இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0358பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு

(அதிகாரம்:மெய்யுணர்தல் குறள் எண்:358)

பொழிப்பு (மு வரதராசன்): பிறவித் துன்பத்திற்குக் காரணமான அறியாமை நீங்குமாறு, முத்தி என்னும் சிறந்த நிலைக்குக் காரணமான செம்பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.

மணக்குடவர் உரை: பிறப்பாகிய அறியாமையினின்று நீங்கப் பிறவாமை யாகிய செவ்விய பொருளைக் காண்பது அறிவாம்.
பிறவாமை சிறந்ததாதலின், சிறப்பு என்னப்பட்டது. தான் பிறந்தானாகவும் செத்தானாகவும் கருதுகின்ற அறியாமையை விட்டுத் தனக்குச் சாவில்லையாகவும் பிறப்பில்லையாகவும் தான் நிற்கின்ற நிலைமையைக் காணவேண்டுமென்றவாறாயிற்று.

பரிமேலழகர் உரை: பிறப்பு என்னும் பேதைமை நீங்க - பிறப்பிற்கு முதற்காரணமாய அவிச்சை கெட, சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு - வீட்டிற்கு நிமித்த காரணமாய செவ்விய பொருளைக் காண்பதே ஒருவர்க்கு மெய் உணர்வாவது.
(பிறப்பென்னும் பேதைமை எனவும் 'சிறப்பு என்னும் செம்பொருள்' எனவும், காரியத்தைக் காரணமாக உபசரித்தார். ஐவகைக் குற்றங்களுள் அவிச்சை ஏனைய நான்கிற்கும் காரணமாதல் உடைமையின், அச்சிறப்புப் பற்றி அதனையே பிறப்பிற்குக் காரணமாகக் கூறினார். எல்லாப் பொருளினும் சிறந்ததாகலான், வீடு சிறப்பு எனப்பட்டது. தோற்றக்கேடுகள் இன்மையின் நித்தமாய் நோன்மையால் தன்னையொன்றும் கலத்தல் இன்மையின் தூய்தாய் , தான் எல்லாவற்றையும் கலந்து நிற்கின்ற முதற்பொருள் விகாரமின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாதல் பற்றி , அதனைச் 'செம்பொருள்' என்றார். மேல் 'மெய்ப்பொருள்' எனவும் 'உள்ளது' எனவும் கூறியதூஉம் இதுபற்றி என உணர்க. அதனைக் காண்கையாவது உயிர் தன்அவிச்சை கெட்டு அதனொடு ஒற்றுமையுற இடைவிடாது பாவித்தல், இதனைச் 'சமாதி எனவும்' 'சுக்கிலத்தியானம்' எனவும் கூறுப. உயிர் உடம்பின் நீங்கும் காலத்து அதனான் யாதொன்று பாவிக்கப்பட்டது, அஃது அதுவாய்த் தோன்றும் என்பது எல்லா ஆகமங்கட்கும் துணிபு ஆகலின், வீடு எய்துவார்க்கு அக்காலத்துப் பிறப்பிற்கு ஏதுவாய பாவனை கெடுதற்பொருட்டுக் கேவலப் பொருளையே பாவித்தல் வேண்டுதலான், அதனை முன்னே பயில்தலாய இதனின் மிக்க உபாயம் இல்லை என்பது அறிக. இதனான் பாவனை கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: பிறப்பாகிய பேதைமை நீங்குமாறு சிறப்பாகிய பொருளைக் காண்பதே அறிவு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு.

பதவுரை: பிறப்பு-பிறப்பு; என்னும்-என்று சொல்லப்படுவது (பற்றிய); பேதைமை-அறியாமை; நீங்க-கெட; சிறப்பு-சிறப்பு; என்னும்-என்கின்ற; செம்பொருள்-செவ்வியதான மெய்ப்பொருள், கடவுள்; காண்பது-காணுதல்; அறிவு-அறிவு.


பிறப்பென்னும் பேதைமை நீங்க:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறப்பாகிய அறியாமையினின்று நீங்க;
பரிப்பெருமாள்: பிறப்பாகிய அறியாமையினின்று நீங்கி;
பரிதி: செனன மரண பேதமை போம்படிக்கு;
காலிங்கர்: உலகத்து மக்களும் தேவரும் பிறவுமாகிய பிறப்பு என்பது ஒன்றுளது என்று கருதும் அறியாமை நீங்குமாறு;
காலிங்கர் குறிப்புரை: பேதைமை என்பது அறியாமை.
பரிமேலழகர்: பிறப்பிற்கு முதற்காரணமாய அவிச்சை கெட;

'பிறப்பாகிய அறியாமையினின்று நீங்க' என்ற பொருளில் பழம் ஆசிரியர்களில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'செனன மரண பேதமை போம்படி' என்றார். 'பிறப்பு என்பது ஒன்றுளது என்று கருதும் அறியாமை நீங்குமாறு' என்பது காலிங்கரின் உரை. பரிமேலழகர் 'பிறப்பிற்கு முதற்காரணமாய அவிச்சை கெட' என்பது பரிமேலழகர் உரை.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறப்புக்குக் காரணமான அறியாமை நீங்க', 'பிறப்பு என்ற அஞ்ஞானத்திலிருந்து விடுபடுவதற்கு', 'பிறப்புக்குக் காரணமாகிய அறியாமை நீங்கும் பொருட்டு', ''பிறப்பு' வேண்டும் என்று கருதும் அறியாமை நீங்க' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பிறப்பு என்று சொல்லப்படுவது பற்றிய பேதைமை நீங்குமாறு என்பது இப்பகுதியின் பொருள்.

சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறவாமை யாகிய செவ்விய பொருளைக் காண்பது அறிவாம்.
மணக்குடவர் குறிப்புரை: பிறவாமை சிறந்ததாதலின், சிறப்பு என்னப்பட்டது. தான் பிறந்தானாகவும் செத்தானாகவும் கருதுகின்ற அறியாமையை விட்டுத் தனக்குச் சாவில்லையாகவும் பிறப்பில்லையாகவும் தான் நிற்கின்ற நிலைமையைக் காணவேண்டுமென்றவாறாயிற்று.
பரிப்பெருமாள்: பிறவாமை யாகிய செவ்விய பொருளைக் காண்பது அறிவாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: பிறவாமை சிறந்ததாதலின், சிறப்பு என்னப்பட்டது. தான் பிறந்தானாகவும் செத்தானாகவும் கருதுகின்ற அறியாமையை விட்டுத் தனக்குச் சாவில்லையாயும் பிறப்பில்லையாயும் நிற்கின்ற நிலைமையைக் காணவேண்டுமென்றவாறாயிற்று. மேல் மெய்யிலக்கணம் கூறினார். இது உணருமாறு கூறிற்று.
பரிதி: ஞானம் என்னும் சிறப்பைக் காண்பது இயல்பு என்றவாறு.
காலிங்கர்: உலகத்தோர் நல்லனவாகக் கருதி வருகின்ற யாவையினும் தான் சிறந்து மற்றும் தன்னிற் சிறந்தது பிறிதொன்று இன்மையான் அதுவே சிறப்பு உடைத்து என்று மறைநூல்களும் மற்றும் பிறவும் இவை முழுதுணர்ந்த எவரும் (முனிவருள்ளிட்டோரும்) எடுத்துச் சொல்லுகின்ற மெய்ப்பொருளினை இப்படிக் காணவல்லது யாது' மற்று அதுவே அறிவாவது என்றவாறு.
பரிமேலழகர்: வீட்டிற்கு நிமித்த காரணமாய செவ்விய பொருளைக் காண்பதே ஒருவர்க்கு மெய் உணர்வாவது.
பரிமேலழகர் குறிப்புரை: பிறப்பென்னும் பேதைமை எனவும் 'சிறப்பு என்னும் செம்பொருள்' எனவும், காரியத்தைக் காரணமாக உபசரித்தார். ஐவகைக் குற்றங்களுள் அவிச்சை ஏனைய நான்கிற்கும் காரணமாதல் உடைமையின், அச்சிறப்புப் பற்றி அதனையே பிறப்பிற்குக் காரணமாகக் கூறினார். எல்லாப் பொருளினும் சிறந்ததாகலான், வீடு சிறப்பு எனப்பட்டது. தோற்றக்கேடுகள் இன்மையின் நித்தமாய் நோன்மையால் தன்னையொன்றும் கலத்தல் இன்மையின் தூய்தாய் , தான் எல்லாவற்றையும் கலந்து நிற்கின்ற முதற்பொருள் விகாரமின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாதல் பற்றி , அதனைச் 'செம்பொருள்' என்றார். மேல் 'மெய்ப்பொருள்' எனவும் 'உள்ளது' எனவும் கூறியதூஉம் இதுபற்றி என உணர்க. அதனைக் காண்கையாவது உயிர் தன்அவிச்சை கெட்டு அதனொடு ஒற்றுமையுற இடைவிடாது பாவித்தல், இதனைச் 'சமாதி எனவும்' 'சுக்கிலத்தியானம்' எனவும் கூறுப. உயிர் உடம்பின் நீங்கும் காலத்து அதனான் யாதொன்று பாவிக்கப்பட்டது, அஃது அதுவாய்த் தோன்றும் என்பது எல்லா ஆகமங்கட்கும் துணிபு ஆகலின், வீடு எய்துவார்க்கு அக்காலத்துப் பிறப்பிற்கு ஏதுவாய பாவனை கெடுதற்பொருட்டுக் கேவலப் பொருளையே பாவித்தல் வேண்டுதலான், அதனை முன்னே பயில்தலாய இதனின் மிக்க உபாயம் இல்லை என்பது அறிக. இதனான் பாவனை கூறப்பட்டது.

'பிறவாமை யாகிய செவ்விய பொருளைக் காண்பது அறிவு என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'ஞானம் என்னும் சிறப்பைக் காண்பது இயல்பு' என்றார். காலிங்கர் 'மறைநூல்களும் மற்றும் பிறவும் முழுதுணர்ந்த எவரும் (முனிவருள்ளிட்டோரும்) எடுத்துச் சொல்லுகின்ற மெய்ப்பொருளினை இப்படிக் காணவல்லது யாது மற்று அதுவே அறிவு' எனப் பொருள் கூறினார். பரிமேலழகர் 'வீட்டிற்கு நிமித்த காரணமாய செவ்விய பொருளைக் காண்பதே ஒருவர்க்கு மெய் உணர்வு' என்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'எல்லாவற்றிலும் சிறப்பானது எனக் கருதப் பெறும் மெய்ப்பொருளைக் காணவல்லது அறிவாகும்', 'எல்லாவற்றிலும் சிறந்த பொருளான மெய்ப்பொருளைக் கண்டுபிடிக்கும் அறிவுதான் கல்வி கேள்விகளால் ஆராய்ந்து அறிய வேண்டிய அறிவாகும்', 'வீட்டிற்குக் காரணமாகிய இன்பமெய்ப் பொருளை நுகர்ச்சியால் தெளிதலே சிறந்த அறிவெனப்படும்', ''சிறப்பு' என்று சொல்லப்படும் செவ்விய பொருளைக் காண்பது அறிவுடைமையாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

சிறப்பாகிய செம்பொருளைக் காண்பது அறிவு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பிறப்பென்னும் பேதைமை நீங்குமாறு சிறப்பாகிய செம்பொருளைக் காண்பது அறிவு என்பது பாடலின் பொருள்.
'பிறப்பென்னும் பேதைமை' என்றால் என்ன?

பிறப்பு ஏன் உண்டாயிற்று என்ற புரியாத மர்மம் நீங்க இறைவனைத் தேடுக.

பிறப்பு பற்றிய காரணம் அறியமுடியாத பேதைமை நீங்குமாறு எங்கும் சிறப்புற நிறைந்துள்ள செம்பொருளை ஆராய்ந்து உணர்வதே அறிவு.
பிறப்பு ஏன் உண்டாகிறது? எங்கிருந்து நாம் வந்தோம்? பிறவி எடுத்தது எதற்காக? ஏன் இவ்வுலகில் வாழ்கிறோம்? வாழ்வு முடிந்தபின் எங்கு போகிறோம்? இத்தகைய ஐயங்கள் எல்லோர் மனத்திலும் அவ்வப்பொழுது எழுவது உண்டு. இவற்றிற்கு நேரான விடைகள் ஏதும் இல்லை. இத்தகைய ஐயங்களிலிருந்து நீங்கித் தெளிவு பெற தன்னில் சிறந்தது பிறிதொன்றில்லாததுமான செம்பொருளாம் இறையை நாடிச் செல்க என அறிவுறுத்துகிறது இப்பாடல். பகுத்தறிவு என்னும் உள்ளொளியின் துணையுடன் வாழ்க்கைத் தத்துவங்களைக் கற்று, அவற்றைத் தனக்குள் தானே அகழ்ந்தகழ்ந்து, பொருளை உணர்ந்து கொண்டு, ஐயத்தின் நீங்கியபின், எங்கும் நிறைந்த இறைஒளி வீச்சில் ஒருவனது பிறப்பைப்பற்றியுள்ள அறியாமை நீங்கும். இதுவே அறிவு. இதுவே மெய்யுணர்தல். அப்பொழுது பிறவிவாழ்க்கையின் பொருள் புரியும்.
முந்தைய பாடல்களில், வாழ்க்கைத் தத்துவங்களை 'மெய்ப்பொருள்', 'உள்ளது' என்ற சொற்கள் சுட்டின. இங்கு 'செம்பொருள்' என்று இறை மெய்யியல் குறிக்கப் பெறுகிறது.

'பிறப்பென்னும் பேதைமை' என்றால் என்ன?

'பிறப்பென்னும் பேதைமை' என்றதற்குப் பிறப்பாகிய அறியாமை, செனன மரண பேதமை, உலகத்து மக்களும் தேவரும் பிறவுமாகிய பிறப்பு என்பது ஒன்றுளது என்று கருதும் அறியாமை, பிறப்பிற்கு முதற்காரணமாய அவிச்சை, பிறவித் துன்பத்திற்குக் காரணமான அறியாமை, தன் பிறப்பைப்பற்றியுள்ள அறியாமை, பிறப்பாகிய பேதைமை, பிறப்புக்குக் காரணமான அறியாமை, பிறப்பு என்கிற அறியாமை, பிறப்பு என்று சொல்லப்படும் அறியாமை, பிறப்புக்குக் காரணமாகிய அறியாமை, 'பிறப்பு' வேண்டும் என்று கருதும் அறியாமை, பிறத்தலுக்குக் காரணமாகிய அறியாமை, அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமை, பிறப்புகளுக்குக் காரணமாகிய அறியாமை, மறுபிறப்பு பற்றிய அறியாமை, பிறப்பை நல்கும் மடமை என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'பிறப்பாம் அறியாமை' 'பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை' 'துன்பப் பிறப்பிற்குக் காரணமான அறியாமை' 'உயிர்க்கு அறியாமை இயல்பு' போன்ற தொடர்களும் அவற்றிற்கான சமயம் சார்ந்த உரைகளும் ஏற்குமாறில்லை. பிறப்பறுத்த நிலையே வீடுபேறு அடைதற்குரியநிலை என்றும் கூறினர். வீட்டுநிலையில் கடவுளுக்கும் உயிருக்கும் இடையே உள்ள உறவு எத்தகையது என்பதை இக்குறளில் வள்ளுவர் விளக்கினார் எனக் கொள்ள முடியவில்லை. வள்ளுவரின் சிந்தனைகள் அனைத்தும் உலகியல் சார்ந்தனவாகவே இருக்கும். இவ்வுலகின் இருப்பு நிலைகளைப் பற்றியே அவர் பேசுவார். இல்லாத ஒன்றை அவர் சொல்வதில்லை. எனவே துன்பப்பிறப்பு, வீடு போன்றவற்றை உள்ளடக்கிய விளக்கங்கள் பொருந்துவன அல்ல. 'பேதைமைதான் பிறவிக்கு அடிப்படைக் காரணம், பிறப்பு என்பதே பேதைமை; அதை நீக்கவல்ல நெறிகளையும் வழிகளையும் காண்டலே அறிவு என்ற வகையிலான குறளுரைகள் சிறப்பாக இல்லை.

பிறவியின் 'ரகசியம் அறிதல்' அதாவது நாம் ஏன் பிறப்பெடுக்கிறோம் என்பது பற்றிய ஆராய்ச்சி நெடுங்காலமாகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிறவியின் மர்மத்தை இதுவரை யாரும் அறியவில்லை, இனியும் அறிய மாட்டார்கள். ஆனாலும் பிறப்பை விளக்க முன்பு நல்வினை-தீவினை போன்ற சில கோட்பாடுகள் உருவாயின. அதில்தான் பிறவி என்பது அறியாமையால் வந்தது என்பதான கருத்துருவாக்கம் உண்டானது.
இங்கு வள்ளுவர் பேசுவது பிறவித் துன்பத்திற்குக் காரணமாகும் பெதைமை பற்றியதல்ல, அவர் பிறவிவாழ்க்கை பற்றிய அறியாமையை நீக்கச் சொல்கிறார். நடந்து கொண்டிருக்கிற, வாழும், வாழ்க்கைத் தத்துவங்களைக் கற்று இறைப்பொருளை அடைய முயல்வதே அறிவார்ந்த செயல் எனவும் கூறுகிறார்.

பிறப்பு பற்றிய பேதைமை நீங்குமாறு சிறப்பாகிய செம்பொருளைக் காண்பது அறிவு என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

மெய்யுணர்தல் என்பது உலகியல் வாழ்க்கையின் இயல்பை அறிதலாம்.

பொழிப்பு

'பிறப்பு' பற்றிய பேதைமை நீங்க எல்லாவற்றிலும் சிறப்பாகிய செம்பொருளாம் இறைமையைக் காண்பது அறிவு.