இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0359சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்

(அதிகாரம்:மெய்யுணர்தல் குறள் எண்:359)

பொழிப்பு (மு வரதராசன்): எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா.

மணக்குடவர் உரை: தன்னைச் சார்வனவற்றையறிந்து அவையிற்றின் சார்வுகெட ஒழுகுவானாயின் அவ்வொழுக்கத்தினையழித்துச் சார்தலைச் செய்யா: சாரக்கடவனவாய துன்பங்கள்.
சார்பு - வினைச்சார்பு. கெட ஒழுகல் - காமம், வெகுளி, மயக்கமின்றி மெய்யுணர்ச்சியான் ஒழுகுதல். இஃது உண்மையைக் கண்டு அக்காட்சியைத் தப்பாமல் முடிய நிற்பனாயின் சாரக்கடவதாய் நிற்கின்ற வினை சாராதே விட்டுப் போமென்றது.

பரிமேலழகர் உரை: சார்பு உணர்ந்து சார்புகெட ஒழுகின் - ஒருவன் எல்லாப் பொருட்கும் சார்பாய அச்செம்பொருளை உணர்ந்து, இருவகைப் பற்றும் அற ஒழுகவல்லனாயின்; சார்தரும் நோய் அழித்து மற்றுச் சார்தரா - அவனை முன் சாரக்கடவனவாய் நின்ற துன்பங்கள் அவ்வுணர்வு ஒழுக்கங்களை அழித்துப் பின் சாரமாட்டா.
(ஆகு பெயரால் சாரும் இடத்தையும் சார்வனவற்றையும் 'சார்பு' என்றார். 'ஈண்டு' ஒழுக்கம் என்றது யோகநெறி யொழுகுதலை. அஃது இயமம், நியமம், இருப்பு, உயிர் நிலை, மன ஒடுக்கம், தாரணை, தியானம், சமாதி என எண்வகைப்படும். அவற்றின் பரப்பெல்லாம் ஈண்டுஉரைப்பின் பெருகும். யோக நூல்களுள் காண்க. 'மற்றுச் சார்தரா' என இயையும். சாரக்கடவனவாய் நின்ற துன்பங்களாவன: பிறப்பு அநாதியாய் வருதலின் உயிரான் அளவின்றி ஈட்டப்பட்ட வினைகளின் பயன்களுள்இறந்த உடம்புகளான் அனுபவித்தனவும் 'பிறந்த உடம்பான்முகந்து நின்றனவும் ஒழியப் பின்னும் அனுபவிக்கக்கடவனவாய்க் கிடந்தன. அவை விளக்கின் முன் இருள்போல ஞானயோகங்களின் முன்னர்க் கெடுதலான், 'அழித்துச்சார்தரா' என்றார். இதனை ஆருகதர் 'உவர்ப்பு' என்ப. பிறப்பிற்குக் காரணம் ஆகலான்' நல்வினைப் பயனும் 'நோய்'எனப்பட்டது. மேல் மூன்று உபாயத்தானும் பரம்பொருளைஉணரப் பிறப்பு அறும் என்றார். அஃது அறும்வழிக் கிடந்ததுன்பங்கள் எல்லாம் என் செய்யும் என்னும் கடாவைஆசங்கித்து. அவை ஞான யோகங்களின் முதிர்ச்சி உடையஉயிரைச் சாரமாட்டாமையானும், வேறு சார்பு இன்மையானும் 'கெட்டு விடும்'என்பது இதனால் கூறப்பட்டது.)

தமிழண்ணல் உரை: தான் சாரக் கடவதாய செம்பொருளையறிந்து, யான் எனது எனப் பற்றும் பொய்யான சார்புகள் தன்னைவிட்டு நீங்குமாறு ஒருவன் ஒழுகுவானாயின், அவனைச் சாரநின்ற துன்பங்கள், அந்நல்லுணர்வு ஒழுக்கங்களை அழித்துச் சாரமாட்டா; அவை தாமே விலகிப்போகும்.
பற்றற்றான் பற்றினைப் பற்றுவது போன்றதிது. மனிதமனம் எதையேனும் சாரும் இயல்புடையது. அது செம்பொருளைச் சாரச் சார, ஏனைய சார்புகள் தாமே நீங்கிப்போம்; அவற்றால் வரும் துன்பங்களும் நீங்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின், சார்தரு நோய் அழித்து மற்றுச் சார்தரா.

பதவுரை: சார்பு-(எல்லாப் பொருள்களுக்கும்) சார்வாய செம்பொருள்; உணர்ந்து-தெரிந்து; சார்பு-பற்று; கெட-அழிய; ஒழுகின்-நடந்து கொண்டால்; மற்று-பின், ஆனால்; அழித்து-கெடுத்து; சார்தரா-பற்றமாட்டா; சார்தரு-பற்றுகின்ற; நோய்-துன்பம்.


சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னைச் சார்வனவற்றையறிந்து அவையிற்றின் சார்வுகெட ஒழுகுவானாயின்;
மணக்குடவர் குறிப்புரை: சார்பு - வினைச்சார்பு. கெட ஒழுகல் - காமம், வெகுளி, மயக்கமின்றி மெய்யுணர்ச்சியான் ஒழுகுதல். .
பரிப்பெருமாள்: தன்னைச் சார்வனவற்றையறிந்து அவையிற்றின் சார்தல்கெட ஒழுகுவானாயின்;
பரிப்பெருமாள் குறிப்புரை: சார்பு - வினை; சார்பு. கெட ஒழுகல் - காமம், வெகுளி, மயக்கமின்றி மெய்யுணர்ச்சியான் ஒழுகுதல்.
பரிதி: ஆத்மாவுக்குச் சார்பறிந்து செனனத்தைக் கெட வேணும் என்று நிலைபிடிப்பானாகில்;
காலிங்கர்: தனக்கு முத்திச் சார்வாம் முதல்வனையறிந்து பிறப்பிற்குக் காரணமாகிய சார்வு கெடும்படி ஒழுகுவனாயின்
காலிங்கர் குறிப்புரை: சார்வு என்பது உடம்பு. சார்வுகெட என்பது யான் என்றும் உனது என்றும் பற்றிவருகிற சார்வுக்கேடு.
பரிமேலழகர்: ஒருவன் எல்லாப் பொருட்கும் சார்பாய அச்செம்பொருளை உணர்ந்து, இருவகைப் பற்றும் அற ஒழுகவல்லனாயின்;
பரிமேலழகர் குறிப்புரை: ஆகு பெயரால் சாரும் இடத்தையும் சார்வனவற்றையும் 'சார்பு' என்றார். 'ஈண்டு'ஒழுக்கம் என்றது யோகநெறி யொழுகுதலை. அஃது இயமம், நியமம், இருப்பு, உயிர் நிலை, மன ஒடுக்கம், தாரணை, தியானம், சமாதி என எண்வகைப்படும். அவற்றின் பரப்பெல்லாம் ஈண்டுஉரைப்பின் பெருகும். யோக நூல்களுள் காண்க.

'தன்னைச் சார்வனவற்றையறிந்து அவையிற்றின் சார்வுகெட ஒழுகுவானாயின்' என்று பழம் ஆசிரியர்களில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'ஆத்மாவுக்குச் சார்பறிந்து செனனத்தைக் கெட வேணும் என்று நிலைபிடிப்பானாகில்' என்கிறார். காலிங்கர் 'முதல்வனையறிந்து பிறப்பிற்குக் காரணமாகிய சார்வு கெடும்படி ஒழுகுவனாயின்' என்றும் பரிமேலழகர் 'செம்பொருளை உணர்ந்து, இருவகைப் பற்றும் அற ஒழுகவல்லனாயின்' என்றும் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மெய்ப்பற்றை உணர்ந்து பொய்ப்பற்றை விடின்', 'எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து இருவகைப் பற்றும் கெட ஒருவன் ஒழுகுவானாயின்', 'சேர விரும்பும் இடமாகிய மெய்ப் பொருளை உணர்ந்து சேர்ந்துள்ளதும் சேரக்கூடியனவுமான பற்றுகளை ஒழித்து, தவ ஒழுக்கத்தில் நின்றால்', 'ஒருவன் எல்லாப் பொருட்கும் சார்பாகிய மெய்ப்பொருளை உணர்ந்து உலகப் பற்றறும்படி அப்பொருளோடு ஒன்றி நின்று ஒழுக வல்லனாயின்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

செம்பொருளை உணர்ந்து பொய்ப் பற்றறும்படி அப்பொருளோடு ஒன்றி நின்று ஒழுக வல்லனாயின் என்பது இப்பகுதியின் பொருள்.

மற்றழித்து சார்தரா சார்தரு நோய்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வொழுக்கத்தினையழித்துச் சார்தலைச் செய்யா: சாரக்கடவனவாய துன்பங்கள்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது உண்மையைக் கண்டு அக்காட்சியைத் தப்பாமல் முடிய நிற்பனாயின் சாரக்கடவதாய் நிற்கின்ற வினை சாராதே விட்டுப் போமென்றது.
பரிப்பெருமாள்: அவ்வொழுக்கத்தினையழித்துச் சார்தலைச் செய்யா: சாரக்கடவ துன்பங்கள்.
பரிப்பெருமாள் குறிப்புரை: அழித்துச் சார்தரா சார்தரு நோய் என்றது முற்பிறப்பு பலவாகலின், அதனின் உண்டான வினைப் பயனெல்லாம் ஒருங்கு துய்த்தானல்லன்; ஒரு நல்வினைப் பயத்தினானே அறிவுண்டாய் அதனானே உண்மை கண்டான் அவன் காட்சியைத் தப்பாமல் நிற்பனாயின் சாரக்கடவதாய் நிற்கின்ற வினை சாராதே விட்டுப் போமென்றது.
பரிதி: இந்த நிலையை அழிக்கமாட்டாது என்றவாறு.
காலிங்கர்: மறித்துச் சாரா, சார்ந்து வரும் பிறவிநோய்கள் என்றவாறு.
பரிமேலழகர்: அவனை முன் சாரக்கடவனவாய் நின்ற துன்பங்கள் அவ்வுணர்வு ஒழுக்கங்களை அழித்துப் பின் சாரமாட்டா.
பரிமேலழகர் குறிப்புரை: 'மற்றுச் சார்தரா' என இயையும். சாரக்கடவனவாய் நின்ற துன்பங்களாவன: பிறப்பு அநாதியாய் வருதலின் உயிரான் அளவின்றி ஈட்டப்பட்ட வினைகளின் பயன்களுள் இறந்த உடம்புகளான் அனுபவித்தனவும் 'பிறந்த உடம்பான்முகந்து நின்றனவும் ஒழியப் பின்னும் அனுபவிக்கக்கடவனவாய்க் கிடந்தன. அவை விளக்கின் முன் இருள்போல ஞானயோகங்களின் முன்னர்க் கெடுதலான், 'அழித்துச்சார்தரா' என்றார். இதனை ஆருகதர் 'உவர்ப்பு' என்ப. பிறப்பிற்குக் காரணம் ஆகலான்' நல்வினைப் பயனும் 'நோய்'எனப்பட்டது. மேல் மூன்று உபாயத்தானும் பரம்பொருளைஉணரப் பிறப்பு அறும் என்றார். அஃது அறும்வழிக் கிடந்ததுன்பங்கள் எல்லாம் என் செய்யும் என்னும் கடாவைஆசங்கித்து. அவை ஞான யோகங்களின் முதிர்ச்சி உடையஉயிரைச் சாரமாட்டாமையானும், வேறு சார்பு இன்மையானும் 'கெட்டு விடும்'என்பது இதனால் கூறப்பட்டது.

'அவ்வொழுக்கத்தினையழித்துச் சார்தலைச் செய்யா: சாரக்கடவ துன்பங்கள்' என்ற பொருளில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'இந்த நிலையை அழிக்கமாட்டாது' என்றார். 'மறித்துச் சாரா, சார்ந்து வரும் பிறவிநோய்கள்' என்பது காலிங்கரது உரை. பரிமேலழகர் 'முன் சாரக்கடவனவாய் நின்ற துன்பங்கள் அவ்வுணர்வு ஒழுக்கங்களை அழித்துப் பின் சாரமாட்டா எனப் பொருள் தருகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'வருகின்ற நோய்கள் மீறி வாரா', 'அவனைச் சென்று சேர்தற்கு வரும் துன்பங்கள் அவனது ஒழுக்கத்தை அழித்துப் பின் சேர மாட்டா', 'அந்த ஒழுக்கம் பிறவியின் காரணங்களை அழித்துவிடுவதால் இனி வரக்கூடிய பிறவித் துன்பங்கள் சேரமாட்டா', 'அவனைச் சாரக்கூடிய துன்பங்கள் அவன் உணர்வினை அழித்துச் சாரமாட்டா. (அவை அவனது உணர்வினை அழிக்க மாட்டாவாகலின், அவன்பால் இடம்பெற மாட்டா.)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அவனைச் சாரக்கூடிய துன்பங்கள் அவன் உணர்வினை அழித்துச் சாரமாட்டா என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சார்புணர்ந்து உணர்ந்து பொய்ப் பற்றறும்படி அப்பொருளோடு ஒன்றி நின்று ஒழுக வல்லனாயின், அவனைச் சாரக்கூடிய துன்பங்கள் அவன் உணர்வினை அழித்துச் சாரமாட்டா என்பது பாடலின் பொருள்.
'சார்புணர்ந்து' என்ற தொடரின் பொருள் என்ன?

செம்பொருளை உணர உணர துன்பங்கள் சாராமல் விலகி விலகிப் போம்.

எல்லாப் பொருள்களுக்கும் ஆதாரமாக உள்ள மெய்ப்பொருளை உணர்ந்து பற்றுக்கள் நீங்கும்படி ஒருவன் நடந்து கொண்டால் பின் அவனுக்குண்டான துன்பங்கள் அவனுடைய உணர்வினை அழித்துப் அவனை அடையமாட்டா.
எல்லாப் பொருள்களுக்கும் ஆதாரமாக உள்ள மெய்ப்பொருள் இறையைத் தவிர வேறு எதுவாகவும் இருக்கமுடியாது. இறைவனே நாம் சார்ந்திருக்கக் கூடிய ஒரே ஒரு பற்றுக் கோடு என்ற உணர்வு வந்தவுடன் மற்றச் சார்வுகள் உள்ள பற்றுக்கோடுகள் நீங்கவேண்டும். அவை விலக விலக அவனைத் துன்பங்கள் வந்து சாரா.
உலகப் பொருள்களுக்குச் சார்பாக உள்ள இறைஇயக்கம் உணரப்படவேண்டும். அந்த 'மெய்ப்பொருள்' கல்வி, கேள்வி, பட்டறிவு இவற்றின் துணையால் பகுத்தறிந்து அறியப்படும். உள்ளம் ஓர்த்து (பலவகையானும் ஆராய்ந்து) அந்த 'உள்ளதை'க் காண முயற்சிக்க வேண்டும். பிறவிவாழ்க்கை பற்றிய (ஐயங்களால் விளைந்த) அறியாமை நீங்கியபின், எங்கும் நிறைந்த இறைஒளி வீச்சில் 'சிறப்பென்னும் செம்பொருள்' உணரப்படும். அதன்பின் யான் எனது என்னும் சார்புகளை நீக்கி ஒழுகினால், வாழ்க்கையைக் கெடுக்குமாறான துன்பங்கள் சாராமல் நீங்கி விடும்.
சார்புகள் ஒவ்வொன்றிலிருந்தும் விடுபட விடுபட அந்தந்தச் சார்புகளினால் ஏற்படும் துன்பங்கள் ஒவ்வொன்றாக விடுபடும். யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் (துறவு 341 பொருள்: எந்தெந்தப் பொருளிலிருந்து பற்றினை விடுகிறானோ அந்தந்தப் பொருளால் வரும் துன்பம் இல்லாதவனாம்) என்று முன்பு சொன்னது நினைக்கத்தக்கது. மெய்ச்சார்புகள் உணர்ந்து, பொய்ச்சார்புகள் விட்டாரைத் துன்பங்கள் சாரா என்பது செய்தி.

இக்குறளில் சார்பு என்ற சொல், ஒரே வகையான பொருளில் திரும்பத் திரும்ப வருகிறது. அதனால், விரும்பத்தக்க ஒருவகை ஒலிநயம் அமைந்துள்ளது. குறளை வாய்விட்டுப் படிப்பதன்மூலம் இத்தகைய ஒலிநயத்தை உணரலாம்.

'சார்புணர்ந்து' என்ற தொடரின் பொருள் என்ன?

'சார்புணர்ந்து' என்றதற்குத் தன்னைச் சார்வனவற்றையறிந்து, ஆத்மாவுக்குச் சார்பறிந்து, தனக்கு முத்திச் சார்வாம் முதல்வனையறிந்து, எல்லாப் பொருட்கும் சார்பாய அச்செம்பொருளை உணர்ந்து, எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து, தான் சாரக் கடவதாய செம்பொருளையறிந்து, தன்னுடைய பொருந்தாச் சார்புகளை உணர்ந்து, மெய்ப்பற்றை உணர்ந்து, சேர விரும்பும் இடமாகிய மெய்ப் பொருளை உணர்ந்து, தாம் அடைய வேண்டிய மெய்ம்மையை உணர்ந்து, உண்மைப் பற்றினைத் தெளிந்து, எல்லாப் பொருள்களுக்கும் ஆதாரமாக உள்ள கடவுளாகிய மெய்ப்பொருளை உணர்ந்து, மெய்ச் சார்பை உணர்ந்து, வீடுபெற முயல்பவன் எல்லாப் பொருட்குஞ் சார்பான செம்பொருளை யுணர்ந்து, எல்லாப் பொருள்கட்கும் சார்பாய மெய்ப்பொருளை உள்ளவாறு உணர்ந்து, வினைச் சார்பினை அறிந்து, தருமநெறிகளை அறிந்து, யான் எனது என்னும் பற்றுக்கள் காம வெகுளி மயக்கம் என்பனவற்றின் சார்புகளை அறிந்து என்றவாறு உரையாசிரியர்கள் பொரிள் கூறினர்.

'சார்புணர்ந்து' என்ற தொடர்க்கு எல்லாப் பொருள்களுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து என்றது பொருத்தமாக உள்ளது. தன்னைப் பற்றிக் கொள்பவைகளான நான், எனது என்ற பற்றுக்கள் மற்றும் காமம், வெகுளி, மயக்கம் ஆகியவற்றின் சார்புகளையுணர்ந்து என்பதும் சிறப்பாகவே உள்ளது.

செம்பொருளை உணர்ந்து, பொய்ப் பற்றறும்படி, அப்பொருளோடு ஒன்றி நின்று ஒழுக வல்லனாயின், அவனைச் சாரக்கூடிய துன்பங்கள் அவன் உணர்வினை அழித்துச் சாரமாட்டா என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

துன்பத்தின் சார்புகள் எவை என்பதைக் கண்டறிவது மெய்யுணர்தல்

பொழிப்பு

செம்பொருளை உணர்ந்து பற்றுக் கெட ஒருவன் ஒழுகுவானாயின், அவனைச் சென்று சேர்தற்கு வரும் துன்பங்கள் அவனது உணர்வை அழித்துப் பின் சேர மாட்டா.