இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0354ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயம்இன்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு

(அதிகாரம்:மெய்யுணர்தல் குறள் எண்:354)

பொழிப்பு (மு வரதராசன்): மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்துவகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.

மணக்குடவர் உரை: மெய் முதலாகிய பொறிகளைந்தினானும் அறியப் படுவனவெல்லாம் அறிந்தவிடத்தும், அதனான் ஒருபயனுண்டாகாது; உண்மையை யறியும் அறிவிலாதார்க்கு.

பரிமேலழகர் உரை: ஐயுணர்வு எய்தியக்கண்ணும் பயம் இன்றே - சொல்லப்படுகின்ற புலன்கள் வேறுபாட்டான் ஐந்தாகிய உணர்வு அவற்றை விட்டுத் தம் வயத்ததாய வழியும், அதனால் பயனில்லையேயாம், மெய்யுணர்வு இல்லாதவர்க்கு - மெய்யினையுணர்தல் இல்லாதார்க்கு.
(ஐந்தாகிய உணர்வு : மனம் , அஃது எய்துதலாவது, மடங்கி ஒரு தலைப்பட்டுத் தாரணைக்கண் நிற்றல். அங்ஙனம் நின்ற வழியும் வீடு பயவாமையின் 'பயம் இன்று' என்றார். சிறப்பு உம்மை எய்துதற்கு அருமை விளக்கி நின்றது. இவை இரண்டு பாட்டானும் மெய்யுணர்வு உடையார்க்கே வீடு உளது என மெய் உணர்வின் சிறப்புக் கூறப்பட்டது.)

தமிழண்ணல் உரை: மெய்வாய் கண் மூக்கு செவி எனும் ஐம்பொறிகளால் அறியத்தக்க அனைத்தையும் ஒருவன் அறிந்திருந்தாலும், அதனால் எப்பயனுமில்லை அவற்றிற்கு அப்பாற்பட்ட உண்மைப்பொருளாம் மெய்ம்மையை அறியும் உணர்வில்லாதவருக்கு.
ஐம்பொறி அறிவுகள் மட்டும் போதா. ஆறாவதாகிய மெய்ம்மையை அறியும் அறிவு வேண்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயம்இன்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.

பதவுரை: ஐ-ஐந்து; உணர்வு-அறிவு; எய்தியக்கண்ணும்-அடைந்த போதும், ஆயவழியும்; பயம்-பயன், நன்மை; இன்றே-இல்லை; மெய்யுணர்வு-உண்மையறிவு; இல்லாதவர்க்கு-இலாதார்க்கு.


ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயம்இன்றே:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மெய் முதலாகிய பொறிகளைந்தினானும் அறியப் படுவனவெல்லாம் அறிந்தவிடத்தும் அதனான் ஒருபயனுண்டாகாது;
பரிப்பெருமாள்: மெய் முதலாகிய பொறிகளைந்தினானும் அறியப் படுவனவெல்லாம் அறிந்தவிடத்தும் அதனான் ஒருபயனுண்டாகாது;
பரிதி: மெய் வாய் கண் மூக்கு செவி இவற்றின் பொறியாவது சோத்திரம் தொக்கு சட்சு சிங்குவை ஆக்கிராணம் என்கின்றவிடத்தும் இத்தன்மையாரது புலன்களைத் துறந்து பயனென்ன;
காலிங்கர்: ஓசை முதலாகிய ஐம்புலன்களைத் தனித்தனி அறிந்து வருகின்ற செவி முதலாகிய பொறி ஐந்தும் மற்று ஈண்டு அருந்தவம் இயற்றி அமருலகு ஆளும் அமரர்க்கும் அவா எய்துதல் அரிதாததால், சிறிதுநாள் அச்சிற்றின்பத்தாராகிய மக்களாகப் பிறந்தார்க்கு எவ்வாற்றானும் எய்தாது அன்றே; அஃதன்றி இவர்க்கு அவை நிறைய எய்தியக்கண்ணும் மற்று ஈண்டு ஒழிவன ஆதலால், யாதுமொரு பயனில்லையே;
பரிமேலழகர்: சொல்லப்படுகின்ற புலன்கள் வேறுபாட்டான் ஐந்தாகிய உணர்வு அவற்றை விட்டுத் தம் வயத்ததாய வழியும், அதனால் பயனில்லையேயாம்;
பரிமேலழகர் குறிப்புரை: ஐந்தாகிய உணர்வு : மனம், அஃது எய்துதலாவது, மடங்கி ஒரு தலைப்பட்டுத் தாரணைக்கண் நிற்றல். அங்ஙனம் நின்ற வழியும் வீடு பயவாமையின் 'பயம் இன்று' என்றார். சிறப்பு உம்மை எய்துதற்கு அருமை விளக்கி நின்றது.

'ஐம்பொறிகளாலும் அறியப் படுவனவெல்லாம் அறிந்தவிடத்தும் அதனான் ஒருபயனும் உண்டாகாது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஐம்புல அடக்கம் இருந்தும் பயனில்லை', 'ஐம்புலன்களால் அறியப்பெறும் அறிவெல்லாம் ஒருவர் அடைந்த விடத்தும் ஒரு பயனும் இல்லை', 'இறைவனை அறிந்துவிட்டாலும் பயன் கிடைக்காது', 'ஐம்புல உணர்ச்சியைத் தம் வயமாகப் பெற்றிருந்தாலும், அதனால் நிலைத்த பயன் இல்லை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஐம்புல உணர்ச்சிகளை முற்றப்பெற்ற போதிலும், அதனால் பயன் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

மெய்யுணர்வு இல்லா தவர்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உண்மையை யறியும் அறிவிலாதார்க்கு.
பரிப்பெருமாள்: உண்மையை யறியும் அறிவிலாதார்க்கு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மெய்யுணர்தல் வேண்டும் என்றது.
பரிதி: மெய்யுணர்வாகிய சிவஞானம் அறியாவிடில் என்றவாறு.
காலிங்கர்: யார்க்கு எனின், மெய்ப்பொருளை உணரும் உணர்வில்லாத விரகு இல்லாளர்க்கு என்றவாறு.
பரிமேலழகர்: மெய்யினையுணர்தல் இல்லாதார்க்கு.
பரிமேலழகர் குறிப்புரை: இவை இரண்டு பாட்டானும் மெய்யுணர்வு உடையார்க்கே வீடு உளது என மெய் உணர்வின் சிறப்புக் கூறப்பட்டது.

உண்மையை யறியும் அறிவு/மெய்யுணர்வாகிய சிவஞானம்/மெய்ப்பொருளை உணரும் உணர்வில்லாத விரகு/மெய்யினையுணர்தல் இலாதார்க்கு என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உண்மை யுணர்ச்சி இல்லாதவர்களுக்கு', 'மெய்ம்மையை அறியும் அறிவில்லாதவர்க்கு', 'அந்த மெய்ப்பொருளை அனுபவித்து உணராதவர்களுக்கு', 'மெய்யுணர் வில்லாதவர்களுக்கு' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மெய்யுணர்வு இல்லாதவர்களுக்கு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஐயுணர்வு எய்தியக் கண்ணும், மெய்யுணர்வு இல்லாதவர்களுக்கு அதனால் பயன் இல்லை என்பது பாடலின் பொருள்.
'ஐயுணர்வு எய்தியக் கண்ணும்' குறிப்பது என்ன?

ஆறாவது அறிவே உண்மை காண்பதற்குப் பயன்படும்.

உண்மையை அறிய இயலாதவர்களுக்கு சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்து புலனறிவுகளும் இருந்தும் பயன் இல்லை.
ஒருவர் ஐம்புலன்களின் உணர்வுகளை எல்லாம் சீரான முறையில் முற்றப் பெற்றுள்ளார். ஆனால் அவர்க்குப் பொருள்களைப் புரிந்துகொள்ளும் உணர்வு இல்லை. அதனால் பொறிகள் ஐந்தினாலும் அறியப் படுவனவெல்லாம் அறிய முடிந்தாலும் அப்புலனறிவுகளால் மெய்யறிவு பெறும் பயன் இல்லை. உற்றறிதல், சுவைத்தறிதல், முகர்ந்தறிதல், கண்டறிதல், கேட்டறிதல் என்ற புலனறிவுகள் உயிர்களுக்கு உண்டு. ஒருவர் இப்புலன்களையெல்லாம் அடக்கி அவற்றை நன்கு செயல்படச் செய்தாலும் அது மட்டுமே உலகப் பொருள்களின் உண்மைத்தன்மையினை அறிதற்கு உதவ முடியாது. அதற்குப் பகுத்துணரும் அறிவு வேண்டும். மெய்ம்மையை உணரக்கூடிய அறிவு இல்லாதவர்களுக்குப் புலனறிவினால் மட்டும் பயன் இல்லை என்கிறது பாடல்.

'ஐயுணர்வு எய்தியக் கண்ணும்' குறிப்பது என்ன?

'ஐயுணர்வு எய்தியக் கண்ணும்' என்றதற்கு மெய் முதலாகிய பொறிகளைந்தினானும் அறியப் படுவனவெல்லாம் அறிந்தவிடத்தும், ஓசை முதலாகிய ஐம்புலன்களைத் தனித்தனி அறிந்து வருகின்ற செவி முதலாகிய பொறி ஐந்தும் மற்று ஈண்டு அருந்தவம் இயற்றி அமருலகு ஆளும் அமரர்க்கும் அவா எய்துதல் அரிதாததால் சிறிதுநாள் அச்சிற்றின்பத்தாராகிய மக்களாகப் பிறந்தார்க்கு எவ்வாற்றானும் எய்தாது அன்றே; அஃதன்றி இவர்க்கு அவை நிறைய எய்தியக்கண்ணும், சொல்லப்படுகின்ற புலன்கள் வேறுபாட்டான் ஐந்தாகிய உணர்வு அவற்றை விட்டுத் தம் வயத்ததாய வழியும், ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்துவகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும், மெய்வாய் கண் மூக்கு செவி எனும் ஐம்பொறிகளால் அறியத்தக்க அனைத்தையும் ஒருவன் அறிந்திருந்தாலும், ஐம்புலன்களையும் வென்று தம் நிலையில் இயக்கும் ஆற்றல் பெற்றாலும், ஐம்புல அடக்கம் இருந்தும், ஐம்புலன்களால் அறியப்பெறும் அறிவெல்லாம் ஒருவர் அடைந்த விடத்தும், மெய்ப்பொருளான இறைவனைப் பற்றிய அறிவை அடைந்துவிட்டாலும், ஐம்புலன்களால் உண்டாகும் ஐவகை அறிவும் ஒருங்கே வாய்த்திருந்தாலும், ஐம்புல உணர்ச்சியைத் தம் வயமாகப் பெற்றிருந்தாலும், ஐம்புலன்களையும் தம் வழிப்படுத்தியவிடத்தும், ஐம்புலன்களின் நுட்ப அறிவு வாய்த்திருந்தாலும், புலன்களால் ஐந்தாகிய உணர்வு அவற்றை விட்டுத் திரும்பித் தமக்கு வயப்பட்ட விடத்தும், செல்லுகிற புலன்களின் வேறுபாட்டால் ஐந்து என்று எண்ணப்படுகிற உணர்ச்சியாகிய மனமானது தம் வயப்பட்டதாயினும், ஐந்து உணர்வுகள் எய்திய இடத்தும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

ஐம்புலன்களை வென்று நிற்கும் ஆற்றலைச் சிறப்பித்துப் போற்றுபவர் வள்ளுவர். இங்கு கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிதல் என்னும் ஐயுணர்வு எய்திய நிலையிலும் மேம்பட்ட நிலை மெய்யுணர்வோடு இருத்தல் என்கிறார். அந்த நிலையை எய்த ஐம்புலன் உணர்வு மட்டும் பயன்படாது அதாவது அது மெய்யுணர்தலுக்கு உதவாது. பகுத்தறிந்து மெய்ப்பொருளை உள்ளத்தால் உணரக் கூடிய தன்மையே வேண்டுவது. அதைப் பயின்று பெறவேண்டும் எனக் குறிப்பால் சொல்லப்படுகிறது.

ஐயுணர்வு எய்தல் என்பதற்கு வ உ சிதம்பரம் பிள்ளை 'ஐ யுணர்வுகள் எய்தலாவது, தேச காலங்களால் தடுக்கப்படாது ஐம்புலங்களையும் ஐம்பொறிகள் அறிதல். அஃதாவது, கண் மூன்று காலங்களிலும் எல்லாத் தேசங்களிலும் உள்ள பொருள்களைக் காண்டல்; அவ்வாறே செவி, மூக்கு, மெய், வாய் என்னும் மற்றைய நான்கு பொறிகளும் முறையே மூன்று காலங்களிலும் எல்லாத் தேசங்களிலும் உள்ள ஓசை, நாற்றம், ஊறு, சுவை என்னும் மற்றைய நான்கு புலங்களையும் அறிதல்' என உரை வரைந்தார். ஐம்பொறிகள் மூலம் காலம், இடம் கடந்து ஐம்புலன்களையும் அறிதல் என்னும் இவர் உரை மெய்யுணர்தலுக்கும் விளக்கம் போல அமைந்துள்ளது.

'ஐயுணர்வு எய்தியக் கண்ணும்' என்றதற்கு ஐந்துவகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் என்பது பொருள்.

ஐம்புல உணர்ச்சிகளை முற்றப்பெற்ற போதிலும், மெய்யுணர்வு இல்லாதவர்களுக்கு அதனால் பயன் இல்லை என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பொருள்களைப் பகுத்தறிய முடியாதவர் மெய்யுணர்தல் பெறமுடியாது.

பொழிப்பு

மெய்ம்மையை அறிய முடியாதவர்களுக்கு ஐம்புல அடக்கம் இருந்தும் பயனில்லை.