இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0360



காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்

(அதிகாரம்:மெய்யுணர்தல் குறள் எண்:360)

பொழிப்பு (மு வரதராசன்): விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக்குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வாராமற் கெடும்.

மணக்குடவர் உரை: ஆசையும் வெகுளியும் மயக்கமு மென்னும் இவை மூன்றினது நாமம்போக வினைபோம்.
வினைகெடுதற்கு வழி இதுவென்று கூறுதலான் இது மெய்யுணர்தலாயிற்று.

பரிமேலழகர் உரை: காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெட - ஞான யோகங்களின் முதிர்ச்சியுடையார்க்கு விழைவு, வெறுப்பு, அவிச்சை என்னும் இக்குற்றங்கள் மூன்றனுடைய பெயருங்கூடக் கெடுதலான், நோய் கெடும் - அவற்றின் காரியமாய வினைப்பயன்கள் உளவாகா.
(அநாதியாய அவிச்சையும் 'அதுபற்றி யான்' என மதிக்கும் அகங்காரமும், அதுபற்றி எனக்கு இது வேண்டும் என்னும் அவாவும், அதுபற்றி அப்பொருட்கண் செல்லும் ஆசையும், அதுபற்றி அதன் மறுதலைக்கண் செல்லும் கோபமும், என வடநூலார் குற்றம் ஐந்து என்றார். இவர் அவற்றுள் அகங்காரம் அவிச்சைக்கண்ணும் அவாவுதல் என்பது ஆசைக்கண்ணும் அடங்குதலான், 'மூன்று' என்றார். இடையறாத ஞானயோகங்களின் முன்னர் இக்குற்றங்கள் மூன்றும் காட்டுத்தீ முன்னர்ப் பஞ்சுத் துய்போலும் ஆகலின், அம் மிகுதிதோன்ற 'இவை மூன்றன் நாமங்கெட' என்றார். இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. 'கெட' என்பது எச்சத் திரிவு. 'நோய்' சாதியொருமை. காரணமாய அக்குற்றங்களைக் கெடுத்தார் காரியமாகிய இருவினைகளைச் செய்யாமையின், அவர்க்கு வரக்கடவ துன்பங்களும் இல்லை என்பது இதனால் கூறப்பட்டது; முன்கிடந்த துன்பங்களும் மேல் வரக்கடவ துன்பங்களும் இலவாதல் மெய்உணர்வின் பயன் ஆகலின், இவை இரண்டுபாட்டும் இவ்வதிகாரத்த வாயின. இவ்வாற்றானே மெய்யுணர்ந்தார்க்கு நிற்பன எடுத்த உடம்பும் அதுகொண்ட வினைப்பயன்களுமே என்பது பெற்றாம்.)

சி இலக்குவனார் உரை: பெரு விருப்பம், வெறுப்பு, மயக்கம் என்று சொல்லப்படும் இவை மூன்றனுடைய தொடர்பு அற்றுப்போவதால் துன்பம் நீங்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமம் கெட நோய் கெடும்.

பதவுரை: காமம்-பெருவிருப்பம், ஆசை, விழைவு; வெகுளி-வெறுப்பு, சினம்; மயக்கம்-அறியாமை, அறிவு மயக்கம்; இவை-இப்பொருள்கள்; மூன்றன்-மூன்றினுடைய; நாமம்-பெயர்; கெட-அழிய; கெடும்-உளவாகா; நோய்-துன்பம்.


காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமம் கெட:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆசையும் வெகுளியும் மயக்கமு மென்னும் இவை மூன்றினது நாமம்போக;
பரிப்பெருமாள்: ஆசை வெகுளி மயக்க மென்னும் மூன்றினது நாமம்போக;
பரிதி: ஆசையும் கோபமும் அஞ்ஞானமும் விட்டால்;
காலிங்கர்: மற்று இங்குச் சொன்ன மெய்யுணர்வினால் முக்குணங்களின் விரிவாய் மற்று யாவரையும் மயக்கி வருகின்ற அவாவும், சினமும், மோகமும் என்று சொல்லப்பட்ட இவை மூன்றினது பெயரும் உட்படத் தன்கண் இல்லாதவாறு முன்னம் கெடவே;
பரிமேலழகர்: ஞான யோகங்களின் முதிர்ச்சியுடையார்க்கு விழைவு, வெறுப்பு, அவிச்சை என்னும் இக்குற்றங்கள் மூன்றனுடைய பெயருங்கூடக் கெடுதலான்;
பரிமேலழகர் குறிப்புரை: அநாதியாய அவிச்சையும் 'அதுபற்றி யான்' என மதிக்கும் அகங்காரமும், அதுபற்றி எனக்கு இது வேண்டும் என்னும் அவாவும், அதுபற்றி அப்பொருட்கண் செல்லும் ஆசையும், அதுபற்றி அதன் மறுதலைக்கண் செல்லும் கோபமும், என வடநூலார் குற்றம் ஐந்து என்றார். இவர் அவற்றுள் அகங்காரம் அவிச்சைக்கண்ணும் அவாவுதல் என்பது ஆசைக்கண்ணும் அடங்குதலான், 'மூன்று' என்றார். இடையறாத ஞானயோகங்களின் முன்னர் இக்குற்றங்கள் மூன்றும் காட்டுத்தீ முன்னர்ப் பஞ்சுத் துய்போலும் ஆகலின், அம் மிகுதிதோன்ற 'இவை மூன்றன் நாமங்கெட' என்றார். இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. 'கெட' என்பது எச்சத் திரிவு.

'விழைவு, வெறுப்பு, மயக்கம் என்னும் இம்மூன்றினது பெயருங்கூடக் கெடவே' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காமம், சினம், அறியாமை மூன்றும் அடியோடு கெடவே', 'ஒருவன் ஆசை, சினம், அறியாமை ஆகிய மூன்றின் பெயரும் கூட இல்லாமல் அவற்றை அடியோடு அழித்தால்', 'விருப்பு, வெறுப்பு (மெய்ப் பொருளை) அறியாமை என்ற இந்த மூன்று குற்றங்களும் அறவே இல்லாமற் போனவனுக்கு', 'விருப்பு, வெறுப்பு அறியாமை என்னும் மூன்றினுடைய பெயருங் கெடும்படி தவஞ்செய்வார்க்கு' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பெருவிருப்பம், வெறுப்பு, மயக்கம் என்றிவை மூன்றனுடைய பெயரும் கெடவே என்பது இப்பகுதியின் பொருள்.

கெடும் நோய்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வினைபோம்.
மணக்குடவர் குறிப்புரை: வினைகெடுதற்கு வழி இதுவென்று கூறுதலான் இது மெய்யுணர்தலாயிற்று.
பரிப்பெருமாள்: வினைபோம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது சார்புகெட ஒழுகுந்திறன் கூறிற்று. வினைகெடுதற்கு வழி இதுவென்று கூறுதலான் இது மெய்யுணர்தலாயிற்று.
பரிதி: அச்செனனம் கெடும்.
காலிங்கர்: இவற்றின் உளதாக ஒழுகுகின்ற பிறப்பு என்னும் அனைத்து நோயும் கெடும் என்றவாறு.
பரிமேலழகர்: அவற்றின் காரியமாய வினைப்பயன்கள் உளவாகா.
பரிமேலழகர் குறிப்புரை: 'நோய்' சாதியொருமை. காரணமாய அக்குற்றங்களைக் கெடுத்தார் காரியமாகிய இருவினைகளைச் செய்யாமையின், அவர்க்கு வரக்கடவ துன்பங்களும் இல்லை என்பது இதனால் கூறப்பட்டது; முன்கிடந்த துன்பங்களும் மேல் வரக்கடவ துன்பங்களும்இலவாதல் மெய்உணர்வின் பயன் ஆகலின், இவை இரண்டுபாட்டும் இவ்வதிகாரத்த வாயின. இவ்வாற்றானே மெய்யுணர்ந்தார்க்கு நிற்பன எடுத்த உடம்பும் அதுகொண்ட வினைப்பயன்களுமே என்பது பெற்றாம்.

'வினைபோம்' என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும், 'செனனம் கெடும்' என்று பரிதியும், 'பிறப்பு நோய் கெடும்' என்று காலிங்கரும் 'வினைப்பயன்கள் உளவாகா' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நோயும் கெடும்', 'அவனுக்குத் துன்பங்கள் நீங்கும்', 'பிறவித் துன்பமும் இல்லாமற் போகும்', 'துன்பம் என்பதே தொலைந்துபோம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

துன்பம் நீங்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பெருவிருப்பம், வெறுப்பு, மயக்கம் என்றிவை மூன்றனுடைய பெயரும் கெடவே துன்பம் நீங்கும் என்பது பாடலின் பொருள்.
'நாமம்' என்ற சொல்லின் பொருள் என்ன?

பெருவிருப்பம், சினம், அறியாமை இவை என்றால் என்ன என்று கேட்கும் அளவு அவற்றை ஒழித்துவிடுக.

பெருவிருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இம்மூன்று குற்றங்களின் பெயரும் அழியும்படி ஒழுக வல்லவர்களுக்குத் துன்பம் வாராமல் ஒழிந்து போகும்.
துன்பத்திற்குச் சார்பு கொண்டவை விருப்பு, வெறுப்பு, மயக்கம் இவை மூன்றும்; இம்மூன்று குற்றங்கள் முற்றாகக் கெடின் வாழ்க்கைத்துன்பம் இராது. காமம் என்ற சொல் பாலியல் இன்பம் என்ற பொருளில் இங்கு வரவில்லை. பெருவிருப்பம் என்ற பொருளில் அதாவது எல்லாவற்றையும் தமதாக்கிக் கொள்ள வேண்டும், தமக்கு உரிமை யில்லாததையும் தமக்கென உரிமையாக்கிக் கொள்ளும் செயலான பேரவாவைக் குறித்து வந்தது. அடுத்து, விரும்பியது நிறைவேறாவிட்டால் சீற்றம் உண்டாகும். மூன்றாவதாக, ஆசையும் சினமும் சேர்ந்து கொண்டால் மனத்தில் தெளிவான சிந்தனை இராத மயக்கநிலையினால் மன அமைதி சீர்குலைந்து உளநோய் ஏற்படும். இதனாலேயே மனத்தால் நிகழும் இக்குற்றங்கள் பெயரளவில் கூட இல்லாமலிருக்க வேண்டும்; அவற்றை உள்ளத்திலிருந்து அறவே நீக்கிவிட்டால் துன்பங்கள் தோன்றாது என்கிறார் வள்ளுவர்.
மெய்ப்பொருள் கண்டார் இக்குற்றங்களை எளிதில் நீக்கிக் கொள்வர். 'மெய்ப்பொருள்' என்பது கல்வி, கேள்வி, பட்டறிவு இவற்றின் துணையால் பகுத்தறிந்து அறியப்படுவது; உள்ளம் பலவகையானும் ஆராய்ந்து (ஓர்த்து) 'உள்ளதை'க் காண்பது அது; பிறவிவாழ்க்கை பற்றிய (ஐயங்களால் விளைந்த) அறியாமை நீங்கியபின், எங்கும் நிறைந்த இறைஒளி வீச்சில் 'சிறப்பென்னும் செம்பொருள்' உணரப்படும். மெய்ப்பொருள் கண்டவர் மெய்யுணர்வு பெற்றவராகிறார். மெய்யுணர்வு பெற்றவர்க்கு காட்டுத்தீயின் முன் உள்ள பஞ்சு போல மேற்சொன்ன மூன்று குற்றங்களும் மறைந்து போகும். எனவே எவ்வகையான துன்பங்களும் இல்லாதவராகி விடுவர்.

'நாமம்' என்ற சொல்லின் பொருள் என்ன?

நாமம் என்ற சொல்லுக்கு அச்சம் என்றும் பெயர் என்றும் பொருள் கூறுவர்.
தேவநேயப்பாவாணர் 'நாமம்' என்பது அச்சம் என்று பொருள்படின் தென்சொல்லும், பெயர் என்று பொருள்படின் வடசொல்லும் ஆகும் என்று குறிப்பிடுகிறார். மு கோவிந்தசாமி நாமம் கெடல்-கிழங்கை அகழ்ந்தெடுத்தல், வேர்கெடல் எனப் பொருளுரைக்கிறார். இரா சாரங்கபாணி 'நாமம்' என்னும் சொல்லுக்குப் பெயர் என்னும் பொருள் சிறப்புடையது. அச்சம் என்னும் பொருளும் கொள்ளத்தகும். நாம் என்னும் அச்சக்கிளவி நாம எனத் திரிவதோடு நாமம் எனத் திரிந்து வருதலுமுண்டு. நாடு கவினழிய நாமந் தோற்றி (13:10) என்று பதிற்றுப் பத்திலும் அச்சப் பொருளில் வருதல் காண்க. 'நாமம்' எனும் சொல் பெயர் என்னும் பொருளில் இடைக்காலத்தே யன்றிச் சங்க காலத்திலும் வழங்கப் பெற்றிருத்தலைச் சோலையொடு தொடர் மொழி பாலிருங்குன்றம் -நாமத் தன்மை நன்களம் படியெழ (15; 23-25) என்னும் பரிபாடலில் வரும் இளம்பெருவழுதியின் கூற்றால் அறியலாம்' என்பார்.

'நாமம்' என்ற சொல்லுக்கு இங்கு பெயர் என்ற பொருள் பொருத்தம்.

பெருவிருப்பம், வெறுப்பு, மயக்கம் என்றிவை மூன்றனுடைய பெயரும் கெடவே துன்பம் நீங்கும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மெய்யுணர்தல் துன்பங்கள் கெடத் துணை செய்யும்.

பொழிப்பு

விருப்பு, வெறுப்பு அறியாமை என்னும் மூன்றினுடைய பெயருங் கெடத் துன்பங்கள் நீங்கும்.