இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0361



அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து

(அதிகாரம்:அவாவறுத்தல் குறள் எண்:361)

பொழிப்பு (மு வரதராசன்): எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித் துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்று கூறுவர்.

மணக்குடவர் உரை: எல்லாவுயிர்க்கும் எல்லா நாளுங் கேடில்லாத பிறப்பைக் கொடுக்கும் விதையாவது ஆசையென்று சொல்லுவர்.
இஃது ஆசை துன்பம் தருதலேயன்றிப் பிறப்பையும் தருமென்றது.

பரிமேலழகர் உரை: எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பு ஈனும் வித்து - எல்லா உயிர்கட்கும் எக்காலத்தும் கெடாது வருகின்ற பிறப்பினை விளைவிக்கும் வித்து: அவாஅ என்ப - அவா என்று சொல்லுவர் நூலோர்.
(உடம்பு நீங்கிப்போம் காலத்து அடுத்த வினையும், அது காட்டும் கதி நிமித்தங்களும் அக்கதிக்கண் அவாவும் உயிரின்கண் முறையே வந்துதிப்ப, அறிவை மோகம் மறைப்ப, அவ்வுயிரை அவ்வவா அக்கதிக்கண் கொண்டுசெல்லும் ஆகலான், அதனைப் பிறப்பீனும் வித்து என்றும் கதிவயத்தான் உளதாய அவ்வுயிர் வேறுபாட்டினும் அவை தன்மை திரியும் உற்சர்ப்பிணி, அவசர்ப்பிணி என்னும் கால வேறுபாட்டினும் அது வித்தாதல் வேறு படாமையின், 'எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்'என்றும் இஃது எல்லாச் சமயங்கட்கும் ஒத்தலான் 'என்ப' என்றும்கூறினார். இதனான், பிறப்பிற்கு அவா வித்து ஆதல்கூறப்பட்டது.)

குழந்தை உரை: எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து -எல்லா உயிர்கட்கும் எப்போதும் கெடாத துன்பத்தை விளைவிக்கும் விதையை. அவாஎன்ப-அவா என்று சொல்லுவர் பெரியோர்.
அவா -பேராசை; தவாத -கெடாத; பிறப்பு -அவாவினால் உண்டாகும் துன்பம்; அவாவே துன்பங்களுக்குக் காரணமாகும். வித்து-காரணம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து அவாஎன்ப.

பதவுரை: அவா-ஆசை, பெரு விருப்பம்; என்ப-என்று சொல்லுவர்; எல்லா-அனைத்து; உயிர்க்கும்-உயிர்க்கும்; எஞ்ஞான்றும்-எப்போதும், எக்காலத்தும்; தவாஅ-நீங்காது, தவறாமல் அல்லது தப்பாது; பிறப்பு-துன்பம் தோன்றுவதை; ஈனும்-விளைவிக்கும்; வித்து-விதை, காரணமாக இருப்பது .


அவாஎன்ப:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆசையென்று சொல்லுவர்;
பரிப்பெருமாள்: ஆசையென்று சொல்லுவர்;
பரிதி: ஆசையாவது;
காலிங்கர்: அவாவாகிய;
பரிமேலழகர்: அவா என்று சொல்லுவர் நூலோர்.

'அவா என்று சொல்லுவர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆசைதான் என்பர்', 'அவா என்று சொல்லுவர் நல்லோர்', 'ஆசைதான் என்று அறிந்தவர்கள் சொல்லுவார்கள்', 'அவா ஆகும் என்று நூலோர் சொல்லுவர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பெருவிருப்பம்தான் என்பர் என்பது இப்பகுதியின் பொருள்.

எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லாவுயிர்க்கும் எல்லா நாளுங் கேடில்லாத பிறப்பைக் கொடுக்கும் விதையாவது.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஆசை துன்பம் தருதலேயன்றிப் பிறப்பையும் தருமென்றது.
பரிப்பெருமாள்: எல்லாவுயிர்க்கும் எல்லா நாளுங் கேடில்லாத பிறப்பைக் கொடுக்கும் விதையாவது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது ஆசை துன்பம் தருதலேயன்றிப் பிறப்பையும் தருமென்றது.
பரிதி: பிராணிகளுக்கெல்லாம் பிறப்பைக் கொடுக்கிற விதையாம் என்றவாறு.
காலிங்கர்: இவ்வுலகத்து நல்வினைப்பயன்களை அவாவிச் செய்யுமிடத்து நல்லனவும் மற்றிது ஒழிந்த கொலை களவுகள் காமம் குறளை பொய் வஞ்சனை முதலிய தீயனவுமாய் இங்ஙனம் வருகின்ற எல்லா உயிர்க்கும் எக்காலமும் பிறிதொன்றினாலும் கேடில்லாத பிறவியை ஈனும் வித்து; எனவே இதனைக் கருதற்குக் காரணம் மற்று இஃது ஒன்றுமே பிறிதில்லை என்றவாறு.
பரிமேலழகர்: எல்லா உயிர்கட்கும் எக்காலத்தும் கெடாது வருகின்ற பிறப்பினை விளைவிக்கும் வித்து.
பரிமேலழகர் குறிப்புரை: உடம்பு நீங்கிப்போம் காலத்து அடுத்த வினையும், அது காட்டும் கதி நிமித்தங்களும் அக்கதிக்கண் அவாவும் உயிரின்கண் முறையே வந்துதிப்ப, அறிவை மோகம் மறைப்ப, அவ்வுயிரை அவ்வவா அக்கதிக்கண் கொண்டுசெல்லும் ஆகலான், அதனைப் பிறப்பீனும் வித்து என்றும் கதிவயத்தான் உளதாய அவ்வுயிர் வேறுபாட்டினும் அவை தன்மை திரியும் உற்சர்ப்பிணி, அவசர்ப்பிணி என்னும் கால வேறுபாட்டினும் அது வித்தாதல் வேறு படாமையின், 'எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்'என்றும் இஃது எல்லாச் சமயங்கடகும் ஒத்தலான் 'என்ப' என்றும்கூறினார். இதனான், பிறப்பிற்கு அவா வித்து ஆதல்கூறப்பட்டது.

'எல்லா உயிர்கட்கும் எக்காலத்தும் கெடாது வருகின்ற பிறப்பைக் கொடுக்கும் விதை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். எல்லா உயிர்க்கும் என்பதற்கு 'பிராணிகளுக்கெல்லாம்' என்று பரிதி உரை செய்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'எவ்வுயிர்க்கும் என்றும் நெடும் பிறவி தரும் வித்து', 'எல்லா உயிர்களுக்கும் எக்காலத்தும் கெடாமல் வருகின்ற பிறப்பை விளைக்கும் விதை', 'எல்லா உயிர்களுக்கும் எந்தக் காலத்திலும் நிச்சயமாகப் பிறவியைத் தரக்கூடிய மூல காரணம்', 'எல்லா உயிர்க்கும் எக்காலத்தும் நீங்காது வருகின்ற பிறப்பினை விளைவிக்கும் வித்து' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

எல்லா உயிர்களுக்கும் எக்காலத்தும் ஒழியாத காரணமான விதை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
எல்லா உயிர்களுக்கும் எக்காலத்தும் ஒழியாத துன்பம் பிறப்பதற்குக் காரணமான விதை பெருவிருப்பம்தான் என்பர் என்பது பாடலின் பொருள்.
'பிறப்பீனும்' குறிப்பது என்ன?

துன்பம் பிறப்பது ஆசையால்தான்.

எல்லா உயிர்கட்கும் எப்போதும் ஒழியாத துன்பத்தைத் தோற்றுவிப்பதற்குக் காரணமாக இருப்பது உயிர்கள் உலகப் பொருள்களின் மீது வைக்கும் பேராசையே என்று கூறுவர்.
அவா என்ற சொல் பெருவிருப்பம் அதாவது பேராசையைக் குறிக்கும் சொல்.
தவா என்ற சொல் விட்டு நீங்காத என்ற பொருளில் இங்கு ஆளப்பட்டுள்ளது ஆதலால் பேராசை உள்ளவரை துன்பமும் நீங்காது என்பதாகிறது. பிறப்பு என்ற சொல் 'துன்பம் பிறப்பது' அதாவது துன்பம் தோன்றுவது என்ற பொருளில் ஆளப்பட்டது. அடிப்படையான ஒழுக்கத்தை வித்து எனக் குறள் பாராட்டும். ...... வரனென்னும் வைப்பிற்கோர் வித்து (24) நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்..... (138) ஆகிய குறள்கள் இதற்குச் சான்று. இங்கு வித்து என்பது காரணம் எனும் பொருள்படுகிறது.
உயிர்களின் வாழ்க்கையில் துன்பம் தோன்றுவதற்குப் பேராசையே காரணம் என்கிறது பாடல். பேராசை கொண்டவன் மிகுந்த தன்னலம் கொண்டவனாயிருப்பான். பெருவிருப்பத்துடன் எல்லா வழிகளிலும் பொருள் சேர்க்க முயல்வான். தீவினை செய்தும் ஆக்கம் பெற நினைப்பான். அதனால் துன்பம் அவனை நிழல் போல் தொடர்ந்து வரும். உலகியல் வாழ்வில் ஆசை தோன்றுவது இயற்கை எனினும், அதை அடக்கினால், துன்பமே அண்டாது விலகிவிடும். ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்பதைச் சொல்லவந்தது இக்குறட்பா.

'என்ப' என்ற சொல் 'என்று சொல்வர்' எனப் பொருள்படும். இப்பாடல் வேறொரு மெய்யியலைச் சுட்டுகிறது என்பதைத் தெரிவிக்க, தன் கருத்தாகக் கூறாமல், 'என்று சொல்வர்' என வள்ளுவர் குறிக்கிறார். ஸ்மரண (சமண புத்த)க் கோட்பாடுகளில் ஒன்று ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்பது. 'என்ப' என்ற சொல்லாடல் அதைச் சுட்டுவதாகக் கொள்ளலாம். பரிமேலழகர் அவாவறுத்தல் எல்லாச் சமயங்கட்கும் ஒத்தலான் 'என்ப' என்று கூறினார் என உரை தருவார்.

'பிறப்பீனும்' குறிப்பது என்ன?

'பிறப்பீனும்' என்றதற்குப் பிறப்பைக் கொடுக்கும், பிறவியை ஈனும், பிறப்பினை விளைவிக்கும், பிறவித் துன்பத்தை உண்டாக்கும், பிறவி தரும், பிறப்பை விளைக்கும், பிறவியைத் தரக்கூடிய, அறியாமைத் துயரைத் தரும், பிறப்பினை உண்டாக்கும், பிறவிப் போக்கை முடிவு செய்வது, துன்பத்தை விளைவிக்கும், துன்பத்தைப் பிறப்பிக்கும், பிறப்பே (வாழ்நிலையே) (அவாவைத்) தரும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'பிறப்பீனும்' என்ற தொடர்க்கு நேர்பொருள் பிறப்பைக் கொடுக்கும் என்பதுவே. அதற்குப் 'பிறப்பை விளைக்கும்' என்றே பெரும்பாலோர் உரை கூறியுள்ளனர். பிறவி என்பதே துன்பம்தான் என்ற கருத்தில் 'பிறவி என்னும் துன்பத்தைத் தருகின்றதான வித்து' எனவும் ஆசையை ஒழித்தால் பிறவாமை கிட்டும் எனவும் இக்குறளுக்கு விளக்கம் தந்தனர்.
உயிர்களுக்கு என்றும் தப்பாத பிறவியை விளைவிக்கும் வித்து என்றும் இன்பத்தையே அடிப்படையாகக் கொண்டொழுகும் உயிர்கள் அதற்கு மூலப் பொருளாகிய அவா இருப்பதால்தான் பிறவித் தோற்றங்கள் நடைபெறுகின்றன என்று பாலியல் ஆசையைத் தொடர்புபடுத்தியும் பிறப்பு என்ற சொல்லுக்கு விளக்கம் அளித்தனர். பிறப்பு ஈனும் வித்து அவா என்ப எனக் கூட்டிப் பிறப்பே அவாவைத் தருகிறது என்றும் உரை சொல்லப்பட்டது. பிறப்பு எடுத்தல் என்பது விலக்கப்படவேண்டியது என்னும் சமயக் கருத்தை இப்பாடல் வலியுறுத்துவதாகச் சொல்லப்படும் உரைகளும் இங்கு கூறப்பட்ட பிறவும் பொருத்தமாக இல்லை.

வள்ளுவர் பிறப்பைத் துன்பம் என்றோ சுமை என்றோ கூறுபவரல்லர். எனவே பிறப்பு என்ற சொல்லுக்கு பிறவி எடுத்தல் என்னும் பொருள் பொருந்தாது. 'அவா இல்லாதவர் பிறவி அற்றவர்' என்பதல்ல இக்குறள் கூறுவது. 'அவா இல்லார்க்குத் துன்பம் இல்லை' என்பதுதான் இது சொல்லவரும் கருத்து. பிறப்பிற்குக் காரணம் ‘அவாவே’ என்பதினும் துன்பத்தைப் பிறப்பிக்கும் ஆசை என்பது பொருத்தமாகும். புலவர் குழந்தை பிறப்பு என்பதற்குத் துன்பம் என நேரடிப் பொருளாகக் கொள்கிறார். அதனினும் மேலாக, ‘பிறப்பீனும் வித்து’ என்பதற்கு, இறையரசன் கூறும் துன்பத்தைப் பிறப்பிக்கும் விதை என்ற பொருள் அமைகிறது.

'பிறப்பீனும்' என்பதற்குத் துன்பத்தைப் பிறப்பிக்கும் என்பது பொருள்.

எல்லா உயிர்களுக்கும் எக்காலத்தும் ஒழியாத துன்பத்தைத் தோற்றுவிப்பதற்குக் காரணமான விதை பெருவிருப்பம்தான் என்பர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அவாவறுத்தல் வாழ்வுத் துன்பத்தை நீக்கும்.

பொழிப்பு

எல்லா உயிர்களுக்கும் எக்காலத்தும் தவறாத துன்பத்தைப் பிறப்பிக்கும் விதை அவா என்பர்.