு பொருளையும் அவாவாமையை விரும்ப துன்பமில்லாமை தானே உண்டாகும். ஒருவன் எல்லா நலங்களையெல்லாம் ஒருங்கே பெற்று வலம் வந்தாலும் துன்பம் இல்லாமல் இருக்க முடியாது. துன்பங்கள் அனைத்துக்கும் பேராசைதான் காரணம். துன்பமில்லா வாழ்வுக்குப் பேராசைப்படாமல் இருக்கும் உள்ள உறுதியை விருப்பங்கொள்ள வேண்டும் என்கிறது குறள்.

'வேண்டாமை வேண்ட' என்ற தொடர்க்கு விரும்பாமையை விரும்பின் என்பது பொருள்.

ஒன்று விரும்பின் துன்பம் தோன்றாமையை விரும்புக; விரும்பாமையை விரும்பின் அது உண்டாகும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அவாவறுத்தல் துன்பம் தோன்றாமைக்குத் துணை செய்யும்.

பொழிப்பு

ஒன்றை விரும்பும்போது துன்பம் தோன்றாமையை விரும்புக; விரும்பாமையை விரும்பின் அது உண்டாகும்